எழுதக் கூடாத கதை

கீழ் வயிற்றுப் பசியை தீர்த்துக் கொள்ள தேடிவரும் ஆண்களுக்கு அடைக்கலமாய் மெரினா பீச்சில் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்களில் சுங்குவும் ஒருத்தி -அவளின் இயற்பெயர் பாக்கியலெட்சுமி- நிராதரவாய் ஆனபிறகு வாழ வழி இல்லாமல் பிழைப்புக்காக நேரடியாக இந்த தொழிலுக்கு வந்தவளில்லை. தன் 9 வயது மகனுக்கும், கணவனுக்கும் மதியம் சாப்பாடு கூட செய்து வைக்காமல் சபலம் தலைக்கேறி எதிர் வீட்டு தன்ராஜுடன் பதினைந்து வருடங்களுக்கு முன்பு மறையனூரில் இருந்து சென்னைக்கு ஓடி வந்தவள் பின்பு ஓட்டு போடுவதற்கு என்று கூட ஒருமுறையேனும் ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. தன்ராஜை நம்பி வந்தவளின் வாழ்க்கையில் விதி சிக்குக் கோலம் போட்டது போல விளையாடி கடைசியில் கண்ணகி சிலையின் பின்புறம் அவளின் கைங்கரியத்தை ஆரம்பிக்க வைத்தது. 

ஒருமுறை இவளுடன் சல்லாபித்துக் கொண்டிருந்த ஒருவன், என் காதலிக்கு நான் வைத்த செல்லப்பெயர் சுங்கு. உன் முகவெட்டும் அவளைப் போலத்தான் இருக்கிறது என்று சொல்லி பாக்கியலெட்சுமியின் அடித்தொண்டையை தன் முகத்தால் கன்னுக்குட்டி நீவுவது போல நீவினான். அவளுக்கும் அந்தப் பெயர் பிடித்துப் போக அன்று முதல் சுங்கு!!

சுங்குவுக்கு 47 வயது ஆகிறது. இப்போதும் அவள் யாருக்கும் சளைத்தவளில்லை என தன் சக தோழியான ரவுசம்மாவிடம் அடிக்கடி பொறமை கலந்த பாராட்டைப் பெறுவாள் - ரவுசம்மா நாயுடுப் பேட்டையிலிருந்து ப்ரொபஷ்னலாக இறக்குமதி ஆனவள்- மவுண்ட் ரோட் அண்ணா தியேட்டரில் "முத்துக்கு முத்தாக" படத்தை எச்சக்குடி பெஞ்சமினுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலில் சுங்குவுக்கு அறிமுகமானாள். அன்று முதல் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். வயது அதிகமாகி விட்டது என்று தன்னிலை உணர்ந்த இருவரும் கையில் குடையை வைத்துக் கொண்டு மெரினா பீச்சில் ஆளுக்கொரு பக்கம் சென்று உரும வெயிலிலும் பின்மாலைப் பொழுதிலும் தேடி வரும் இளைஞர்களுக்கும் காது முடி நரைத்துப் போன கிழடுகளுக்கும் பெய்ட் சர்வீஸ் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.. 

இன்று…..மதியம் 1 மணி இருக்கும். வெயில் மனிதர்களின் முதுகிலேறி தன் உக்கிரத்தை காட்டிக் கொண்டிருந்தது. தீவுத்திடல் மைதானத்தின் இடப்பக்கமுள்ள குடிசைப் பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் ரவுசம்மாவின் வீட்டிற்க்கு போலிஸும், ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிஸ் உலகாவும் ஆட்டோவில் சென்று அவளை அவசரமாக ஜி.எச்'க்கு அதே ஆட்டோவில் அழைத்துச் சென்றார்கள். மூவரும் போகிற வழியில் போலீஸ்கார் தன் பெண்ணின் திருமண முகூர்த்த நாளைக் குறித்து அய்யரிடம் போனில் பேசிக் கொண்டே வந்ததால் எதற்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று இவளால் கேட்க முடியவில்லை உடன்வந்த உலகாவை கேட்டாலும் சார் சொல்லுவார் கம்முனு வா என்றான். ஐந்து நிமிடத்தில் ஜி.எச் வந்தடைந்தார்கள்.

