Sukumaran's Blog, page 2
October 21, 2021
மலர் நினைவுகள்


2019

2020

2021
பள்ளிப் பருவம். பாடங்களை விடவும் பிற புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்த காலம். வாசிப்பு பித்தாக முற்றியிருந்த நாட்கள்.
ஆனந்த விகடன், கல்கி இதழ்களில் வெளியாகியிருந்த தீபாவளி மலர் விளம்பரங்களைப் பார்த்து வாங்கி வாசித்தே ஆகவேண்டும் என்ற ஆவல் முட்டிக் கொண்டிருந்தது. அம்மாவை நச்சரித்துக் காசு வாங்கிக்கொண்டு பள்ளிக்குப் போனேன். உணவு இடைவேளையின் போது சாப்பிடாமல் வெரைட்டிஹால் ரோட்டிலிருந்த விகடன் ஏஜெண்ட் அலுவலகத்துக்கும் ஐந்து முக்கிலிருந்த பாயின் பேப்பர் கடைக்கும் ஓடி 'மலர்கள் வந்தாச்சா?' என்று விசாரித்தேன்.
‘இன்னைக்கு வரலை. நாளைக்குத்தான் வரும்’ என்று பதில் கிடைத்தது. மறுநாள் நண்பகலிலும் பள்ளி விட்டதும் மாலையிலுமாக விசாரணையைத் தொடர்ந்தேன். அன்றும் வரவில்லை. நாளைக்கு வரும் என்ற அதே பதில் கிடைத்தது. மூன்றாம் நாளும் பகலிலும் மாலையிலும் அதே விசாரிப்பு. அதே பதில். அடுத்த நாள் மத்தியான்னம் போனபோதும் அப்படியே.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஏஜெண்ட் அவர் மேஜைக்கு அருகில் அழைத்து விவரம் கேட்டார். சொன்னேன்.
‘’இன்னும் நம்ம ஊருக்கு வரல்லே.வந்தா இங்க வெச்சிருப்போம். முக்கியமான கடைகளுக்குக் குடுப்போம். அங்கேர்ந்து வாங்கு. கெடக்கலேன்னா இங்க வா. இதுக்குன்னு ஸ்கூல்லேர்ந்து ஓடி ஓடி வராதே.என்னா?’’ என்றார்.
தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பிறகு நிமிர்ந்து ‘’ நாளைக்கு வந்துடுமா?’’ என்றேன்.
ஏஜெண்ட் வாய்விட்டுச் சிரித்து விட்டார். ‘’ வந்துடும். வந்துடும். வந்ததும் உனக்குக் கிடைக்க ஏற்பாடு பண்றேன். இந்த உஷாரைப் படிக்கறதுலயும் காட்டறி்யோ என்னவோ?’’ என்று புத்தியில் தட்டினார்.
அந்தத் தட்டு உறைக்கவில்லை. இவர் எப்படி புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்வார் என்ற சந்தேகமே அரித்துக்கொண்டிருந்தது. திரும்பி வந்தேன். அன்று மாலை அந்த அலுவலகத்துக்குப் போகவில்லை. யாரோ ஒருவர் சொல்லும் புத்திமதியைக் கேட்க எனக்கென்ன தலையெழுத்து?
மறுநாளும் அந்தப் பக்கம் போகவில்லை. பாய்கடையிலோ மோகன் புக் ஸ்டாலிலோ கிடைக்கும்.அப்போது வாங்கிக் கொள்ளலாம் என்று அடக்கமாக இருந்தேன். அத்தியாவசியச் செலவுகள் வந்தும் மலர்களுக்காக வாங்கிய ரூபாயைப் பத்திரமாக இறுக்கி வைத்திருந்தேன்.
முதல் இரண்டு பீரியட்கள் முடிந்து ரீசஸ் விட்டதும் வெளியில் வந்தேன். பள்ளி அலுவலகத்துக்கு முன்னால் விகடன் ஏஜெண்டின் மொபெட் நிற்பதைப் பார்த்தேன். அழைப்பதுபோலக் கையை உயர்த்துவதையும் பார்த்தேன். என்னையா அழைக்கிறார்? சந்தேகம் தெளிவதற்குள் அவரே சைகை காட்டிக் கூப்பிட்டார். சக மாணவன் ரங்கராஜனைத் ( ரங்காவின் பெரியப்பா பிரபல எழுத்தாளர். பெயர் - சாண்டில்யன் ) துணைக்கு அழைத்துக்கொண்டு மொபெட்டை நெருங்கினேன். அதன் கேரியரில் அந்த வாரத்து ஆனந்த விகடன் இதழ்கள் அடுக்கடுக்காக வைத்துக் கட்டப் பட்டிருந்தன. அன்று வெள்ளிக்கிழமை என்பதும் அப்போது நினைவுக்கு வந்தது.
மொபெட்டின் ஹாண்டில் பாரில் மாட்டியிருந்த கித்தான் பையிலிருந்து ஆனந்த விகடன் தீபாவளி மலரை எடுத்துக் கொடுத்தார் ஏஜெண்ட். டிரவுசர் பையில் பத்திரப்படுத்தியிருந்த பத்து ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன். மீதி ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு ‘’ நீயா ஓடி வர வேண்டாம்னுதான் எடுத்துண்டு வந்தேன். பத்திரிகை படிக்கறதெல்லாம் நல்லதுதான். படிப்புல கோட்டை விட்டுடாமப் பாத்துக்கோ’’ என்றார்.
மறுபடியும் புத்திமதியா? என்று அலுவலக வாசலில் குதிரைமேல் ஈட்டியுடன் வீற்றிருந்த மிக்கேல் சம்மனசைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பதிலாக ரங்கா பதில் சொன்னான். ‘’ அதெல்லாம் நன்னாப் படிப்பான் மாமா. மொத அஞ்சு ரேங்க்குள்ள வாங்கிடுவோம். இவன் கவிதையெல்லாம் நன்னா எழுதுவான்”. நான் பார்வையைத் திருப்பினேன்.
‘’அப்போ அடுத்த தீவாளி மலர்ல ஒன்னோட கவிதையும் வரட்டும்’’ என்று முகம் முழுவதுமாகப் பூத்த சிரிப்புடன் ஏஜெண்ட் மொபெட்டை முடுக்கி ஸ்டாண்டிலிருந்து விடுவித்து ஏறிப் பறந்தார்.
மிச்ச ஐந்து ரூபாயில் அன்று மாலையே ஐந்துமுக்கு பாய் கடையில் கல்கி தீபாவளி மலரும் கிடைத்தது. அப்போது நான் புதிதாகத் தெரிந்து கொண்ட எழுத்தாளர் ஒருவரின் கதைகள் இரண்டு மலர்களிலும் இருந்தன.விகடனில் ‘விளையாட்டுப் பொம்மை’ என்ற கதை. கல்கியில் ‘கடைசி மணி’ என்ற கதை. எழுதியவர் – தி.ஜானகிராமன்.
கைக்கு வந்த ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2021ஐப் புரட்டிக் கொண்டிருந்தபோது இந்தப் பழைய நினைவுகளும் புரண்டு வந்தன.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் என்னுடைய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. 2018 இல் மதுரை சோமுவைப் பற்றிய கட்டுரை ‘ மனோ தர்மர்’. 2019 இல் கொரியாவிலுள்ள எழுத்தாளர் உறைவிட முகாம் ‘தோஜி மையத்தில் கழித்த நாட்களைப் பற்றிய அனுபவம் ‘தோஜி’. 2020 இல் தி.ஜானகிராமன் நூற்றாண்டை ஒட்டி எழுதிய ‘காலத்தைப் படைத்த ஆளுமை’ என்ற கட்டுரை. இந்த 2021 இல் திருவனந்தபுரத்தின் நவீனத் தொன்மக் கதையான ‘ மகாராஜாவின் காதலி’.
விகடன் தீபாவளி மலர் ஆசிரியரான கா.பாலமுருகனின் தூண்டுதல் இல்லாமலிருந்தால் இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்க மாட்டேன். வீயெஸ்வி, லலிதாராம், வெ. நீலகண்டன் ஆகியோரது பாராட்டுகள் கிடைக்காமலிருந்தால் தொடர்ந்து எழுதியிருக்கவும் முடியாது. இவர்களுக்கு மிக்க நன்றி.
இவர்களுக்கெல்லாம் நன்றி பாராட்டும் அதேசமயம் ‘’ அடுத்த தீவாளி மலர்ல ஒன்னோட கவிதையும் வரட்டும்’’ என்று சொன்ன விகடன் ஏஜெண்டுக்கும் மானசீக நன்றி. அந்த வாக்குப் பலிக்க நாற்பத்து எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதனால் என்ன, மெய்யான சொல் என்றாவது வெல்லும் தானே? அவர் இன்று இல்லை என்றே அறிகிறேன். ஆனால் ஆதரவுக் குரல் எழுப்பிய ரங்கா நீ எங்கே?
@
October 13, 2021
நெடுமுடி வேணு

நெடுமுடி வேணு (1948-2021)
கலைப் பிரபலங்களின் மறைவின்போது மலையாள ஊடகங்கள் பயன்படுத்தும் நிரந்தர வாசகங்களில் ஒன்று: ‘அன்னார் அரங்கு நீங்கினார்’ என்பது. நெடுமுடி வேணுவைப் பொருத்து இந்த வாசகம் ‘அரங்குகளை நீங்கினார்’ என்று பன்மையில் பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவர் பல்துறைக் கலைஞராக விளங்கியவர். இலக்கியம், இசை, நாடகம், சினிமாத் துறைகளில் பங்களித்தவர். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலக் கலைவாழ்க்கையில் தொடர்ந்தும் அவ்வப்போதுமாக இந்தத் துறைகளில் ஈடுபட்டுச் செயலாற்றியவர்.
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் நெடுமுடியில் 1948இல் பிறந்தவர் வேணு என்ற வேணுகோபாலன். அவர் பிறந்த மண்ணான குட்டநாடு கலைகளின் கூடற்களம். கர்நாடக இசை, கதகளி ஆகிய செவ்வியல் கலைகளுக்கும், சோபான சங்கீதம் போன்ற சடங்குக் கலைகளுக்கும், படையணி முதலான நாட்டார் கலைகளுக்கும் ஈரமும் செழுமையும் ஊட்டிய மண். தகழி சிவசங்கரன் பிள்ளை, அய்யப்ப பணிக்கர், காவாலம் நாராயணப் பணிக்கர் உள்ளிட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும் இலக்கியப் பின்புலமாகச் சித்தரித்த நிலம். குட்டநாட்டின் இந்த இயல்புகள் மனித வடிவத்தில் வெளிப்பட்டது நெடுமுடி வேணு என்ற கலைஞனில்.
கல்லூரிக் காலத்தில் சக மாணவரும் நண்பரும் பின்னாட்களில் மலையாளத் திரையுலகில் பிரபல இயக்குநராகப் புகழ்பெற்றவருமான பாசில் மாணவர்களுக்கான போட்டிக்கு எழுதிய நாடகத்தில் வேணு நடித்தார். நடுவராக வந்திருந்த கவிஞரும் நாடகக்காரருமான காவாலம் நாராயணப் பணிக்கர் வேணுவுக்குள் ஒரு நடிகரைக் கண்டார். பட்டப் படிப்புக்குப் பின்பு சிறிது காலம் தனிப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியராக ஆலப்புழையிலும் பத்திரிகைச் செய்தியாளராகத் திருவனந்தபுரத்திலும் பணியாற்றினார்.
காவாலம் நாராயணப் பணிக்கரின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்ததும் வேணு திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்தார். அவரது கலைவாழ்க்கையின் தொடக்கம் அந்தக் குடிபெயர்வு. 1972இல் வெளியான ‘ஒரு சுந்தரியுடெ கத’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சொல்லிக் கொள்ளும்படியான முக்கியத்துவம் இல்லாத வேடம். ஆனால் படத்தின் பின்னணி வலுவானது. மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர் பி. கேசவதேவின் நாவலை ஆதாரமாகக் கொண்ட கதை. திரைக்கதையும் இயக்கமும் பிரபல இயக்குநர் தோப்பில் பாசி. பிற்கால நேர்காணல் ஒன்றில் முதல் பட அனுபவம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் வேணு. “நடனமாடும் கல்லூரி மாணவர்களில் ஒருவனாகச் சின்னப் பாத்திரம். யாரும் என்னைக் கவனித்திருக்க முடியாதவேடம். எனக்கும் மனக்குறைதான். ஆனால் கவனத்துக்குரிய படத்தில் அறிமுகமானேன் என்பதால் அந்தக் குறை பெரிதாகப் படவில்லை.”
1978இல் அரவிந்தன் இயக்கத்தில் வெளிவந்த ‘தம்பு’ நெடுமுடி வேணுவைத் திரையுலகின் கவனத்துக்கும் பார்வையாளரின் வரவேற்புக்கும் இலக்காக்கிற்று. எழுபதுகளின் இறுதியில் உருவான கலைப் படங்களிலும் எண்பதுகளில் வெளிவந்த இடைநிலைப் படங்களிலும் நெடுமுடி வேணு நிரந்தரப் பங்கேற்பாளரானார். பரதன் இயக்கிய ‘தகர’ (1979) படத்தில் வேணு ஏற்றிருந்த செல்லப்பன் ஆசாரி பாத்திரம் அவரது நடிப்பின் நுண்ணியல்பை எடுத்துக்காட்டியது. ஜான் ஆப்ரகாம் இயக்கிய ‘செறியாச்சன்டெ குரூர கிருத்தியங்களில் கிறிஸ்தவப் பாதிரியாராக வேடமேற்றார். பத்மராஜன் இயக்கிய ‘கள்ளன் பவித்ர’னில் (1981) மனந்திருந்திய கள்வனாக நடித்தார். இந்த ஆரம்பக் கால வேடங்களில் அவரது நடிப்பு புதிய தோற்றங்களைக் கொண்டிருந்தது. அதன் விளைவாக ‘சமாந்தர சினிமா’ என்ற இடைநிலைப் படங்களில் வேணு இன்றியமையாதவராக ஆனார். பரதன், பத்மராஜன், மோகன், கே.ஜி. ஜார்ஜ், லெனின் ராஜேந்திரன் போன்றவர்களின் படங்களில் அவரை நம்பிப் பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. மோகன் இயக்கிய ‘விட பறயும் முன்பே’ (1981) வேணுவின் நடிப்புக்காகவே பார்க்கப்பட்ட படமாக இருந்தது.
நெடுமுடி வேணு கதாநாயகராகச் சில படங்களில் நடித்திருந்தாலும் நட்சத்திர நடிகரல்லர். நிகழ்த்துநர். எனவே துணைப் பாத்திரங்களிலேயே பெரும்பாலும் அவரைக் காணமுடிந்தது. அந்தப் பாத்திரங்களிலேயே அவரது நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டது. அவரைத் தவிர அந்தப் பாத்திரங்களில் வேறு எவராலும் சோபிக்க முடியாது என்று சொல்லும்படியான நுண் உணர்வுகளைத் திரையில் வெளிப்படுத்தினார். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த ‘ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா’ (1990)வில் அவரது பாத்திரம் ஒரு சிற்றரசர். அவரது உறவினர்களாலேயே கொல்லப்படும் சதிக்குள் அகப்பட்டிருக்கிறது அந்தப் பாத்திரம். அவரைத் தீர்த்துக் கட்ட அமர்த்தப்படும் வாடகைக் கொலையாளியின் இசைத் திறனிலும் நல்லியல்பிலும் தன்னை இழந்துபோகிறார். தான் நம்பிய அந்தப் பாத்திரம் தன்னை ஏமாற்றியதைப் புரிந்து கொள்கிறார். அந்தத் தருணத்தில் நெடுமுடி வேணு வெளிப்படுத்தும் நடிப்பு நுட்பமானது. உடலும் பார்வையும் சோர்ந்த நிலையிலிருப்பவராக அந்தக் காட்சியில் அவர் நிரம்பி நிற்கிறார்.
வேணுவின் நடிப்புப் பாணி நாடகத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. நாடகத்தில் நடிகனின் முழு உடலுமே நடிப்புக் கருவியாகச் செயல்படுகிறது. அந்தப் பாணியையே திரை நடிப்பிலும் வேணு கையாண்டார். அவரது சிகை முதல் கால் நகம் வரையுமே அவரது நடிப்பை வெளிப்படுத்தின. ‘மனசின் அக்கரே’ (2003) என்ற சத்யன் அந்திக்காடு படத்தில் அவருக்கு சவடால் பேர்வழியான கிறிஸ்தவப் பாத்திரம், ஒரு காட்சியில் பாத்திரத்தின் டம்பத்தைக் காட்டுவதற்காகப் புட்டம் குலுங்க நடப்பார். அந்த நடையிலேயே பாத்திரத்தின் குணத்தைக் கொண்டு வருவார். திரைப்படங்களின் குளோஸ் அப் காட்சிகளில் வேணு காட்டும் நுட்பமான சலனங்கள் நாடக நடிப்பிலிருந்து முற்றிலும் வேறானவை.
ஒரு படத்தில் வேணு ஏற்றிருந்த பாத்திரம் இறந்த நிலையில் கால்நீட்டிக் கிடப்பதாகக் காட்சி. காட்சி படமாக்கப்படும்வரை அசையாமல் கிடந்தார். காட்சி முடிந்ததும் சிரித்துக் கொண்டே எழுந்தார். ‘அசையாமல் படுத்துக் கிடப்பதை சுலபமாக நடித்து விடலாம், இல்லையா?’ என்று ஒருவர் குறிப்பிட்டார். ‘இல்லை அதுவும் சிரமமானதுதான். சும்மா கட்டைபோலக் கிடப்பதல்ல நடிப்பு. அந்தப் பாத்திரம் இறக்கும்போது என்ன மனநிலையில் இருந்தது என்பதையும் நடிகன் முகத்தில் காட்டவேண்டும். நிம்மதியான சுக வாழ்க்கை நடத்தியவரென்றால் சிரித்த முகமாக இறந்திருப்பார். கடன்பட்டு நொந்து போனவரானால் அந்தச் சலிப்பும் நோயாளியாக இருந்தால் அந்த வாதையும் முகத்தில் தென்படும். அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்’ என்று பதில் சொன்னார் வேணு. நெடுமுடி வேணு நல்ல நடிகர்தான் என்று சான்றளிக்க ஐந்நூறுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன.
அரைநூற்றாண்டுக் காலம் திரைப்படங்களில் நடித்து வந்தவர். எனினும் நாடகத்தின் மீதான நெடுமுடி வேணுவின் காதல் ஒருபோதும் ஓய்ந்ததில்லை. காவாலம் நாராயணப் பணிக்கரின் ‘அவனவன் கடம்ப’, ‘தெய்வத்தார்’ போன்ற நாடகங்கள் வேணுவின் நடிப்பால் உயிர்பெற்றன. நாடகத்துக்கு இணையாகவே அவரது இலக்கிய ஆர்வமும் மங்காமல் தொடர்ந்தது. அய்யப்ப பணிக்கர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆகிய கவிஞர்களை கவிதைகளை அவர் சொல்லும் பாங்கு கவிதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தையே அளிக்கும். இந்த இலக்கிய ஈடுபாடுதான் அவரை திரைக்கதை எழுத்தாளராக்கியது. பரதன் இயக்கிய ‘காற்றத்தெ கிளிக்கூடு’ (1983) முதலாக ஏழு திரைக்கதைகளை எழுதியுள்ளார். ‘பூரம்’ (1989) என்ற திரைப்படத்தை இயக்கியும் இருக்கிறார். நடிகராக மட்டுமல்லர் சினிமாவின் பிற தளங்களிலும் செயல்பட்ட கலை ஆளுமை அவருடையது.
குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும் நெடுமுடி வேணுவுக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ‘இந்தியன்’, ‘அந்நியன்’ ‘பொய் சொல்ல போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ ஆகிய படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரது நடிப்பு மிகவும் சிலாகிக்கப்பட்டது, ‘மோக முள்’ளில்தான். ஜானகிராமன் உயிரும் உடலுமாக கற்பனைச் செய்த ரங்கண்ணா வேடத்துக்கு வேணுவைத் தவிர பொருத்தமான இன்னொரு நடிகர் இருக்க வாய்ப்பில்லை.
நடிப்பைப் ‘பகர்ந்தாட்டம்’ என்று மலையாளத்தில் குறிப்பிடுவது உண்டு. நெடுமுடி வேணு என்ற ஒற்றைப்பிறவி ஏரத்தாள ஐந்நூறு உடல்களில் பகர்ந்தாடியிருக்கிறது. வெவ்வேறு மனிதராக வெவ்வேறு வயதினராக வெவ்வேறு பின்னணி சார்ந்தவராக உருவாக்கப்பட்ட பாத்திரங்களில் நெடுமுடி வேணு வாழ்ந்துக்காட்டினார்.
பார்வையாளர்களின் ஏற்பைத் தாண்டி நெடுமுடி வேணுவுக்குக் கிடைத்த அதிகார பூர்வமான அங்கீகாரங்கள் குறைவே. ஆறு முறை கேரள மாநில அரசின் விருதுகளைப் பெற்றார். இரண்டுமுறை மத்திய அரசின் விருதுகள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த இரு விருதுகளும் அவர்களுடைய தகுதிக்கு பெருமைச் சேர்ப்பவை அல்ல. பி.ஜே. ஆன்டணி முதல் சுராஜ் வெஞ்ஞாறமூடு வரையான மலையாள நடிகர்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான தேசிய விருது மலையாளத்தின் மகத்தான இரு கலைஞர்களுக்கு அளிக்கப்படவே இல்லை. அவர்கள் திலகனும் நெடுமுடி வேணுவும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வேணுவுடனான நேர்ச்சந்திப்பில் இதைச் சுட்டிக் காட்டியதும் கண்களைச் சிமிட்டி தோளைக்குலுக்கி வாய்விட்டு சிரித்தார். அசல் குட்ட நாட்டுக்காரனின் பகடிச்சிரிப்பு. அது இப்போதும் காதில் ஒலிக்கிறது.
@
நன்றி: இந்து தமிழ் திசை 13 அக்டோபர் 2021
October 5, 2021
கவி நாராயணர்

