Karthik Balasubramanian's Blog, page 2

October 17, 2021

புள்ளிக்குப் பதிலாக வட்டம்


மாமரக் கட்டையில் செய்த அறையின் கதவுகள் அதிக சிரமம் தரவில்லை. இழுத்து ஓங்கி அடித்ததில் தாழ்ப்பாளைப் பிணைத்திருந்த அதன் திருகாணிகள் கழன்று கொண்டன. அப்பாவின் வேட்டியினைக் கயிறாகத் திரித்துச் சுருக்கிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தான். எதிரே இருந்த புகைப்படத்தில் அவன் அப்பா கம்பீரமாக புன்னகைத்துக் கொண்டிருந்தார். அப்புகைப்படம் மாட்டப்பட்ட சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேசையின் மேலே, மருந்துப்புட்டியின் கீழே படபடத்த மருத்துவப் பரிந்துரைச்சீட்டின் ரீங்காரம் அந்த அறையின் அமைதியைக் குலைத்தது. அதன் அருகே ஒரு டயரியும் அதில் சில குறிப்புகளும் இருந்தன. 


குறிப்பு 1. 


வாழ்வில் ஊறிய கசப்பு முழுவதையும் உள்ளிழுத்துப் புகையாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருந்தேன். நான் புகைப்பது பற்றி அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். அது குறித்து அவருக்குப் புகார்கள்கூட இருந்திருக்கலாம். ஆனால் தன் வாழ்வின் கடைசிக் கணம் வரை அதைப்பற்றி ஒரு வார்த்தையும் கேட்டுக்கொண்டதில்லை. யாரிடத்தும் தனக்குத் தெரிந்ததாகக்கூட அவர் காட்டிக்கொண்டதில்லை. அவரின் பிள்ளைகளில் அவரிடம் அதிகம் பிணக்கும் சிடுக்கும் கொண்ட பிள்ளையாக நானே இருந்திருக்கிறேன். 


தள்ளுவண்டிக்கு அடியில் நிழலுக்காக ஒதுங்கியிருந்த நாய், வழக்கமான கோட்டாவுக்காகஎன்னைப் பார்த்ததும் வேக வேகமாக வாலை ஆட்டிக்கொண்டு வந்து காலை முகர்ந்து நின்றது. பார்லிஜி பிஸ்கட் பொட்டலம் ஒன்றை வாங்கிப் பிரித்துப்போட்டேன். 


நுரையீரலை நிறைத்தப் புகையின் நிகோட்டின் தீற்றல்களில் ஆசுவாசம் கொண்டிருந்த பொழுதில்தான் அந்தச் சம்பவமும் நிகழ்ந்தது. 


நான் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்த கடையின் வாசலில் நீட்டிவிடப்பட்ட ஒரு துண்டு வானம் போலிருந்த கனத்த பிளாஸ்டிக் ஷீட்களை அங்கே குத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கம்பிகளின் மேல் வைத்துப் பொருத்திக் கொண்டிருந்தனர் அவர்கள் இருவரும். பதின்களைத் தாண்டியிராத சிறுவன் ஒருவன். நாற்பதுகளின் நரைகூடி வந்திருந்த ஒருத்தர். 


“என்னடே அடிக்கடி அந்த டியூசன் வாசலே கதியாக் கிடக்கியாமே.. என்ன சேதி?” – வாயைத் திறந்து லேசாக நாக்கை மடக்கியவாறு வெளியே நீட்டி, லாவகமாக நட்டை இறுக்குவதில் அவர் கவனம் முழுவதும் குவிந்திருந்தது. 


“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணாச்சி” 


“இங்க பாருலே.. வந்தமா தொழில கத்துக்கிட்டமா. வெளியே போயி தனியா தொழில் பண்ணி பொழச்சமான்னு இருந்துக்கோ. அப்பன் இல்லாத வீடு. ரொம்ப அசிங்கமாப் போயிடும் பாத்துக்கோ. நான் சொல்றதச் சொல்லிட்டேன் ஆமா. அப்புறம் உன்னிஷ்டம்” என்று இதை அவர் சொல்லி முடிக்கும் போது அவன் தெருவில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரை வெறித்தபடி இருந்தான். 


எதிர்பாராத நேரத்தில் சுளீரென்று புடதியில் விழுந்த அடியில் நிலை குழைந்துபோன அவன் கையில் இருந்த கனத்த ஸ்பான்னர் ஒன்றைத் தவறவிட்டான். 


கடும் பசியிலிருக்கும் காட்டு விலங்கொன்றின் வளைந்த கூர்நகங்களின் பிடியிலிருந்து தேவகணத்தில் தப்பிய சிறுபறவையென அது தப்பி மிகச்சரியாக என் நடுமண்டையில் வந்து விழுந்தது. 




குறிப்பு 2 


ரிசப்சனில் பச்சைநிற காட்டன் புடவை அணிந்த பெண் என்னைப் பார்ப்பதும் தனக்குள்ளே சிரிப்பதுமாக இருந்தாள். அவளிடம் நேரே போய் என் முகத்தில் எழுதப்பட்டிருக்கும் அவளின் மகிழ்ச்சிக்கான காரணத்தைக் கேட்டுவிடலாம் என்று தோன்றியது. போய்க்கேட்டால் என்னைப் பார்க்கவேயில்லை என்று தலையிலடித்துச் சத்தியம் செய்வாள். அதையேத் திரும்பத் திரும்பச் சொல்வாள். இது அவளுடைய இடம். எனவே சுற்றியிருப்பவர்களும் அவளுக்கே ஏந்திக்கொண்டு வருவார்கள். அன்று பெட் ஷாப்பில் மயில்ராவணனுக்கு பெடிகிரி வாங்க நின்று கொண்டிருந்தபோது அப்பாவின் ஸ்நேகிதர் ஒருத்தர் அப்பாவின் பெயரைச் சொல்லி என்னை அழைத்தார். அங்கு பில் போட்டுவிட்டு வரும் பத்து நிமிட இடைவெளியில் இருபதுக்கும் மேற்பட்ட முறை “திருப்பதிசாமி திருப்பதிசாமி” என்று உரத்துக் கத்தி கத்திக் கூப்பிட்டார். 


அருகில் போய் என்னவென்று கேட்டேன். தான் அப்படி யாரையும் அழைக்கவே இல்லை என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு நன்றாகக் கேட்டது. அவருக்கு என் பெயர் மறந்து போயிருக்கலாம். அதன் காரணமாக அப்பாவின் பெயர் கொண்டு என்னை அழைத்திருக்கலாம். அதில் தவறென்ன இருக்க முடியும்? எப்படிப் பார்த்தாலும் அவரின் தொடர்ச்சி தானே நான்? அவர் என்னைக் கூப்பிடவில்லை என்று சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. தான் அப்பாவின் ஸ்நேகிதனே இல்லை என்று சொன்னதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 


என்னிடம் மறுத்துப் பேசிய அதே குரலைத்தான் ஒவ்வொருமுறையும் அவர் என்னைக் கூப்பிடும் போதும் கேட்டேன். இத்தனைக்கும் எனக்கு அப்போது காதுகளில் பிரச்சனை ஏற்பட்டிருக்கவில்லை. இப்போதும் கூட என் காதுகளில் பிரச்சனை ஒன்றும் இல்லை. 


முன்பு, ஒரு சிறு பிரச்சனை இருந்தது உண்மைதான். என்னால் வலதுபக்கம் திரும்பிப் படுக்கமுடியவில்லை. படுக்கையறையில் இடதுபக்கச் சுவரில்தான் அப்பாவின் அந்தக் கருப்பு வெள்ளைப் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. ஒரு ஹிப்பியைப் போன்று தோள்களில் புரளும் முடிக்கற்றையுடன் முதல் மூன்று பட்டன்கள் திறந்த நிலையில் காக்கைகள் பறக்கும் சட்டை அணிந்திருப்பார். முழுக்கைச் சட்டையை முட்டிக்கு மேல் இழுத்துச் சுருட்டிவிட்டிருப்பார். பெல்பாட்டம் பேண்ட்டும், கையில் புகையும் பனாமா சிகரெட்டும் உதட்டின் இருபக்கமும் நிறைந்து வழியும் மீசையும் இருக்கும் அட்டகாசமான புகைப்படம் அது. 


அப்படத்தைப் பார்த்துக்கொண்டே படுத்திருந்தால் எந்தப் பிரச்சனையுமில்லை. அது மாட்டப்பட்டிருக்கும் பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கமாய்த் திரும்பிப் புரண்டு படுக்கும்போது மட்டும் தலை கிறுகிறுவென்று சுற்றத் தொடங்கிவிடும். மொத்த பூமியும் என்னை மையமாக வைத்துச் சுழல்வது போலிருக்கும். மாறாக, அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்தபடியே படுத்தால் அந்தத் தொல்லை கிடையாது ஆனால் தூக்கம் கூடுவதில்லை. எங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்தேன். அவர் என்னைக் காது-மூக்கு-தொண்டை நிபுணர் ஒருவரைச் சென்று பார்க்கும்படி வலியுறுத்தினார். 


சந்தித்தேன். ஒருபக்கமாய்த் தலைசுற்றுகிறது என்றேன். 


சமீபத்தில் தலையில் ஏதாவது அடிபட்டதா என்றார். 


ஸ்பான்னர் கதையைச் சொன்னேன். அந்தச் சிறுவனுக்காக கொஞ்சம் வருத்தப்பட்டார். 


உட்செவியின் சுவரில் ஒட்டியிருக்கும் சிறுச் சுண்ணாம்புப் பொட்டுதான் பிரச்சனை என்றார். மூன்கு வேளைகள் ஐந்து நாட்களுக்கு வேளைக்கு இரண்டாய் அவருடைய மருந்தகத்தைத் தவிர வேறெங்கும் கிடைக்காத மாத்திரைகள் சிலவற்றை எழுதித்தந்தார். அத்தோடு தலைச்சுற்றல் பிரச்சனை தீர்ந்தது. ஆனால் இப்போது வலப்பக்கம் திரும்பிப்படுக்க வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை. அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்தபடியேத் தூங்கிப் போகிறேன். காலையில் அவரின் முகத்திலேயே விழிக்கவும் செய்கிறேன். நன்றாகத் தூங்கவும் செய்கிறேன். ஆனால், அதுதான் இப்போது பிரச்சனையாகிப் போனது. 


அதைத் தீர்க்கத்தான் இப்போது மனநலமறியும் மருத்துவர் ஒருவரிடம் எனது முறைக்காக வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறேன். 




குறிப்பு 3 


வெகு இயல்பாக டீசர்ட்டும் ஜீன்சும் அணிந்து நோயாளிகளைச் சந்திக்கும் மருத்துவரை அன்றுதான் என் வாழ்நாளில் முதன்முதலாகப் பார்த்தேன். 


