சுஜா's Blog, page 2
February 20, 2024
சில சொற்கள்
(வீரான்குட்டி கவிதைகள் மொழியாக்க நூலுக்கு நான் எழுதிய குறிப்பு.)
தாய்மொழி என்றாலும் மலையாளத்தில் இலக்கியம் வாசிக்க ஒரு மனத்தடை இருந்தது. பல வருடங்களாகத் தமிழ் இலக்கிய வாசிப்புப் பழக்கத்தால், மற்ற மொழிகளில் வாசிக்கும்போது ஏதேனும் நுட்பங்களைத் தவறவிட்டுவிடுவோமோ என்கிற உணர்வு இருக்கும். மலையாளத்தில் சினிமா பார்ப்பது, பாடல்கள் பாடுவது, செய்தித்தாள், சிறுகதைகள் வாசிப்பது, உறவினர்களுடன் பேசுவது என்பதோடு சரி. தமிழாக்கம் செய்யப்பட்ட மலையாளப் படைப்புகளை வாசிப்பதே வழக்கமாக இருந்தது.
எம்.டி.வாசுதேவன் நாயரின் மஞ்சு நாவலைத் தமிழில் வாசித்ததும் மலையாளத்திலும் வாசித்துப் பார்க்கும் ஆவல் வந்தது. அவரது கவித்துவ நடையும் சொற்தெரிவும் அந்த நாவலுக்கான ஒரு மூட்டத்தை உருவாக்கிய விந்தை எனக்குப் பெரும் திறப்பாக அமைந்தது. அடுத்தடுத்து கல்பற்றா நாராயணன், கமலா தாஸ், நித்ய சைதன்ய யதி என்று கொஞ்சம் கொஞ்சமாக மலையாள இலக்கியம் என்னை உள்வாங்கிக்கொண்டது.
மலையாளத்தை மேலும் நெருங்கியறியும் முயற்சியாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என்கிற எண்ணம் வந்தது. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரை என மொழியாக்கம் செய்து பார்த்தேன். கவிஞர் யூமா வாசுகி சொன்னபடி, பயிற்சிக்காகச் செய்திகள் உட்பட மொழியாக்கம் செய்தேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள். மொழி நாவுக்கும் கண்களுக்கும் மனதுக்கும் பழகிவிட்டதென்ற உணர்வு வந்ததும் இந்த கவிதைகளை மொழியாக்கம் செய்யத் தொடங்கினேன்.
என்றுமே என் மனதுக்கு நெருக்கமானவை கவிதைகளே. மொழியின் நெளிவு சுழிவுகளும், உறுதியும் ஒருங்கே கொண்டிருக்கும் வடிவம். அதனால் மொழியின் சாத்தியங்களை அலசிப் பார்க்கும் அதே வேளையில், சாத்தியங்களுக்குள் அடங்கா சூட்சமமும் கொண்டவை கவிதைகள் என்று தோன்றுகிறது. கவிதைகளை மொழிபெயர்க்கையில் மொழிக்குள் விளையாடும் ஒரு குதூகலம் கிடைக்கிறது.
கவிஞர் வீரான்குட்டியின் கவிதைகளை மொழியாக்கம் செய்யத் தொடங்கியதும் அவற்றின் எளிமை என்னைக் கவர்ந்தது. படிமங்களின் கவிஞர் என்று சொல்லலாம். எளிய சொற்களின் வழி உருவாகும் ஆழமான படிமங்கள்! உணர்வுகளிலும் பெருவெடிப்புகள் ஏதுமற்ற எளிய உணர்வுகள். நுட்பங்களைச் சென்றடையும் வழியாக எளிமையை உணர்கிறேன். தன்னிடம் ஒளிவைத்துகொள்ள எதுவுமில்லை என்கிற நிலை, எளிமைக்கு ஒரு கம்பீரத்தைத் தருவதாகவும் தோன்றுகிறது.