அனைவருக்கும் வணக்கம். ஸ்ரீ நாராயண குரு கல்லூரி சார்பாக நடைபெறும் நாராயண குரு – வாழ்வும் வாக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக தொடர்புடைய எல்லாருக்கும் முதலில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியின் அமைப்புச் செயலாளரான டாக்டர் கிரீசன் என்ன தலைப்பில் பேச விரும்புகிறீர்கள் என்று கேட்டார். கொஞ்சமும் யோசிக்காமல் ‘கவி நாராயணர்’ என்று சொன்னேன். நான் கவிதையில் ஆர்வம் கொண்டவன். கவிதை எழுதி வருபவன் என்பதால் நாராயண குருவைக் கவிஞராகப் பார்ப்பது நெருக்கத்தைக் கொடுக்கிறது. இது ஒரு காரணம். சில மாதங்களாக நாராயண குருவின் சம்பூர்ண கிருதிகள் என்ற நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அதையொட்டியே அவரைக் கவிஞராகப் பார்க்க விரும்புவது மகிழ்ச்சி தருகிறது. இது இன்னொரு காரணம்.
நாராயண குரு என்ற பேராளுமைக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன. தத்துவ ஞானி, ஆன்மீகப் பெரியார், கேரள மறுமலர்ச்சியின் விடிவெள்ளி, சமூகச் சீர்திருத்தங்களின் முன்னோடி, ஒடுக்கப்பட்டிருந்த சமுதாயங்களுக்கு சமூக நீதியைப் பெற்றுத் தந்த போராளி, சாதிக்கும் மதத்துக்கும் அப்பாற் பட்ட மனிதப் பற்றாளர் என்று அவரைப் பல நிலைகளில் காண முடியும். அவை அனைத்துக்குமான பேருருவாக இருந்தவர், இருப்பவர் குரு.
மகாத்மா காந்தியைப் பற்றி பாரதி எழுதிய கவிதையின் ஒரு பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மகாத்மா காந்தி பஞ்சகத்தின் நான்காவது பகுதி அது.
தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை பெருமான்.
காந்தியைச் சிறப்பித்து பாரதி சொல்லும் இயல்புகள் எழுத்துப் பிசகாமல் நாராயண குருவுக்கும் பொருந்தக் கூடியவை. இந்தக் கவிதை எழுதப்பட்ட காலத்தில் நாணு சுவாமி கேரளத்தில் குரு நாராயணராக அறியப் பட்டிருந்தார். அவரது சிந்தனையின் சாரம் வெளிப்பட்ட ஒன்றாகச் சொல்லப் படும் ‘தெய்வ தசகம்’ என்ற படைப்பு வெளியாகிக் கவிஞராகவும் போற்றப் பட்டிருந்தார். பாரதி எழுதிய காந்தி பஞ்சகம் இதற்கெல்லாம் சில ஆண்டு களுக்குப் பின்னர் எழுதப்பட்டது. காலத்தால் பிற்பட்டது. இன்னொரு ஆளுமையைப் பற்றிப் பேசப்பட்டது என்பதெல்லாம் இருந்தாலும் பாரதி சொல்லும் குணங்களான தன்னுயிர்போலப் பிறன் உயிரைக் கணித்தவர்; பூமியில் உள்ள உயிர்கள் யாவும் கடவு:ளின் வடிவம் என்று உணர்ந்தவர் நாராயண குரு என்பதால் இந்தப் புகழ் அவருக்கும் பொருந்தும். அரசியல் விடுதலையை முன்னிருத்திச் செயல்பட்ட காந்தி கைக்கொண்ட ஒன்றை சமூக விடுதலைக்காகப் போராடிய நாராயண குருவும் முன்னமே கொண்டிருந்தார். அதற்கு அவரை ஊக்கு வித்தது பாரதி குறிப்பிடும் ‘மெய்ஞ் ஞானத் துணிவு’ என்று நம்புகிறேன்.
நாராயண குருவின் ஆன்மீகத்தின் அடிப்படை இந்த மெய்ஞ் ஞானத் துணிவு என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும். ‘அவனவன் தன் சுகத்துக்காக விரும்புவது பிறனொருவனின் சுகத்துகாகவும் வரவேண்டும்’ ( அவனவன் ஆத்மசுகத்தினு ஆசரிக்குன்னது அபரன்டெ சுகத்தினாய் வரேணம் ) என்ற குரு வாசகம் மெய்ஞ் ஞானத் துணிவின் அடையாளம். ஆன்மீகவாதி என்ற நிலையில் அத்வைத தத்துவத்தைக் கடைப்பிடித்தவராகக் கருதப்படுபவர் நாராயண குரு. அவரே அப்படிக் கருதியவர். தோற்றத்தில் பலப்பலவாகத் தெரியும் எல்லாம் ஒன்றே என்பதுதான் அத்வைதத்தின் அடிப்படை. எல்லா உயிர்களும் ஒன்று. நம்முடைய மாயையால்தான் அவை வெவ்வேறாகத் தெரிகின்றன. இந்த மாயை கலைந்துவிட்டால் வேற்றுமைகள் இல்லாமல் போய்விடும் என்பது அத்வைதத்தின் விளக்கம்.
‘ஆழியும் திரையும் காற்றும்
ஆழமும்போல நாங்களும்
மாயையும் நின் மகிமையும்
நீயும் என் உள்ளத்தில் ஒன்றாகுக
என்று தெய்வ தசகத்தின் நான்காவது பாடலில் குரு குறிப்பிடுவது அதைத் தான். எல்லாமறக் கலந்த ஒன்றுக்கு பேதமில்லை என்பதைத்தான்.
இதை உபதேசமாகச் சொன்னவர்களே பெரும்பாலும் அதிகம். ஆதி சங்கரர் முதல் இன்றைய ஆன்மீக விற்பனையாளர்கள்வரை. இதை நடைமுறை யில் காட்டிய பெருமை நாராயண குருவுக்கு உரியது. அவரது வாழ்வே அதற்கு எடுத்துக்காட்டு.
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல் அதைச் செயலிலும் காட்டியவர் நாராயண குரு. இதைத் தத்துவ அறிவுநிலை என்பதைவிடக் கவித்துவ உணர்வுநிலையாகக் காணவே விரும்புகிறேன். தத்துவத்தில் சிந்திக்கும் திறனில்லாத ஒன்றுக்கு இடமில்லை. தர்க்கத்துக்கு விளங்காத ஒன்றுக்கு தகுதியில்லை. ஆனால் கவிதையில் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. எல்லாமும் கவிதைக்கான உயிர்ப் பொருள்கள்தாம். தன்னை இன்னொன்றாகவும் இன்னொன்றைத் தானாகவும் மாற்றுகிற கவிதையின் தர்க்கத்தையே நாராயண குரு ஆன்மீகத்தின் வெளிப்பாடாக ஆக்கினார். ஆற்றில் மூழ்கிக் கிடந்த ஒரு கல். அந்த வெறும் கல் தத்துவக் கண்ணோட்டத்தில் நிச்சலனமான பொருள். ஆனால் அதைக் கடவுளாகக் கண்டதும் காணச் செய்ததும் அவருக்குள் ஆழ்ந்திருந்த உணர்வு நிலைதான். கவித்துவ நிலைதான். எல்லாரையும் எல்லாவற்றையும் நிகரானதாகக் கொண்ட மனநிலையிலிருந்துதான் மனிதனுக்கு ஒரு கடவுள் போதும் என்று சொல்ல அவரால் முடிந்தது. ‘ஒரு ஜாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்கு'ப் போதும் என்று சொன்னதும் தன்னில் பிறரையும் பிறரில் தன்னையும் காணும் உணர்வு நிலையில்தான். அவரது கவித்துவம் முகிழ்ப்பது அந்தத் திட்பமான தருணத்தில்தான் என்று கருதுகிறேன். சிற்பக் கலையின் அத்தனை சிறப்புகளும் வெளிப்படும் உருவச் சிலையின் இடத்தில் எளிய கல்லைக் கடவுளாக நிறுவியதுதான் அவரது பெருமைக்கு உரிய கவிச்செயல். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைக் காலத்தின் அடையாளமாகக் கண்டால் அதில் கிடக்கும் கல்லை அழிவற்ற ஒன்றின் சின்னமாகக் கருதலாம். நிலையில்லாத ஒன்றுக்குள் வாழ்வின் அடையாளத்தைப் பிரதிஷ்டை செய்த உணர்வைக் கவிதையிலிருந்துதானே பெற்றிருப்பார்?.
ஆன்மீகவாதிகளாக அறியப்பட்ட பலரும் கவிஞர்களாகவும் இருந்திருக் கிறார்கள். அறியப் பட்டவர்கள்தாம். அவர்களிடமிருந்து நாராயண குருவை வேறுபடுத்துவதாக ஒரு அம்சத்தைக் கருதுகிறேன். அது மரபார்ந்த ஆன்மீகவாதிகள் கடவுளிடம் மனிதர்களைக் கொண்டு சேர்க்க உபாயங்களை முன்வைத்தார்கள். மாறாக குரு மனிதர்களிடையில் கடவுளைக் காண விரும்பினார் என்பது. நிலவில் மனிதன் உலவுவது அரிய சாதனைதான். ஆனால் அதைவிட நிலவின் ஒளியில் எல்லா மானுடர்களும் பிரகாசிப்பது மேலானது. மகத்தானது. இதை ஒரு கவித்துவக் கற்பனையாகச் சிந்தித்தால் குருவின் கவிமனம் விளங்கும். அந்த நிலைதான் அவரிடமிருந்து ‘மதம் ஏதாயாலும் மனுஷன் நன்னாயால் மதி’ ( மதம் எதுவானாலும் மனிதன் மேம்பட்டால் போதும்) என்ற எளிய வாசகமாக வெளிப்படுகிறது. அவர் இங்கே முன்னுரிமை அளிப்பது மதத்துக்கு அல்ல; மனிதனுக்குத்தான். இதைக் குறிப்பிடும்போது கூடவே பாரதியின் வரியொன்றும்நினைவுக்கு வருகிறது. ‘பல பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிப்பீரோ?’ என்ற வரி. பாரதி முதன்மையளிப்பதும் மதத்துக்கல்ல; மனிதர்களுக்குத்தான்.
நாராயண குருவைப் பற்றிய பேச்சில் பாரதி இடம் பெறுவது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். அதற்கு வரலாற்று அடிப்படையிலான காரணங்கள் சில இருக்கின்றன. பாரதி பிறந்த காலத்துக்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து அவர் மறைந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின் மறைந்தவர் நாராயண குரு. இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு நேர்ந்திருக்கவில்லை. இரண்டு நாடோடிகள் சந்தித்துக் கொள்வது அரிதான செயல்தான். ஆனால் தமிழ் உலகத்துக்கு நாராயண குருவை அறிமுகப்படுத்திய முதல் ஆளுமை பாரதி என்பது வியப்பளிக்கும் செய்தி.
நாராயண குரு பின்பற்றிய அத்வைதம் இந்து மதத்தில் அடங்கியது என்று சொல்லப்படுகிறது. அதை குருவும் மறுத்ததில்லை. பிற்காலத்தில் அவர் பிரதிஷ்டை செய்ததெல்லாம் இந்துக் கடவுள்களின் பிரதிமைகள் என்பதிலிருந்தே இது புரியும். ஆனால் உண்மையில் நாராயண குரு இந்து மதச் சாமியாராக இருக்கவில்லை என்பதை எடுத்துச் சொன்னவர் பாரதி. தனது கட்டுரைகளில் இதைச் சொல்கிறார். சரியாகச் சொன்னால் கேரளம் மட்டுமே அறிந்திருந்த ஸ்ரீ நாராயண குருவை பாரதியே தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். கேரளத்தைப் பற்றி பாரதி ஆறு கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அவற்றில் மூன்றில் பேசப்படும் பாத்திரமாக இருப்பவர் நாராயண குரு. குருவை ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்று பாரதி குறிப்பிடுகிறார். ஒரு கட்டுரையில் அவர் தெரிவிக்கும் விவரம் நாராயண குரு இந்து மதத்தைக் கடந்து சென்றிருப்பதைச் சொல்கிறது. ஆலுவா கல்லூரியில் முஸ்லிம் மாணவன் ஒருவன் சமஸ்கிருதம் கற்பதைப் பற்றி எழுதுகிறார் பாரதி. அதற்குக் காரணகர்த்தா ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்றும் பாராட்டுகிறார்.
நாராயண குருவைப் பற்றி யோசிக்கும் சந்தர்ப்பங்களில், அவரது படைப்புகளை வாசிக்கும் வேளைகளில், தவிர்க்க இயலாமல் பாரதி குறுக்கிடுவதற்குத் தனிப்பட்ட காரணம் எனக்கு இருக்கிறது. நாராயண குரு என்ற பெயரை, அவரது ஆளுமையைத் தெரிந்து கொண்டது பாரதி வாயிலாகவே என்பதே காரணம். இருவரும் அத்வைத சித்தாந்தத்தின் நடைமுறையாளர்கள். அவர்களது சிந்தனை மையங்கொண்ட இடம் சித்தாந்தங்களுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்ட சுதந்திரமான ஒளி பொருந்திய பகுதி. கவிதையும் கலைகளும் அந்த இடத்தைத்தான் இலக்காகக் கொள்கின்றன. ஏனெனில் அந்த மையத்தில்தான் மனிதர் களையும் சராசரங்களையும் இணக்கமாகக் காண்முடிகிறது. இந்த மானுட இணக்கமே நாராயணன் என்ற குருவை நிறுவுகிறது. அதுவே அவரது கவிதையின் ஊற்று முகமாகவும் பெருகுகிறது.
கவிஞராக நாராயண குருவை அறிய நேர்ந்த சம்பவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். தனிப்பட்ட அனுபவம் அது. நான் மலையாளம் அதிகம் புழங்காத மலையாளிக் குடும்பத்தில் பிறந்தவன். தமிழில் பிறந்து தமிழுடன் வளர்ந்து தமிழால் வாழ்பவன். என்னைச் சிறுவயதில் வளர்த்தவர் என்னுடைய அத்தை. அப்பாவின் அக்கா. எங்கள் குடும்பத்துக்கு மாறாக அவர் தனி மலையாளியாக அதன் நல்லதும் கெட்டதுமான பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்தவர். மாலையில் விளக்கேற்றி வைத்ததும் நாராயணீயத்திலிருந்தோ ஞானப் பானையிலிருந்தோ வேறு ஏதாவது பக்தி இலக்கியத்திலிருந்தோ பாடலைச் சொல்வதும் சுலோகங்களைப் பாராயணம் செய்வதும் அவருடைய பழக்கம். மலையாளம் தெரிந்த அதே அளவுக்குத் தமிழும் தெரியும். ஆகவே அவ்வப்போது தமிழ்ப்பாடல்களும் பாடப்படும். அப்படி ஒருநாள் அவர் பாடக் கேட்ட பாடல் ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது. அன்றைக்கு அத்தைக்குச் சஞ்சலம் முட்டி நின்ற நாளாக இருந்திருக்க வேண்டும். ‘தெய்வமே காத்து கொள்கங்ஙு கைவிடாதிங்ஙு ஞங்களெ’ என்ற இரண்டு வரிகளை மட்டும் கண்ணீர் வழியத் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்தார். எனக்கும் துக்கம் தொண்டையை நெரித்தது. இந்த நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் பின்பு தற்செயலாக ஒரு படம் கைக்குக் கிடைத்தது. பளபளப்பான தாளில் அச்சிட்ட வண்ணப் படம். படத்தில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். மழிக்கப்பட்டுப் பாதிவளர்ந்த தலைமுடி. மழிக்காத முகத்தில் குற்றுத் தாடி. காவிப் போர்வையுடன் அமர்ந்திருக்கும் படம். அந்தக் கண்கள் என்னைப் பார்ப்பது போலத் தென்பட்ட அதேசமயத்தில் என்னைத் தாண்டியும் பார்ப்பதுபோல சுடர்கொண்டிருந்தன. தலைக்குப் பின்புறம் ஒளிவட்டம் இருந்தது. தலைக்குப் பின்னால் ஒளிவட்டமிருந்தால் நிச்சயம் கடவுளாகத்தானே இருக்க முடியும். எனவே படத்தை சுவரில் அத்தை மாட்டியிருந்த மற்ற தெய்வப் படங்களுக்கு இடையில் வைத்தேன். அத்தை கோபித்துக் கொண்டார்.
’இவர் படத்தையெல்லாம் நாம் நம் வீட்டில் வைக்கக்கூடாது’ என்றார்.
‘யார் இவர்? என்று கேட்டேன்.
‘நாராயண குரு. நான் எப்போதும் பாடுவேனே ஒரு பாட்டு. தெய்வமே காத்துகொள்கங்ஙு என்று. அந்தப் பாட்டை எழுதினவர் அவர்தான்.’ என்று பதில் சொன்னார்.
‘நீங்கள் அழுதுகொண்டே பாடுகிற பாட்டுத்தானே?’ என்று மறுபடியும் கேட்டேன்.
‘ஆமாம்’ என்றார் அத்தை.