“சொல்லுங்க வருண் உங்களுக்கு என்ன பிரச்சனை?” 


“எங்கப்பாதான் டாக்டர்” 


ஒரு நெடுநாளைய நண்பனைப் போல மிகவும் அணுக்கமாக புன்னைகைத்தபடி என்னைப் பார்த்து, “அப்பாவோட பிரச்சனையில்லாத மனுசன் உலகத்துல எவனாது இருக்கானா சொல்லுங்க? அது ரொம்ப இயல்பான விசயம் தானே. நான்கூட எங்க அப்பாவை அடியோட வெறுத்த காலமெல்லாம் உண்டு. சொல்லப்போனா காஃப்கா, புதுமைப்பித்தன் போன்ற மேதைகளுக்கே இந்தப் பிரச்சனை இருக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம்? சரி, அவரோட என்ன பிரச்சனை உங்களுக்கு?” 


“அவர் எப்பவும் என்கூட பேசிட்டே இருக்கார் டாக்டர். அதான் என்னோட பிரச்சனை” 


புன்னகைத்தபடியே பேசும் கலை அவருக்கு வாய்த்திருந்தது. “ஒரு வயசுக்கு மேல போயிட்டாலே பெரியவங்களும் குழந்தைகள் போல ஆயிடறாங்க. குழந்தைகள்ட்ட இருக்கிற ‘அட்டென்ஸன் சீக்கிங் பிகேவியர்’தான் இப்போ பெரியவங்கக்கிட்டேயும் இருக்குது. ஒரு குழந்தைக்குத் தேவையான கவனத்தை நீங்க கொடுக்கலனா என்ன பண்ணும்? ஆடும், பாடும், கத்தி அழும், சில குழந்தைகள் தரையில புரண்டு அழும். கைல கிடைக்கிற பொருளை எடுத்து உடைக்கும். சுவத்துல போயி நங்கு நங்குன்னு முட்டிக்கிற பிள்ளைகள் கூட இருக்காங்க. இதெல்லாம் ஒரு உத்தி. இது பெரியவங்களுக்கும் பொருந்தும். நாமெல்லாம் வேலை, நண்பர்கள், மொபைல், டிவின்னு எதுக்குள்ளயாவது நம்மள நாமே புதைச்சுக்கிறோம். அவங்க தனியாகிடுறாங்க. அதனாலதான் நம்ம கவனத்தை ஈர்க்கப் பாக்குறாங்க. அதுபோலத்தான் உங்க அப்பாவும் உங்ககிட்டப் பேச விரும்புறார். நீங்களும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவரோட பேச வேண்டியதுதானே. இன்னைக்கெல்லாம் கொஞ்சம் மனம்விட்டுப் பேசினாலே பாதிக்கு பாதி பிரச்சனைகள் குறைஞ்சிடும்.” 


“இல்லயில்ல டாக்டர். இது ஒரு வழிப்பாதை. அவர் பேசிட்டு இருப்பார். அவர் சொல்றதை மட்டும் நான் கேக்கணும். அவர் சொல்றபடி நான் செய்யணும். மத்தபடி நானா எதுவும் பேசமுடியாது. அப்படி நானா எப்போ எதிர்த்துப் பேச நினைச்சாலும் உடனே முழிப்பு வந்துடுது. அப்புறம் அவர் வரமாட்டிக்கிறார். தூக்கமும் வர மாட்டிக்குது. அப்போ நான் எப்படிப் பேச முடியும்? எனக்கும் கூட அவர்கிட்ட ஒரு மன்னிப்புக் கேட்கணும். அதுக்குக்கூட நேரம் தர மாட்டுகிறார்”


“ஓ.. மன்னிக்கணும்.. அப்பா எப்போ தவறினார்?” 


“நாலு மாசம் முன்னாடி நானும் நண்பர்களும் வெள்ளியங்கிரி மலைல டிரெங்கிங் போயிருந்தோம் டாக்டர். தொலைதொடர்புக் கோபுரங்கள் எட்டமுடியாத அமைதியின் உச்சத்தில் இருந்தோம். வானமும் பூமியும் சங்கமிக்கிற மாதிரி அற்புதமான ஒரு இடம் அது. ஆயிரம் ஊசி வந்து தச்சாப் போலப் பனிக்காத்து உடலின் ஒவ்வொரு உணர்வு முடிச்சிலேயும் உள்ளே இறங்குச்சு. மனசுக்குப் பிடிச்ச ஸ்நேகிதியை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிஞ்சு கிளம்புறதுபோல கீழே இறங்கியதும் அந்தச் செய்தி வந்தது. அடிச்சுப்பிடிச்சு ஓடி வந்தேன். அதற்குள் அவரை ஐஸ்பெட்டிக்குள் கிடத்தி வைச்சிருந்தாங்க. அவர் கடைசியா என் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட்டிருக்கிறார். என்கிட்ட எதையோ பேசணும் பேசணும்ன்னு திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். அப்போ அது முடியாம போச்சு. அந்தக் குறையை இப்போ பேசிப் பேசித் தீர்த்துக்கிறார்” என்றேன். 


“ஓ.. ஒண்ணும் பிரச்சனையில்லை. மனுசன் அதிகம் பயப்படுற விசயம் வெற்றிடம். ஏன்னா.. அதை நிரப்புறது அவ்ளோ சுலபமில்லை. அதுவும் மனசுக்கு நெருக்கமானவர்கள் உருவாக்கிட்டுப் போற வெற்றிடம் இருக்கில்லையா அது இன்னும் கொடுமையானது. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா அந்த இடமும் நிரம்பும். காலம் அதையும் நிரப்பும். சிலருக்கு ஒரு மாஜிக் மாதிரி அது உடனே நடந்துடும். சிலருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கலாம். அவ்வளவுதான். இப்போ உங்களோட தேவையும் அதற்கான கால இடைவெளிதான். அதனால, ஒண்ணும் பயப்பட வேண்டாம். இப்போதைக்கு ஸ்ட்ரெஸ் குறைக்கவும் நல்லா தூங்கவும் சில மாத்திரைகள் எழுதித்தர்றேன். தொடர்ந்து எடுங்க. இரண்டு வாரம் கழிச்சு வந்து என்னைப் பாருங்க. நாம பேசலாம்” 


சக மனிதனின் மீதான பரிவின் அடர் ரேகைகள் ஓடும் அவர் கண்கள் அவருக்கு இருந்தன.



குறிப்பு 4 


விஜயராகவன் டாக்டரைப் போலத்தான் முதன் முதலில் இதைப் பற்றி நான் பேசியபோது அம்மா, தங்கை, அண்ணன்கள், அண்ணி என யாருமே நம்பவில்லை. அப்பாவின் மீது கொண்ட அதீதப் பாசத்தால் இப்படியெல்லாம் பிதற்றுகிறேன் என்றே நினைத்தார்கள். 


அவர்களின் அந்த நினைப்பைத் துண்டாக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. அதன் பிறகுதான் அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக என் மேல் நம்பிக்கை வந்தது. குறிப்பாக வீட்டுப் பெண்களுக்கு. 


அன்று காலை வீட்டில் உள்ள அத்தனை பேரும் உணவு மேசையில் அமர்ந்து காலை உணவருந்திக் கொண்டிருந்தோம். அது போன்று அனைவரும் ஒரே சமயத்தில் உண்ணும் நிகழ்வு வெகு அரிதாகவே வாய்க்கும். 


“அப்பா தன்னோட வலது கால் செருப்பை இங்கயே விட்டுட்டுப் போயிட்டாராம். ஒரு செருப்புக் காலோட நடக்குறது ரொம்ப சிரமமா இருக்காம். வருத்தப்படறார்” – யாரையும் பார்க்காமல் சாப்பாட்டுத்தட்டில் கைகளை அளைந்தவாரே சொன்னேன். 


“நீ இப்படி கிறுக்கு மாதிரி பேசுறத முதல்ல நிறுத்து. சும்மா உளறிட்டு இருக்காத. அவர் உயிரோட இருக்கும்போது அவர்கிட்ட நாலு வார்த்தை நல்லதா பேசினதில்ல. இப்போ வந்துட்டான் இதைச் சொன்னார் அதைச் சொன்னார்ன்னுட்டு. இதே மாதிரி வெளியே போய்ப் பேசி எங்க மானத்தையும் சேர்த்து வாங்கிட்டு இருக்காத” என்ற சிவாண்ணன் எச்சிற்கையை வேகமாக உதறி எழுந்தான். 


அவனைக் கையைப்பிடித்து இழுத்து அமர்த்திவிட்டு சின்ன அண்ணன் என் கண்களைப் பார்த்து, “வருண்.. அப்பாவ சுடுகாட்டுல எரிக்கும் போது அவரோட செருப்பு, கண்ணாடி, அவர் கடைசியா வாசிச்சுட்டு இருந்த கம்ப ராமாயணப் புத்தகம், அவரோட கல்யாண வேட்டி, அவரோட சிங்கப்பூர் நண்பர் பரிசாக்கொடுத்த லைட்டர், கையடக்க டிரான்சிஸ்ட்டர் முதற்கொண்டு எல்லாத்தையும் சேர்த்துப் போட்டு எரிச்சோம். அப்போ நீயும் தான் பக்கத்துல இருந்த. ஞாபகத்துல இருக்கா இல்லையா?” என்றான். 


“அப்பாவுக்கு நடக்கக் கஷ்டமா இருக்காம். அவர்தான் இன்னொரு செருப்பை எடுத்துத்தரச் சொன்னார்” என்றேன். 


அப்போது சிவாண்ணன் மறுபடியும் தட்டிலிருந்து எழுந்துவிட்டான். சோற்றுக்கையோடு என் கைகளினூடே கைவிட்டு கிடுக்குப்பிடியாகப் பிடித்து சாப்பாட்டு மேசையிலிருந்து வெளியே இழுத்தான். “வா.. வந்து நீயே அந்தச் செருப்பை எடு. செருப்பு வேணும்ன்னு கேட்டவர் அது எங்க இருக்குன்னும் சொல்லியிருப்பார் இல்ல” என்றான். 


முந்திய நாள் கனவில் அப்பா சொன்னபடி, வீட்டுக்குப் பின்புறம் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த ரோஜாச் செடியைப் பிடுங்கி எறிந்தேன். தோட்ட வேலைக்காக வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து அங்கே தோண்டினேன். ஒரு பூந்தொட்டி கொள்ளும் அளவிலான மண்ணை வெளியே வாரி இறைத்தபிறகு அந்தச் செருப்பு தட்டுப்பட்டது. அப்பா உபயோகித்த அதே செருப்பு. வலது கால் செருப்பு. சின்ன அண்ணன் சிதையில் அப்பாவுடன் சேர்த்து எரித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருந்த அதே செருப்பு. மண்துகள் ஏதும் ஒட்டாமல், புழு பூச்சி அரிக்காம்ல் நேற்று புதைத்து வைத்தாற் போல, அவர் உபயோகித்த போன்ற அதே நிலையில் இருந்தது. 