உள்ளே நுழைந்ததும் அங்கு பிணவறையின் வாசலுக்கு ஓரமாய் ஸ்ட்ரக்ச்சரில் கரை படிந்த வெள்ளைத் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த உடலை காண்பித்து "இது உன் கூட இருக்குமே அந்த பொம்பள தானே பாரு” என்று உலகா கேட்டதும் ரவுசம்மா தாமதிக்காது அழ ஆரம்பித்தாள். தண்ணீரில் மூழ்கி உப்பலாகி இறந்துப் போன மோட்டெலியை காகம் தன் இஸ்டத்திற்கு கொத்தி விட்டுச் சென்றது போல இருந்தது சுங்குவின் முகம். சடலம் உடனடியாக போஸ்ட்மார்ட்டத்துக்காக உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது.

"மவ்ட்ரு மாரி தெர்ல சூசைட் தான் போலக்து, கூவாத்துல உயிந்து சாவுற அளவுக்கு இதுக்கு இன்னா கேடு, எங்க உயிந்துதோ தெர்ல, ஸ்கை வாக் பக்கத்துலகிற கூவாத்துல மெதந்துனு இந்திது. ஒன்னா தானே தொய்லுக்கு போவீங் இன்னா மேட்டருனு சுகுரா சொல்ட்ட்டு, காயில்லயெ போன் அச்சி அனுப்பி உட்டானுங்கனு அவ்ரு வேற செம்ம காண்டுலக்றாரு" என கொஞ்சம் தள்ளி நின்றபடி வார்ட் பாய் ஒருவருடன் சிரித்து சிரித்து குசலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போலீஸை காட்டி ரவுசம்மாவிடம் விசாரணை செய்து கொண்டிருந்தான் உலகா என்கிற உலகநாதன். 

(உலகாவைப் பற்றி சின்ன பிளாஷ்பேக்...

அமைந்தகரை போலிஸ் ஸ்டேசனுக்கு காலையில் அடையாளம் காண்பிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட சுங்குவின் புகைப்படம் அங்கிருந்த எஸ்.ஐயின் மேசை மீது இருந்தது. பொட்லம் கேஸில் கைதாகி ரிலீஸ் ஆவதற்காக கையெழுத்து போட அவருக்கு முன்பு நின்று கொண்டிருந்த உலகா, சுங்குவின் புகைப்படத்தைப் பார்த்து " சார் இது எனுக்கு தெரியும் சார், பீச் கிராக்கி இது தோஸ்த் ரவுசும் தெரியும் என்று ரிலீஸ் ஆகப்போகிற ஜாலியில் தெரியாத்தனமாக வாயைக் குடுத்து டெம்ப்ரவரி ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிஸாக தன்னை உட்படுத்திக் கொண்டவன்.) 

ரவுசம்மாவின் அழுகை இப்போது விசும்பலாக மாறி இருந்தது. போலிஸ் வந்து தனது கட்டையான குரலில் ரவுசை அதட்ட ஆரம்பித்தார். "பாபு நாக்கு ஏமி தெளிது அதி ரெண்ட் நாளைக்கு முந்திப் பாத்துது" என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சூசைட் தான் என்கிற போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், தனக்குத் தெரிந்த வார்ட் பாய் மூலம் துரிதமாய் இரண்டு மணி நேரத்தில் கையில் கிடைக்க, உன் போன் நம்பரை ஒரு துண்டு பேப்பர்ல எழுதி குடுத்துட்டு இப்போதைக்கு போ என்றார் போலீஸ்காரர். 

ரவுசம்மா ஏற்கனவே எச்சக்குடி பெஞ்சமினுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லியிருந்ததால் அவனும் சரியாய் அங்கு வந்தான், இருவரும் மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே வந்து எதுக்கு சுங்கு இப்படி பண்ணிச்சு என்று பேசிக்கொண்டே சாலையை கடந்து எதிரிலிருக்கும் டீ கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்கும் போது " பெற்ற தாயிடமே விலை பேச நேர்ந்த அவமானத்தால் உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை" என்கிற தினத்தந்தி பெட்டிச் செய்தியை அவர்களுக்கு அருகில் அமர்ந்து வெங்காய போண்டாவை தின்றபடியே ஒரு பெரியவர் எழுத்துக் கூட்டி படித்துக் கொண்டிருந்தார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2014 19:07
No comments have been added yet.


தமிழ்ப்பிரபா's Blog

தமிழ்ப்பிரபா
தமிழ்ப்பிரபா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow தமிழ்ப்பிரபா's blog with rss.