மயில், கழுகு மற்றும் புறாக்கள்
(இந்த விமர்சனத்தில் ஸ்பாய்லர் இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை. அப்படி யோசித்து எழுதுவது என் வேலையும் இல்லை என நினைக்கிறேன். அதனால் பார்க்காதவர்கள் படித்து விட்டு ஸ்பாய்லர் ஸ்பாய்லர் என்று கூவ வேண்டாம்.)
பிரயத்தனம்
கடைசியில்
ஒரு கண்ணாடிக் கோப்பை
கீழே விழுந்து
உடைவதற்குத்தானா
இத்தனை ஆயத்தம்
இத்தனை பதட்டம்
இத்தனை கண்ணீர்?
- மனுஷ்ய புத்திரன்
'இறைவி' போல் மற்றுமொரு ஃபெமினிஸ முயற்சிப் படம். அதை விட நன்றாக இருக்கிறது என்பது மட்டும் ஆறுதல்.
குறிப்பாய் சில வசனங்கள் மற்றும் காட்சிகள். ராமிடம் எப்போதுமே அது உண்டு எனலாம். உதாரணமாய் கற்றது தமிழில் "Touch me if you dare" போல் இதில் "Hope this size fits you". ராமின் சில மனநிலைகள் ரசித்துப் புன்னகைக்க வைக்கின்றன.

முதல் சறுக்கல் பிரபுநாத் பாத்திரம் திருகலாக அமைக்கப்பட்டிருப்பது. முதல் 45 நிமிடம் அந்தப் பாத்திரம் காட்டும் முதிர்ச்சிக்கும் அறத்துக்கும் அடுத்து சட்டெனக் குருட்டுத்தனமான சந்தேகக்காரனாக, அதன் நீட்சியாய் முரட்டுத்தனமான சாடிஸ்டாக மாறுவதற்கும் ஒட்டவேயில்லை. (பாத்திரங்கள் கருப்பு - வெள்ளையாகவே இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொல்லியே எல்லாப் பாத்திர முரண்களையும் கடக்க முடியாது அல்லவா!)
ஆன்ட்ரியாவுக்கு நிச்சயம் இது வாழ்நாள் படம் தான். ஆனால் அவர் பாத்திரமும் கூட ஒரு மாதிரி விசித்திரமானது. ஓர் உறவில் வரும் குழப்பத்தில், சண்டையில் தன் தரப்பை விளக்கவே மாட்டேன், "ஆமாம்டா, நான் அப்படித்தான்" என்றிருப்பது அறிவீனம் தான். திரைக்கதையை இழுக்க இரண்டு இடங்களில் தியா பாத்திரத்தை இப்படி assassinate செய்து விட்டார் ராம் (பாஸின் அழைப்புக் குறுஞ்செயதி மற்றும் தியாவின் ஃபேஸ்புக் அப்லோட்). ஆனால் துரதிட்ஷ்டவசமாய் அதை எல்லாம் பெண்ணியத்தில் சேர்த்து இங்கே கைதட்டுகிறார்கள்! அவர் நடிப்பும் சாதாரணமாகவே இருந்தது!
அபூர்வ சௌம்யா (அஞ்சலி) பாத்திரம் மட்டுமே எதிர்மறை என்றாலும் ஓர்மையுடன் (integrity) எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை சுயநலமான சூழ்நிலைக் கைதியாகவே இருந்து விடுகிறார். ஆனால் அழுது கொண்டே இருந்தவள் இப்போது அவள் அழுவதில்லை. அதிகபட்சம் பத்து நிமிடமே வந்தாலும் ஆன்ட்ரியாவை விட அஞ்சலியின் பாத்திரமே அதிகம் யோசிக்க வைத்தது. பிரபுநாத் அவளிடம் சுமூகமாகவே பணம் கேட்காமல் முதலிலேயே ஏன் கூட இருப்பது போல் படமெடுத்து மிரட்டிக் கேட்க வேண்டும் எனப் புரியவில்லை. அவனது திரிபுக்கான லீடாகக் கொள்ளலாம்.
