A. Muttulingam's Blog, page 3

December 27, 2019

eeeee

test test

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2019 17:03

ddddd

test

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2019 16:58

December 12, 2019

காலைத் தொடுவேன் – நிதி சேகரிப்பு அனுபவங்கள்

காலைத் தொடுவேன் – (நிதி சேகரிப்பு அனுபவங்கள்)

 அ.முத்துலிங்கம்

ஹார்வர்ட்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை ஆரம்பித்தபோது அந்தக்குழுவில் நானும் இருந்தேன். அமெரிக்காவைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் ஆரம்ப நிதி கொடுத்துதமிழ் இருக்கைக்கான சம்மதத்தை பெற்றுவிட்டார்கள். நிதியை பெற்றுக்கொண்ட அதிகாரியின்மனதில் என்ன இருந்தது என்பது ஒருத்தருக்கும் தெரியாது.

ஆறுமாதம் கழித்து அந்த மருத்துவர்களுடன் ஹார்வர்ட் அதிகாரியைபார்க்க நானும் சென்றேன். வரவேற்பு பெண் தன் நகத்தை பார்த்துக்கொண்டே எங்களை அமரச்சொன்னார். அமர்ந்தோம். யன்னல் வழியாக அன்றைய கடைசி வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. திடுக்கிட்டுநிமிர்ந்து எங்களை உள்ளே அனுமதித்தார். அதிகாரி இழுப்பறையை திறந்து கடந்த முறை கொடுத்தகாசோலையை வெளியே எடுத்தார். அவர் அதை வங்கியில் செலுத்தவே இல்லை. ஹார்வர்ட் தமிழ் இருக்கையின்மீது அவருக்கு நம்பிக்கையே கிடையாது. தமிழர்கள் ஒன்றுசேர்ந்து எப்படி ஆறு மில்லியன்டொலர்களை திரட்டப்போகிறார்கள் என்ற நம்பிக்கையீனம்தான் காரணம் என்று நினைக்கிறேன்.ஆனால் எப்படியோ அவருக்கு ஆறு மில்லியன் டொலர்கள் திரட்டிவிடுவோம் என நம்பிக்கையூட்டிசம்மதத்தை பெற்றோம். எதிர்பாராத விதமாக பணம் வந்து குவியத் தொடங்கியது. கனடா, சீனா,இந்தியா, அமெரிக்கா, இலங்கை, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்தெல்லாம் பணம் வந்தது.ஒரு கட்டத்தில் ஆறு மில்லியன் டொலர்களை தாண்டிய பின்னரும் பணம் தொடர்ந்து வந்தது. ஒருபொது அறிவிப்பு வெளியிட்டு பணத்தை நிறுத்த வேண்டி நேர்ந்தது. என்ன பிரச்சினை என்றால்கொரியா நாட்டில் இருந்து ஒருவர் பத்து டொலர் அனுப்பினால்  ஹார்வர்ட் அதற்கு ரசீது அனுப்பவேண்டும். கடிதத்தைதட்டச்சு செய்து ரசீதுடன் தபால் மூலம் அனுப்புவது முக்கியம். 10 டொலருக்கு ரசீது என்றால்அதை அனுப்பும் செலவு 15 டொலர். ஹார்வர்ட் நன்கொடைகள்  அனுப்பவேண்டாம் என்று சொல்லி எங்களிடம் கெஞ்சவேண்டிநேர்ந்தது.

சிறைசென்றவர்

இந்த நிதி திரட்டலின்போது நடந்த ஒரு சம்பவத்தை என்னால் மறக்கமுடியாது. தமிழ்நாட்டில் ஒரு சின்னக் கிராமத்தில் இளைஞன் ஒருவன் ஏதோ குற்றம் செய்து நாலு வருடம் சிறையில் இருந்தான். அவன் வெளியேறியபோதுஅவனுடைய உழைப்பு கூலியை சிறை அதிகாரிகள் அவனிடம் கொடுத்தார்கள். அவன் செய்த முதல் வேலைஅந்தப் பணத்தை ஹார்வர்டுக்கு அனுப்பியதுதான். எப்படியோ யாரையோ பிடித்து பணத்தை செலுத்திவிட்டான்.அவனுக்கு ஹார்வர்ட் எங்கே இருக்கிறது என்ற அறிவு கிடையாது. ஹார்வர்ட் என்ற பெயரை  எப்படி எழுத்துக்கூட்டுவது என்றுகூடத் தெரியாது.தப்பாக எழுதினாலும் எப்படியோ பணம் வந்து சேர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகைஅவனை அணுகி எதற்காக  பணம் அனுப்பினான் என்றுகேட்டது. அவன் ‘ஹார்வர்ட் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் வளராது. ஆங்கிலம்தான் வளரும். வெளிநாட்டில் இப்படியான பல்கலைக்கழகத்தில்தான்தமிழ் வளரும். அதுதான் பணம் அனுப்பினேன்’ என்றான்.

