மீசை என்பது வெறும் மயிர்

மீசை என்பது வெறும் மயிர்
புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் எனக்கொரு ‘பழக்கதோஷம்’ இருந்தது.  வசீகரமான தலைப்பு இருந்தால் இன்னார், இது எழுதியிருக்கிறார்கள் என்று எவ்விதமான தத்துவ விசாரணைகளுமின்றி அந்தப் புத்தகத்தை வாங்கிவிடுவேன். உதாரணத்திற்கு; “என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” என்கிற தலைப்பைப் பார்த்ததும்.... ம்ம்ம்! அருமையான கள்ளக்காதல் சமாசார கதை புத்தகமாய் இருக்குமென்று, உடலில் உஷ்ணம் அதிகமாகி வாங்கினேன். அப்படித்தான் எனக்கு, அந்த கவிதை புத்தகமும், மனுஷ்யபுத்திரனும் அறிமுகமானார்கள். தமிழில் வந்த பிரமாதமான கவிதைத்தொகுப்பு “ஒன்றுண்டென்றால்” (மோளம் அடிப்பது போல இருக்கும், இன்னொருமுறை வாசிக்கவும்) ஒன்றுண்டென்றால், அவரின் அந்தத் தொகுப்பையே என்னால் சொல்ல முடியும். டி.வி விவாத நிகழ்ச்சிகளில் செட் ப்ராபர்ட்டி ஆன பிறகான, சமீபத்திய மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் எப்படியிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை.*
தலைப்பைக் கண்டு மதிமயங்கி, சில புத்தகங்களை தொடர்ந்து வாங்கி ஏமாந்ததால் சூதுவாது தெரிந்துக் கொண்டேன். தற்போது சென்னையில் முடிந்த புத்தக சந்தையில், “மீசை என்பது வெறும் மயிர்” என்று தலைப்பைப் பார்த்ததும் என் ஆசை மறுபடி துளிர்த்தது. பெயருக்கு ஏற்றார்போலயே ஆதிக்கத்தையும், அதிகார மனோபாவத்தையும் புனைவின் வழியே, நுட்பமாக கேலி, கிண்டல் செய்து, அவர்களை கழுவிலேற்றிய இம்மாதிரியான புத்தகத்தை, எனக்கு கருத்து தெரிந்த நாளிலிருந்து இப்போதுதான் படிக்கிறேன்.
தவிர, “மொழிப்பெயர்ப்பு” என்கிற பெயரில் எழுத்தாளர்களும், பதிப்பகங்களும் செய்யும் ராவடியை ‘மொழிப்பெயர்ப்பின் அரசியல்’ என்கிற பெயரில் இந்நூலாசிரியர் செய்த பரிகாசம், சிரித்து மாளவில்லை. ப (9-32).*“நந்தஜோதி பீம்தாஸ்” என்கிற கற்பனை எழுத்தாளரை உருவாக்கி அவரிடம் இந்நூலாசிரியரான ஆதவன் தீட்சண்யா, பேட்டியெடுக்க செல்லும் காரணமும், சம்பவங்களும், பேட்டியின் கேள்வி-பதிலும், பீம்தாஸ் எழுதிய “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நாவலின் சுருக்கம் போன்றவை இப்புத்தகத்தின் சாரம்.பீம்தாஸ் கதாபாத்திரம் புனைவு என்றாலும் அவருக்கு நேர்ந்த அவமானங்கள், அவரின் பயணக்குறிப்புகள் எல்லாம் சான்றுகளோடு சொல்லப்படுகின்றன.*ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது பீம்தாஸ் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில், மேல்சாதிப்பய்யனை பெயர் சொல்லிக் கூப்பிட்டு விடுகிறார்.. அதைப் பார்த்த ஆண்டை “ எம்மகனே பேர் சொல்லி கூப்பிட துணிஞ்சியாடா நாயே, பள்ளிக் கூடத்துக்கு போயிட்டா நீங்களும் நாங்களும் ஒண்ணாயிடுவோமாடா? தினம் நாலுவாட்டி எங்களுத மண்டிப்போட்டு சப்பினாலும் எங்களுக்குச் சமமாயிட மாட்டீங்கடா ஈனசாதிப்பயலே.... என்று சாட்டக்குச்சியால் வெளுத்தெடுக்கிறான். ஆத்திரம் தாளமுடியாத பீம்தாஸ் “ எங்கப்பன் ஆத்தா வேர்வைய நக்கி ரத்தத்தை உறிஞ்சி ஒடம்ப வளக்குறது நீங்க...