மொழிபெயர்ப்பில் சவாலாக இருந்ததும் அதே எளிமைதான். மேல் பூச்சுகளையும் அலங்காரங்களையும் அகற்றி, சொற்களை நிர்வாணப்படுத்தும் செயலாக இருந்தது. கனமேறிக் கிடக்கும் சொற்களை லேசாக்கி, அதனைப் பறக்க விடும் அனுபவம். மலையாளம், தமிழ், ஆங்கிலம் மூன்று அகராதிகளும் மேசையில் திறந்துகிடக்கும். ஆனால் ஜன்னல் வழி வானில் சொற்களைத் துழாவிக் கொண்டிருக்கும் என் கண்கள். இதுவே மொழியாக்கம் என்றதும் என் நினைவில் எழும் சித்திரம்.
வீரான்குட்டி கவிதைகளில் மெல்லிய ஒலிநயம் இருக்கிறது, வாய்விட்டு வாசித்தால் அது புரிபடும். சந்தம் கவிதையின் தொனியுடன் நெருங்கிய உறவுகொண்டது. மொழியாக்கம் செய்தபின் தமிழில் ஒவ்வொரு கவிதைகளையும் பல முறை வாய்விட்டு வாசித்தது, கவிதையின் சந்தத்தை முடிந்தவரை தக்க வைத்துக்கொள்ள உதவியது.
மொழியாக்கப் படைப்புகள் பலவற்றை வாசித்து சிலாகித்திருக்கிறேன் என்ற வகையில் எனக்கு மொழிபெயர்ப்புப் பணியின் மீது எப்போதுமே பெருமதிப்பு உண்டு. இப்போது மொழிபெயர்ப்பாளரின் கடமையையும் பொறுப்பையும் கூடுதலாகவே அறிந்துகொண்டேன்.
‘மிண்டாபிராணி’ மற்றும் ‘வீரான்குட்டி கவிதைகள்’ ஆகிய இரு தொகுப்புகளிலிருந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்திருக்கிறேன். மொழிபெயர்க்க அனுமதியளித்த கவிஞர் வீரான்குட்டிக்கு எனது நன்றி.
தமிழ்க் குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்டு வந்த காலகட்டத்தில், நாவில் தமிழும் மனதில் மலையாளமுமாக வாழ்ந்த என் அம்மாவை நினைத்துக்கொள்கிறேன்.
கவிதைகளை வாசித்து ஊக்கமளித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு என் மனமார்ந்த நன்றி!
தொடக்கம் முதல் உடனிருந்து உதவிய நண்பர்கள் வே.நி.சூர்யா மற்றும் ராம்சந்தருக்கு எனதன்பும் அரவணைப்பும்!
சுஜா
சிங்கப்பூர்
6/10/23
The post சில சொற்கள் first appeared on சுஜா.
January 18, 2024
புத்தம் வீடு – ஹெப்ஸிபா ஜேசுதாசன்
பச்சைப் பசலேன்ற ஓலைகளால் முடிசூட்டப்பெற்ற பனையின் தலை. அசைந்து கொடுக்காத, இரண்டு கைகளாலும் கட்டிப் பிடித்தாலும் கைக்குள் அடங்காத கல் போன்ற அடிமரம். உச்சியில் காக்கைச் சிறகுகள் போல் அடித்துக்கொள்ளும் பனை ஓலைகள். பாம்புகள், பேய்கள் பற்றிய இருட்டுக் கதைகளின் வழி அவற்றின் நிழலான இனம் தெரியாத பயம் எப்போதும் சூழ்ந்திருக்கும் கிராமம். இவ்வாறு பனைகளையும் அவை நிறைந்திருக்கும் கிராமத்தையும் விவரித்துத் துவங்குகிறது நாவல். கதைகள் மூலம் கட்டப்பட்ட மூட்டமான சூழலைப் போல், பழம்பெருமைகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் புத்தம் வீடு. அதில் வாழும் மூன்று தலைமுறையினர், குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை. வீட்டிற்கும் அடிச்சுக்கூட்டிற்கும் லிஸியுடன் நடந்து நடந்து, திரையிட்ட ஜன்னலின் வழி அவளது செவி கேட்கும், கண் பார்க்கும் தூரம் வரை மட்டுமே கண்டு, கேட்டு, நாம் ஒரு யுகத்தின் மாற்றத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. குலப்பெருமையையும், குடும்ப மானத்தையும் சுமந்துகொண்டு வீட்டிற்குள் மூச்சு முட்ட அடைந்து கிடக்கும் லிஸிக்கு வந்த உணர்வு உண்மையில் காதல்தானா?