பிரபுநாத் இடையில் பெண்களின் எண்களை எல்லாம் தேடி எடுத்து அவர்களை வலையில் வீழ்த்துவது ஒரு மன்மத சைக்கோத்தனமாகத் தோன்றினாலும் அது மாதிரியான சைக்கோக்கள் சூழத் தான் வாழ்ந்திருக்கிறோம். அவ்வகையில் அது ஒரு முக்கியமான பதிவு. அப்புறம் அதைத் தொடங்கும் முன் அவன் பெண்கள் எல்லாம் இப்படித் தான் என பர்ணபாஸுக்கு நீருபிப்பதாகச் சொல்வான். அவர் எனக்கு எதுக்குலே நீ நிரூபிக்கனும் எனக் கேட்பார். அவன் அதை உணர்ந்து தனக்குத் தானே நிரூபிக்க என்று திருத்திக் கொள்வான். ஆனால் அவன் கடைசியில் அவருக்குத் தான் அதை நிரூபிப்பான். அதே சமயம் அவனும் அதில் புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொள்வான். அப்படி எல்லோரையும் சொல்ல முடியாது என!
அழகம் பெருமாளுக்கு 'கற்றது தமிழ்' போலவே ஒரு முக்கியமான பாத்திரம் - பர்ணபாஸ். அழகாகச் செய்திருக்கிறார். மீனம்மா தன் பதிவொன்றில் அவரது கடைசிக் காட்சியைச் சிலாகிப்பவர்களைத் திட்டி இருந்தார். எத்தனை பேர் அதன் பொருளை உள்வாங்கிப் பாராட்டுகிறார்கள் என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் அதை மிகைக் காட்சியாக மட்டும் நான் கடக்கவில்லை. பர்ணபாஸ் ஏன் பிரபுநாத்திடம் "நீ அவளுக்கு நல்லது தாம்லே பண்ணி இருக்கே" என்று சொல்கிறார்?
1) அத்தனை வருடம் அவர் மீது பேரன்பு கொண்ட மனைவிக்கு சபலம் வரக்கூடும் என்பது பர்ணபாஸுக்கு ஒரு திறப்பு. அவளுக்குமே. இனி அவளுக்கு மறுபடி அப்படியானதொரு சபலம் வராது. அதுவே அவளுக்கு அவன் செய்த நல்லது. 2) அந்தப் பாடத்தைக் கற்க அவள் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கவில்லை என்பதும் முக்கியமானது. அது பிரபுநாத்தின் நற்குணமே! அதுவும் அவன் அவளுக்குச் செய்த நன்மை. 3) ஒரு சகோதரியோ மகளோ தடம் புரள்கையில் ஆண் கண்டித்துச் சீர்திருத்தவே முற்படுவான், தூக்கியெறிய மாட்டான். ஆனால் அதுவே மனைவி எனில் கொலை அல்லது பிரிவு. அது தவறு என்று இயக்குநர் சுட்டிக் காட்ட முனைகிறார். அத்தருணத்தில் அவள் கணவனும் கூட அவளைத் தவறு செய்யச் சாத்தியமுள்ள சக மானுட ஜீவியாகப் பார்க்கவும், அவள் வாழ்க்கை மீதான அக்கறையுடன் அணுகவும் முற்பட வேண்டும் என்கிறார். அது முக்கியக் கருத்து தான். ஆனால் ஒற்றை வரி வசனம் மூலம் அது சரியாய் convey ஆகவில்லை என நினைக்கிறேன். அப்புரிதல் தனக்கு வர வாய்ப்பளித்த பிரபு அப்படியாய்த் தன் மனைவிக்கு நல்லது செய்திருக்கிறான் என்கிறார் பர்ணபாஸ். 4) "பர்ணபாஸ் வாக்கு பைபிள் வாக்கு" என்கிறார். "உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு" என்ற வாசகம் பைபிளின் புதிய ஏற்பாட்டில் குறைந்தது இரண்டு இடங்களில் வருகிறது. அதாவது "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்" என்கிறார் இயேசு. அந்த அடிப்படையிலும் அறியாமல் தனக்குத் துரோகம் செய்து விட்ட பிரபுநாத்தை மன்னித்து விட்ட பாவனையில் அவன் அவளுக்கு நன்மையே செய்ததாகச் சொல்கிறார். (அதற்கு முந்தைய வசனத்தில் பிரபு அவர் நினைப்பது போல் அவரது செல்பேசியிலிருந்து அவர் மனைவி எண்ணை எடுக்கவில்லை, ரீசார்ஜ் கடையில் எடுத்தது எனத் தெளிவாக்குகிறான். ஆக அது அறியாமல் நிகழ்ந்து விட்ட துரோகமே எனத் தெளிகிறார்.)