‘நீங்கள் உருகிப் பாடுகிற பாட்டை எழுதியவர் படத்தை வைத்தால் என்ன தப்பு?’ என்றேன்.
அத்தை பதில் சொல்லவில்லை. ஆனால் மாமாவிடம் சொல்லி அந்தப் படத்தைக் கண்ணாடிச் சட்டமிட்டு வாங்கி முப்பத்து முக்கோடி தெய்வங் களுக்கு நடுவில் மாட்டி வைத்தார். நாராயண குரு அப்படியாக எங்கள் வீட்டிலும் என்னுடைய மனதிலும் குடியேறினார். ஊர்களும் வீடுகளும் மாறிப் போன பின்பும் மரணம்வரையும் அத்தையின் கடவுள் வரிசையில் குரு வீற்றிருந்தார்.
நாராயண குருவை முதன்முதலில் அறிந்தது கவிஞராகவே. அவரது பன்முக ஆளுமையில் அதுவும் முக்கியமானது. இறுதிக் காலத்துக்குச் சில ஆண்டுகள் முன்புவரையும் கவிதையுடனான உறவைக் கைவிடவில்லை என்று அவருடைய வரலாறு தெரிவிக்கிறது. அவருடைய வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் அவர் கவிஞராகவே வாழ்ந்திருக்கிறார். டாக்டர், சுகுமார் அழீக்கோடு குருவின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாகப் பகுக்கிறார். அவதூதராக வாழ்ந்த காலம், தவமுனியாக வாழ்ந்த காலம், அனுபூதி நிலையை – அனுபவித்த அறிந்த நிலையை – அடைந்த காலம் என்று மூன்று. இந்த மூன்று காலங்களிலும் குரு கவிதை இயற்றும் செயலில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அந்த மூன்று காலங்களும் அவரது கவிதைகளில் இயல்பாகவே வெளிப்படுகின்றன.
முதலாவது கட்டத்திலிருந்து மூன்றாவது கட்டத்துக்குச் செல்லும்போது உண்டான நிலைகள் கவிதையின் வளர்ச்சியையும் ஆன்மீக முன்னேற்றத் தையும் காட்டுகின்றன.அவதூத நிலையிலும் தவநிலையிலும் இயற்றியவை அனுபூதி நிலையை அடைவதற்கான படிநிலைகளாகக் காணப்படுகின்றன. அனுபவமே கவிதையை உருவாக்குகிறது என்ற ஆகப் பழைய, ஆனால் என்றென்றும் நிரந்தரம் பெற்ற இலக்கியக் கருத்துக்கு இது வலுவூட்டுகிறது.
அவதூத காலங்களில் குரு படைத்த கவிதைகள் அனைத்தும் நற்குணங் களைப் போற்றுபவை. தெய்வங்களைத் துதிப்பவை. இவை அனைத்தும் பக்தியை உள்ளடக்கமாகக் கொண்டவை. சந்தமும் வர்ணனையும் நிறைந்தவை. அலங்காரச் சுமை மிகுந்தவை. சில சமயங்களில் அனுபவத்தைப் பின்னுக்கு தள்ளிவிட்டுச் சொற்களுக்குப் பின்னால் ஓடுபவை. வார்த்தை ஜாலத்தில் திளைப்பவை. சொற்களின் ஓசையால் கவித்துவம் பெறுபவையே தவிர பொருளின் ஆழத்தால் கவிதையானவை அல்ல.
குரு இயற்றிய ஸ்தோத்திரப் பாடல்களில் இதைக் காணலாம். அவற்றில் அமைந்திருப்பது ஒரு பக்குவமற்ற கவிஞனின் சொல் விளையாட்டு. ஷண்முக ஸ்தோத்திரத்தில் இதைப் பார்க்கலாம். அ, ஆ. இ. ஈ என்று தொடங்கிச் செல்லும் பாடல்கள் 'ரு' (ஹ்ரு) என்ற எழுத்தை அடைந்ததும் தடுமாறி விடுகின்றன. இவற்றை அவதூத எக்களிப்பின் வெளிப்பாடுகளாகச் சொல்லலாம். ஊற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் காட்டாற்றைப் போன்றவை இவை.
தூய திங்கட்பிறையும் திருமுடியடியில்
பாம்பெலும்பு உம்பராறும்
திருச்செம்பொன் சிகையுள் திருகி ஒளி
சிந்திச்சிதறும் அந்திச்செம்மையும்
நாமப்பொட்டு இணைந்த நெற்றியில்
சிறுபிறைக்கீற்றும் கார்வில்லும், வெல்லும் அரிய
புருவக்கொடியும் அடியவன் அகக்கண்
முனையால் ஒருமுறை காண்குவேன்.
இது ஷண்முக தசகத்தின்இரண்டாவது பாடல். முருகனை அலங்கார ரூபனாகப் பார்க்கும் பக்தனின் ஆசையைச் சொல்கிறது. அலங்காரமான வார்த்தைகளிலும் துடிப்பான ஓசையிலும் சொல்கிறது. இது ஓசையின் கவிதை. பக்தியின் கவிதை. இதில் தன் அனுபவத்தின் எந்தத் துளியும் இடம்பெறுவதில்லை. குருவின் அவதூத காலக் கவிதைகள் மிகுதியும் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்த தறுவாயில் இயற்றப்பட்டவை. புறத் தேவைகளுக்காக உருவானவை. அதிகமும் அன்றைய காலத்தில் அவருக்கு அறிமுகமாகியிருந்த தமிழ்ப் பக்திக் கவிதைகளின் அடியொற்றி இயற்றப் பட்டவை. அவற்றில் ஒரு கவிஞரைக் காண்பது அரிது.
குருவின் இரண்டாம் கட்டமான தவக் காலக் கவிதைகள் சமதளத்தில் ஓடும் நதிக்கு ஒப்பானவை. முன்கட்டக் கவிதைகள் கொண்டிருந்த பல இயல்புகளை இந்தக் காலக் கவிதைகள் கைவிடுகின்றன. தெய்வங்களைத் துதிக்கும் கவிதைகள் மிக அரிதாகவே உள்ளன. தனக்குள் நிகழும் அனுபவங்களைச் சொல்லும் கவிதைகளாக இவை மாறுகின்றன. ஒரு தீர்க்கதரிசியின் குரலைப் பிரதிபலிக்கின்றன. தனக்குள் நிகழும் மாற்றத்தில் பெற்ற மெய்ஞ் ஞானத்தின் மின்னல்கள் கவித்துவம் பெறுகின்றன. முன்பு குறிப்பிட்ட மெய்ஞ் ஞானத் துணிவு வெளிப்படுவது இந்தக் கட்டக் கவிதைகளில்தான்.
கடவுளற்ற ஓர் உலகை அல்லது மனிதன் தனக்குள் கடவுளைத் தேடும் ஒரு உலகை குரு கண்டடைகிறார். ‘ ஞானம் வெளியே தனித்து வாராது கண் வேண்டும் வருதற்கு. கண்ணுக்கு வெளிச்சம்போல’ என்ற வரிகளுக்கு வரும்போது ஆன்மீக நோக்கில் அத்வைதியாகவும் இலக்கியப் பார்வையில் கவிதையில் விற்பன்னராகவும் மாறுகிறார். இந்தக் கட்டமே மூன்றாவது காலமான, அனுபூதிக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது. நாராயண குரு மகத்தான கவிஞராகப் பரிணமிப்பது அங்குதான். அவரது ஆகச் சிறந்த கவிதைகள், அவை ஆகச் சிறந்த ஆன்மீகப் படைப்புகளும் கூட, வெளிப் படுவது அப்போதுதான். கடலின் பரப்பும் ஆழமும் கொண்ட ஆளுமை யாகவும் ஆன்மீகவாதியாகவும் கவிஞராகவும் பேருருவம் கொள்கிறார் குரு.
குரு நாராயணரின் அனுபூதிக் காலக் கவிதைகள் கடவுள்களைத் துறக் கின்றன. அவர்களைப் புகழும் மொழியைத் துறக்கின்றன. தன் வெளிப் பாட்டின் வெளிச்சத்தைப் பரப்புகின்றன. ஆன்மீகம் இந்த நிலையை ஆத்ம சாட்சாத்காரம் என்கிறது. கவிதை தன்னை வெளிப்படுத்தல் என்கிறது. இரண்டும் ஆழ்ந்த பொருளில் ஒன்றுதான். அதனால்தான் ஆன்மீகவாதிகள் கவிதையை நாடுகிறார்கள். கவிஞர்கள் ஆன்மாவின் தூதுவர்களாகிறார்கள். குருவின் அனுபூதிக் கவிதைகள் பருண்மையிலிருந்து நுட்பத்துக்குச் செல்கின்றன. புற எதார்த்தங்களிருந்து அக உண்மைகளுக்குள் புகுகின்றன. தெய்வீகத்திலிருந்து மானுடத்துக்கு மாறுகின்றன. அவற்றில் கடவுளின் இடத்தை மனிதன் எடுத்துக்கொள்கிறான். அவதூத காலக் கவிதைகளிலும் தவக் காலக் கவிதைகளிலும் தெய்வத்திடம் இறைஞ்சுபவனாகவும் வேண்டுபவனாகவும் சித்தரிக்கப்பட்ட மனிதன் தன்னைக் காப்பாற்றும் கடமை அவருடையது என்று விதி வகுக்கிறான். ஆன்மீகப் பொருளில் அத்வைதியின் பார்வையில் எல்லாரும் கடவுள்கள். எல்லா மனிதர்களும் கடவுள்கள். அப்படியானால் ஒரு மனிதனைக் காப்பாற்றக் கடமைப்பட்டவன் இன்னொரு மனிதன் தானே?
தெய்வமே காத்துகொள்கங்ஙு
கைவிடாதி்ங்ங்கு ஞங்ஙளெ
என்று தெய்வதசகத்தில் அவர் சொல்வது கடவுளிடம் அல்ல; மனிதர்களிடம் என்று காணவே விரும்புகிறேன். இந்த மானுட இணக்கத்தையே ஆன்மீகவாதியாகவும் சீர்திருத்தவாதியாகவும் குரு நாராயணர் காண்கிறார். கவி நாராயணரின் கவிதை நோக்கும் கவிதைப் பொருளும் இந்த மானுடக் கருணைதான் என்றும் நம்புகிறேன்.
நாராயண குரு கவிதைகளின் தன்மையைப் புரிந்துகொள்ளும் முயற்சியின் விளைவாகவே இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். கடல் நீரை சிப்பியில் முகந்தெடுப்பது போன்ற செயல் இது. எனினும் சிப்பிக்குள் ஒடுங்கிய நீரும் கடலின் பகுதிதானே?
நாராயண குரு பிறந்து 136 ஆண்டுகளும் மறைந்து 98 ஆண்டுகளும் அவரது முதல் கவிதை இயற்றப்பட்டு 128 ஆண்டுகளும் கடந்து விட்டன. இன்று நவீனமான காலத்திலிருந்து அந்தக் கவிதைகளை வாசிக்குப் போது சில எண்ணங்கள் எழுகின்றன. கவிதையின் தரிசனம் பற்றியும் கவிதையாக்கம் பற்றியும். கவிஞராக குரு செயலாற்றிய முறையைப் பற்றி்யும் எழுகிற கருத்துக்கள்.
குருவின் படைப்புகளை வாசிக்கும் ஒருவர் ஒட்டு மொத்தமாக அடையும் உணர்வு கருணை என்பதை அறிய முடியும். அந்தக் கருணையை நிலை நிறுத்துவதற்கான சிந்தனைகளே கவிதையின் பார்வையை நிர்ணயிக் கின்றன. அவரது படைப்புகளில் அனுகம்ப என்ற சொல்லையும் பொருளையும் பார்க்கலாம். தெய்வத்தை அவர் காண்பது தயா சிந்து என்றுதான். சகல ஜீவராசிகளையும் தனக்குள் காண்கிற காட்சியையே அவரது கவிதையின் தரிசனமாகத் தோன்றுகிறது. இன்றைக்கும் தேவையானது இந்த தன்வயப் படுத்தலும் தரிசனமும். அவைதான் குருவின் கவிதைகளை சமகாலப் பொருத்தமுடையதாக்குகின்றன.
கவிதைகளில் கையாண்டிருக்கும் உத்திகள் சில அவரை நவீனமானவரா கவும் காலத்துக்கு முன் நடந்தவராகவும் காட்டுகிறது. தெய்வதசகத்தின் முதல் கண்ணியிலிருந்தே இதற்கு உதாரணம் காட்டலாம்.
தெய்வமே காத்துகொள்கங்ஙு
கைவிடாதி்ங்ங்கு ஞங்ஙளெ
நாவிகன் நீ பவாப்திக்கோர்
ஆவிதன் தோணி நின் பதம்.
பவக் கடலை – பிறவிக் கடலை - நீந்த உதவும் வாகனத்துக்கு உவமையாக அவர் குறிப்பிடுவது ஆவித் தோணியை. நீராவிப் படகை. ஸ்டீம் போட்டை. அவர் காலத்தில் கவிதையாக்கத்தில் ஈடுபட்டிருந்த எந்தக் கவிஞரும் இது போன்ற உவமையை நிச்சயம் கையாண்டிருக்க முடியாது. சுப்ரமண்ய கீர்த்தனத்தின் நான்காவது பாடலில் உடலை எண் சாண் ரோட்டுடன் ஒப்பிடுகிறார். ‘எண்சாண் ரோட்டூடே உள்ள சகடம்’ என்ற வரி அவர் காலத்துக்கு மிகப் புதியதாகவே இருக்க வேண்டும். கவிஞன் அவனது காலத்தின் மொழியுடனும் வாழ்க்கையுடனும் கொண்ட உறவின் அடையாளம் இல்லையா இது?
நாராயண குரு பன்முகமானவர். அதைப் போலவே கவி நாராயணரும் பன்முகமானவர். சமஸ்கிருதம், மலையாளம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கவிதைகளை இயற்றியிருக்கிறார். சமஸ்கிருத ஸ்லோகங் களையும் மலையாளப் படைப்புகளையும் தமிழ்ச் செய்யுள்களையும் இயற்றியிருக்கிறார். திருக்குறளுக்கு முதல் மலையாள மொழிபெயர்ப்பைச் செய்தவர் அவர்தான். தேவாரத்துக்கு நிகரான பதிகங்களை இயற்றி யிருக்கிறார். அழுத்தமாகச் சொன்னால் தமிழ்க் கவிதை மரபையோ பண்பாட்டு மரபையோ பக்தி மரபையோ தெரிந்துகொள்ளாமல் குருவை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. தமிழ்க் கவிதையில் செயல் படுபவனாக என்னை மிகவும் கவர்ந்தவை அவரது தமிழ் ஆக்கங்கள். அவதூத காலக் கவிதைகளில் குரு அடியொற்றி இயற்றியவை தேவாரம், திருவாசகம், பட்டினத்தார், சித்தர் பாடல்களையே. அவரடு இரண்டாம் கட்டக் கவிதைகளில் சிறந்ததான குண்டலினிப் பாட்டு சித்தர் பாடல்களின் வடிவும் வனப்பும் கொண்டது.
ஆடு பாம்பே புனந்தேடு பாம்பே – அருள்
ஆனந்தக்கூத்து கண்டுஆடு பாம்பே
திங்களும் கொன்றையும் சூடும் ஈசன் – பத
பங்கயஞ் சேர்ந்துநின் றாடு பாம்பே
வெண்ணீ றணீந்து விளங்கும் திருமேனி
கண்ணீரொழுகக் கண்டாடு பாம்பே
இது மலையாளப் பாடலின் தமிழாக்கம். இதை நாராயண சித்தர் இயற்றியது என்று குறிப்பிட்டால் குருவை 19 ஆவது சித்தராகத் தமிழ் இலக்கியம் ஏற்றுக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.
'ஒவ்வொன்றாய் எண்ணித் தொட்டு
எண்ணிய பொருள் முடிந்ததும்
மிஞ்சி நிற்கும் பார்வைபோல்
உனக்குள்ளே துடிப்பாக வேண்டும் ' என்ற வரிகளை எழுதிய குரு அதன் சான்றாகவும் கவிதையில் இருந்தார். வாழ் நாள் முழுவதும் கவிதைகளை இயற்றியவர் அந்தப் பொருள் முடிந்ததும் பார்வையின் துடிப்பாக மட்டுமே தன்னை வைத்துக் கொண்டார். ஆன்மீகக் கவிஞர்கள் பலரும் தமது கவிதைகளில் அவர்களுடைய முத்திரையை அடையாளமிட்டிருக்கிறார்கள். கபீர், லால்தெத், மீரா, பசவண்ணர் போன்ற கவிஞானிகளின் பாடல்களில் அவர்களது பெயரையோ அடையாளச் சொற்களையோ காணலாம். ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்த நாராயண குரு எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளவில்லை என்பது வியப்பளிக்கிறது. அவர் கவிதைகளை இயற்றியதோடு சரி. அவற்றைப் பாதுகாக்க முற்பட்டதில்லை. எழுதியவனின் அடையாளமல்ல கவிதைக்கு முக்கியம். அதைக் கடந்த பொருள்தான் முதன்மையானது என்று அவர் எண்ணியிருக்கலாம். அவர் கவிதை எழுதியதெல்லாம் பயணியாகச் சென்று தங்கிய இடங்களில் கிடைத்த காகிதங்களில் எழுதி அங்கேயே விட்டுச் சென்றுமிருக்கிறார். ஒரு கவிஞனின் படைப்பு முற்றுப் பெற்றதும் அவனுக்கு மட்டும் உரியதல்ல என்ற நவீன இலக்கியக் கோட்பாட்டை நாராயண குரு தீர்க்க தரிசனத்தில் அறிந்திருக்க வேண்டும். அவரை உபசரித்தவர்களோ அல்லது அணுக்கத் தொண்டர்களோதான் குருவின் படைப்புகளைப் பாதுகாத்து நமக்கு அளித்திருக்கிறார்கள். அவர்களை நன்றியுடன் வணங்குகிறேன்.
ஸ்ரீ நாராயண குருவின்டெ சம்பூர்ண க்ருதிகள்’ நூலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் சுகுமார் அழிக்கோடு அந்தப் படைப்புகளை நவீன கங்கை என்று குறிப்பிடுகிறார். உண்மைதான். கங்கையும் கவிதையும் வற்றாதவை. குருவின் கவிதைகளும் வற்றாதவை. வற்றிவிடக் கூடாதவை. ஏனெனில் அந்தக் கங்கை பெருக்கெடுப்பது மானுடக் கருணை என்ற ஊற்றிலிருந்து அல்லவா?