அவசரமாகஅழைத்தவர்

ரொறொன்ரோ பல்கலைக்கழகத்து தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டியஅனுபவம் வேறுமாதிரி இருந்தது. ஹார்வர்ட் போல நிதி வேகமாக வராவிட்டாலும் முன்னேற்றம்திட்டமிட்டபடிதான் நடந்தது. மூன்று மில்லியன் டொலர்கள் தேவை. நாங்கள் நிதி திரட்ட பலவிதமானஉத்திகளை பயன்படுத்தினோம். ஒரு வருட காலத்தில் ஒரு மில்லியன் டொலர்கள் சேகரமாகிவிட்டது.பார்க்கப்போனால் அது ஒருவிதத்தில் வெற்றிதான்.

நான் ஒரு சமயம் பொஸ்டனில் இருந்தேன். அவசரமாக ஒரு டெலிபோன்அழைப்பு கனடாவிலிருந்து வந்தது. முன்பின் தெரியா ஒருவர் சொன்னார், ’தமிழ் இருக்கை முக்கியமானது.இதைப்பற்றி பேப்பரில் படித்து தெரிந்துகொண்டேன். நானும் இந்த முயற்சியில் பங்குபற்றுவேன்.உங்கள் குழு மிகவும் தாமதமாகவும், வேகமில்லாமலும் செயல்படுகிறது. எனக்கு விஜய் டிவியைதெரியும். சன் டிவியை தெரியும். ஓர் இரவுக்குள் என்னால் 50,000 டொலர்கள் திரட்டமுடியும்.உடனே வாருங்கள்’ என்றார்.

எனக்கு மகிழ்ச்சி சொல்லமுடியாது. பல தொலைபேசி அழைப்புகள்;பல மின்னஞ்சல்கள். கடைசியில் ஒருநாள் ரொறொன்ரோ உணவகம் ஒன்றில் சந்தித்து விரிவாகப்பேசி திட்டமிடுவதென்று தீர்மானித்தோம். நான் காத்திருந்தேன். முதலில் அவர் வந்தார்.  பின்னால் அதே உயரமான மனைவி; அதே பருமன்.  பின்னால் நாலு குழந்தைகள். பெரும் ஆரவாரமாகவும்,கூச்சலாகவும் இருந்தது. 50,000 டொலர் திரட்டி வைப்பதாக சொல்லியிருந்தார். அது பற்றியபேச்சே இல்லை. சந்திப்பு முடிந்ததும் கார் கண்ணாடி துடைப்பான்போல இரண்டு பேரும் ஒரேநேரத்தில் சாய்ந்து, ஒரே நேரத்தில் எழும்பி, ஒரே நேரத்தில் நடந்தனர். மேலும் மூன்றுவாரங்கள். மறுபடியும் சந்திப்பு. இது இப்படியே போனது. ஒன்றுமே பெயரவில்லை.

நாலு மாதங்கள் ஓடிவிட்டன. மதிய உணவுக்கு வழக்கம்போல சந்தித்தோம்.அவர் கழுத்திலே தடித்த சங்கிலி. என்னுடன் பேசுவதும், கையிலே கட்டியிருந்த அப்பிள் கடிகாரத்தில்செய்திகள் பார்ப்பதுமாக நேரம் ஓடியது. இது எங்கே போகிறது என்றே எனக்கு தெரியவில்லை.அன்று துணிந்து அவரிடம் கேட்டேன். ’உங்கள் நண்பர்களும், டிவி காரர்களும் பணம் தரும்போதுதரட்டும். நீங்கள் ஒரு நன்கொடை கொடுக்கலாமே. எவ்வளவு எழுதலாம் என்று நன்கொடை உறுதிப்பத்திரத்தை வெளியே எடுத்தேன். அவர் மிரண்டுவிட்டார். இதை எதிர்பார்க்கவில்லை என்றுநினைக்கிறேன். பெரும் யோசனைக்கு பின்னர் சொன்னார், ‘என்னால் 100 டொலர் கொடுக்கமுடியும்.இந்த மாதம் 50 டொலர்; அடுத்த மாதம் 50 டொலர்.’