போலீஸ்காரர் மனைவியுடனான பகுதிகள் பிரபுநாத்திடம் தியா உன்னை விட அவன் சூப்பர் என்று சொன்னதன் உளவியல் பின்னணியைப் புரிய வைப்பது மட்டும் தான் நோக்கமா? அவர் தரப்பிலிருந்து பார்த்தால் ப்ளாட்டின மோதிரத்தின் மீது அவருக்கு என்ன அக்கறை? அவரது நோக்கம் தான் என்ன? கடைசியில் லூஸு போல் கத்திக் கொண்டு ஏன் தற்கொலை செய்கிறார். கணவன் கொடுமை அன்று மட்டும் எவ்வகையில் மோசமானது. இன்னும் சொல்லப் போனால் அன்று அவனுக்கு அவள் மீது வலுவாய்ச் சந்தேகப்பட அத்தனை முகாந்திரங்களும் இருந்தன. மனைவி தனித்திருக்கையில் வீட்டில் ஒருவன் ஒளிந்திருந்தாலும் அதைக் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்பது தான் ராம் சொல்ல வரும் பெண்ணியமா?
ஆண் ஓரினச் சேர்க்கையை ஒரு வில்லனிக்காக (வேட்டையாடு விளையாடு & நடுநிசி நாய்கள்) அல்லது காமெடியாக (கொரில்லா செல்) காட்டிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாச் சூழலில் முதன் முறையாய் அது பற்றி பரிவுடன் பதிவாகி இருக்கிறது இப்படத்தில். தியாவின் தியாகம் ட்ராமாடிக் என்றாலும் அதற்குச் சொல்லும் காரணம் யோசிக்க வைக்கிறது.
கார்பரேட் நிறுவனங்களில் பெண்களுக்கு பாஸ்களால் பாதுகாப்பில்லை என்பது படத்தில் அழுத்திச் சொல்லப்படுகிறது. நான் 11 ஆண்டுளாய் ஐடி துறையில் இருக்கிறேன். ஒருமுறை கூட இப்படியான சம்பவங்களைக் கேள்விப்பட்டதில்லை. அதுவும் தற்போதைய நிறுவனத்தில் workplace harassment தொடர்பாய் ஆண்டுதோறும் இருபாலருக்கும் கட்டாயப் பயிலரங்குகளே உண்டு. மேலாளர் தனக்குக் கீழ் பணிபுரியும் எதிர்பாலரிடம் பேசுவதில் reasonable restrictions உண்டு. அத்துமீறல் குறித்துப் புகாரளிக்க பாதுகாப்பான நடைமுறைகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, "உங்கள் செயலின் நோக்கம் முக்கியமே இல்லை. அது எவ்விதம் எதிர்பாலினரால் உணர / புரிந்து கொள்ளப்படுகிறது என்பதே முக்கியம்" என்பதைத் தான் இவ்விடயத்தில் thumb-rule ஆக வைத்திருக்கிறார்கள்! பெண் ஊழியைகளுக்கு அத்தனை பாதுகாப்பு கார்பரேட்டில் இருக்கிறது என்பதே என் புரிதல். ராம் சொல்வதெல்லாம் கார்பரேட்டில் பரவலாய் நடக்கிறதா என நண்பர்கள் சொல்லலாம். ஆனால் நான் வேலை பார்த்தது பெரும்பாலும் product based கம்பெனிகளில். ஒருவேளை ஐடி சர்வீஸ் கம்பெனிகளில், கால் சென்டர்களில் இப்படி எல்லாம் நடக்கிறதா? (இப்படி எல்லாம் நடக்கவே இல்லை எனச் சொல்ல வில்லை. ஆனால் ராம் காட்டியது இரண்டே பாஸ்கள். இரண்டுமே பொறுக்கிகள். அது நியாயமா என்று தான் கேட்கிறேன்.)