கோவை, ஸ்ரீ நாராயண குரு கல்லூரி ஆதரவில் நடைபெற்ற ஸ்ரீ நாராயணகுரு - வாழ்வும் வாக்கும் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் இரண்டாம் நாள் அமர்வில் (05.10.2021) ஆற்றிய உரை.
October 1, 2021
பொன்மான்



நேற்றைக்கு முன் தினம். செல்லத் தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆனி ஆடியில் பொழிந்திருக்க வேண்டிய சாரல் மழை தாமதமாக வந்து சேர்ந்திருந்தது. மாடியறை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு அப்பால் தெரியும் மின் கம்பிகளில் நீர் மணிகள் திரண்டு தொங்கின. சில துளிகள் உதிர்ந்தபோது பார்வையை நகர்த்தினேன். நீல நிறப் பறவை கம்பியில் அமர்ந்திருந்தது. முதலில் முகத்தை காட்டி உட்கார்ந்திருந்த பறவை சட்டென்று திரும்பி வாலைக்காட்டி அமர்ந்தது. ட்ரூவ் என்று ஒலியெழுப்பினேன். கேட்காத பாவனையில் மழையில் நனைந்து கொண்டிருந்தது. இன்னொரு ட்ரூவுக்குத் தலையை மட்டும் திருப்பி அலட்சியமாகக் கண்களை உருட்டிவிட்டுத் திரும்பவும் மழையில் நனைந்து கொண்டிருந்தது. கைபேசியை ஜன்னலுக்கு வெளியில் நீட்டிப் பிடித்து நாலைந்து படங்கள் எடுக்கும்வரை நீல வாலையும் சிறகையும் காட்டிப் போஸ் கொடுத்தது. மறுபடியும் ஒருதடவை ட்ரூவ் என்று சத்தம் கொடுத்தேன். உனக்கு வேறு வேலை இல்லை என்று வாலைக் குலுக்கிக் கம்பியிலிருந்து எவ்விப் பறந்தது. அதற்குள் மழையும் வலுத்தது. ஜன்னலை அடைத்து விட்டு நகர்ந்தேன்.
அது எங்கள் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது பார்க்கக் கிடைக்கும் பறவைதான். மீன்கொத்தி. முன்பு விளைமண்ணாகக் கிடந்த நிலம் இப்போது குடியிருப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. எனினும் அங்குமிங்குமாக நீரோட்டம் உள்ள பூமி. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை திருவனந்தபுரத்துக்கும் கொல்லத்துக்கும் நீர்வழிப் போக்குவரத்து நடந்த பார்வதி புத்தனாறு கால்வாய் அருகில் இருக்கிறது. நீர் ஊறும் சதுப்பு. மழை நீரில் சிப்பிகளும் நத்தைகளும் பொடி மீன்களும் நீந்தும். அவற்றை இரை கொள்ள வரும் பறவைகளில் ஒன்றுதான் இந்த மீன்கொத்தி வகையறா.
எடுத்த படங்களை எந்த உத்தேசமும் இல்லாமல்தான் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தேன். நண்பர்கள் அம்பை, சேரன், தியடோர் பாஸ்கரன் மூவரும் பின்னூட்டம் இட்டார்கள். சேரன் அது குக்குறுவான் என்றார். பாஸ்கரன் மீன்கொத்தி என்றார். இரண்டையும் பார்த்ததில் பெயர்க் குழப்பம் ஏற்பட்டது. கேரளத்தின் புகழ் பெற்ற பறவையிலாளரான இந்து சூடனின் ‘ கேரளத்தில் பறவைகள்’, மற்றொரு பறவையியலாளரான சி.ரஹீமின் ‘ தென்னிந்தியப் பறவைகள்’ ஆகிய நூல்கள் சேகரிப்பில் இருக்கின்றன. அவற்றை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். அது மீன் கொத்திதான் என்று உறுதியானது. சிறகும் வாலும் நீல நிறம், வயிற்றுப் பகுதி காவி, மார்புப் பகுதியில் வெள்ளை, காதோரம் செம்பட்டையும் தவிட்டு நிறமும். ஆக நான் பார்த்தது மீன் கொத்தியைத்தான்.
பறவையை இனங்கண்ட மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது அதற்குக் கேரளத்தில் வழங்கும் விளிப்பெயர். அந்தப் பெயரைப் பல்லவியில் கொண்ட புகழ்பெற்ற திரைப்பாடலும் நினைவுக்கு வந்தது. வயலார் ராமவர்மா எழுதி சலீல் சௌதுரி இசையமைத்து யேசுதாஸும் மாதுரியும் பாடிய ‘நெல்லு’ படத்தின் பாடல். அதைக் கேட்கும் போதெல்லாம் பாட்டு முன்னிலைப் படுத்துவது இருகால் பறவையையா நாலுகால் விலங்கையா என்று தடுமாற்றம் ஏற்பட்டதுண்டு. ‘ நீலப் பொன்மானே, என்டெ நீலப் பொன்மானே’ என்று பாடலில் குறிப்பிடப்படுவது எது என்று குழம்பியதும் உண்டு. பல்லவியின் வரி அதைத் தெளிவாக்கும். ‘ வெயில் நெய்த புடைவை தருவாயா? என்று நாலு கால் மானிடம் கேட்க முடியாது. ஆகாயத்தில் உலவும் பறவையிடம் கேட்கலாம். ஏனெனில் மலையாளத்தில் மீன்கொத்திக்கு வழங்கும் சாதாரணப் பெயர் ‘பொன்மான்’.
இவையெல்லாம் இரண்டு நாட்களுக்கு முந்தைய சமாச்சாரங்களும் யோசனைகளும். இன்று காலை அறைக்குள் வந்து அமர்ந்தேன். ட்வீக் என்றொரு சத்தம். ஜன்னல் பக்கமாகப் பார்த்தேன். மார்பு வெள்ளை முந்தித் தெரிய நீல வாலைக் குடைந்து கொண்டு திட்டில் உட்கார்ந்திருந்தது ஒரு மீன்கொத்தி. முன்பு பிணக்கத்துடன் வாலைக் காட்டிய பறவை முக தரிசனம் அருளிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. ‘பொன் மானே’ என்று அழைத்ததும் தலையைக் குலுக்கியது. ‘பார்த்து விட்டாயா, போகட்டுமா?’ என்பதுபோல சின்ன உடலை அசைத்தது. ‘நீலப் பொன்மானே’ என்றதும் சரி என்று பறந்தது. பறந்துபோன பின்புதான் அதைப் படமெடுக்க மறந்தது உணர்வில் தட்டியது.
இன்று வந்தது பழைய பறவையா, இல்லை, புதிய பறவையா? தெரிய வில்லை. அன்று வந்த பறவைதான் இன்றும் வந்தி்ருக்க வேண்டும். அந்தப் பொன்மானுக்குத்தானே என்னை முன்னமே தெரியும்?
September 28, 2021
தி.ஜானகிராமன் கட்டுரைகள் - ஒரு வேண்டுகோள்

காலச்சுவடு பதிப்பகம் 2014 ஆம் ஆண்டு தி.ஜானகிராமன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வெளியிட்டது. இந்த நூலைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான் அச்சில் வெளிவந்தும் தொகுப்புகளில் இடம் பெறாத கதைகள் பற்றிய விவரங்கள் தெரியவந்தன. இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், ஜானகிராமன் மீது பற்றுக்கொண்டவர்கள் எனப் பலரது துணையுடன் கதைகள் திரட்டப்பட்டன. அவை ‘கச்சேரி’ என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றன.
தி.ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு, கச்சேரி – தொகுக்கப்படாத சிறுகதை – ஆகிய இரண்டு நூல்களுக்கான பணிதந்த உற்சாகமும் நிறைவும் தி.ஜானகிராமன் கட்டுரைகளைத் தொகுக்கும் எண்ணத்தை அளித்தன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுரைகளைத் தேடித் திரட்டும் வேலையில் ஈடுபட்டேன். ஜானகிராமனின் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், பயணக் கதைகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவே. அவற்றில் சில ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி.ஜானகி ராமன் படைப்புகள்– தொகுதி 2 இல் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தவிரவும் சில கட்டுரைகளை இந்த முயற்சியில் கண்டடைந்தேன். சிறுகதைகளுக்கு உதவியதுபோலவே முன் குறிப்பிட்டவர்கள் கட்டுரைகளைத் தேடவும் துணை புரிந்தார்கள். அரிய சில கட்டுரைகளைக் கண்டெடுத்துக் கொடுத்தார்கள். இவையனைத்தும் தொகுக்கப்பட்டு தி.ஜானகிராமன் கட்டுரைகள்என்ற நூலாக விரைவில் வெளியாக உள்ளது.
ஐந்து நூல்களுக்கு தி.ஜானகிராமன் முன்னுரை எழுதியுள்ளார். அவரது வாசிப்பு அனுபவத்தையும் இலக்கியக் கருத்தையும் சொல்பவை என்ற நிலையில் இந்த முன்னுரைகளும் கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கத் தகுதி பெற்றவை. சேர்க்கப்பட்டும் உள்ளன. எம்.வி. வெங்கட்ராமின் நித்ய கன்னி, ஆர்வியின் செங்கமலவல்லி,இந்திரா பார்த்தசாரதியின் ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன, ஆதவனின் இரவுக்கு முன்புவருவது மாலை, மாலனின் கல்லிற்குக் கீழும் பூக்கள்ஆகிய நூல்களுக்கு தி.ஜானகிராமன் முன்னுரை வழங்கியிருக்கிறார். இலக்கிய சிந்தனை அமைப்பின் சார்பில் வானதி பதிப்பகம் வெளியிட்ட 1978 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான பசியிலும் அவரது முன்னுரை இடம் பெற்றிருக்கிறது. மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளை மதிப்பிட்டு அவர் வாசித்த விமர்சனக் கட்டுரையே முன்னுரையாக வெளியிடப் பட்டிருக்கிறது.
மேற்சொன்ன முன்னுரைகளில் ஐந்து தி.ஜானகிராமன் கட்டுரைகள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆர்வியின் ‘செங்கமலவல்லி’ நாவலுக்கு தி.ஜானகிராமன் எழுதிய முன்னுரை கிடைக்கவில்லை. வானதி பதிப்பகம் வெளியிட்ட இந்த நாவலின் மூன்றாம் பதிப்பை மட்டுமே பார்வையிட முடிந்தது. அதில் தி.ஜானகிராமன் முன்னுரை இடம் பெறவில்லை. பதிலாக ஆர்வியே முன்னுரை எழுதியிருக்கிறார். நாவலின் முதல் பதிப்பு கலைமகள் காரியாலயம் வெளியீடாக வந்திருக்கலாம். பின்னர் வெளியான வானதி பதிப்புகளில் ஜானகிராமன் முன்னுரை நீக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க வாய்ப்புள்ளது.
தி.ஜானகிராமனின் ‘செங்கமலவல்லி’ முன்னுரை குறித்து அறிந்தவர்கள் தகவல் அளிக்கும்படியும் முன்னுரையுடன் கூடிய நூலின் முதல் பதிப்பை வைத்திருப்பவர்கள் நூலையோ அல்லது முன்னுரையின் நகல் வடிவத்தையோ தந்து உதவுமாறும் அன்புடன் வேண்டுகிறேன். ஜானகிராமன் எழுதிய முன்னுரைகளில் ஒன்று மட்டும் இடம்பெறவில்லை என்ற விட்ட குறையைக் களைய உங்கள் ஒத்துழைப்பு துணைபுரியும்.
தி.ஜானகிராமன் எழுதிய கட்டுரைகள் வெளியான இதழ்கள், நூல்களை அளித்தும், அவை பற்றிய விவரங்களைப் பகிர்ந்தும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நூற்றாண்டு காணும் மகத்தான படைப்பாளியை மேலும் அணுக்கமாக உணர இந்த உதவி இன்றியமையாதது. நவீனத் தமிழின் எழுத்துக் கலைஞர்களில் ஒருவரைக் கொண்டாடுவதில் எல்லாருக்கும் பங்கு உண்டு.
நன்றி.
அன்புடன்
சுகுமாரன்
தொடர்புக்கான மின் அஞ்சல்: editor@kalachuvadu.com
September 1, 2021
ஒரு மொழி பெயர்ப்பும் முன் பின் நினைவுகளும்
கனலி – இலக்கிய இணையதளத்தின் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியாகியுள்ள புகழ்பெற்ற கடிதமொன்று கவனத்தை ஈர்த்தது.
செவ்விந்தியத் தலைவர் ஸியட்டில் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் பியர்ஸுக்கு எழுதிய கடிதம். சூழியல் ஒரு பேசுபொருளாகக் உருவாகிக் கொண்டிருந்த 1980களின் தொடக்கத்தில் சிற்றிதழ்களிலும் இடதுசாரி இதழ்களிலும் ஸியட்டிலின் இந்தக் கடிதம் வெவ்வேறு மொழியாக்கங்களாக வெளிவந்தது. எஸ்.வி.ராஜதுரை ஆசிரியராக இருந்து வெளியிட்ட இனி இதழில் கவிஞர் புவியரசு ஒரு மொழியாக்கத்தை வெளியிட்டிருந்தார். ஏறத்தாழ அதே மாதத்தில் மீட்சி (இதழ் 15 / பிப்ரவரி - மார்ச் 1985 ) இதழில் நான் மேற்கொண்ட தமிழாக்கம் வெளியானது. இதற்குப் பின்னரும் ஸியட்டில் கடிதம் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளைக் கண்டிருக்கிறது. 2009 இல் புதிய கலாச்சாரம் இதழ் புதூர் ராசவேலின் மொழியாக்கம் வெளி வந்தது. இதற்குப் பிறகும் சில மொழிபெயர்ப்புகள் வெளியாகி இருக்கலாம். என் கவனத்துக்கு வரவில்லை.