நான் அன்றைய 8 பேரின் உணவுக்கான தொகை $162 ஐக் கட்டிவிட்டுவெளியேறினேன்.

அழகிப்போட்டி

சில வாரங்களுக்கு முன்னர் கனடாவில் உலகத் தமிழ் அழகிப் போட்டிநடந்தது. பல நாடுகளிலிருந்து தமிழ் பெண்கள் பங்கு பற்றினார்கள்.  இதில் முதலாவதாக வந்தது ஓர் இலங்கைப் பெண். அவருடையபெயர் தக்சிணி சிதம்பரப்பிள்ளை. அவருடைய நேர்காணல் ஒன்றை பார்க்க நேரிட்டது. நல்ல தமிழில்சொல்ல வந்த சொற்களை விழுங்காமல் நிதானமாகப் பேசினார். அவர் சொன்னது இதுதான்.  ’கனடாவில் என்னை ஆச்சரியப் படுத்தியது சி.என் கோபுரமல்ல;நயாகரா நீர் வீழ்ச்சியுமல்ல. கனடாவில் முதல் இடத்தில் இருக்கும் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில்தமிழ் இருக்கை அமைய இருக்கும் செய்திதான். என்னை இது மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது.உலக அழகிப் பட்டம் என்பது ஒரு வருடம்தான். ஆனால் இங்கே அமையப் போகும் தமிழ் இருக்கைஎன்றென்றும் நிலைத்திருக்கப்போகிறது என்பது எத்தனை பெருமையான விடயம்.  தமிழ் இருக்கைஅமைத்தவர்களின்  நன்கொடை பட்டியலில் என் பெயரும்இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆகவே ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு என்னால் இயன்றசிறிய தொகையை  நன்கொடையாக வழங்குகிறேன்.’ அவரைதமிழ் இருக்கை ஆச்சரியப் படுத்தியதுபோல அவருடைய செய்கையும் எங்களை ஆச்சரியப்படுத்தியது.அவருடைய தமிழ் பற்று மேலும் வளரட்டும்.

பத்துஏக்கர் செல்வந்தர்

பொது வாழ்க்கையில் நிதி சேகரிப்பவர்களுக்கு பல அவமானங்கள்நேர்ந்திருக்கின்றன. ஒரு நகரத்து மக்கள் பொது நீச்சல் குளம் கட்ட தீர்மானித்தார்கள்.வீடு வீடாகப் போய் அதற்காக பணம் சேர்த்தார்கள். ஒரு வீட்டில் போய் கதவைத்தட்டி பொதுநீச்சல் குளம் கட்ட உதவி என்று யாசித்தபோது வீட்டுக்காரர் உள்ளே சென்று ஒரு வாளி தண்ணீர்கொண்டு வந்து கொடுத்தார். இது மிகையல்ல, அடிக்கடி நடப்பதுதான்.

கனடாவின் அதிசெல்வந்தர்களில் ஒருவரிடம்  அவரை  சந்திப்பதற்குநேரம் வாங்கிவிட்டேன். இவர் சிறுவயதில் அகதியாக பெற்றோருடன்  கனடாவுக்கு வந்தவர்.  அந்த வயதில் அவருக்கு தமிழ் அன்றி வேறு ஒரு மொழியும்தெரியாது. அவரை வகுப்பில் சேர்த்தபோது ஆங்கிலம் தெரியாததால் அவராகவே ஆசிரியரிடம் வேண்டிஒரு வகுப்பு கீழே இறங்கி படிப்பை தொடங்கியவர். ஆரம்ப தடங்கலைத் தாண்டி இங்கேயே படித்து முன்னேறி சொந்தமாக கம்பனி தொடங்கி மிகப்பெரிய செல்வந்தராக குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்திருந்தார்.

அவருடைய வீடு பத்து ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்தது. கேட்டுக்குவெளியே நின்று செல்பேசியில் அழைக்க அவர் அங்கிருந்தபடியே கேட்டைத் திறந்துவிட்டார்.வாசலிலே உள்ள காலநிலைக்கும் வீட்டின்  எல்லையில்உள்ள கால நிலைக்கும் வித்தியாசம் இருக்கும் என்று சொன்னார்கள். அத்தனை பெரிய வீடு.நாலு பிள்ளைகள். ஒவ்வொருவரும் வீட்டிலே ஒவ்வொரு திசையில் இருந்தபடியால் ஒலிபெருக்கிமூலம் அவர்களுக்கிடையில் உரையாடல்கள் நடந்தன. அவருடைய மனைவி விருந்துக்கு புறப்பட்டவர்போலநீண்ட ஆடையணிந்திருந்தார். தேநீர் கொண்டுவந்தபோது பறவை சிறகடிப்பதுபோல அவருடைய ஆடைமடிந்து மடிந்து விரிந்தது அவருடைய நடைபோல அழகாயிருந்தது.