பாவாடைக்கு மேல் ஒற்றைத்தாவணி கட்டிக்கொண்டு, கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளி போல் எட்டிப் பார்த்து “ஏன்? ஏன்?” என்று கேட்கும் அவளது கண்கள் என்னுள் உறைந்துவிட்டன, அதுபோன்ற எத்தனையோ கண்களை ஞாபகப்படுத்திக்கொண்டு.
The post புத்தம் வீடு – ஹெப்ஸிபா ஜேசுதாசன் first appeared on சுஜா.
September 25, 2023
இளகிய மனது – வீரான்குட்டி
அன்று நீ
எறும்புகள் போய்ச் சேரும்வரை காத்திருந்தாய்
தேநீர்க்கோப்பையைக் கழுவுவதற்கு
காலின் அடியில்
ஏதேனும் பிராணிகள் நசுங்கிவிடுமோ என
மெல்ல அடிகள் வைத்தாய்
பூவினைக் காம்புடன் விட்டுவைத்தாய்.
புறாக்கூண்டு திறந்து வைத்தாய்
இல்லையென்றாலும்
அன்பு தட்டி
இளகிய மனதை
யாரால் எளிதில்
ஒளித்துவைக்க முடியும்!
The post இளகிய மனது – வீரான்குட்டி first appeared on சுஜா.
March 1, 2023
ஒலிபெருக்கி
இருள் நமக்கே நமக்காக
அருளிய உலகம் அது
விண்ணையும் மண்ணையும்
இருபுறமும் தாங்கி நிற்கும்
தூணாய்க் காற்றுச் சுழற்சி மட்டும்
வெறும் ஒலிகளாய் மட்டுமே
உயிர்த்திருக்கின்றன
எல்லா இயற்கை உயிரிகளும்
தங்கள் இருப்பைப் பறைசாற்றும்
செயலாக
ஒலிபெருக்கிக்கொள்கின்றன
ஒளியிழந்த அவை
நமது பார்வையால் துளையிட்டுத்
தொலைக்க முடிகிறது
மீறலின் சுவை வேண்டும்
சில மனிதக் குமிழிகளை
இரவு கவிந்துகிடக்கும்
நிலச் சேற்றில்
கால் வைத்த
அந்தக் கணத் தடுமாற்றத்தில்
கைகள் பற்றிக்கொண்டன
காணாத உடலில் கைகளா அவை?
ஆன்மாக்கள் தீண்டிக்கொள்வதில்
இறைவனுக்குப் பெருமகிழ்ச்சி
The post ஒலிபெருக்கி first appeared on சுஜா.
September 25, 2022
கடவுளுக்குத் தெரியும் – வீரான்குட்டி
கடவுளுக்குத் தெரியும்
நட்பை எப்படி பேணுவதென்று
கரிக்கட்டையாகத்தான் நம்மிடம் அது வருகிறது
பரஸ்பரம் பரிமாறி
நாம் அதனை
ஒளிரும் பொன்னாக்குவோம்.
இடையில் எப்போதாவது
தொலைந்துபோனால்
கவலை எதற்கு?
திரும்பக் கிடைக்கும்போது
ரத்தினமாகியிருக்கும் அது
கடவுளுக்குத் தெரியும்
அன்பை எப்படி
வலுவாக்குவதென்று.
The post கடவுளுக்குத் தெரியும் – வீரான்குட்டி first appeared on சுஜா.