அம்மா வந்து மெதுவாக என் தோளைத் தொட்டாள். செருப்பை கைகளில் தாங்கியிருந்த என்னை எழுப்பி மார்பில் வாரி அணைத்துக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் என் கன்னங்களைத் தொட்டு வழிந்தது. 




குறிப்பு 5 


என் மீது சிவாண்ணன் கொண்ட ஆத்திரத்துக்கெல்லாம் அவன் என் மீது கொண்ட அளப்பரிய அன்பே பிரதானமாய் இருந்தது என்பதை நான் அறிவேன். அப்பாவுடன் நடந்த அந்தச் சண்டைக்குப் பிறகு என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் அவன் மூலமாகவே அப்பாவைச் சென்றடையும். 


அப்பா இறந்த பிறகு அந்த ஸ்தானத்திற்கு சிவாண்ணன் வந்தான். அப்படியான நிலைக்கு வந்ததும் ஏனோ அவனும் என்னுடன் பேசுவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டான். 


அன்று மதியம் தூங்கிக் கொண்டிருக்கும் போது என் கால்களை யாரோ எச்சிலால் ஈரப்படுத்துவது போன்ற உணர்வால் துள்ளி எழுந்தேன். எனது அறையின் வாசலில் அந்த நாய்க்குட்டி தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தது. என் மனப்போக்கை மாற்றுவதற்காக சிவாண்ணன் தான் வாங்கிக் கொடுத்திருந்தான். 


அதற்கு ‘மயில் ராவணன்’ என்று பெயர் வைத்தேன். சிறுவயதில் அப்பா சொன்ன ராமாயணக்கதைகளில் என்னை அதிகம் கவர்ந்த கதாப்பாத்திரம் அது. 




குறிப்பு 6 


இது, மயில்ராவணன் வீட்டிற்கு வருவதற்கு முந்தைய வாரம் நடந்தது. முந்திய நாள் கனவில் வந்த அப்பாவின் கைகளில் அந்தச் சிறு கொலுசைப் பார்த்தேன். அது சிவாண்ணன் குழந்தையாக இருந்தபோது உபயோகப்படுத்தியதன் நினைவாக அம்மா பத்திரப்படுத்தி வைத்திருந்த வெள்ளிக் கொலுசு. தன் முதல் குழந்தைக்கு தாய்வீட்டுச் சீதனமாய் அம்மாவுக்கு வந்த பரிசு அது. அண்ணனுக்குக் குழந்தை பிறந்ததும் அதைப் புதுப்பித்து அணிவிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் அவளின் கடைசரக்குப் பெட்டியில் ஒளித்து வைத்திருந்தாள். இந்தக் கதை வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அண்ணனுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் அதை புதுப்பிப்பதற்கானச் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. 


அதைத்தான் அப்பாவின் கையில் புத்தம் புதிதாகப் பார்த்தேன். 


அண்ணனிடம் சொன்னால் அடிக்க வருவான். அம்மாவும் அண்ணியும் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த போது அவர்கள் கவனம் கலைந்திருந்த ஒரு விளம்பர இடைவெளியின் போது அந்தக் கனவைப் பற்றிக் கூறினேன். 


நான் சொல்லி முடிக்கவும், அண்ணி கதறி அழ ஆரம்பித்தாள். அவள் ஏங்கி ஏங்கி அழுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இதை அவளிருக்கும் போது சொல்லியிருக்கக் கூடாதோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் அவள் அழுது குழறியபடி பேசியது கேட்டது. 


“அத்தே.. தள்ளிப் போயிருக்கு” 


இதைக் கேட்டதும் அம்மாவும் அழுதாள். அவளை வாரியணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டாள். அப்பாவின் மாலையிடப்பட்டிருந்த புகைப்படத்தின் முன் நின்று கண்ணீர் சொரிய வணங்கினாள். அங்கே வைக்கப்பட்டிருந்த விபூதியை எடுத்துவந்து அண்ணியின் நெற்றி முழுவதும் நிறைத்துப் பூசினாள். “ எஞ்சாமி… எஞ்சாமி” என்று முணுமுணுத்துக் கொண்டே எனக்கும் பூசிவிட்டாள். 




குறிப்பு 7 


அப்பா என்னிடம் கனவில் எல்லோருக்குமாகப் பேசினார். ஆனால் எனக்காக ஒரே ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. என்னைப் பேச அனுமதிக்கவும் இல்லை. என் மீதான அவரின் புறக்கணிப்பு மிகுந்த வேதனையைத் தந்தது. 


அவர் அந்தச் சம்பவத்தை மறக்கவே இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன். அன்று அப்படி அவரின் சட்டையைப் பிடித்திருக்கக் கூடாதுதான். இப்போது தவறாகத் தோன்றும் அந்தச் செய்கை அவர் உயிருடன் இருக்கும் போது ஒருமுறைகூட அப்படித் தோன்றியதில்லை. கடைசியாக மன்னிப்புக் கேட்டுக் கதறி அழும் வாய்ப்பைக் காலம் கருணையின்றி மறுத்துவிட்டிருந்தது. இங்கே தானே இருக்கிறார் என்று நானும் இருந்துவிட்டேன். அதற்குள் அவர் இல்லாமற் போய்விட்டார்.


ஒருநாள் இரவில் இது குறித்துப் பேசுகையில் அவர் கண்ணீர்விட்டு அழுததாக அம்மா சொன்னபோதும் கூட எனக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தோன்றவேயில்லை. அதிலிருந்து அம்மாவுக்கும் என்மீது கோபம். 




குறிப்பு 8 


டாக்டர் விஜயராகவன் கொடுத்திருந்த மாத்திரைகளைப் போட ஆரம்பித்திருந்த மூன்றாவது நாளிலிருந்து எனக்குக் கனவுகள் வருவது நின்று போயிருந்தது. 


ஒரு பக்கம் நிம்மதியாகவும் மறுபக்கம் அதுவே பெரும் அழுத்தமாகவும் மாறிப்போனது. ஒரே ஒரு முறை அப்பாவைப் பார்த்து மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று தோன்றியது. ஆனால் அதற்கு முதலில் கனவு வரவேண்டும். 


அன்றிலிருந்து மாத்திரைகள் எடுப்பதை நிறுத்தினேன். ஆனாலும் கனவு வரவேயில்லை. அப்பாவின் புகைப்படத்தை பார்த்தபடியே தூங்கிப் பார்த்தேன். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தூக்கம் வந்தது. ஆனால் கனவு வரவில்லை. கனவை எப்படி வரவைப்பது என்பதும் புரியவில்லை. 


முதன் முதலாக அப்பா வந்த கனவு என்னை எவ்வளவு அலைக்கழித்ததோ அதைவிட அதிகமாகக் கனவுகளற்ற உறக்கம் படுத்தியது. அவரைப் பற்றிய நினைவுகளை ஒவ்வொன்றாய் எடுத்து மீட்டிக்கொண்டே தூங்கிப் பார்த்தேன். அவரின் வேட்டியினை எடுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினே. ஆனால், என்னால் இனி கனவுகளே காணமுடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தேன். கனவுகளற்ற நிச்சலனம் என்னுள் பெரும் பிரளயத்தைக் கிளப்பியது.


கனவுகள் வருவதையும், அதில் அப்பா வந்து பேசியதையும் மற்றவர்களிடம் போய்ச் சொல்வதில் தயக்கமே இல்லாத எனக்கு, கனவுகள் முற்றிலுமாக நின்று போனதைப் பற்றி யாரிடமும் பேச முடியவில்லை. தலை சுற்றுவது போல இருந்தது. ஓராயிரம் காக்கைகள் சேர்ந்து என் தலையைக் கொத்துவது போல வலித்தது. இரவு பகல் என்று கால நேரம் பார்க்காமல் தூங்கிப் பார்த்தேன். எப்போது எழுகிறேன், எப்போது தூங்குகிறேன் என்று எனக்கேப் புரியவில்லை. காலம் கொஞ்சம் கொஞ்சமாய் என் கால்களிலிருந்து நழுவிச் செல்வதைக் கண்டேன். 


மின்தடையால் தூக்கம் தடைபெற்று விழித்த நாள் ஒன்றில், மாத்திரைகள் கொண்ட புட்டியின் அடியில் படபடத்த காகிதம் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. 


காற்று வருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத அந்த அறையில், மழைக்கால  தட்டான்பூச்சியின் சிறகுகளைப் போல அந்தக் காகிதம் படபடத்தது. 


அருகில் போய் அதை எடுத்துப் பார்த்தேன். “ என் பக்கத்தில் வா. மன்னிக்கிறேன் “ என்று எழுதப்பட்டிருந்தது. அது அப்பாவின் கையெழுத்துதான். வெளியூரில் இருந்த அத்தைக்கு அப்பா இன்லாண்ட் லெட்டரில் கடிதம் எழுதுவதைப் பக்கத்தில் இருந்து எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். அவர் மெய்யெழுத்துக்களுக்கு புள்ளிக்குப் பதிலாக வட்டம் போடுவதைக் கவனித்திருக்கிறேன். அதே போல வட்டமிட்டு இருந்தது. அது அவரின் கையெழுத்தேதான். 