சூழியல் அமைப்பு ஒன்று நான் மொழியாக்கம் செய்த ஸியட்டிலின் கடிதத்துடன் என்னுடைய கவிதை ஒன்றையும் ( இந்த நூற்றாண்டு – மூன்று காட்சிகள் ) சேர்த்து எட்டுப் பக்க வெளியீட்டைக் கொண்டு வந்தது. அது யார் என்றும் அமைப்பின் பெயர் என்னவென்றும் இப்போது நினைவில் இல்லை. கிறித்துவச் சார்பு நிறுவனம் என்பது மட்டும் தேசலாக நினைவில் தங்கியிருக்கிறது. குறிப்பிட்ட கவிதை 2018 இல் இந்திய மொழி நூல்களின் ஜெர்மன் மொழிபெயர்ப்புகளை வெளியிடும் திரௌபதி வெர்லாக் பதிப்பகத்தின் இந்தியக் கவிதைகளின் தொகுப்பில் இடம் பெற்றது. மறைந்த முன்னாள் நீதிமன்ற நடுவர் எம்.எஸ். ராமசாமியின் ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து மாற்றப்பட்ட கவிதையை 2016 இல் இந்திய ஜெர்மன் கவிதை முகாமில் சக பங்காளராக இருந்த ஜெர்மானியக் கவிஞர் உல்ஃப் ஸ்டோல்டர்ஃபாட் தமிழிலிருந்து நேரடியாக ஜெர்மன் மொழிக்குப் பெயர்த்தார். அப்போது தொகுத்துக் கொண்டிருந்த சூழலியல் கவிதைகள் தொகுப்புக்காக அதைச் செய்தார். அந்த ஆக்கம் வெளியானதா என்று தெரியவில்லை.
சியாட்டிலின் கடித மொழிபெயர்ப்பை நானே மறந்து விட்டிருந்த நிலையில் எழுத்தாளர் தாஜ் அதை ஆபிதீனுக்கு நினைவூட்ட பின்னவர் அதைத் தனது வலைத்தளம் ‘ஆபிதீன் பக்கங்க'ளில் பதிவேற்றினார். காலச்சுவடு பதிப்பகம் 2019 இல் தாஜின் ‘தங்ஙள் அமீர் ‘ தொகுப்பை வெளியிட்டது. நூலாக்கம் தொடர்பான முதற்கட்ட தொலைபேசி உரையாடலின்போது நலம் விசாரிப்பு முடிந்ததும் 'ஸியட்டில் மொழிபெயர்ப்பை ஏன் உங்களுடைய ஏதாவது கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கக் கூடாது?’ என்றுதான் தாஜ் பேச்சையே தொடங்கினார். ‘மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றைத் திட்டமிட்டால் அது பற்றி யோசிக்கலாம். ஆனால் அப்படி ஒன்றைச் செய்வதில் ஆர்வமில்லை’ என்று பதில் சொன்னேன். அசட்டையான அந்த பதில் அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. நேரில் வரும்போது அது பற்றிப் பேசுகிறேன் என்றார். அவர் நேரில் வந்தபோது சந்திக்க வாய்க்க வில்லை. சந்திக்க முடியாமலேயே மறைந்தும் போனார்.
கனலியில் வெளியாகி இருக்கும் ஸியட்டில் கடிதம் இத்தனை நினைவுகளைக் கிளறி விட்டிருப்பது வியப்பளிக்கிறது. ஞாபகங்களை மீட்க உதவிய கனலிக்கு நன்றி.
கீழே இருப்பது ஆபிதீன் பக்கங்களிருந்து எடுத்த பதிவு. நன்றி ஆபிதீன்.
புனிதமானது பூமி – ஸியட்டில்
29/08/2009 இல் 07:40 (சுகுமாரன், பிரம்மராஜன், மீட்சி)
செவ்வியந்தியத் தலைவன் ஸியட்டில் (Chief Seattle ) எழுதியதாக கூறப்படும் இந்த பதில் , பிரம்மராஜனின் ‘மீட்சி’யில் வெளிவந்தது – சுகுமாரனின் மொழிபெயர்ப்பில். ஆங்கில வடிவம் (Original ?) இங்கே. என்னிடமுள்ள ‘திசைகளும் தடங்களும்’ நூலில் ஏனோ இது இடம் பெறவில்லை. அவருடைய மற்ற தொகுப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கலாம்; தெரியவில்லை. ‘சமீபத்தில் படித்து வியந்த அருமையான ஆக்கம் இது. வார்த்தைகளில் நின்று அர்த்தத்தில் தாவும் இந்த கலைப் பூரணத்தை நான் மட்டும் ரசிக்க மனம் இடம் தரவில்லை. அதனாலேயே உனக்கு அனுப்புகிறேன். ‘மீட்சி’யால் கிடைத்த கொடை’ எனும் குறிப்புடன் கவிஞர் தாஜ் தன் நண்பர் ஒருவருக்கு – இருபது வருடங்களுக்கு முன்பு – அனுப்பிவைத்தது, நல்வாய்ப்பாக இன்று என் கையில் சிக்கியது. இடுகிறேன். புகழ்பெற்ற இந்த பதில் – புதூர் இராசவேலின் மொழிபெயர்ப்பில் – புதிய கலாச்சாரம் இதழிலும் இப்போது கிடைக்கிறது. கூகுள் தயவில் மற்ற தளங்களிலும் இருக்கலாம். தேடுங்கள். ‘மீட்சி‘க்காக எங்கும் அலையலாம் ; தவறில்லை!
‘1854-இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ·ப்ராங்க்லின் பியர்ஸ், பரந்த செவ்விந்திய நிலப்பகுதி ஒன்றை விலைக்கு வாங்கும் உத்தேசத்தை செவ்வியந்தியத் தலைவனான ஸியட்டிலின் முன் வைத்தார். ஸியட்டில், ஜனாதிபதிக்கு வழங்கிய பதிலின் மொழிபெயர்ப்பு இது. வருடங்கள் கடந்து விட்டன. இயற்கையிடமிருந்து ஒவ்வொரு நாளும் மனிதன் துண்டிக்கப்பட்டு வரும் நமது நிகழ்காலத்துக்கு ஸியட்டிலின் சொற்கள் முன்னைவிட வெகுவாகப் பொருந்துகின்றன’ என்கிறார் சுகுமாரன்.
**

புனிதமானது பூமி
ஸியட்டில்
மொழிபெயர்ப்பு
:
சுகுமாரன்
**
உங்களால் ஆகாயத்தையும், மண்ணின் வெதுவெதுப்பையும் எப்படி வாங்கவும், விற்கவும் முடியும்? இந்த எண்னமே எங்களுக்கு விரோதமானது.
காற்றின் புத்துணர்வும், நீரின் பிரகாசமும் எங்களுக்கு உரிமையானதல்ல என்னும்போது உங்களால் எப்படி அவற்றை வாங்க முடியும்?
இந்த பூமியின் ஒவ்வொரு இடமும் என்னுடைய மக்களுக்குப் புனிதமானது. மின்னுகிற ஒவ்வொரு பைன் மர ஊசியிலையும் ஒவ்வொரு மணற்கரையும், இருண்ட வனங்களில் விழும் மூடுபனியின் ஒவ்வொரு துளியும், தெளிவாகக் கீச்சிடும் ஒவ்வொரு பூச்சியும் என்னுடைய மக்களின் நினைவிலும், அனுபவத்திலும் புனிதமானவை. மரங்களின் வளர்ச்சியில் ஊறும் உயிர்ச்சாரத்தில் சிவப்பு மனிதனின் நினைவுகள் கரைந்திருக்கின்றன.
நட்சந்திரங்களுக்கு இடையில் நடந்து போகும் பொழுது வெள்ளைக்காரனின் முன்னோர்கள், தங்களுடைய பிறந்த மண்ணை மறந்து போகிறார்கள். எங்களுடைய மூதாதையர்கள் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை. ஏனெனில், சிவப்பு மனிதனுக்கு பூமியே தாய். நாங்கள் பூமியின் ஒரு பகுதி; பூமி எங்களுடைய ஒரு பகுதி. வாசனைப்பூக்கள் எங்களுடைய சகோதரிகள்; மானும், குதிரையும், பருந்தும் எங்களுடைய சகோதரர்கள். பாறைச் சிகரங்களும், புல்வெளிகளில் ஊற்றெடுக்கும் சுனைகளும், குதிரையின் உடல் வெப்பமும், மனிதனும் – எல்லாம் ஒரே குடும்பம்.
எனவே, வாஷிங்டன் பேரதிகாரி எங்களுடைய நிலத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தபோது, அவர் எங்களிடம் அதிகப்படியாகக் கோருகிறார். நாங்கள் வசதியாக வாழ எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பேரதிகாரியால் அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால் அவர் எங்கள் தந்தையும், நாங்கள் அவருடைய பிள்ளைகளும் ஆவோம். எனவே நிலத்தை வாங்குவதற்கான உங்கள் யோசனையை நாங்கள் கவனிக்கலம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இந்த நிலம் எங்களுக்குப் புனிதானது.
நதிகள் எங்களுடைய சகோதரர்கள். அவை எங்கள் தாகத்தைத் தணிக்கின்றன. நதிகள் எங்களுடைய படகுகளைச் சுமக்கின்றன. எங்களுடைய குழந்தைகளை ஊட்டி வளர்க்கின்றன. நாங்கள் உங்களுக்கு நிலத்தை விற்க நேர்ந்தால், நீங்கள் நினைவு கொள்ள வேண்டும்; உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். நதிகள் எங்களுடைய மற்றும் உங்களுடைய சகோதரர்கள். எந்த ஒரு சகோதரனுக்கும் வழங்கும் கருணையை நீங்கள் நதிகளுக்கும் வழங்கியே தீரவேண்டும்.
வெள்ளைக்காரர்களுக்கு எங்களுடைய வழிகள் புரியாது என்று எங்களுக்குத் தெரியும். அவனுக்கு ஒரு நிலப்பகுதி வேறு எந்தப்பொருளையும் போலத்தான்.ஏனெனின் இரவில் வந்து நிலத்திலிருந்து தனக்கு வேண்டியவற்றை எடுத்துப் போகிறவன் அவன். அவனுக்கு நிலம் சகோதரனல்ல; எதிரி. வெற்றி கொண்டதும் அதைக் கைவிட்டுப் போகிறான். தகப்பனின் இடுகாட்டை அவன் பின்னொதுக்கிவிட்டுப் போகிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தனது குழந்தைகளிடமிருந்து நிலத்தைத் தட்டிப் பறிக்கிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தகப்பனின் இடுகாடும் பிள்ளைகளின் பிறப்புரிமையும் மறக்கப்படுகின்றன. அழகிய முத்துக்களைப் போலவோ, செம்மறி ஆட்டைப்போலவோ வாங்கவும், பறித்துக்கொள்ளவும் கூடிய பொருட்களாகத்தான் அவன் தன்னுடைய தாயையும், நிலத்தையும், சகோதரனையும், ஆகாயத்தையும் கருதுகிறான். அவனுடைய வேட்கை பூமியின் ஈரம் முழுவதையும் உறிஞ்சிவிட்டு அதைப் பாலைவனமாக விட்டெறிகிறது.
எனக்குத் தெரியாது. எங்களுடைய வழிகள் உங்கள் வழிகளிலிருந்து வேறானவை. உங்கள் நகரங்களின் தோற்றம் சிவப்பு மனிதனின் கண்களை நோகச் செய்கிறது. ஏனெனில் சிவப்பு மனிதன் காட்டுமனிதனாக இருப்பதால் புரிந்து கொள்வதில்லை.
வெள்ளைக்காரர்களின் நகரங்களில் அமைதியான இடங்களே இல்லை. வசந்தகாலத்தின் இலைகள் கீழே விழும் முணுமுணுப்பு அல்லது வண்டின் சிறகொலியோ இல்லை. ஒரு காட்டுமனிதன் என்பதால் எனக்கு இது புரியவில்லை. குளம்படி ஓசைகள் காதுகளை அவமானப்படுத்துகின்றன. இரவில் குளக்கரைகளில் சுவர்க்கோழிகளின் புலம்பலோ, தவளைகளின் விவாதமோ கேட்காமலிருந்தால் அங்கே வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? நான் ஒரு சிவப்பு மனிதன். எனக்கு இது புரியவில்லை. குளத்தின் முகத்தில் வீசும் காற்றின் மெல்லிய ஓசையும், மத்தியான மழையில் கழுவப்பட்டு வரும் அதன் வாசனையும், பைன் மரங்களிடமிருந்து பெற்ற நறுமணமுமே ஒரு செவ்வியந்தியனுக்குப் பிரியமானவை.
சிவப்புமனிதனுக்கு காற்று விலைமதிப்பில்லாதது. எல்லாப் பொருட்களும் அதைப் பங்கிட்டுக் கொள்கின்றன. மிருகமும், மரமும், மனிதனும் ஒரே காற்றைப் பங்கிட்டுக் கொள்கின்றனர். வெள்ளை மனிதன் தான் சுவாசிக்கும் காற்றைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. நீண்டகாலமாகச் செத்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைப்போல துர்நாற்றத்தைப் பரப்பி அவன் அதிலேயே மரத்துப் போகிறான். உங்களுக்கு எங்களுடைய நிலத்தை விற்க நேர்ந்தால் நீங்கள் நினைவு கொள்ள வேண்டும் : காற்று விலைமதிப்பில்லாதது. ஏனெனில் தன்னைச் சார்ந்திருக்கிற எல்லாவற்றுக்கும் தனது ஆன்மாவைப் பங்கிட்டுத் தருகிறது. சுவாசிக்க முதல் மூச்சைத் தந்த காற்றிலிருந்துதான் எங்களுடைய மூதாதை கடைசிப் பெருமூச்சையும் உள்ளிழுத்தார். உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தை விற்க நேர்ந்தால், இதை எப்பொழுதும் பரிசுத்தமானதாக நீங்கள் காப்பாற்ற வேண்டும். எங்கோ புல்வெளிகளில் மலர்ந்த பூக்களால் நறுமணமாக்கப்பட்ட காற்றை; வெள்ளைக்காரனும் அனுபவிக்கப் போகும் அந்த நிலத்தை.
அப்படியென்றால், எங்களுடைய நிலத்தை வாங்கும் உங்கள் விருப்பத்தை நாங்கள் பரிசீலனை செய்கிறோம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள நேர்ந்தால், நான் ஒரு நிபந்தனை விதிப்பேன். வெள்ளை மனிதன் தன்னுடைய சகோதரர்களைக் காப்பாற்றுவதுபோல இந்த நிலத்திலுள்ள விலங்குகளையும் காப்பாற்ற வேண்டும்.
நான் ஒரு காட்டுமனிதன்; என்னால் வேறு வகையில் புரிந்துகொள்ள முடியவில்லை. புல்வெளிகளில் செத்து அழுகும் ஆயிரக்கணக்கான எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். பாய்ந்து ஓடும் ரயிலிருந்து வெள்ளைக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டவை உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாங்கள் கொல்லும் எருமைகளை விட, புகை கக்கும் இரும்புக் குதிரைகள் எப்படி முக்கியமானவை என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு காட்டு மனிதன்.
விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன்? எல்லா விலங்குகளும் இந்த பூமியிலிருந்து போய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்து போவான். விலங்குகளுக்கு நேர்வதுயாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.
எங்கள் காலடியில் உள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களுடைய உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையால் வளமாக்கப்பட்டது இந்த பூமி என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என்று எங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக் கொள்கிறான்.
எங்களுக்குத் தெரியும் இது: பூமி மனிதனுக்கு உரிமையானதல்ல; மனிதன் பூமிக்கு உரிமையானவன். எங்களுக்குத் தெரியும் இது : ரத்தம் ஒரு குடும்பத்தை ஐக்கியப் படுத்துவதுபோல எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கு நேரிடும். வாழ்க்கை வலையை நெய்தவன் மனிதனல்ல. அவன் அதில் வெறும் கண்ணி. வலைக்குச் செய்வது எதுவாயினும் அவன் தனக்கே செய்து கொள்கிறான்.
நண்பனைப்போல உரையாடிக்கொண்டு கடவுளுடன் கூட நடக்கும் வெள்ளை மனிதனும் இந்தப் பொது நியதில்லை விலக்கானவல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் எல்லோரும் சகோதரர்களே. நாம் சந்திப்போம். எங்களுக்குத் தெரியும் : நமது கடவுள் ஒரே கடவுள் என்பதை வெள்ளை மனிதனும் ஒரு நாள் கண்டடைவான். நீங்கள் நினைவுகொள்ள வேண்டும்: எங்களுடைய நிலத்தைச் சொந்தமாக்க விரும்புவதுபோலத்தான் கடவுளையும் சொந்தமாக்கிக் கொண்டீர்கள். ஆனால் அது உங்களால் முடியாது. அவர் மனிதனின் கடவுள். அவருடைய கருணை சிவப்பு மனிதனுக்கும் வெள்ளையனுக்கும் சமத்துவமானது. இந்த பூமி கடவுளுக்கு விலை மதிப்பில்லாதது. பூமியை நோகச் செய்வது அதைப் படைத்தவரின் மீது கொட்டும் நிந்தனை. வெள்ளை மனிதனும் இந்த பூமியில் இல்லாமற் போவான். ஒருவேளை வேறு எந்த இனத்துக்கும் முன்பாகவே , உங்களுடைய படுக்கையும் மலினமாகும். உங்களுடைய குப்பையில் கிடந்து நீங்களும் ஒருநாள் மூச்சுத் திணறுவீர்கள்.
இந்த நிலத்தின் மீதும், சிவப்பு மனிதன் மீதும் உங்களுக்கு அதிகாரம் வழங்கிய, ஏதோ பிரத்தியேக காரணங்களால் உங்களை இந்த நிலத்திற்கு கொண்டு வந்தவரின் வலிமையால் , வெந்து சாம்பலாகும்போதும் நீங்கள் பிரகாசிக்கலாம். எல்லா எருமைகளும் கசாப்புச் செய்யப்பட்டதும், காட்டுக்குதிரைகள் அடக்கப்பட்டதும், கானகத்தின் ரகசிய மூலைகள் மனிதனின் பிரவேசத்தால் கனத்ததும், வளமான குன்றுகளின் காட்சி பேசும் கம்பிகளால் மூடப்பட்டதும் எப்போது என்று எங்களுக்குத் தெரியாது, ஏனெனில் அந்த நியதி எங்களுக்குப் புதிரானது. அடர்ந்த காடுகள் எங்கே? அழிந்து போயின. கழுகுகள் எங்கே? அழிந்து போயின. வாழ்தலின் முடிவு, பிழைத்திருத்தலின் ஆரம்பம்.
**
நன்றி : சுகுமாரன், பிரம்மராஜன் (மீட்சி)
April 1, 2021
கவிதை - அந்திமம்