September 11, 2022
கேள் – வீரான்குட்டி
கல்லிடம் கேள்
எவ்வளவு காத்திருந்து
ரத்தினமாகியதென்று
நீர்த்துளியிடம் விசாரி
எத்தனை காலக் காத்திருப்பு
முத்தாவதற்கென்று
உதடுகள் இருந்திருந்தால்
அவை சொல்லியிருக்கும் :
‘அன்புடன் ஒரு கை தொடுவதற்கு
எடுத்துக்கொள்ளும் நேரம்’ என்று.
The post கேள் – வீரான்குட்டி first appeared on சுஜா.
September 3, 2022
நடனம் – வீரான்குட்டி
நூல் கோக்கும்போது
லேஸ் கட்டும்போது
முடி பின்னும்போது
உன் கைவிரல்கள் புரிகின்ற
நடனம் போலொன்றை
கண்டதில்லை நான்
இன்றுவரை.
The post நடனம் – வீரான்குட்டி first appeared on சுஜா.
August 21, 2022
வேனில் மரங்கள் – வீரான்குட்டி
மழைக்காலக் காடு
ஒரு பப்ளிக் ஸ்கூல் அசம்ப்ளியை
நினைவூட்டும்
அங்கு சீருடையணிந்த மரங்கள்
கீழ்படிதலுக்கு வெகுமதி பெறுகின்றன
வேனிற்காடு
கிராமத்து சாதா இஸ்கூல் போல
அங்கு மரங்கள்
சீருடை இல்லாததால்
பல மங்கிய நிறங்களில் தத்தம்
சொந்த உடையில்
பொடிமண்ணில் விளையாடி ஆர்ப்பரித்து
வரிசையாய் வந்து நின்று
கீழ்படியாமைக்கு அடி வாங்குகின்றன.
மழைக்கால மரத்திற்கு
சவால்கள் ஏதுமில்லை
வேனிலுக்கு அப்படியல்ல
அது எல்லாவற்றையும் முதலில் இருந்து
தொடங்க வேண்டும்.
நீருக்கு அலைய வேண்டும்
எரிந்துபோகாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்
ஒவ்வொரு வேளைக்கும்
அது பிழைத்திருக்க வேண்டும்.
மழைக்காலக்
காட்டினைவிட எனக்குப் பிடித்தது
உயர்த்திய முஷ்டியைப் போல் நிற்கும்
வீரதீர வேனில் மரங்களைத்தான்.
The post வேனில் மரங்கள் – வீரான்குட்டி first appeared on சுஜா.
July 19, 2022
சொல் – வீரான்குட்டி
சொல்
இரண்டுபேர் காதலிக்கத் தொடங்கும்போது
அவர்களை மட்டுமாக்கி
சுற்றியுள்ள உலகம்
சட்டென்று எங்கே
போய்த் தொலைகிறது?
The post சொல் – வீரான்குட்டி first appeared on சுஜா.
June 8, 2022
தேடல் – வீரான்குட்டி
நீ எங்கே என்று கேட்டதும்
நாலாதிசைகளிலும் விரல்நீட்டி
என்னைச் சுற்றலில் விட்டது
மரம்
உன்னைத் தேடுகிறேன் என்றறிந்ததும்
எப்போதும் முன்னால் நடக்கும் நட்சத்திரங்கள்
வெகுவாகப் பின்னால் போய்விட்டன
வழிகாட்ட வேண்டிய சுமை நீங்கி.
காற்று வளையமாய்ச் சுழற்றியது.
கடைசியில் கதறியபடி
கடற்கரை சென்றேன்
உதடு திறக்கும் முன்பே
நீ எங்கே என்று
ஆயிரம் நாக்குகள் ஒருசேர நீட்டி
திரும்பக் கேட்கிறது கடல்.
The post தேடல் – வீரான்குட்டி first appeared on சுஜா.
சுஜா's Blog
- சுஜா's profile
- 3 followers