O

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 17, 2021 19:38

January 28, 2019

டொரினா பற்றி ஹரிஷ் கணபதி

கார்த்திக்கின் முதல் சிறுகதைத் தொகுப்பு.சமகாலத்தில் பெரும்பான்மைப் பிற துறைகளின்  மாதச் சம்பளக்காரர்கள் தங்களுக்குக் கிட்டவில்லையே என்ற ஆதங்கத்தில் கரித்துக் கொட்டும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பளபளப்பான சம்பளங்களுக்குப் பின்னிருக்கும் இருண்ட பக்கங்களைத் தொட்டுக் காட்டுகின்றன கணிசமான கதைகள்.2011 முதல் 2017 வரையிலான காலகட்டங்களில் எழுதப்பட்ட கதைகள். கால மாற்றத்தினால் எழுத்தின் தன்மையில் பெரும் பாய்ச்சலோ பின்தங்கிடலோ ஏற்படவில்லை.கார்த்தியின் கதை சொல்லல் முறை ஒரு தெளிந்த நீரோடையைப் போல் பயணிக்கிறது. திருகலான மொழிநடையின்றியும் கனமான கதைகளைச் சொல்வது சாத்தியம் என்பதை அறிவிக்கிறது. முன்பொரு முறை அவருடன் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தபடிக்கும் இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பித்திருக்கும்படிக்கும் அவர் மானசீக ஆசானாகக் கொண்டிருக்கும் அசோகமித்திரன் அவர்களின் சுவடுகள் அழுந்தப் பதிந்த கதை சொல்லல் முறை தெரிவிக்கிறது.இத்தொகுப்பின் கதைகளின் தலைப்புகள் பற்றி முன்னுரையில் திரு கோபால கிருஷ்ணன் அவர்களின் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்.கதைகளுக்குத்  தலைப்புகள் வைப்பது என் வரையில் சிலைக்கு இறுதியில் கண் திறப்பது போன்றது. கதையின் அழகியலுக்கு மட்டுமன்றி, சொல்ல வரும் விஷயத்த்துக்கும் தலைப்பு ஒரு ஈர்ப்பான் போல் செயல்பட வேண்டும். இதில் கார்த்திக் இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம்.கதைகளைப் பொறுத்தவரை, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கதைகளாதலால், ஒவ்வொரு கதையிலும் விதவிதமான கதை சொல்லல் முறைகளை முயன்றிருக்கிறார்.சில கதைகள் நேரடிக் கதை சொல்லல் முறையில் எழுதப் பட்டிருக்கின்றன. சில கதைகள் முடிவை முற்று முழுதாய்த் தெரிவிக்காமல் வாசிப்பவரின் அவதானிப்புக்கு விட்டு விடும் வகையில் எழுதப் பட்டிருக்கின்றன.ஒரே ஒரு கதையை மட்டும் என்னளவில் நான் முற்றாக நிராகரிக்க எண்ணுகிறேன். அந்தக் கதை அவ்வளவாகப் பயன்படுத்தப்படாத, சிறுகதை எழுத சற்றே கடினமான உத்தியில் எழுதப் பட்டிருந்தாலும், மொத்தக் கதையும் இறுதியில் ஏற்படும் திருப்பத்தின் அதிர்ச்சி மதிப்பை நோக்கி மட்டுமே கதையைச் செலுத்துவதால் புதுமையான உத்தியும் பயனளிக்காமல் போகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.இதர கதைகளைப் பொறுத்தவரை , பொதுவாக எனக்கு நேரடிக் கதை சொல்லல் முறையிலேயே அதிக விருப்பமென்றாலும் , வாசகரின் யோசனைக்காகக் கதையின் முடிவை ஒரு திறப்போடு விட்டு விடும் உத்தி கார்த்திக்கின் கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.வெளியான புதிதில் பரவலாக சிலாகிக்கப் பட்ட இரு கோப்பைகள், தலைப்புக் கதையான டொரினா ஆகியவை மிக நல்ல கதைகள் என்றாலும் அவை நல்ல கதைகள் என்ற அளவில் என்னைப் பொறுத்தவரை நின்று விடுகின்றன.காரணம், திரு கோபால கிருஷ்ணன் சொன்னது போல் புதிதாகச் சிறுகதைகள் எழுதுபவர்கள் (நான் உட்பட) தத்தமது திறமையை எளிதாய்ப் பரிசோதிக்கத் தேர்ந்தெடுக்கும் களம் பெரும்பாலும் பால்ய நினைவுகள் பற்றியதாக, அல்லது திருமணம் தாண்டிய உறவு பற்றியதாகவே இருக்கிறது. டொரினா இந்த வகைமைக்குள் வருவதால் இந்த genreல் மிக நல்ல கதை என்று கூறலாம்.இரு கோப்பைகள் பற்றிய கருத்து முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்தே.என்னளவில் தொகுப்பில் யயகிரகணம், முடிச்சுகள் ஆகிய கதைகள் நிரப்பப் பிடித்திருந்தன.முதல் தொகுப்பை பேர் சொல்லும்படியான தொகுப்பாகவே கொடுத்திருக்கிறார் கார்த்திக். அடுத்தடுத்த தொகுப்புகள் மேலும் காத்திரமாகப் படைக்க வாழ்த்துக்கள்.தலைப்பு- டொரினா
வகை.      - சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்- கார்த்திக் பாலசுப்ரமணியன்
வெளியீடு-யாவரும் பதிப்பகம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2019 07:54

டொரினா பற்றி தேனு தேனப்பன்

டொரினா (கார்த்திக் பாலசுப்ரமணியன்) - கதைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்..
முதலாவது தகவல் தொழில் நுட்பத் துறையின் பின் பக்கங்கள் (நடைபெறாத பக்கங்கள் அல்ல, வெளிக்கொணர்ந்து பார்வைக்கு வைக்கப்படாத பக்கங்கள்). இரண்டாவது - ஏதோ ஓர் உறவு, நட்பு, காதல், சமூகம் வகையிலான கதைகள்.
*
கதைகளைப் பற்றி கதைப்பதைக் காட்டிலும் கார்த்திக் பாலசுப்ரமணியனின் எழுத்து நடையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நிகழ்கால எழுத்தாளர்களின் பல படைப்புகளில் காண முடியாத ஒரு முதிர்ச்சியை இவரது நடையில் கண்டு ரசிக்க முடிகிறது. அதுவே ஆகச் சிறப்பாய், பிரதானமாய் இத்தொகுப்பில் பல கதைகளை எடுத்து நிறுத்தியிருக்கிறது. <3 உதாரணமாக இரு கோப்பைகள் கதையின் நடையில் தெரியும் முதிர்ச்சி அந்த முதியாவர் மார்க் ஹூ விவரிக்கும் அவர் வாழ்வைக் கனக்கச்சிதமாக தாங்கி இருக்கிறது.. இரு கோப்பையின் தொடர்ச்சியாக நிழல் தேடும் ஆண்மை கதையைப் பார்க்கலாம், ஒரு கதையின் முடிவில் இருந்து இன்னுமொரு கதை தொடங்குதலைப் போல்தான் என்னால் இவ்விரு கதைகளையும் பார்க்க முடிகிறது. அதுவும் ஒரு வித புரிதல்தான்.
*
டொரினா - பால்யம் - பல இடங்களில் படித்தது என்பதைத் தாண்டியும் ஒவ்வொருவரின் அனுபவம் வேறு வேறாய்த்தான் இருக்கும் பட்சத்தில் ஒரு அழகான கதை - நம் வாழ்வை நாம் திரும்பிப் பார்த்து ஓர் அழகான அசை போடுதலுக்கு வழி வகுக்கும்.
*
பார்வை - எப்பேர்ப்பட்ட கதை, அவ்வளவு ஆழமான கருவை விவரிக்கும் ஒரு அழகான தோட்டத்திற்கு முகப்பு ஏற்றதாய் இல்லை என்பதில் வருத்தம்தான். கதை தலைப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். ஒரு பெண் தகவல் தொழில் நுட்பத்துறையில் சந்திக்கும் பிரச்சனைகளும், வெளியில் அவள் எதிர்ப்படும் விமர்சனங்களும் மிக நேர்த்தியாய் கையாள பட்டுள்ளன <3
*
தகவல் தொழில் நுட்பத்துறையின் மீது இருக்கும் விமர்சனத்தை இத்தொகுப்பில் வரும் பல கதைகள் எடுத்தாண்டு அவர்கள் பார்வையை வேறுபடுத்தும் என்பதில் நிச்சயமாக சந்தேகம் இல்லை..
*
தொகுப்பில் மிகப்பிடித்தமான கதைகள்,
ஒரு காதல் மூன்று கடிதங்கள், இரு கோப்பைகள், லிண்டா தாமஸ், பார்வை <3
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2019 07:52

December 23, 2018

முன் நகரும் காலம்



சூரியனை மேகங்கள் மறைத்து நின்றன. வெம்மையும் புழுக்கமும் உள்ளுக்குள் இருந்ததைப் போலவே வெளியேயும் வியாபித்திருந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. வழமை போலவே கிழவிகள் பட்டியக்கல்லில் அமர்ந்து ஊர்க்கதைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளை பள்ளிக்குக் கிளப்பி, கணவனை அலுவலகத்துக்கோ கடைக்கோ அனுப்பிவைத்துவிட்டு குளித்துக் கிளம்பி கோவிலுக்குப் போய்த் திரும்பிக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்திக்கு அப்படியே மல்லி சித்தியின் சாயல். தலைக்கு குளித்து சடையைப் பின்னாமல் கடைசியில் ஒரு முடிச்சுப் போட்டு இருந்தாள். மேலே சூட்டப்பட்டிருந்த கையகல கனகாம்பரமும் அவளைப் போலவே.

ஆறு மாதங்களுக்குப் பின் ஊருக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனாலும் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசப் பிடிக்கவில்லை. போனமுறை ஊருக்கு வந்திருந்த போது கூட அத்தை வீட்டுக்குப் போயிருக்கவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு போய் நிற்பது? ஆனால் இந்த முறை அப்படி இருந்துவிட முடியாது. அது முறையுமல்ல.

சின்னத்தாயி கிழவிதான் கூப்பிட்டாள். அவளுக்குத்தான் அப்படியொரு கட்டைக் குரல் உண்டு. சிறு வயதில் அவள் வீட்டு முன் இருந்த சிறிய பொட்டலில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். அப்படி ஒரு நாள்  விளையாடிக் கொண்டிருந்தபோது நான் அடித்த பந்து, தன் வீட்டு வாசலையொட்டித் தெருவில் பாய் விரித்து இராட்டை சுற்றிக் கொண்டிருந்த அவளின் பாம்படத்துடன் காதைப் பதம் பார்க்க, அவள் என் மொத்த குடும்பத்தையும் திட்டித் தெருவில் வைத்தாள். அதன் பிறகான நாட்களில் அஞ்சி நடுங்க வைத்த அதே குரலில் தான் கூப்பிட்டாள்.

"யாருய்யா.. லதா மவனா போறது?"

"இல்ல ஆத்தா.. அது என் தம்பில. நான் அவுக அக்கா பரமேஸ்வரி பையன்."

"அட.. எனக்கு எல்லாம் ஒண்ணுதாம்ய்யா..  எங்க.. நம்ம மதியைப் பாக்கப் போறியோ? நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு வாய்யா. எப்படியாப்பட்ட பொண்ணு அது. உனக்குத்தான் கொடுத்து வைக்கல. அவளுக்கும் இப்படி வந்து சேர்ந்துருச்சே. ம்ம்...நேரமும் காலமும் அப்படியிருந்தா நீயும் நானும் மட்டும் என்ன செய்ய முடியும் சொல்லு "

எதன் பொருட்டு ஊர்ப்பக்கம் வராமலிருந்தேனோ, எதைக் கேட்க விரும்பாமல் விலகி ஒதுங்கி ஓடினேனோ, எது நடுச்சாமங்களில் முள்ளாய் தைக்கிறதோ அதே இடத்தில் ஒரே அடியாக அடித்தாள். சரியாகச் சாட்டையைச் சுழற்றினாள். இந்த முறை பந்து இடம் மாறியிருந்தது.