அந்திமம்
கடைசியாக நடந்து தீர்த்த வழியைவிடவும்
காட்சிக்கு இதமான நெடும்பாதை
கடைசியாக நனைந்து சிலிர்த்த சாரலைவிடவும்
ஆர்ப்பரித்துப் பெய்யும் பெருமழை
கடைசியாகப் புகல்தேடிய மரத்தின் நிழலைவிடவும்
கிளைபடர்த்தும் குளிர்க் கருணை
கடைசியாகப் பருகிய ஆலகாலத்தைவிடவும்
அமுதமான பானம்
கடைசியாகச் செத்ததைக்காட்டிலும்
பேரமைதியான சாவு.
ராமனின் வாக்குகள்

இன்றைய மலையாளக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்தவரும் நண்பருமான பி.ராமன் ‘வித்யாரங்கம்’ மாத இதழில் வெளியாகும் ‘கவிநிழல் மாலை’ என்ற தன்னுடைய பத்தியில் என் கவிதைகளைப் பற்றிக் கவனத்துக்குரிய வகையில் எழுதியிருக்கிறார்.
கேரள மாநிலப் பொதுக் கல்வி இயக்ககத்தால் கடந்த நாற்பத்தி ஏழு ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் கலாச்சார மாத இதழ் ‘வித்யாரங்கம்’. துறைசார்ந்த இதழாக மட்டுமில்லாமல் தேர்ந்த உள்ளடக்கம், சிறப்பான வடிவமைப்பு, தரமான அச்சு என்று சீரிய முறையில் கலை இலக்கியத்துக்கு முதன்மையளிக்கும் இதழாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. பொதுக் கல்வித்துறை இயக்குநரை ஆசிரியராகக் கொண்ட குழுவில் மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர்களான எம்.முகுந்தன், அசோகன் சருவில், விமர்சகர் கே.எஸ். ரவிகுமார் ஆகியோரும் கல்வியாளர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். ஆசிரியர் குழுவில் கவிஞர் பி. ராமனும் ஒருவர்.

பி.ராமன்
‘கதவுகள் இல்லாத நீர்’ என்ற தலைப்பிலான பி.ராமனின் கட்டுரை மலையாளச் சூழலில் தமிழ்க் கவிஞனாக எனக்கு இதுவரை கிடைத்த அங்கீகாரங்களில் முக்கியமானது. இதற்கு முன்னரும் வெவ்வேறு தருணங்களில் தமிழ்க் கவிஞனாகவும் இலக்கியவாதியாகவும் தமிழ் இலக்கிய, அரசியல் ஆளுமை களை அறிமுகப்படுத்துபவனாகவும் ஓரளவு கவனம் பெற்றிருக்கிறேன். இவையெல்லாம் மகிழ்ச்சி அளித்தவை. ஆனாலும் மனதின் மூலையில் சின்ன ஏக்கம் அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவரை எழுதப் பட்டவை அனைத்தும் கவிதையைப் பற்றிய பொது அறிமுகமாகவே இருந்தன. கவிஞனாக எனக்குள்ள தனித்துவத்தைச் சுட்டிக் காட்டுபவை அல்லவே என்ற ஏக்கம் இருந்தது. ராமனின் கட்டுரை அந்தக் குறையைப் போக்கி இருக்கிறது. அதுமட்டுமன்றி என் கவிதையாக்கத்தின் கூறுகளில் நானறியாத ரகசியத்தை எனக்கே வெளிப்படுத்துகிறது.
ஆரம்ப காலக் கவிதைகளில் வெளிப்பட்ட அவநம்பிக்கையும் சீற்றமும் ஆத்திரமும் கசப்பும் கழிவிரக்கமும் குரூரமும் ததும்பிய தத்தளிப்பு மன நிலையின் ஊற்றுக் கண் எதுவென்று எனக்கே விளங்காமல் இருந்தது. அன்றைய தனி, சமூக வாழ்க்கையின் தாக்கம் என்று மட்டுமே புரிந்து வைத்திருந்தேன். அன்று தோயத்தோய வாசித்த கவிதைகளின் பாதிப்பு என்று எடுத்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக, பாரதியும் பெரூ நாட்டுக் கவிஞர் செஸார் வயேஹோவும் சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெரூதாவும் பீடித்திருந்ததின் விளைவு. சொல்லின் நுட்பத்தைப் பாரதியும் தனி மனித அனுபவமும் சமூக அனுபவமும் இரண்டறக் கலந்தவை என்பதை வயெஹோவும் மனித இணக்கத்தை நெரூதாவும் வழங்கியிருந்தார்கள். இன்றும் என்னால் கடக்கவியலாத பாதிப்பு இவர்களுடையது.
இவர்களைத் தவிர வேறு கவியாளுமைகளும் செல்வாக்குச் செலுத்தி யிருந்தாலும் அவை என் கவிதையாக்க முறையில் வலுவான கூறாக இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக அன்று தீவிரமாக வாசித்த மலையாளக் கவிதைகள் என்னைப் பாதித்து விடக் கூடாது என்பதில் பிரக்ஞை பூர்வமாகவே இருந்தேன். ஆனால் அவை என்னைக் கணிசமான அளவில் பாதித்திருக்கின்றன என்பதை ராமனின் கட்டுரை கண்டுபிடித்துச் சொல்கிறது. மலையாள பாதிப்புகள் என்னுடைய கவிதையில் எங்கே இருக்கின்றன என்றும் அவை எப்படித் தமிழ்த் தன்மை பெறுகின்றன என்றும் ராமன் விவரிக்கும் விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. மகிழ்ச்சியளித்தது. பிரக்ஞைபூர்வமான எச்சரிக்கையை மீறியே அந்தப் பாதிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. கவிதையை பிரக்ஞைபூர்வமானதாக இருக்கும்போதே பிரக்ஞையை மீறிய ஒன்று என்ற அறிவை இது அளிக்கிறது.
கவிதைவளர் பருவத்தில் நான் தீவிரமாக வாசித்த மலையாளக் கவிஞர்கள் அய்யப்பப் பணிக்கர், சச்சிதானந்தன், கே.ஜி. சங்கரப் பிள்ளை, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஆகியோர். வாசிப்பவனிடம் வெகு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய கவிஞர்களான இவர்களைத் தொடரக் கூடாது என்ற முன்னுணர்வு இருந்தது. மாறாகப் பின் செல்லக் கொஞ்சமாவது விரும்பியது ஆற்றூர் ரவிவர்மாவைத்தான். ஆனால் அவருடைய கவிதை ஆழத்தை எட்டத் தேவையான நிபுணத்துவமும் மரபு வளமும் என்னிடமில்லை. நீண்ட வரிகளை இசைமையுடன் எழுதவும் நீண்ட கவிதைகளைச் செறிவாக எழுதவும் சச்சிதானந்தனின் மெல்லிய பாதிப்பு உதவியது. நான் அறிந்த பாதிப்புகள் இவையே. இவற்றை மீறியும் ஒற்றுமைகளைக் காண்கிறது ராமனின் கட்டுரை. அது ஒரு கண்டுபிடிப்பின் நூதன உணர்வைக் கொடுக்கிறது. அந்த உணர்வின் தொடர்ச்சியாக யோசித்த போது சில ஒற்றுமைகள் வெளிப்பட்டன. பின் வருவது ஓர் உதாரணம்.
பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் புகழ் பெற்ற கவிதையின் வரிகள் இவை.
ஜோசப், உனக்குத் தெரியாது என் ஜாதகம்
தற்கொலைக்கும் கொலைக்கும் இடையில்
சோக நாதமாகப் பாய்கின்ற வாழ்க்கை.
( கவிதை - மாப்பு சாட்சி )
என் கவிதை ஒன்றின் வரிகள் இவை:
தற்கொலைக்கும் துப்பாக்கி முனைக்கும் நடுவில்
நமது வாழ்க்கை
இரண்டு குரோதப் பற்சக்கரங்களுக்கு இடையில்
நமது காலம்
நாம் எதிர்பாத்திருக்கிறோம்
அணுகுண்டின் கடைசி வெடிப்புகாய்
( கவிதை – வெளியில் ஒருவன் )
ராமனின் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும்போது இந்த வரிகளின் ஒற்றுமை நினைவில் வந்தது. சுள்ளிக்காடின் கவிதை 1978 இல் வெளியானது.
நான் அந்த வரிகளை எழுதியது 77 இல். நக்சலைட் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை விசாரணைக்குக் கூட்டிச் சென்று ஆணையர் அறையில் தனித்து விட்டபோது கல்லூரி நோட்டுப் புத்தகத்தில் அவசரமாக எழுதி மறைத்து வைத்த வரிகள். பின்னர் கவிதையின் ஒரு பகுதியாக மாறியது. கவிதையை முழுதாக வெளியிட்டால் பிடிபட்டு விடுவோம் என்ற வீண் பயத்தில் இதழ்கள் எதிலும் வெளியிடாமல் 1985 இல் கோடைகாலக் குறிப்புகள் தொகுப்பில் நேரடியாக இடம்பெற்றது.
சுள்ளிக்காடின் கவிதையும் ஏறத்தாழ அதேபோன்ற சந்தர்ப்பத்தைச் சித்தரிப்பது. ஒரு அரசியல் கைதிக்கு எழுதிய ஒப்புதல் வாக்கு மூலமாக எழுதப்பட்டது.
பாலச்சந்திரன் சுள்ளிக்காடுக்கு இருந்த துணிச்சல் எனக்கு அன்று இல்லாமல் போனது பற்றிய சுய நிந்தை இப்போதும் உறுத்துகிறது. அது ஒருபுறம் இருக்கட்டும். கவிதை நிகழ்வின் இந்தத் தற்செயல் விளைவு சிந்திக்கத் தூண்டுகிறது. கவிதையாக்கத்தின் பூடகம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இரண்டு மொழிகளில் எழுதப்பட்ட கவிதைகளின் இடையே ஒற்றுமை வந்தது எப்படி? இரண்டு வேறுபட்ட சூழலில் ஒரேபோன்ற மனநிலை சாத்தியமானது எந்த வகையில்? எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எல்லா மொழிகளிலும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஒன்றுபோலத்தான் சிந்தித்தார்களா? வாழ்க்கை நெருக்கடிகள் எங்கும் ஒன்றாகத்தான் இருந்தனவா? துயரமோ கொண்டாட்டமோ எந்த உணர்வும் பொதுவானவையா? அந்தப் பொதுமையைத்தான் கவிதை தனித்தனி மொழிப் பாத்திரத்தில் அள்ளித் தனதாக்கிக் கொள்கிறதா?
ராமனின் கட்டுரை எழுப்பும் இந்தக் கேள்விகளை முக்கியமானவையாகக் கருதுகிறேன். என் கவிதையைப் பற்றிய கட்டுரையாக இருந்தபோதும் வாசிப்பில் இத்தனை கேள்விகளுக்கு இடமளிக்கிறது என்பதாலேயே கட்டுரையை மிக முக்கியமானதாக மதிக்கிறேன். அந்த வகையில் ராமன் எனக்கு அளித்திருப்பது மகத்தான அங்கீகாரம். அதற்காக மிக்க நன்றி.
கட்டுரையைப் பகிர்வதில் எனக்குச் சிறிய மனத்தடை இருந்தது. என்னைப் பற்றிய கட்டுரையை நானே மொழிபெயர்ப்பது என்ற எண்ணமே கூச்சத்தைக் கொடுத்தது. நண்பர் நிர்மால்யாவிடம் தயக்கத்துடன் கேட்டேன். பெரிய மனதுடன் தமிழாக்கம் செய்து கொடுத்தார். அவருக்கு நன்றி.

நீளம் கருதி பி.ராமனின் கட்டுரை தனிப் பதிவாக பகிரப்படுகிறது.



வித்யாரங்கம் பிப்ரவரி 2021
கதவுகள் இல்லாத நீர்
கதவுகள் இல்லாத நீர்
பி. ராமன்
தமிழில்: நிர்மால்யா