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்தோடு பார்க்கையில் எனக்குப் பெரிதாய்ப் பிடிபடவில்லை. பின்னணி இசை பிடித்திருந்தது. நா.முத்துக்குமாரின் வரிகளையும் கவனிக்க முடியவில்லை. கடலளவு நேசிக்கிறேன், மலையளவு வெறுக்கிறேன் என்பதெல்லாம் ரொம்பச் சாதாரண வரிகள் தாம். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு வசீகரம். குறிப்பாய் டாப் ஆங்கிள் ட்ரோன் ஷாட்களில் கடல், ஏரி, மேம்பாலம், கான்க்ரீட் வனம் என சென்னை லேஸ்ட்ஸ்கேப்பின் அழகிய பதிவு.
ஆன்ட்ரியாவின் பையனாக நடித்த பையன் நன்றாய்ச் செய்திருந்தான். சர்ச் ஃபாதர், தியாவின் அம்மா, தியாவின் கணவன், போலீஸ்காரர், அவர் மனைவி என எல்லோருமே நல்ல நடிப்பு. ராமின் வாய்ஸ் ஓவரும் ஒரு பாத்திரமாக உற்சாகம்!
புறாவானது 28வது மாடி இருக்கும் உயரத்திற்குப் பறக்குமா என்ன? நான் ஒன்றரை வருடம் 28வது மாடியில் அமர்ந்து பணிபுரிந்திருக்கிறேன். ஒரு புறாவையும் அங்கே கண்டதில்லை என்பதால் கேட்கிறேன். தவிர, புறாக்கள் தாம் முன்பு வசித்த மரத்தைத் தேடி வருவதாகச் சொல்லப்படுகிறது. அவ்விடம் முன்பு காடாக இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் 28வது மாடிக்கு இணையான உயரம் கொண்ட, அவை முன்பு வசித்த மரம் எது? அல்லது கவித்துவச் சுதந்திரமா!
"வெளிய தெரியறது ஒரு உருவம், ஆனா உள்ளே இருக்கறது பல ரூபங்கள்" என்று வடிவேலு சொல்வது போல் ஓர் அன்பர் "இப்படத்திற்குள் பல கட்டுரைகள் இருக்கின்றன" எனச் சொல்லி இருந்தார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. நவீன யுகத்தில் ஆண் பெண் உறவு என்ற ஒரே கட்டுரை தான் இதில் இருக்கிறது. அதில் பெண்ணியம் பற்றிய சில சரியான புரிதல்களும், சில அதீதங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அவ்வளவு தான். மற்றபடி, இணையச் சிலாகிப்புகள் மிகையே!
ராமின் நாயகர்கள் அனைவருமே ஊரோடு ஒத்து வாழாதவர்களாகவே இருக்கிறார்கள். ராமைப் போலவே. இதை அவரைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் சற்றே கவலையுடனுமே குறிப்பிடுகிறேன். ஓவர் வித்தியாசமும் ஒவ்வாமை தரலாம்.
ராமின் சிறந்த படம் இதுவல்ல. இன்னும் சொல்லப் போனால் என் வரையில் மூன்றில் இதற்கே கடைசி இடம். ஆனால் அது இயக்குநர் ராம் கவலைப்பட வேண்டிய பிரச்சனை. நமக்கு இது பார்க்கக்கூடிய, பார்க்க வேண்டிய படம் தான். Watch it!
*
Published on August 13, 2017 19:50
No comments have been added yet.
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