வேகமாக நடந்தால் அதுவே தனியான கவனத்தைக் கோரும் என்பதால், இயல்பாக இருப்பது போன்ற பாவத்தையும், அதற்கேற்ப நடையின் வேகத்தையும் மட்டுப்படுத்திக் கொண்டேன். வீட்டிலிருந்து நாலாவது தெருதான் என்றபோதும் நடக்க நடக்க பாதை நீண்டு கொண்டே செல்வதைப் போலிருந்தது. அன்று வீட்டுக்கு வந்து திரும்பிய அத்தைக்கும் இந்தப் பாதை இதே போல நீண்டு போயிருக்கும்தானே?

மீசையில் துருத்திக் கொண்டிருந்த முடிகளை கண்ணாடியைப் பார்த்து கத்தரித்துக் கொண்டிருந்தேன். நான், அதீத சிரத்தை எடுத்துக் கொள்ளும் காரியங்களில் ஒன்று. அப்போதுதான், அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த அத்தையின் குரல் காதில் விழுந்தது. அப்பாவுடன் பிறந்த மூன்று பேர்களில் தனம் அத்தைதான் இளையவள். அப்பாவுக்கும் அவளுக்கும் பதினைந்து வருட இடைவெளி இருக்கும். அதன் பொருட்டோ என்னவோ அவளிடத்தே அப்பாவின் மேல் பெரிய மரியாதையும் அதே நேரத்தில் பெண்பிள்ளைகளுக்கு தகப்பன்களிடத்தில் மட்டுமே இருக்கும் ஒருவித குழைவும் நேசமும் இருக்கும்.

பணம் பற்றிய பரிவர்த்தனைகளைப் பேசும் போது அத்தை அதற்கென்று தனிக்குரல் வைத்திருப்பாள். அம்மாவொன்றும் கொடுக்கிற கையைத் தடுக்கிறவள் இல்லை என்றாலும் காலம் காலமாக அது அப்படித்தான் இருந்தது. ஆனால் இந்த முறை அது பணம் குறித்தல்ல என்பதை அப்பா என்னைக் கூப்பிட்டனுப்பிய போதே புரிந்துவிட்டிருந்தது.

மதியழகியை மணம் முடிப்பது குறித்தான எண்ணம் எனக்குக் கிஞ்சித்தும் இல்லை. மேலும், உறவில் பெண் எடுப்பது அறிவியல் ரீதியாக அத்தனை சரியான முடிவும் இல்லை என்பதைக் விளக்கிக் கூறிமுடித்தபோது அத்தையின் முகம் வதங்கியும், அம்மாவின் முகம் மலர்ந்தும், அப்பாவின் முகம் சலனமற்றும் இருந்தது.

மதி என்னைவிட மூன்று வயது இளையவள். பெரியவளாகும் நாள் வரை எங்கள் வீட்டைத்தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பாள். அப்பா எனக்கு வாங்கித்தரும் எல்லாவற்றிலும் அவளுக்கு ஒரு தனிப்பங்கு எப்போதும் உண்டு. அது குறித்து ஆரம்ப நாட்களில் எனக்கு நிறைய வருத்தம் இருந்தது. அப்பா உற்சாகமிகுதியில் இருக்கும் சமயங்களில் என்னையும் மதியையும் எங்கள் ஊரின் பிரதான கடைத்தெருவில் இருக்கும் ஜாக்கி பேக்கரிக்குக் கூட்டிப் போவார். அவர் தனக்கு ஐம்பது கிராம் பாதாம் அல்வாவும், கொஞ்சம் முந்திரி பக்கோடாவும் வாங்கிக் கொள்வார். எங்கள் இருவருக்கும் ஆளுக்கொரு ஃபளூடா ஐஸ்கிரீம் வாங்கித் தருவார். வெள்ளை, பச்சை, மஞ்சள், சிகப்பு என்று அடுக்கடுக்காக ஐஸ்கிரீம்களுக்கிடையே நடுவில் நேர்த்தியாக நறுக்கப்பட்ட பழத்துண்டுகளால் நிரப்பப்பட்டு ஒயிலான கண்ணாடிக் கோப்பையில் வரும் அந்த ஃபளூடாவைப் பார்ப்பதற்கே அத்தனை கவர்ச்சியாக இருக்கும். கடைசி மேலடுக்கில் முந்திரி பாதாம் பிஸ்தா கலவையோடு சாக்லேட் துகள்களும் சேர்ந்து அதற்கு ஒருவித தேவருசியை கொண்டுவந்து சேர்த்தன.

குற்றாலம், திருச்செந்தூர் என்று ஊர் சுற்றும் சமயங்களில் எல்லாம் எப்போதும் அவளும் எங்களுடன் இருப்பாள். புதிதாகப் பார்ப்பவர்கள் அவளை என்னுடைய தங்கை என்றே நினைத்துக் கொள்வார்கள். அப்போதெல்லாம் நான் மட்டும் ஒவ்வொருமுறையும் அவள் என் அத்தை பெண் என்பதைக் கூறித் திருத்திக் கொண்டிருப்பேன்.

இவையெல்லாம் ஒரு நாள் திடீரென்று நின்று போனது. விசேஷ நாட்களைத் தவிர அவள் எங்கள் வீட்டுப்பக்கம் வருவதேயில்லை. அப்பாவின் முன்னால் கால் மேல் கால்போட்டு அமர்பவள், அவர் வந்தால் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ளப் பழகியிருந்தாள்.

அம்மாவும் அத்தையும் கல்யாண விருந்தொன்றுக்குச் செல்ல நேர்ந்த நாளில் அவளுக்குத் துணையாக என்னை அத்தை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டுப் போயிருந்தார்கள். சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவள் என்னை முதன் முதலாக "மச்சான்" என்று முறையிட்டு அழைத்தாள். எனக்குக் கூச்சம் பிடுங்கித் தின்றது.

"ஏய்ய்.. என்னது மச்சான் கிச்சான்னு...ஒழுங்கா பேரைச் சொல்லியே கூப்பிடு"

"இல்ல.. அம்மா இனிமே இப்படித்தான் கூப்பிடணுன்னு சொல்லிருக்கு.. இல்லன்னா வைய்யும்"  இதைச் சொல்லும் போது என் முகத்தைப் பார்க்காமல் டி.வி.யைப் பார்த்தபடியே பேசினாள்.

திரும்ப அவள் அப்படிக் கூப்பிட்டுவிடாமல் இருக்கும் பொருட்டே அவளிடம் பேசுவதை முற்றிலுமாய் தவிர்க்க ஆரம்பித்தேன்.

ஆனால் அத்தை இப்படி ஒரு நாள் கேட்டு வருவாள் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. மதிக்கும் இதில் துளியும் விருப்பம் இருந்திருக்காது. அத்தைதான் அவளைக் கலக்காமல் தானாய் வந்து கேட்டிருப்பாள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். மதியின் திருமணத்துக்கு மறு நாள் பலகார பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்த போது சித்திதான் அதைக் கூறினாள். மதியின் விருப்பத்தின் பேரில்தான் அன்று அத்தை வந்து கேட்டுப் போனதாம்.

தனம் அத்தை தன் வீட்டில் செங்கல் ஒன்றை நகர்த்தி வைக்கக்கூட அப்பாவிடம் வந்து அபிப்பிராயம் கேட்பவள், மதி திருமணத்துக்கு பத்திரிக்கை அடித்து பின் அதைக் கொடுக்க வரும் போதுதான் கல்யாண சேதியையேக் கூறினாள். என் பொருட்டு அண்ணன் தங்கைக்குள் மனத்தாங்கலாகிப் போனது.

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து ஒரு வார்த்தை கூட மதியிடம் நான் பேசியிருக்கவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இந்த நான்கு வருடங்களில் ஓரிருமுறை ஊர்த்திருவிழாவின் போது மதியை புருசனோடு பார்த்தது. மதிக்குப் பார்த்திருந்த பையன் அவளுடைய அப்பா வழியில் தூரத்துச் சொந்தம். உயரம், உடல்வாகு, நிறம் என எல்லாவற்றிலும் மதியழகிக்குப் பொருத்தமாகவே இருந்தான். எல்லாம் பொருந்தியிருந்தும் கல்யாணமாகி நான்கு வருடங்களாக குழந்தை உண்டாகியிருக்கவில்லை. அதுவே பெரும் குறையாக இருந்தது அவர்களுக்கு.  எல்லா வேண்டுதலுக்குப் பின்னர் பிறந்த குழந்தைதான் விஷக் காய்ச்சல் கண்டு முந்தின நாள் இறந்தும் போய்விட்டிருந்தது. நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை முழுதாக நாலு மாதங்கள் கூட மண்ணில் தங்கவில்லை.

ஏனோ இந்தச் செய்தி கேட்டதும் இருப்பு தங்கவில்லை. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பொய்க் காரணம் சொல்லி விடுப்பெடுத்துக் கொண்டு வந்து நிற்கிறேன். டுரோண்டோ, பேருந்து என முப்பது மணி நேரத்துக்கும் மேலான பயணக் களைப்பையும் மீறி மதியைப் பார்க்கவே அவள் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். எனக்கே இது புதிதாய் இருந்தது.

வாசலில் செம்பருத்திப்பூக்கள் உதிர்ந்து வருவோர் போவோர் கால்களில் மிதிபட்டு நைந்து போயிருந்தன. செருப்பை வெளியே கழற்றிவிட்டு வலதுகால் பாதத்தை ஒரு பக்கமாய் மடக்கி, சிதறியும் சிதைந்துமிருந்த செம்பருத்திப்பூக்களை மேலும் யார் காலிலும் படாதவாறு மெதுவாக ஓரமாய்த் தள்ளினேன்.

கம்பிகளின் இடைவெளியில் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் லாவகமாய் நுழைத்து தாழ்பாளை எம்பித் தள்ளி சாத்தியிருந்த கிரில் கதவைத் திறந்துவிட்டேன். ஒரு முறை 'கிரீச்சிட்டு' கதவு திறந்து கொண்டது. வேட்டியை ஒருமுறை தளர்த்தி, பின் இறுக்கிக் கட்டிக்கொண்டேன். உள்ளங்கைகள் வியர்த்திருந்தன. வேட்டியில் இழுவி உலர்த்தினேன்.

