காதலா!
Tamil short story.
Premise – Lost love.
‘எனக்கு கல்யாணம்’ என்று கூறி அழைப்பிதழை நீட்டினாய். அழகாக இருந்தது. தேதி. தினம். இடம். எல்லாவற்றையும் படித்தேன். உன் பெயரை தவிர. முடியவில்லை காதலா. முயற்சித்தேன். தோழிகள் ‘நீ போக வேண்டாம்’ என்றனர். காதல் கண்ணை மட்டும் அல்ல, காதையும் மறைத்து விட்டது. வந்தேன் உன் திருமணத்திற்கு. மேடை மீது ராஜா போல நீ. புது பட்டாடை சூடி கொண்டு, அழகாக இருந்தாய். உன் பக்கம் அவள். காஞ்சிபுரம் பட்டுடுத்தி, லக்க்ஷணம் நிரம்ப இருந்தாள். ஒரு ஓரமாக நான் அமர்ந்திருந்தேன். என் முகத்தில் சோகம். கண்ணில் மையுடன் கண்ணீரும் நிரம்பி இருந்தது. இரண்டு வருடம் உன்னுடன் இருந்த நாட்கள் கண் முன்னே வர தொடங்கின.
நாம் ஏன் பிரிந்தோம் என்று நான் பல இரவுகள் என்னையே கேட்டது உண்டு. பதில் இல்லை. பெண் ஒருத்தி தட்டில் தாலி மற்றும் பூக்களுடன் என்னிடம் வந்தாள். தாலியை பார்த்தேன். என் கழுத்து நிமிரவில்லை. பூக்களை பார்த்தேன், என் கூந்தல் நகரவில்லை. எடுத்தேன் சிறிது உதிரி பூக்களை. கெட்டி மேளம் சத்தம் கேட்டது. தாலி கழுத்தில் ஏறியது. வாழ்த்த வரிசையில் நின்றேன். என் வாய்ப்பு வர, மேடை மீது வந்தேன். வாழ்த்தினேன். பல்லாண்டு வாழ்க என்று. புகைப்படம் எடுக்க மனமில்லை. ஆனாலும் காதல் யாரை விட்டது. நின்றேன். அவள் பக்கம். புகைப்படம் எடுக்கப்பட்டது. என்னை மிக எளிதாக மறந்து விட்டாய் என்று நினைத்துக்கொண்டே சென்றேன்.
உன்னை மறுமுறை பார்த்தேன். உன்னிப்பாக. ஆடம்பர சட்டை பாக்கெட்டுக்குள்ளே, நான் குடுத்த கைக்குட்டை. உன் வேர்வையை மட்டும் அல்ல, உன் கண்ணீரையும் துடைத்தைது.
காதலா, இது தான் காதல்-ஆ?