உங்களுத எதுக்குடா நாங்க சப்பணும்?” என்று கத்திக் கொண்டே அவன் குறியை கொட்டையோடு சேர்த்துத் திருகி அவனை ஒருவழிப்பண்ணி, பிறகு தன் பெற்றோரைவிட்டு அந்த ஊரிலிரிருந்துபோய் தனுஷ்கோடி ரயில்நிலையத்தில் படுத்துக்கொள்கிறார். அன்றிரவுதான் தனுஷ்கோடி, கடல் சீற்றத்தில் அழிந்து போகிறது. கடல் உயிரோடு விட்டுவைத்த வெகுசிலரில் பீம்தாஸும் ஒருவர்.*அவர் இலங்கைக்குச் செல்ல நேரிடுகிறது, தேயிலைக்காடுகளில் வேலை செய்வதற்கும், பட்டை லவங்கம் உறிப்பதற்கும் ப்ரிட்டிஷாரால் கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னாட்களில் “மலையகத்தமிழர்கள்” என்றழைக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும், சிலோன் பூர்வீகத் தமிழர்களுக்கும் சாதி காரணங்களால் ஏற்பட்ட பிணக்கங்களையும் புலம்பெயர்ந்த தமிழர்களை; தமிழக இந்திய & இலங்கை அரசியல்வாதிகள் குடியுரிமை தராமல் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டார்கள், அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் ஆகிய அனைத்தையும் அரசியல்வாதிகளின் பெயரோடு இந்நாவல் விரிவாக ஆய்கிறது.  
கலவரம் நடக்கும் பதட்டமான சூழலிலும்; “இங்கு அரசியல் பேசவும்” என்று தன் சலூன் கடையில் போர்டு வைத்து, மக்களிடம் விழிப்புணர்வு உண்டுபண்ணிய “ஆனந்தம்பிள்ளை”யின் பார்பர் ஷாப் எரிக்கபட்டு அவரை கொலை செய்தது போன்ற, இலங்கை அரசின் ஆரம்பாகால இனவாத அட்டூழியங்கள் கதை மாந்தர்களை வைத்து, சுற்றி வளைக்காமல் பேட்டிக்கு பதில் தருவதாய் நேரடியாக  சொல்லப்பட்டிருக்கிறது.*தனக்கு ஏற்பட்ட துவேஷங்கள் மனதிற்குள் பொதிந்து போன, பீம்தாஸ் “ மீசை என்பது வெறும் மயிர்” என்றொரு நாவல் எழுதி, அதில் தன் சிறுவயதிலிருந்து கண்டுணர்ந்த சாதி, இன வெறியர்களை “இன்னமும் பெயரிடப்படாத நாடு” என்கிற ஒரு நாட்டை புனைவில் உருவாக்கி அங்கு அவர்களை நடமாடவிட்டு செவுளில் அரைகிறார். இடையிடையே சாதி, இன வெறியர்களை புனைவின் வழி பகடி செய்தபடியே இருந்தாலும் இப்புத்தகத்தின் கடைசி 35 பக்கங்கள் மரண அடி! அதிலிருந்து, சிலவற்றை மட்டும் இங்கே எடுத்து இயம்புவது மற்றவரிகளை அவமானப்படுத்துவதுவதற்கு ஒப்பானது, தவிர, “மீசை என்பது வெறும் மயிர்” ஏன்? என்பதற்கான விளக்கம் அந்த கடைசி கதையின் வழியில் தெளிவாக அறியமுடிவதால் அவற்றை சொல்லிவிடுவது இந்நூலாசிரியர் “ஆதவன் தீட்சண்யா”வுக்கு நான் செய்யும் துரோகமாகிவிடும்.

புத்தக திருவிழாக்களில் புழங்க வேண்டுமென்பதற்காக, அவசரமாக எழுதி வெளியிடப்பட்ட நூல்களை புரட்டிய ஆயாசத்திற்கு இடையில் “மீசை என்பது வெறும் மயிர்” ரகளையான இளைப்பாறுதல். 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2015 17:17
No comments have been added yet.


தமிழ்ப்பிரபா's Blog

தமிழ்ப்பிரபா
தமிழ்ப்பிரபா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow தமிழ்ப்பிரபா's blog with rss.