கைகடிகாரத்தில் மணி பன்னிரெண்டைத் தொட்டிருந்தது. மேகம் விலகி வெயில் உச்சியில் இறங்கியது. கண்ணில் பட்ட பொருட்களிலெல்லாம் ஒளி பட்டுச்சிதறியது. ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவை லேசாகத் திறந்து "மதி" என்று குரல் கொடுத்தேன். உள்ளே விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. ஜன்னல் எல்லாம் அடைக்கப்பட்டு இந்த மதியத்திலும் இருள் கவிந்து இருந்தது. வயர் வைத்துப் பின்னப்பட்ட மரசோபாவில் தலைக்கு கையை அண்டங்கொடுத்து மதி தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்த அழைப்புக்கு வெடுக்கென எழுந்தவள் "மச்சான் வாங்க வாங்க" என்றவாறு கதவைத் திறந்தாள்.  இருகையையும் உயர்த்தி தலையைப் அள்ளி முடிந்தவள், சேலையை இழுத்து சரி செய்து கொண்டாள். அழகாக இருந்தாள்.

ஜன்னலில் தொங்கவிடப்பட்டிருந்து திரைச்சீலைகளை அகற்றியவாறே, "அவுக டெத் சர்ட்டிஃபிக்கேட் வாங்க யாரையோ பாக்க போயிருக்காங்க. இப்ப வந்துருவாங்க. நீங்க உக்காருங்க"

அங்கிருந்த சோபாவை ஒட்டிப் போடப்பட்டிருந்த தனி நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்தேன். என்ன பேசுவது எங்கே ஆரம்பிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். வீடு துடைத்து வைத்ததைப் போல சுத்தமாக இருந்தது. மதியுடைய கல்யாணப் புகைப்படம் உள் வாசல் நிலைக்கு மேல் ஆணியில் தொங்கவிடப் பட்டிருந்தது. தேவைக்கு அதிகமாக ஒரு பொருள் இல்லை. அங்கே குழந்தை ஒன்று இருந்ததற்கான சிறு தடயமும் கண்ணில் படவில்லை.

எங்கள் இருவருக்குமிடையே அந்த அறையெங்கும் படர்ந்திருக்கும் மவுனத்தை ஊடறுக்கும் ஒரு சொல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். அவளே பேசினாள் "என்ன மச்சான்.. லீவுக்கு வந்திருக்கீங்களோ?" அவள் இயல்பாகக் கேட்டாலும் எனக்குக் குத்தியது. அவளின் பொருட்டு வந்திருக்க மாட்டேன் என்ற அசாத்திய நம்பிக்கை அவளுக்கு. "வேட்டியெல்லாம் கூட கட்டுறதுண்டோ?" அந்தக் கேள்வியில் முறைப்பெண்களுக்கே உரித்தான் ஒரு நக்கல் இருந்தது.

"ஆமா.. எப்பவாச்சு.. இப்படி ஊர்ப்பக்கம் வந்தா கட்டுறதுண்டு" பதில் சொல்லிவிட்டு எப்படி ஆரம்பிக்கலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அணிற்பிள்ளையொன்று மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பாயினுள் இருந்து எட்டிப் பார்த்தது.

"நீங்க தங்கியிருக்கிற எடத்துல இருந்து ஆக்ராலாம் பக்கமாமே.. தாஜ்மஹால்லாம் பாத்துட்டீங்களா? " என்று கண்கள் விரிய ஆச்சர்யமாய்க் கேட்டாள். அது எனக்குச் சுத்த அபத்தமாய்ப் பட்டது.

"ம்.. போயிருக்கேன்.. பெரிசா சொல்லிக்கிற மாதிரி அப்படியொண்ணுமில்ல"

"அத்த சொல்லிருக்கு வெயில்ல அலையிற வேலைண்ணு. ஆளுதான் கொஞ்சம் கறுத்துப்போயிட்டீக.. மெலியவும் தெரியுது" உண்மையிலேயே கரிசனப்பட்டாள்.

"ம்ம்..." - எனக்கு மனது பாரமாக இருந்தது. படபடவென்று அடித்தது.

"நேத்து இராப்போதுக்கும் அத்தை இங்கதான் இருந்தாக. ஆனா நீங்க வர்றதப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்ல"

"மறந்துருப்பாங்க"

"என்ன மச்சான் இப்படி அளந்தளந்து பேசுறீங்க!"

"அ...அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.."

"ஒரே நிமிசம் இருங்க டீ போட்டு எடுத்து வாறேன்."

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் விடு பிள்ள.."

காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுக்களைக்குள் சென்றவள், திரும்பிப் பார்த்து ஒரு முறை புன்னகைத்தாள். பெரிய டம்ளர் நிறைய மோரை நிறைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

"அடிக்கிற வெயிலுக்கு இதமாக இருக்கும். வயித்துக்கும் குளிச்சி" என்று டம்ளரைக் கொடுத்துவிட்டு என் நாற்காலிக்கு எதிரேயிருந்த நிலையில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

குடிக்க மனமொப்பாமல் கையில் வைத்துக் கொண்டே வீட்டையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். "ம். குடிங்க" என்று விரட்டினாள். ஒரே மிடறுதான் என்றாலும் அமிலமாக உள்ளிறங்கியது.

ஒருவழியாக எங்கே தொடங்குவது என்று கண்டு கொண்டேன், "பேரு என்ன வச்சுருந்தீங்க?"

"அகரன்.. பேரு நல்லாருக்கில்ல. அவங்க குலதெய்வம் பேரு வர்ற மாதிரி வைக்கணும்ன்னு அவுக அம்மா ஒத்தக்கால்ல நின்னாக. இவுங்க தி.க.யில்ல. முடியாதுன்னுட்டு இப்படிப் பேரு வச்சாக. ஆனாலும் எங்க அத்தை இப்ப வரைக்கும் அகர கருப்பன்னுதான் கூப்பிட்டிட்டு இருந்தாக. இது கூட ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கில்ல. நான் கூட சேட்டை பண்ணும் போதும் கொஞ்சும் போது டேய் கருப்பான்னுதான் கூப்பிடுவேன்" மறுபடியும் "அகர கருப்பன்" என்று கூறி மீசையை முறுக்கிவிடுவது போல பாவனை செய்து சிரித்துக் கொண்டாள்.

"நல்ல பேரு"

என்னால் அங்கிருக்க இயலவில்லை. என்னை வெகுவாக எதுவோ தொந்தரவு செய்தது. அங்கு எதுவுமே இயல்பாக இருக்கவில்லை. சகல ஒழுங்குடன் நேர்த்தியாக இருந்த அந்த வீடு என்னை அதற்கு மேல் அங்கேயிருக்க அனுமதிக்கவில்லை. விரட்டியது! அங்கிருந்து எப்படியாவது தப்பி வந்துவிட்டால் போதுமென்றிருந்தது. கூடவே ஆத்திரமும் கோபமும் பொங்கிப் பொங்கி வந்தது.

"சரி மதி.. நான் அப்புறம் வர்றேன். அவர் வந்தாருன்னா வந்துட்டுப் போனேன்னு தகவல் சொல்லிடு"

"செத்த இருங்க மச்சான். அவரு இப்போ வந்துடுவாறு"

"இல்ல பரவாயில்ல.. பத்து நாள் இங்கதான் இருப்பேன். அடுத்து வர்றேன்" என்று சொல்லி எழ முற்பட்டேன்.

எனக்கு அங்கே ஒரு நிமிடம் கூட இருக்கப் பிடிக்கவில்லை. அவளை ஓங்கி கன்னத்தில் நான்கைந்து அறைவிட்டால் என்ன? அப்படியேதேனும் அசம்பாவிதம் அரங்கேறும் முன் நான் அங்கிருந்து வெளியேறிவிடுதலே இருவருக்கும் நலம் என்று பட்டது.

வாசலில் அப்போதுதான் உதிர்ந்தது போல் செம்பருத்தி ஒன்று கிடந்தது. கிரிலைத் திறந்து வெளியேறும் போது நீண்ட காலத்துக்குப் பிறகு என்னை ஒருமையில் பெயர் சொல்லி அழைத்தவள், "அடுத்து வீட்டுக்கு வரும் போது ஜாக்கில இருந்து ஒரு ஃபளூடா வாங்கிட்டு வர்றியா. என்னமோ.. சாப்பிடணும் போல இருக்கு" என்றாள்.

தெருவில் இறங்கி நடந்து கொண்டிருந்தபோது எல்லாம் மறந்து போய் வாசலில் அவள் கேட்டது மட்டும் திரும்பத் திரும்ப காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அந்த பத்து நாட்களில் அடுத்து அவள் வீட்டுக்குப் போகவேயில்லை. இனி எப்போதும் போகப் போவதாகவும் இல்லை.

* * *
























 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2018 19:43

July 10, 2018

"காச்சர் கோச்சர்" - விவேக் ஷான்பாக் (காலச்சுவடு வெளியீடு, மொழிப்பெயர்ப்பு - கே. நல்லதம்பி)


முன்பு காலச்சுவடு இதழில், கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக் எழுதி வெளியாகியிருந்த "நிர்வாணம்" சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்லதொரு கதையை வாசிக்கும் போதே அதனை எழுதியவரின் பெயரும் தன்னாலே மனதில் வந்து விழுந்து விடுகிறது. அப்படியாக அவருடைய சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஜெயமோகன் தளத்தில் அவரே மொழிப்பெயர்த்திருந்த விவேக்கின் சிறுகதைகள் சில வாசிக்கக் கிடைத்தன. இன்னும் கிடைக்கின்றன.இதன் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடாக விவேக் ஷான்பாக் எழுதிய "காச்சர் கோச்சர்" நாவலை வாங்கினேன். இதை மொழிப் பெயர்த்தவர் கே.நல்லதம்பி. எழுதப்பட்ட மொழியிலேயே வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தரும், சற்றும் தொய்வில்லாத கச்சிதமான மொழிப்பெயர்ப்பு.பெங்களூருவைக் களமாக வைத்து எழுதப்பட்ட நாவல் என்று இதன் பின்னட்டைக் குறிப்பில் கன்னட எழுத்தாளர் கிரீஷ் கார்னட் எழுதியிருக்கிறார். ஆனால், நாவலில் பெங்களூரு என்று வரும் இடத்தில் எல்லாம் சென்னை என்றோ மதுரை என்றோ குறிப்படப்பட்டிருந்தாலும் சின்ன நெருடல் கூட ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை.வறுமையின் விளிம்பில் உழலும் கீழ் மத்திய வர்க்கத்தையும், அவர்களின் மன நிலையையும், பின் அவர்கள் மெதுவாக உழைத்து முன்னேறி அடுத்த கட்டத்துக்கு நகரும் போது அவர்களிடம் ஏற்படும் லெளகீக மற்றும் மனோபாவ மாற்றங்களையும் "சுருக்"கென்ற அதிர்வைத் தரும் ஒரு முடிவுடன் அற்புதமாக எழுதியிருக்கிறார்.இதில் ஓச்ர் இடத்தில், கதை சொல்லியின் அப்பா வேலையை இழந்துவிடுவார். வீடே அமைதியிலும் ஒருவித அழுத்தத்திலும் உறைந்து போயிருக்கும். பொதுவாக அதிகம் உரையாடாத அப்பா வேலை போன அன்று எதையாவது பேசுவது, தேவையற்ற கேள்விகளைக் கேட்பது என்று வலிந்து திணிக்கப்பட்ட உற்சாகத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வார். மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகும் நேரங்களில் கலகலப்பாய் இருப்பவர்கள் அமைதியாவதைப் போல அமைதியானவர்கள் சமநிலை தவறிவிடுகிறார்கள். அது முன்னதைவிட இன்னும் கொடுமையானது.இப்படியாக நாவல் நெடுக வரும் நுட்பமான சித்தரிப்புகளும், அதன் மூலம் விவேக் முன் வைக்க விரும்பும் அபத்தங்களுமே இந்நாவலை முக்கியமான இடத்திற்கு நகர்த்துகின்றன.அளவில் மிகச்சிறிய நாவல். நூறே பக்கங்கள். ஒரே அமர்வில் வாசித்துவிடலாம். நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன். No automatic alt text available.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2018 09:01