பேரறிஞராகவும் திகழ்ந்த கவிஞர் உள்ளூர் எஸ்.பரமேஸ்வர அய்யர் தாம் எழுதிய இலக்கிய வரலாற்று நூலுக்குக் கேரள சாஹித்ய சரித்திரம் என்றே பெயரிட்டார். மலையாள இலக்கியத்திற்கு மட்டுமல்ல; தமிழ், சமஸ்கிருத மொழி இலக்கியங்களுக்கும் கேரளத்தவர்கள் கொடை வழங்கியுள்ளனர் என்ற அடிப்படைப் பார்வையைக் கொண்டிருந்தமையாலேயே தமது நூலுக்குக்கு கேரள இலக்கிய வரலாறு என்று பெயர் சூட்டியிருந்தார். மலையாள என்னும் மொழி மட்டுமல்ல கேரளம் என்ற அறிவார்ந்த பார்வையின் அடையாளம் அத் தலைப்பில் இருந்தது. தமிழ் சமஸ்கிருதம், துளு, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் முதுவான், இருளர், மாவிலான், ரவுலா, முதுவர், பணியர், மலைவேடர், முள்ளுக்குறும்பர், பெட்டகுறும்பர், காடர் முதலிய பழங்குடி கோத்திர மொழிகளிலும் இன்று கேரள எழுத்தாளர்கள் இலக்கிய ஆக்கங்களைப் படைக்கிறார்கள். அவற்றையும் உட்படுத்தாமல் நமது இலக்கியப் பரப்பின் எல்லை முழுமை பெறாது.
ஆனால், கேரளத்தில் வாழ்ந்துகொண்டே பிற மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை கேரள பொதுச் சமூகம் தக்கவண்ணம் இனம் காண்பதோ ஏற்றுக்கொள்வதோ இல்லை என்பதே உண்மை. அண்மையில் மறைந்த தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவன் திருவனந்தபுரத்தின் சாலைக் கம்போளத்தைப் பின்புலமாக்கி தனது கதையுலகைக் கட்டியெழுப்பினார். இத்தனை நீண்ட காலம் இந்த ஒற்றைத் தெருவின் வாழ்வனுபவங்களை முன்வைத்து எழுதப்பட்ட அவரது படைப்பு உலகைத் தமிழ் வாசகர்கள் மரியாதையுடன் காண்கிறார்கள். ஆனால், அந்தத் திருவனந்தபுரக் கதைகள் கேரளத்தில் விவாதிக்கப்படுவதில்லை.
சமகால தமிழ்க் கவிதையுலகின் மூத்த எழுத்தாளர் சுகுமாரன். தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.அவரது குடும்ப வேர்கள் ஷொர்ணூரின் அருகில். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இயல்பாகவே தமிழில் எழுதத் தொடங்கினார். 1974 முதல் எழுதி வருகிறார். எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த இளமையின் ஆவேசம் பூண்ட மலையாளக் கவிதைகளின் உணர்வுநிலையுடன் பலவிதத்தில் இயைந்து நிற்பவை சுகுமாரனின் தொடக்கக் காலக் கவிதைகள். அழுத்தி வைக்கப்பட்ட உணர்ச்சித் தீநாளங்களின் வெம்மையும், நிறமும், கருமையும் பாரித்தவைதாம் கோடைகாலக் குறிப்புகள் என்னும் முதல் தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும்.அவரது பிற்கால கவிதைகளில் பலவித மாற்றங்களும், பரவல்களும் உருவாயின. கோடைகாலக் குறிப்புகள் (1985), பயணியின் சங்கீதம் (1991), சிலைகளின் காலம் (2000), வாழ்நிலம் (2002), பூமியை வாசிக்கும் சிறுமி(2007), நீருக்கு கதவுகள் இல்லை (2011),செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல (2019), சுகுமாரன் கவிதைகள் (2020) என்பவை அவரது கவிதைத் தொகுப்புகள். சுகுமாரனின் கவிதையுலகின் அனைத்துச் சிறப்பு அம்சங்களையும் எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக மலையாளியாக, தற்போது கேரளத்தில் வாழ்ந்துவரும் ஒரு தமிழ்க் கவிஞனின் கவிதையுலகம் மலையாள கவிதை உணர்வுநிலையுடனும் கருத்துச்சூழலுடனும் எப்படி ஒட்டி நிற்கிறது; விலகிச் செல்கிறது என்பதை வியப்புடன் காண்பதுதான்.
தனிமனித, சமூகம் சார்ந்த அனுபவங்களின் நெருப்பையும் தகிப்பையும் வலுவுடன் உணர்த்தும் கோடைக்கால குறிப்புகள் அதே காலகட்டத்தில் சச்சிதானந்தன், கே.ஜி.சங்கரப் பிள்ளை, பாலசந்திரன் சுள்ளிக்காடு போன்ற மலையாளக் கவிஞர்கள் பங்கிட்ட சமூக, அரசியல் எதிர் பார்ப்புகளுடனும் உணர்ச்சிகரமான ஆற்றாமைகளுடனும் இணங்கிச் செல்கிறது. குடும்பத்தையும் சமூகத்தையும் அரசியலையும் தரிசாக்கிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இளைஞர்களுக்கே உரிய மூர்க்கத்துடன் எதிர்வினையாற்றும் போதும் கூட மிகை உணர்ச்சியோ மிகுந்த அறிவுஜீவித்தனமோ உரத்த குரலோ தீண்டாமல் படிம மொழியை இக் கவிஞர் பயன்படுத்துகிறார். வீட்டோடு கலகம் செய்து வெளியில் அலையும் இளமையை பாலசந்திரன் சுள்ளிக்காடின் தொடக்கக்கால கவிதைகளில் காண்பதைப்போலவே சுகுமாரனின் அக்காலக் கவிதைகளிலும் காண முடியும். ‘அப்பாவா கொலையாளியா?’ என்ற கேள்வியைப் பாலசந்திரன் எழுப்பினா ரென்றால் ‘என் சிறகுகளை வெட்ட வாளேந்தியவன் நீ‘ என்றும் ‘என் சங்கீதத்தின் ஊற்றை அடைத்தவன் நீ‘ என்றும் சுகுமாரன் அப்பாவைப் பற்றி உறுதியாகச் சொல்கிறார்.
குடும்ப அதிகாரத்திற்கெதிராக இளமையின் எதிர்ப்பு தமிழ், மலையாள பேதமின்றி அந்தத் தலைமுறையின் பொது மனநிலையின் அங்கமாக இருப்பதைக் காண்கிறோம். ‘நாம் வாழும் காலம் சிதிலங்களின் மைதானம்’ என்றும், எல்லா வழிகளிலும் குரோத முனைகளைக் கொண்ட கற்கள் பரப்பப்பட்டிருப்பதாகவும், சென்று சேரும் கிராமத்தின் நதி வறண்டு போய்விட்டதாகவும் சுகுமாரன் எழுதும்போது எழுபதுகளின் இறுதியில் மலையாளத்தின் இளம் கவிதையில் கேட்ட சீற்றமும் ஏமாற்றமும் பதற்றமும் கலந்த குரல்களை நாம் இணையாக நினைவுகூர்வது இயல்புதான். தனிமனித மனதின் ஊடாக அந்தக் கற்பனைகள் ஒளிர்ந்த போதிலும் இந்திய இளைஞர்களின் அரசியல் பதற்றங்களே அக் கவிதைகளின் ஆழத்தில் கனலாக ஜொலிக்கின்றன என்பது விளங்கும். கோடைக்காலக் குறிப்புகளின் கடைசி பத்தியில் தற்கொலை செய்து கொண்ட மலையாளக் கவிஞர் சனல்தாஸை பற்றிய நேரடி குறிப்பைக் காணலாம். ‘மரணத்தின் பீடபூமியை நோக்கிப் போவதற்காக அம்மாவிடமும் சிநேகிதியிடமும் விடைபெற்றவனின் கவிதை‘ என்கிற வரியின் அடிக் குறிப்பில் சனல்தாஸின் பெயரை எடுத்துரைக்கிறார்.
தோழமையென்றும் அன்பென்றும் அழைக்கக் கூடியவையும், பெயரிட்டு அழைக்க இயலாதவையுமான உறவுகளின் தொடர் ஓட்டத்தை சுகுமாரனின் முதல் கவிதைத் தொகுப்பிலிருந்தேகாணலாம். ‘உதகமண்டலம்‘ என்கிற கவிதையில் ஊட்டி சுற்றுலா பயணிகளின் சொர்க்க நகரமல்ல. மலையாளிகளிடம் அறிமுகமாகியிருக்கும் ஊட்டி அல்ல இது. கவிஞரின் பால்ய, இளமைப் பருவங்கள் நடந்து தேய்ந்த வழிகளின் நகரம்.
சரணாலயத்திற்கு வரும் பறவைபோல
இந்த மலைநகரத்திற்குத் திரும்பத் திரும்ப வருகிறேன்
பரு வெடித்த மனித முகமாய்
மாறியிருக்கிறது இந்த நகரம்
எனினும்
தைல வாசனையுள்ள காற்றுகளில்
கலந்திருக்கிறது என் இளமை நினைவுகள்
வலுவற்றது
ஆயிரம் வருடக் களிம்பேறிய என் கைமொழி
உன் பிரியத்தைச் சொல்ல
ஊதாநிற மேமலர்கள் சிதறிய வழிகளில்
கதைகள் சொல்லி நடந்த நீ
நீர் கசியும் பாறைகளின் இடையே நீளும்
இருப்புப்பாதைகளில் மனிதர்களைச் சொன்ன நீ
இங்கே இல்லை
பறக்கும் கழுகின் கால்களில் சிக்கிய
துடிக்கும் இதயம் நான்
முலைகள் தொய்ந்த நீ-
புழுக்களின் எச்சம் மட்கிய அரசாங்கக் காகிதங்கள்
விளிம்புகள் ஒடுங்கிய கரிப்பாத்திரங்கள் அல்லது
உன் குழந்தையின் மூத்திரத்துணிகளுடன்
எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல
தன் மனதுக்கு நெருக்கமான மலைநகரம் பின்பு எப்படி மாறியது என்கிற பழைய நினைவுகளில் அமிழ்ந்து வெளிப்படுத்துகிறார் இக் கவிதையில். தனது பால்ய நாட்களையும் இளமைக் காலத்தையும் கழித்த ஊட்டி நகரத்துடனான முரண் உறவை இக் கவிதையில் மிகையின்றி வெளிப்படுத்துகிறார். பிரச்சாரமின்மை, உரத்துச் சொல்லாமல் இருத்தல், சிக்கலான உணர்வுகளைப் படிமங்களின் ஊடாகத் தொனிக்க செய்தல் என்பவை சுகுமாரனின் கவிதையாக்கத்தின் சில சிறப்பு கூறுகள். இந்த வெளிப்பாட்டு அம்சத்தின் சிறப்புகள் அனைத்தும் தெளிவாகத் தெரியும் தொடக்கக் காலக் கவிதை ‘பின்மனம்‘
சில சமயம்
பெருங்காற்றுக்கும் பயப்படாமல் ஒரு இலையுதிர்கால மரம் போல
(கிளைகளில் சொற்களாய்த் தளிர்த்து மிரள்வேன் பின்பு)
சிலசமயம்
வரும் போகும் கால்களில் மிதிபட
டீக்கடைக்காரன் உலரப் போட்ட ஈரச்சாக்கு போல
(பரிவற்று வறண்டும் போவேன் பின்பு)
சிலசமயம்
பிரயாணநோக்கங்கள் துறந்த இலவஞ் சிறகுபோல
(மூலைச் சிலந்திவலையின் தனிமையில் தவிப்பேன் பின்பு)
சிலசமயம்
சகல துக்கங்களையும் இறைக்கும் சங்கீதம் போல
(தற்கொலையில் தோற்றவனின் மெளனமாவேன் பின்பு)
சிலசமயம்
கண்ணாடியில் காத்திருக்கும் என் புன்னகை
(கால்கள் விழுங்கிய விலங்கின் வாயிலிருந்து
கையுதறி அலறும் குழந்தைமுகம் பின்பு எனக்கு )
கருத்து நிலையிலும் உணர்வு நிலையிலும் மலையாள கவிதையுடன் இணங்கி நின்ற போதிலும் வெளிப்பாட்டு முறையில் தமிழ்க்கவிதை மரபுடன் மிகுந்த நெருக்கத்தைப் பேணுவதை இக் கவிதை காட்டுகிறது. உரத்த குரலில் தொண்டைகிழிய பாடும் மலையாளத் தன்மை இங்கு இல்லை. இருப்பினும் அமைதியின்மையின் உச்ச ஸ்தாயி மூலம் வாசகனை எட்டுகிறது. வாசகர்களிடம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்ற கவிதை இது. முழுவதுமாகத் தன்னை வெளிப்படுத்தல் என்பது,பொதுவாக மலையாள மனப்பாங்கின் வெளிப்பாட்டு உத்தி. தன்னுடைய முழுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளைக் காட்டிலும் இரண்டரை மடங்குக் கவிதைகளை எழுதியிருப்பதாகச் சொல்லுகிறார். அவை போராட்ட ஊர்வலங்களில் முழங்கின. சில சுவரொட்டிகளில் அறைகூவல் விடுத்தன. சில பாடப்பட்டன. அவையெல்லாம் கவிதைகள் அல்ல; செய்யுள்கள் மட்டுமே என்கிறார் சுகுமாரன். மரபு ரீதியிலான கவிதைக் கோட்பாடுகளைப் பின்பற்றி எழுதப்படும் கவிதைகள், எந்த அளவுக்கு ஜனரஞ்சகத்தை எட்டினாலும் அவற்றை கவிதை என்று அழைக்க முடியாது என்பதுதான் அவரது நிலைப்பாடு. கவிதையை மலினப் பண்டமாகக் கருத இயலாது என்பதிலும்,அனுபவத்தை தைத்துச் சேர்க்காமல் ஒரு வரியைக் கூட எழுதஇயலாது என்பதிலும்,உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறக் கூடாது என்பதிலும் கவிஞர் உறுதியாக இருக்கிறார். ( தன்மொழி - சுகுமாரன் கவிதைகள் ) இந்த கூடாதுகளின் ஊடாக வடிகட்டப்பட்டு எஞ்சியவைதான் சுகுமாரனின் கவிதைகள். இவ்வாறு எழுபதுகளின் அரசியல் கலாச்சார நிலைமைகளைப் பகிரும்போதும் வெளிப்பாட்டு உத்தியில் மலையாளத்தின் பொதுத்தன்மைகளுடன் முரண்படுகிறது சுகுமாரனின் கவிதை.
தானொரு மலையாளியா தமிழனா என்கிற சிக்கல் அவரை அலைக் கழிக்கிறது. சொந்த ஊர் எது என்கிற நிச்சயமற்றவனின் மோதலை ‘ஊர் துறத்தல்’ என்ற கவிதையில் காணலாம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என்றெழுதிய சங்ககால கவிஞன் கணியன் பூங்குன்றனாரை நினைவு படுத்தி அக்கவிதை நிறைவடைகிறது. சுகுமாரனின் பல கவிதைகள் பெருகி வரும் அரசியல் பார்வையின் பிற்கால அனுபவங்களை நுட்பமாக முன்கூட்டி உரைக்கின்றன. என் நாடு என்று எதை அழைக்கலாம் என்கிற கேள்வி அரசியல் விருப்பங்களுடனும் அபிப்பிராயங்களுடனும் இன்றைய வாசிப்பில் ஒலிக்கிறது. உள்ளங்காலில் எந்த மண் ஒட்டுகிறதோ அந்த மண்ணை என் ஊர் என்றழைக்கலாம்.அப்படியானால்,நாடோடியின் உள்ளங்காலில் எந்த மண் படிகிறது என்கிற மறு கேள்வி எழுகிறது. குடியுரிமைப் பிரச்சினை களின் சமகாலச் சூழலில் மீண்டும் வாசிக்க வேண்டிய கவிதை ஊர் துறத்தல். 2007-இல் பதிப்பிக்கப்பட்ட பூமியை வாசிக்கும் சிறுமி தொகுப்பிலுள்ள கவிதை 'மிச்சம்‘.
எப்போது கடல்
அபகரித்துச் சென்றதோ தெரியவில்லை
கொண்டு வந்து கரை சேர்த்த
பிஞ்சுச் சடலத்தின் கைகள்
மூடியிருந்தன
பலவந்தமாய்ப் பிரித்துப் பார்த்தபோது
கண்டேன்
கொஞ்சம் மண்ணையும்
அதில் துளிர்விட்டிருந்த
ஏதோ சிறுசெடியையும்
2007 க்கு முன்பு எழுதப்பட்ட இக்கவிதையை இன்று வாசிக்கும்போது 2015 செப்டம்பர் 2 மத்திய தரைக் கடலில் மூழ்கி இறந்து கரையொதுங்கிய அலன் குர்தி என்ற அகதிச் சிறுவனின் சித்திரம் மனதில் எழாமல் இல்லை. கடல்கடந்து ஐரோப்பாவுக்குத் தப்புவதற்காகப் போர்மூண்ட சிரியாவிலிருந்து ஓடிய குடும்பத்தின் மூன்றரை வயது குழந்தை, குர்த் இனத்தைச் சேர்ந்த அலன் குர்தி. குடியேறிய நாட்டின் சிறிது மண்ணில் படர முயற்சிக்கும் அகதி சமூகத்தின் முதலும் கடைசியுமான அவலத்தைத் தீர்க்கமாக ஒலிக்க வைக்கும் கவிதையே ‘மிச்சம்‘. ஒரு ஜனத்திரள் அனுபவித்த சகிப்புத் தன்மைகளையும் வழங்கிய பலிகளையும் தப்பிப்பிழைத்ததற்கான சிறிதளவு பசுமையையும் உணர்த்துகிறது இக் கவிதை. 'ஊர் துறத்தல்' ,' மிச்சம்' போன்ற கவிதைகளின் தீர்க்கதரிசனம் தமிழையும் மலையாளத்தையும் கடந்து உலகளாவிய கண்ணோட்டத்தைப் பெறுகிறது. மனித அவலங்களைச் சொல்லக் கூடிய உலகின் எந்த மூலையில் நிகழும் அவலங்களுடனும் சுகுமாரனின் கவிதை உறவாடுகிறது. மலையாளக் கவிதைகளைப்போல ஓங்கிய குரலில் தொண்டை கிழியக் கத்துவதோ, மிகையுணர்வோ புத்தி சாதுரியமோ அதீதக் கற்பனையோ புனைவோ இன்றி அறம்சார்ந்த எச்சரிக்கையுடன் உலகைக் காண இக்கவிதையால் முடிகிறது.
கோவிட் 19 ஐ முன்னிட்டு நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அவ் வேளையில் தில்லியிலிருந்தும்,நாட்டின் பிற நகரங்களிலிருந்தும் சொந்த ஊர்களை நோக்கி நூற்றுக் கணக்கான கிலோமீட்டர்கள் கால்நடையாகப் பயணித்த பல்லாயிர மனிதர்களின் சகிப்புத் தன்மையே ‘தில்லி-அஜ்மீர்: 390 கி.மீ.‘ என்கிற கவிதை. அத்துடன் குடியுரிமைச் சட்டத் திருத்தங்களுடன் தொடர்புடைய எதிர்பார்ப்புகள், இந்திய முஸ்லீம் சமுதாயம் எதிர்கொள்கிற பாதுகாப்பின்மை, பீதி என்பனவற்றின் புரிதலின்றி இக் கவிதையை வாசிப்பது சிரமம். இப்புரிதல் மலையாளக் கவிதையையும் சுகுமாரன் கவிதையையும் ஒருசேரப் பங்கிடுகிறது. ஆனால் வெறும் அறிக்கை களாகவோ பதிவுகளாகவோ பிரசங்கமாகவோ இல்லாமல் தனி மனித நிஜத்தின் வேதனையூட்டும் குரலாக சுகுமாரனின் கவிதை ஒலிக்கிறது. ‘அநீதியை எங்கு காணநேர்ந்தாலும் கண்டனம் தெரிவித்தே தீருவேன் என்று பிடிவாதம் பண்ணும் என்னை நீங்கள் காணவில்லையா?‘ என்று மார்தட்டி நிற்கவில்லை இக் கவிதை. கவிஞன் எல்லாத் தகுதிகளையும் பெற்றவன் என்கிற பிம்பத்தை உருவாக்குவதல்ல கவிதையின் குறிக்கோள்.
கேரளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்ற காரணத்தால் இங்குள்ள இடங்கள், மனிதர்கள், வரலாறு, பண்பாடு, தொன்மங்கள் போன்றவை சுகுமாரனின் கவிதைகளில் இயல்பாகவே தென்படுகின்றன. ‘தேவி மகாத்மியம்‘ கவிதை செங்ஙன்னூர் பகவதியுடன் தொடர்புடைய தொன்மத்தின் வெளிப்பாடு.
தெய்வமானாலும் பெண் என்பதால்
செங்ஙன்னூர் பகவதி
எல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்.
என்று தொடங்கும் கவிதை, வட்டாரத் தொடர்புடைய தொன்மத்தைச் சார்ந்து பூமியைப் பாதுகாத்து வரும் பெண்மையின் வலிமையை நோக்கிப் படர்கிறது.
கண்ணூர் பைய்யாம்பலம் கடற்கரையின் பின்னணியில் எழுதப்பட்ட கவிதை ‘பய்யாம்பலம்‘. பய்யாம்பலத்தின் கடலும் அந்தக் கடல்வந்தணையும் கரைக்கும் நடுவில் எழும் ‘நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய்‘ என்கிற கேள்வியின் தொடக்கமும் முடிவுமான முழக்கம், காற்று, வெயில், இருள் இவற்றையும் உணர வைக்கிறது பைய்யாம்பலம் என்னும் கவிதை.
மலையாளக் கவிஞர்களான சங்ஙம்புழ, இடப்பள்ளி ஆகியோர் மட்டுமல்ல, நவீன தமிழ்க் கவிஞர் சுந்தர ராமசாமியின் நினைவுகளும் நிறைந்த கவிதை தான்‘ தனுவச்சபுரம் - இரண்டாவது (திருத்திய) பதிப்பு‘. கேரள தமிழக எல்லை யிலுள்ள ரயில் நிலையம் தனுவச்சபுரம். தமிழ் மலையாள எல்லையில் ரயில் வண்டியின் எதிரில் பாய்ந்து இறந்துபோன சந்திரிகாவைப் பற்றி கேள்விப் பட்டதும் சட்டென்று சங்ஙம்புழயின் ரமணனும் சந்திரிகாவும் மலையாளியான தமிழ்க் கவிஞனின் மனதில் இடம் பெறுகிறார்கள். ‘ சந்திரிகாவைக் கொலைக்குக் கொடுத்தவன் ரமணனா?‘ என்கிற எதிர்க் கேள்வி அப்போது அங்கு ஒலிக்கிறது. மலையாளத்தின் கற்பனாவாத மனப்போக்கிலும், தமிழின் கற்பனா வாதத்திற்கு எதிரான மனப்போக்கிலும் நின்றிருந்த போதிலும் மனதறிந்து எட்டிப் பார்க்கும் கவிதையாக கூட இதை வாசிக்கலாம். தமிழின் கற்பனாவாதத்திற்கு எதிரான மனப்போக்கின் அடையாளமாக பசுவய்யாவின் ‘தனுவச்சபுரம்‘ கவிதையின் குறிப்பு இங்கு வருகிறது.
பாரதப்புழைக் கரையிலுள்ள சொர்ணூருக்கு அருகிலுள்ள கிராமத்திலிருந்து கோயம்புத்தூருக்குக் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர் சுகுமாரன். பாரதப்பழையைப் பற்றிய எந்த நேரடி கவிதையையும் அவர் எழுதியதில்லை. இருப்பினும் அவரது கவிதைகளில் எப்போதும் நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மலையாளக் கவிஞர்களுக்கு நதிகளுடனான பிரியத்தை நினைவூட்டுபவை சுகுமாரனின் கவிதைகளில் நதிகளின் சாந்நித்தியம்.
அவள் வீடு திரும்பியபோது
ஓடாமலிருந்தது ஆறு ஓடிக் கொண்டிருக்கிறாள் அவள் மட்டும்
ஆற்றுடன் பேசிக்கொண்டே.
இவ்வாறாக நதியுடன் பேசிக் கொண்டிருக்கும் பெண்களும் கரையுடன் சேர்த்துக் கட்டப்பட்டு அசையும் படகுகளுக்குள் எஞ்சிய மழைநீரில், பூமிக்கு வெளிச்சம் தந்த கருணையில் ஒளிரும் நிலவும், எல்லாம் சேர்ந்த நதியோட்டங்கள் மலையாளிக்குப் பிடித்தமானவை. வானவெளியில் பறக்கும் பறவைகள்தான் தமிழ்க் கவிதையில் பொதுவாக மீண்டும் மீண்டும் வரும் முக்கியப் படிமமாக இருந்தபோதிலும், சுகுமாரனின் கவிதையில் நதியும் நீரும் முக்கியத்துவம் பெறுவது தற்செயல் அல்ல. சுகுமாரனின் ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பே ‘நீருக்குக் கதவுகள் இல்லை‘ என்பதாகும். மீனுக்கும் நீர்வாழ் உயிர்களுக்கும் தன்னிச்சையாக வந்துபோக சுதந்திரம் அளிக்கும் நீரை பெண்மையுடன் சேர்த்தெழுதிய ‘நீராலானது‘ என்ற கவிதையின் கடைசி வரியே இந்தக் கட்டுரையின் தலைப்பு. மொழியுடன் அடங்கிய தடைகளற்ற பரஸ்பரத்தைப் பற்றிய உணர்வு இந்தக் கவிதையில் அடியோட்டமாக உள்ளது.


March 16, 2021
குலசேகரன் கதைகள்

தனிவழித் தடம்
ஏற்றுக்கொண்டிருக்கும் இலக்கிய வடிவம் பற்றிய பிரக்ஞை, எதை எழுத வேண்டும் என்ற நோக்கு, எப்படி எழுத வேண்டும் என்ற தெளீவு, தளுக்கோ சிடுக்கோ இல்லாத இயல்பான நடை, தன்னுடையதான கூறுமுறை – இவை அனைத்தையும் மு.குலசேகரன் கதைகளில் காண முடிகிறது. எனினும் இந்தக் கதைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அவரும் அதிகம் பேசப்படுவ தில்லை. அவரது கதைகளை வாசிக்கும்போதெல்லாம் இந்த ஆதங்கம் ஏற்படுவதுண்டு. அவரது கதைகள் இதழ்களில் வெளியாகும்போது அவை பொருட்படுத்திப் பேசப்படுவதையும் கண்டதுண்டு. ஆனால் அந்தக் குறிப்புரைகள் கதைகளுக்கும் கதாசிரியருக்கும் தகுந்த விகிதத்திலான நியாயமளிப்பவையல்ல என்ற எண்ணம் ஏற்படுவதுண்டு. இன்றைய எழுத்தாளர்களில் இலக்கியத்தைத் தீவிரமாகக் கருதும் ஒருவரும் அவருடைய தரமான கதைகளும் கவனிக்கப்படாமற் போவது ஏன் என்ற கேள்வியும் எழுவதுண்டு.
மு.குலசேகரனும் அவரது கதைகளும் பரவலான கவனத்தைப் பெறாததற்குக் காரணம் அவரே என்று தோன்றுகிறது. நிகழ்கால இலக்கிய உலகத்தின் ஆர்ப்பாட்ட நடைமுறை களுக்கு ஆட்படாமல் தனித்து நடப்பதுதான் அவரை விலக்கி நிறுத்துகிறது. இன்றைய மோஸ்தருக்குத் தோதாக அல்லாமல் எழுதப்படும் கதைகள்தாம் எடுத்து உயர்த்த எளிதாக இல்லாமல் கைவிடக் காரணமாகின்றன. ‘நான் ஒரு கதை எழுதி இருக்கிறேன்’ என்று அவரும் இணைய வெளியிலும் பிற பரப்பிலும் கொட்டி முழக்குவதில்லை. ‘வாசித்து உய்வடையுங்கள்’ என்று அந்தக் கதைகளும் வாசகனை வற்புறுத்துவதில்லை. ‘ஒரு படைப்பு அதற்குரிய முழுமையுடன் இங்கே இருக்கிறது. கொள்ள விரும்புவோர் கொள்க’ என்ற தற்சார்பற்ற நிலையிலேயே குலசேகரன் தமது கதைகளை முன்வைக்கிறார். கதைகளும் தம்மை ஏற்கும் வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன.
குலசேகரனின் இந்த இயல்பு சில இலக்கிய அடிப்படைகளைச் சுட்டிக் காட்டுகிறது. படைப்புத்தான் முதன்மையானது. அதன் வாயிலாகவே படைப்பாளி அறியப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. படைப்புச் செயல் வடிவம் பெற்றதும் படைப்பாளியிடமிருந்து விலகித் தனித்து நிலைகொள்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. படைப்பாளியின் குறுக்கீடுகளையும் பொழிப்புரைகளையும் மீறி வாசிப்புக்காகத் திறந்து கொடுக்கிறது. குலசேகரன் கதைகளின் தனித்துவமான அம்சம் இது. கதையில் ஆசிரியர் எதையும் வற்புறுத்திச் சொல்வதில்லை. வாசக கவனத்தை ஈர்ப்பதற்கான பிரத்தியேகக் கோணங்களை ஒதுக்குவதில்லை. மாறாக கதையில் தொடக்கம் முதல் இறுதிவரையான எல்லா வரிகளையும் செறிவானதாக அமைக்கிறார். அதன் வழியாக அனுபவத்தின் பரப்பை விரிவாக்குகிறார். முழுமையான உலகைப் புனைந்து காட்டுகிறார்.
‘தலை கீழ்ப் பாதை’ ஓர் உதாரணம். நகலகம் நடத்தி வரும் சுப்பிரமணிக்கு இனி தனது வாழ்க்கை பழையதுபோல வசதியாக இராது என்று தெரிகிறது. அவனுடைய கடையின் முன்னால் நிமிர்ந்து நிற்கும் மேம்பாலம் பிழைப்புக்கு தடையாகிறது. அவனுக்கு மட்டுமல்ல, அவனைப் போன்ற பல சாதாரணர் களுக்கும் பிழைப்புப் பறிபோகும் நிலை. ஆனால் பாலம் கட்டப்பட்டுத் திறப்பு விழாவுக்கு ஆயத்தமாகிறது. பாலமிருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் களுக்கு அது தேவையே இல்லை.ஆனால் யாருக்கோ வேண்டியிருக்கிறது. அதிகாரத்தின் மூலம் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றை மறுப்பின்றிச் சுமக்க நேரிடுகிறது. அந்த எளியவர்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் சுப்பிரமணியால் கற்பனையாகத்தான் பழி வாங்க முடிகிறது. பாலம் தொடர்பான ஆவணங்களின் ஒரு தாளை நகலெடுக்காமல் மறைத்து வைப்பதன் ஊடே தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறான். கதையின் இந்தக் கோணத்தை இயல்பாக முன்வைக்கிறார். முதல் வரியிலிருந்து எந்தத் துருத்தலும் இல்லாமல், அலுப்பேற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடிய நிதானத்துடன் செறிவைக் கூட்டி முடிவை எட்டுகிறார். கதையின் எந்த வரியை விலக்கினாலும் கட்டுக்கோப்புக் குலைந்து விடக் கூடிய முறையில் அமைகிறது கதை. இந்த இயல்பு நவிற்சியை குலசேகரனின் கதையடையாளம் எனலாம்.
இதே அடையாளம் கொண்டவையாகத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஆதியில் காட்டாறு ஓடியது, புலி உலவும் தடம், கடைசி விதைப்பாடு, நெடுநாளைய புண் ஆகிய கதைகளைக் காணலாம். இயல்பாகவும் செறிவாகவும் இழைக்கப்பட்ட கதைகள். நிதானமான கூறலில் முன்னேறிச் சென்று உச்சத்தில் வெடிக்கின்றன. . காலப் போக்கில் தூர்ந்து சாக்கடையாக மாறிய நதியைப் பற்றிய சுந்தர மூர்த்தியின் ஆவலாதியும் புலி வரும் தடத்தில் காத்திருக்கும் சிவபாலன், காதர் பாட்சாவின் சினமும் கடைசியாக மண்ணில் தளிர்விட்டிருக்கும் நிலக் கடலைத் தளிர்களில் தங்கவேலு கொள்ளும் நம்பிக்கையும் தகப்பனின் மரணத்தை அறிவிக்க அத்தாட்சியை எதிர்பார்த்திருக்கும் மகனின் கையறு நிலையும் இயல்பான நிகழ்வுகளாகச் சொல்லப்பட்டு இறுதியில் தீவிரத்தை அடைகின்றன. பாலம் நிரந்தரமாகி விட்டது என்றும் சாக்கடை நதியாக இனி மாறாது என்றும் புலி வந்தால் காப்பாற்ற ஆதரவு கிடைக்காது என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஒருபோதும் உரிமையில்லை என்றும் தொற்று நோயால் அப்பா சாகவில்லை என்று சொல்வது சந்தேகம் என்றும் அந்தப் பாத்திரங்களுக்குத் தெளிவாகவே தெரிகிறது. எனினும் தங்கள் இருப்புக்கான நியாயங்களாக அவற்றைப் பற்றியிருக்கிறார்கள். அவை பறிபோகக் கூடியவை என்று வாசிப்பவர் உணர்கிறார். அப்படி உணர்த்துவதையே குலசேகரன் தனது கதையாக்க நடவடிக்கையாகக் கருதுகிறார் என்று எண்ணலாம். அதை மீறிய நிலையும் கதைகளில் இடம் பெறுகிறது. அதுவே அவரது கதைகளுக்கு நிகழ்காலப் பொருத்தப்பாட்டையும் அளிக்கிறது.
நிகழ்ச்சி, கதையாக்கம், படைப்பியல் பார்வை ஆகிய கட்டங்களாகக் கதையைப் பகுக்க முடியுமானால் குலசேகரன் கதைகள் முன்னணியில் நிற்பது அவற்றில் வெளிப்படும் பார்வையால் எனலாம். எளியவர்களின் சார்பில் அதிகாரத்தை விசாரிக்கும் பார்வையை அவை கொண்டிருக்கின்றன. இதை அரசியல் என்று ‘அருகில் வந்த கடல்’ தொகுப்பின் முன்னுரையில் தேவிபாரதி குறிப்பிடுகிறார். சரியான மதிப்பீடுதான். இந்த அரசியல் வெற்று முழக்கமாகவோ ஆவேச உந்துதலாகவோ இல்லாமல் மானுட இருப்பின் கோரிக்கையாகவே வெளிப்படுகிறது. இதையும் குலசேகரனின் தனி அடையாளமாகக் காணலாம். முந்தைய ‘அருகில் வந்த கடல்’ , தற்போதைய ‘புலி வந்த தடம் ‘ ஆகிய இரு தொகுப்புகளிலும் அரசியல் பார்வை தெரியும் கணிசமான கதைகள் உள்ளன. அவற்றை முன்னிருத்தி அரசியல் கதைகளை எழுதியவராகச் சொல்லி விடவும் முடியாது. ஏனெனில் அவை வலிந்து தயாரிக்கப்பட்ட அரசியல் கதைகள் அல்ல. கோட்பாட்டுச் சூத்திரங்களுக்கு விளக்கவுரை அளிப்பவை அல்ல. அரசியல் கோணத்திலிருந்து வாழ்க்கையைச் சித்தரிப்பவை அல்ல.; மாறாக வாழ்வனுபவங்களிலிருந்து திரளும் உண்மைகளை அரசியலாக முன்வைப்பவை. குலசேகரனின் கதைகளில் உள்ளோட்டமாக அமையும் இந்த அம்சம் அவரது தனித்துவத்தின் பகுதி என்று எண்ணுகிறேன்.
கதைகளில் அரசியலை ‘மறைப்பது’ போலவே பின்புலங்களையும் ஒளித்து வைக்கிறார் குலசேகரன். கதை நிகழிடங்களைப் பெயர், அடையாளங்களைக் குறிப்பிடாமலேயே சித்தரிக்கிறார். ஆனால் கதைக்குள் இடம் பெறும் குறிப்புகளைக் கொண்டு வாசகர் அந்த இடத்தை எளிதில் ஊகித்து விட முடிகிறது. ஒரு தனி நிகழ்வை எல்லாரும் தம்மோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளக் கூடிய பொது நிகழ்வாக மாற்றவோ, வாசகரையும் படைப்புக்குள் பங்கேற்பவனாக உணரச் செய்யவோ அவரால் அநாயாசமாக முடிகிறது.
இந்தத் தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளை இரண்டு வகையாகப் பிரிக்க முடியுமென்று தோன்றுகிறது. வாசிப்பு வேளையில் தற்செயலாகப் புலப்பட்டது இந்தப் பிரிவு. கதாசிரியர் பிரக்ஞைபூர்வமாகவே அதைச் செய்திருக்கவும் கூடும். இயல்புவாதமென்றோ நடப்பியல் சார்ந்தவை என்றோ வகைப்படுத்தக் கூடிய கதைகள் ஒரு பிரிவாகவும் நடப்பியல் சார்ந்து உருவான உலகுக்குள் அதீதங்களைக் கட்டிஎழுப்பும் கதைகள் மற்றொரு பிரிவாகவும் காணப்படுகின்றன. தலைகீழ்ப் பாதை, ஆதியில் காட்டாறு ஓடியது, புலி உலவும் தடம், கடைசி விதைப்பாடு, நெடு நாளைய புண் ஆகியவை நடப்பியல் முறையிலான கதைகள். இவற்றில் புறச் செயல்களும் தகவல்களும் முதன்மை பெறுகின்றன. கதைகள் அவற்றின் தன்மையில் வெளிப்படையாகவே துலங்குகின்றன. பருப்பொருளாகவே இடம் பெறுகின்றன. மறைந்து தோன்றும் கதவு, பிடித்த பாத்திரத்தின் பெயர், முடிவற்ற தேடல், வெளியில் பூட்டிய வீடு, மீண்டும் ஒருமுறை ஆகிய கதைகள் நடப்பியலைக் கடந்து விரிகின்றன. இந்தக் கதைகளில் புறக் காட்சிகளும் தகவல்களும் உளநிலையின் மங்கலான வரி வடிவங்களாகவே இடம் பெறுகின்றன. மனதின் விசித்திரச் சேட்டைகளே கதைப் பொருளாகின்றன. குலசேகரனின் படைப்பூக்கம் உச்சம் காண்பது இந்தக் கதைகளில்தான் என்பது என் எண்ணம். இயல்பு நவிற்சி கொண்ட கதைகளில் வாசகரைப் பார்வையாளராக அழைத்துச் செல்லும் ஆசிரியர் இந்தக் கனவு நிலைக் கதைகளில் பங்கேற்பாளராக மாற்றுகிறார். கதைகளின் முடிவை வாசகரின் சிந்தனைக்கும் உணர்வுக்கும் விடுகிறார். ஒருவேளை நவீன சிறுகதைக் கலைக்குக் குலசேகரனின் பங்களிப்பு படைப்பூக்கம் திரண்ட இந்தக் கதையாடலாக இருக்கலாம்.
தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்த வேளையில் உருவான பொதுவான கருத்தோட்டம் இது. நூலின் முன்னுரையாக இது அமைவதை விடவும் மு.குலசேகரன் கதைகளை மதிப்பிடும் விமர்சனப் பார்வைக்கு முன்னுரையாகக் கருதப்பட வேண்டும் என்பது விருப்பம். அப்படிச் செய்பவர்கள் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் புதிய தடத்தைக் கண்டடைபவர்கள் ஆவார்கள். இந்தத் தொகுப்பு அதற்குத் தகுதியான அழுத்தமான சான்று.
திருவனந்தபுரம் சுகுமாரன்
14 பிப்ரவரி 2021
Sukumaran's Blog