அனோஜனின் பச்சை நரம்பு


எனது டொரினா தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் "தமிழ்ச் சிறுகதைகளில் உலவும் பதின்பருவ அக்காக்களைக் குறித்து எவரேனும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம்" என்று எழுதியிருப்பார். அப்படியான அக்காக்களின் கதைகள் இத்தொகுப்பிலும் இரண்டு உண்டு :)'இச்சை' கதையும் 'பச்சை நரம்பு'ம் பால்யகால அக்காக்களைப் பற்றிய கதைகளே!'பச்சை நரம்பில்' அவள் செல்லமக்கா. கதையின் முடிவில் அம்மா கழுத்துப் பச்சை நரம்பு அக்காவிடம் தெரியுமிடம் வரை சரி, அது தீபாவிடமும் தெரிவதாக முடித்திருப்பது இக்கைதையை அளவுக்கதிகமாக ரொமாண்டிஸைஸ் செய்துவிடுகிறது.இவரின் பெரும்பாலான கதைகள் பால்யத்தின் நினைவுச்சரட்டிலிருந்தே பின்னப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு சூழலில் பாலியல் ரீதியான தாக்குதலுக்குள்ளான சிறுவர்கள் இவரது கதைகளில் திரும்பத் திரும்ப வருகிறார்கள். 'இச்சை' கதையில் அந்த நண்பர்களுடன் நடக்கும் உரையாடலில் கதையின் சாரம் இருக்கிறது. ஆனால் அது கதையில் தீர்க்கமாக வெளிப்படவில்லை. சிறுவயதில் நடத்தப்பட்ட பாலியல் துஷ்பரயேகம் எத்தனை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும்? மாறாக இங்கே வெறும் கிளர்ச்சியாக வெளிப்பட்டு ஒதுங்கி நிற்கிறது.மன நிழலும், வலியும் அவர் முன்மொழியும் அரசியலைப் பேசும் கதைகள். இதில் மனநிழல் ஒரு முக்கியமான கதை. குற்ற உணர்ச்சியை மறைத்துத் தவித்துத் தழும்பும் இடங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன."வெளிதல்" - பரத்தையர் உலகம், தமிழில் அதிகம் புனையப்பட்ட கதைக்களம். ஜி.நாகராஜன் இதில் மாஸ்டர். இப்படியான ஒரு களத்தில், புதிதாக ஏதேனும் ஒன்று இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் பதில் ஏமாற்றமே. கதையின் முடிவு புனிதப்படுத்துமிடத்தில் மிகவும் சோகையாகிறது. வாசகன் இட்டு நிரப்ப வேண்டிய வெளியை ஆசிரியனே நிரப்பும் தவறு, இளம் எழுத்தாளர்கள் எல்லாருக்கும் பொதுவானது. அனோஜனுக்கும் இதில் விலக்கல்ல."நானூறு ரியால்" - கதை ஒரு குறும்படத்துக்கு இணையான வேகத்துடன் இருக்கிறது. மனிதர்களின் மீதான் நம்பிக்கையின்மையைப் பற்றி பேசுகிறது. இதில் என்னால் சில விசயங்களை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. எப்போதும் வெளி நாடுகளில் இருக்கும் காலங்களில் நம் நாட்டினர் மீது தனிப்பற்று வந்து ஒட்டிக் கொள்ளும். உனக்கு நான், எனக்கு நீ என்பது போன்ற சுயநலம் கலந்த பற்றுதான் என்றாலும். அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள். சிட்னியில் இரண்டு வருடங்கள் இருந்தவன் என்ற முறையில் என்னால் இதை உறுதியாகவே சொல்ல முடியும். அப்படியிருக்க, நானூறு ரியால் என்பது வெறும் ஆறாயிரத்துச் சொச்சம் ரூபாய்களே! புனைவில் இத்தனை தர்க்கம் பார்க்கத் தேவையில்லை என்றாலும், ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது.அனோஜனின் தனித்துவம் மிளிரும் கதைகளாக 'கிடாய்' கதையையும், 'வாசனை' கதையையும் சொல்வேன். இரண்டுமே அப்பா-மகள் உறவுச் சிக்கல்களை முற்றிலுமாக எதிரெதிர் துருவங்களில் இருந்து பேசும் கதைகள். வாசனை - அப்பாவின் பிம்பத்தையையும் வாசனையையும் வாழ்வில் எதிர்ப்படும் ஆண்களிடத்தே தேடும் பெண்ணொருத்தியைப் பற்றிய நுட்பமான கதை. அடங்காக் காமமும் அதன்பொருட்டு எழும் தன்னிறக்கமும் நிறையப் பெற்ற தகப்பன் ஒருவனின் நிலையை உளவியல் ரீதியாக முன்வைக்கு கதை - கிடாய்.அனோஜனிடம் அட்டகாசமான மொழி இருக்கிறது. சொல்முறையிலும் நல்ல தேர்ச்சி தெரிகிறது. அவருக்கான தளத்தை அவர் தேடிக் கண்டடையும் போது தமிழின் தவிர்க்கவியலாத கதை சொல்லியாக நிற்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.அனோஜனுக்கு வாழ்த்துக்களும் அன்பும் <3 Image may contain: text
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2018 09:00

விமலாதித்த மாமல்லனின் - புனைவு என்னும் புதிர்:


இப்புத்தகத்தை, இலக்கியத்தை நேசிக்கும் வாசிப்பைத் தொடர்ந்து விவாதிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைத்தபடியே இருக்கிறேன். இவரை நான் இணையத்துக்குள் வந்த காலத்தில் (2010) இருந்து தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வாசிப்பையும், எழுத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டதில் இவரது எழுத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஓர் இடைவெளிக்குப் பிறகு திரும்ப எழுத வந்த ஆரம்பத்தில் இவரெழுதிய 'எழுத்துக்கலை' என்னும் தொடர் என்னுள் மிகப்பெரும் திறப்பையும், அதிர்ச்சியையும் ஒருசேரக் கிளப்பியது. படைப்பாளியின் மீதான பிரமிப்பையும், ஆதர்ஸங்களையும் ஓரமாக ஒதுக்கிவிட்டு ஒரு படைப்பை எவ்வளவு நுணுக்கமாக எத்தனை கறாருடன் அணுக வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்த மிக முக்கியமான தொடர் அது."எழுத்துக்கலை" தொடரையும் அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது அவரது தளத்தில் வெளியான சில கட்டுரைகளையும் வாசித்தப் பிறகு அது - முகப்புத்தகத்தில் இடும் சிறுபதிவோ, அலுவலகத்தில் அனுப்பும் இ-மெயிலோ - ஒருமுறைக்கு இருமுறை வாசித்துப் பார்க்காமல் அனுப்பியதில்லை. சிறுகதை ஒன்றை முயற்சிக்கும் போதெல்லாம் இவர் இதை வாசித்தால் எப்படி பதில் அளிப்பார். எங்கெங்கே கொட்டு விழும் என்றெண்ணி நானே திரும்பத் திரும்ப வாசித்துத் திருத்திக் கொண்டிருப்பேன்.'புனைவு என்னும் புதிர்' தி இந்துவில் தொடராக வெளிவந்தது. ஆனால் தொடர்ச்சியாக வெளியாகவில்லை. திடீரென்று நின்றும் போனது. அது குறித்து மாமல்லன் அவர்களைக் கேட்ட போது, "என் கிட்ட வந்து ஏன் கேக்குறீங்க? முடிஞ்சா தி இந்துக்கு எழுதுங்க" என்றார். எழுதினேன். இன்னும் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.இந்நூலை வாசிப்பதற்கு என்னளவில் ஒரு தனிப்பட்ட அணுகுமுறை உண்டு. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருக்கும் சிறுகதையை வாசிக்க வேண்டும் (புத்தகத்தில் கட்டுரை முதலிலும், கதை அடுத்தும் வந்துள்ளன). ஒரு கதையை வாசித்ததும், அது சொல்ல வரும் செய்தியை, வரிகளுக்கிடையே ஒளிந்திருக்கும் 'சப் டெக்ஸ்டை'ப் பற்றி ஓரிரு நிமிடங்கள் மனதுள் ஓட்டிப் பார்க்கலாம். சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லையா ? பாதகமில்லை. அடுத்து அக்கதையை வைத்து எழுதப்பட்டுள்ள கட்டுரையை வாசிக்க வேண்டும். சிரமம் பார்க்காமல் மீண்டும் ஒரு முறை அந்தக் கதையை வாசித்து விட வேண்டும். இப்போது, முற்றிலும் புதிதான ஒரு கதை உங்கள் முன் இருக்கும் !ஒரு சிறுகதையைப் புரிந்து கொள்ள இத்தனை சிரமும், பயிற்சியும் தேவையா?"கதையின் உயிர் கருவில் இருக்கிறது. உணர்வுபூர்வமாய் ஒன்றை அனுபவித்த கலைஞன், வாசகனை உணர்ச்சிப்பூர்வமாய்த் தூண்டுவதைவிட உணர வைப்பதையே முதன்மையான காரியம் எனக் கருதுவான். அதன் காரணமாகவே அதீத நாடகீயமாய் விவரிக்கும் அணுகுமுறையைத் தவிர்த்துவிடுகிறான் " - சு.ரா-வின் 'பள்ளம்' கதை பற்றிய கட்டுரையில்.இதிலுள்ள கட்டுரைகள் படைப்புகளின் நுட்பங்களை விளக்கி, பூடகமாய் மறைந்து நிற்கும் பகுதிகளைக் கோடிட்டுக் காட்டி, அதன் வழியே ஒரு வாசகனை இவற்றைப் போன்ற மேலும் சில நல்ல படைப்புகளை நோக்கி நகர்த்தவும் செய்கின்றன.இதிலிருக்கும் ஒரே ஒரு குறை வெறும் 12 கதைகளுடன் நிறுத்திவிட்டார் என்பதுதான். (இதைச் சொன்னால் எங்கே ஜெயகாந்தன் போல பதில் சொல்லிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது :) ) No automatic alt text available.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2018 08:59

பூமணியின் வெக்கை


சில படைப்புகளை வாசித்ததும் அவற்றைப் பற்றிய மனவோட்டங்களை அவ்வப்போதே பதிந்துவிடுவது வழக்கம். அக்குறிப்புகளை பின்னால் என்றாவது எடுத்துத் திரும்ப வாசித்திருக்கிறேனா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் அப்படி எழுதுவது பிடித்திருக்கிறது.அதே நேரத்தில் சில படைப்புகளை அப்படி வாசித்ததும் அவற்றைப் பற்றி உடனுக்குடன் எழுதிக் கடந்து விட முடியாது. மண்ணுள் ஓடும் நதிபோல மனதுள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படியான படைப்புகளில் ஒன்று பூமணியின் வெக்கை. அப்புறம் ஏன் இப்போது என்றால், நண்பர் சங்கர் அதைப் பற்றிய பதிவொன்றை இன்று போட்டு கிளறிவிட்டார்.அண்ணனின் கொலைக்கு பழிவாங்கும் தம்பியின் கதையை அம்மண்ணின், மக்களின் இயல்புகளை, வாழ்க்கை முறையை, வர்க்க பேதங்களை, சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் மீது திணிக்கப்படும் அரசியலை பின்னிப் பின்னி நாவலை எழுதியிருக்கிறார். இத்தனை இருந்தும் எந்த ஓர் இடத்திலும் பிரச்சார நெடித் தெறிக்காமல் எழுதப்பட்டிருப்பதே இந்நாவலை உயர்ந்ததோர் கலைப்படைப்பாக ஆக்குகிறது.கதைக்களம் எங்களூர்ப்பக்கம் என்பதாலோ என்னவோ மனதுக்கு இன்னும் நெருக்கமாக உணர முடிந்தது. குறிப்பாக நாவல் நெடுக தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களும் அதில் வெளிப்படும் அவர்களுக்கிடையேயான உள்ளன்பும் தனித்துவமானது. அதுவே மறு வாசிப்பைக் கோருகிறது :) No automatic alt text available.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2018 08:58

தொ.பரமசிவத்தின் "தெய்வம் என்பதோர்"


'தெய்மென்பதோர் சித்தமுண்டாகி' என்ற திருவாசகப் பாடலைத் தலைப்பாகக் கொண்டு தெய்வங்கள், அவற்றின் வழிபாட்டு முறைமைகள், நாட்டார் தொன்மங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுதப்பட்ட பதினைந்து கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இந்நூல்."தாய்த் தெய்வம்" என்னும் கட்டுரையில் எப்படி நாட்டாரிய தெய்வங்களில் பெண் தெய்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் அதே நேரத்தில் இன்று பெருந்தெய்வங்களாகக் கொண்டாடப்படும் வைதீக தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள் பின்னுக்குத்தள்ளப்பட்டு ஆண் தெய்வங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றியும் எழுதியிருப்பார். இந்தக் கட்டுரையை ராகுலின் "வால்காவிலிருந்து கங்கை வரை" நூலில் எப்படி தாய் வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகமாக நாம் மாறிப்போனோம் என்பதை விவரிக்கும் 'நிஷா' என்னும் ஆதித்தாய் பற்றிய அத்தியாயத்துடன் ஒப்பிட்டு வாசிக்கும் போது முற்றிலும் புதியதோர் பரிமாணத்தை அளிக்கிறது. மிக முக்கியமான கட்டுரை.நீலிக்கண்ணீர் என்ற பதத்துக்குப் பின் இருக்கும் கதையை விளக்கும் "பழையனூர் நீலி கதை" சுவாரஷ்யமான ஒன்று.எங்கள் ஊர்களில் தீபாவளியைவிட அம்மன் திருவிழாக்களையும், ஊர்க்கொடைகளையுமே இப்போதும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். எப்போதும் எளிய மக்களின் கொண்டாட்டமாக அவையே இருந்துள்ளன. மாரியம்மன், முனியம்மன், முத்தாலம்மன், பெத்தநாச்சியம்மன் என்று ஊரில் விழா எடுக்கப்படும் தெய்வங்களை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது. எல்லாமே பெண் தெய்வங்களாக இருப்பது வெறும் தற்செயல் அல்ல!இப்படியான திருநிலைப்படுத்தப்பட்ட தெய்வங்களைப்பற்றியும், பள்ளிப்படை கோவில்களைப் பற்றியும் கூறுகிறது "உலகம்மன்" கட்டுரை. பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கூட ஒரு சோழ அரசியின் பள்ளிப்படை கோவிலாக இருக்கலாம் என்பது போன்ற திறப்புகள் முக்கியமானவை.கோவில் வழிபாடுகள், திருவிழாக்கள், முதல் மரியாதைகள் - இவற்றின் மூலமாக நிலை நிறுத்தப்படும் ஜாதிய பாகுபாடுகளையும், இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் நடத்தப்படும் விதம் பற்றியும் பேசும் "மரபு மீறலும்" என்னும் கட்டுரையும், பெரியாரை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளும் அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டியவை. இந்தக் கட்டுரைகளை முன்வைத்து எங்கள் ஊர் திருவிழாக்களை மறு பரிசீலனை செய்யும் போது ஜாதிய அடுக்குகளும், அவை தந்திருக்கும் அழுத்தமும் எத்தனை கொடுமையானது என்பதை உணர முடிகிறது. அதே நேரத்தில் இத்தனை காலமாய் இது பற்றிய சிறு பிரக்ஞையும் இல்லாதிருந்தது குறித்து வெட்கப்படவும் வேண்டியிருக்கிறது.பற்பல பக்கங்களுக்கு விரித்து எழுதுவதற்கு உள்ளடக்கம் இருக்கும் விசயங்களைக் கூட ஓரிரு பக்கக் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். இதுவே இக்கட்டுரைகளின் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆய்வுக் கட்டுரைகள் என்றாலும் சில பல இடங்களில் யூகங்களின் வழியே முடிவுக்கு வந்திருப்பதை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளவியலாது. ஆனால் ஓர் அமைப்போ அரசோ செய்ய வேண்டிய விசயத்தை தனியொரு ஆளாய் செய்திருப்பதற்கு தொ.ப-வுக்கு என் வணக்கங்கள்.இதற்கு முன்பு சிறுதெய்வ கோவில்களையும் அவர்களின் வழிப்பாடுகளையும் நான் அணுகிய முறைக்கும் இப்புத்தகத்தை வாசித்தப்பிறகு அவற்றை அணுகப் போகும் முறைக்கும் நிச்சயம் நிறைய வேறுபாடு இருக்கும். அதற்காக அவருக்கு என் நன்றிகள்! No automatic alt text available.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2018 08:56

டொரினா பற்றி சுரேஷ் வெங்கடாத்ரி


எந்தக் கதையுமே மோசம் என்று சொல்ல முடியவில்லை..எளிய நேரடியான கதைகள். ஆனால், விஷய கனம்,ஒரு அழுத்தம் குறைவு என்று எனக்குத் தோன்றுகிறது.மிக எளிய பிரச்னைகளை பேசுகின்றனவோ என்றும்.(எளிது எது அழுத்தமானவை எது எது என்பதே ஒரு விவாதம்தான்) இரு கோப்பைகள், பார்வை,விசுவாசம் ஆகியவை ஒப்புநோக்க கனமாக இருக்கின்றன.மொழி, நடை ஓகே.அனாவசியமான, கவித்துவம் எல்லாம் ஏதுமின்றி, இயல்பாக இருக்கின்றது. சில தேய்வழக்குகளை தவிர்க்கலாம். சில அவதானிப்புகள் இன்னமும் கூர்மையாக இருக்கலாம்.சிலவற்றை தெரிந்துதான் பிரயோகிக்கிறாரா என்ற சந்தேகமும் வருகிறது உதாரணமாக,"செம்மண் தரையில் சிந்திய நீர் போல பசி வயிற்றில் பரவியது" ஏப்ரல் வந்துவிட்டால் அக்கினி நட்சத்திரம் வந்துவிடும் போன்ற பிரயோகங்கள். சிறந்த எழுத்தாளர்களுக்கு அவர்கள் புனைவுகளில் கொண்டுவரும், புற சூழல் பற்றிய சரியான கூர்மையான, அவதானிப்புகள் மிக முக்கியமானவை. அவைதான் அவர் சொல்லும் விஷயம், சூழல் குறித்து அவர் நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை வாசகனுக்கு அறிவித்து, கதைக்கு ஒரு நம்பகத் தன்மையை அளிக்கும். இதில் கூடுதல் கவனம் செலுத்தலாம். இந்தத் தொகுப்பில் உள்ள லிண்டா தாமஸ் எனும் கதை, ஜனவரி மாத காலச் சுவடு இதழில் வெளிவந்த இவரது மேய்ப்பனின் கருணை கதைக்கு ஒரு முன்னோட்டம் போல இப்போது படிக்கையில் (அதை முன்னரே படித்ததனால்) தோன்றுகிறது.இன்னும் சிறந்த ஆக்கங்களை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை இந்தத் தொகுப்பு அறிவிக்கிறது. இதையே தன் அழகான முன்னுரையில் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் சொல்லியிருக்கிறார்.ஒரு சந்தேகம் அது டொரி'னோவா' டொரி'னாவா'? எங்க ஊர்ப் பக்கமெல்லாம், டொரினோ என்றே சொன்னது போல நினைவு. அன்றைய ஜனதா அரசு, கொக்கோகோலா ,ஃ பாண்டா ஆகியவற்றை தடை செய்த பின்னர் இதுவும், டபுள் செவனும் அவற்றுக்கு மாற்றாக வந்த உள்ளூர் தயாரிப்புகள்.நீண்ட நாட்களுக்குப்பறம் அதை நினைவுக்கு கொண்டுவந்தது பற்றி மகிழ்ச்சியே . Image may contain: drink Love
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2018 08:54

Karthik Balasubramanian's Blog

Karthik Balasubramanian
Karthik Balasubramanian isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Karthik Balasubramanian's blog with rss.