என்னைக் கேட்காமலே சீனி போட்ட தேநீரை அருந்தியபடியே நான்விசயத்தை சொன்னேன். அவர் அமைதியாக கேட்டார். இடைக்கிடை செல்பெசி அழைப்பு வந்தபோது அதைத்  தடுத்து உரையாடலை தொடர்ந்தார். எல்லாவற்றையும் பொறுமையாகக்கேட்டபின்னர் ஒரேயொரு கேள்வி கேட்டார். ’என்னுடைய பிள்ளைகளுக்கு தமிழ் பேசவோ, எழுதவோதெரியாது. அவர்கள் ஆங்கிலமும், பிரெஞ்சும் படிக்கிறார்கள். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில்தமிழ் இருக்கை அமைவதால் எனக்கோ என் பிள்ளைகளுக்கோ என்ன பிரயோசனம்?’ எனக்கு வாய் அடைத்துவிட்டது.’உங்களுடைய அம்மா உங்களை குழந்தையாக மடியில் கிடத்தி என்ன மொழியில் பேசினார்?’ என்றுகேட்டேன். அவர் தமிழ் என்றார். நான் வேறு ஒன்றுமே பேசவில்லை. விடைபெற்றுக்கொண்டு திரும்பினேன்.

ஒருசிறுமியும், மூன்று யுவதிகளும்

சிறுமியின் பெயர் நேயா. இந்தியாவிலிருந்து தன் பெற்றோருடன்சுற்றுலாப் பயணியாக கனடா வந்திருந்தார். உணவகத்தில் இவர்களைச் சந்தித்தேன். சிறுமிஇட்லி என்றார், பின்னர் மசாலா தோசை என ஊசலாடி இறுதியில் ஊத்தப்பத்தில் உறுதியானார். நான் ‘சலம் புணர் நேயா’ என்றேன். நான்அவரை திட்டினேன் என்று நினைத்தார். அவருடைய தகப்பன் மனதை மாற்றும் நேயா என்று பொருள்சொல்ல சிறுமி சமாதானமானார்.  தகப்பன் தமிழ்பற்றாளர். தமிழுக்கு பல நாடுகளில் நன்கொடைகள் வழங்கியிருக்கிறார். தமிழ் இருக்கை பற்றிகேள்விப்பட்டு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கினார். இந்தச் சிறுமியும் தன் பங்குக்கு50 டொலர் தந்து ரசீது தன்பெயருக்கு வரவேண்டும் என கட்டளையாகக் கேட்டுக்கொண்டார்.

முதலாம்இடம்

ரொறொன்ரோவில் வதியும் சரண்யா ஜெயகாந்தன் கல்விச் சபையின்(TDSB) கீழ்வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு தேர்வுகளில்  முதல் இடம்பெற்ற நால்வரில் ஒருவர். இவருடைய பெற்றோர்யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்தவர்கள். சரண்யா மேல் படிப்பிற்காக வாட்டர்லூ பல்கலைக்கழகத்துக்குச்செல்ல இருக்கிறார்.  இவருடைய வெற்றியை பாராட்டிபலர் நேரில் வாழ்த்தினார்கள். சிலர் கடிதம் மூலம் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.ஓர் அன்பர் எதிர்பாராத  பரிசுப் பொருளை வழங்கினார்.சரண்யாவின் பெயரில் அவர் ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கினார்.

சாக்குத்துணிதாம்பூலப் பை

எனக்கு சாக்குத் துணியில் செய்த  தாம்பூலப் பை ஒன்று கும்பகோணத்திலுள்ள  சின்னக் கிராமத்திலிருந்து வந்தது. பிரித்துப் பார்த்தநான் ஆச்சரியப்பட்டேன். அதில் இப்படி அச்சடித்திருந்தது.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனைத் தூறும் அறிவு.

Tamil Chair Inc

University of Toronto, Canada.

ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கும் தாம்பூலப் பையுக்கும்என்ன சம்பந்தம்? அதை அனுப்பியவரையே அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் ‘வேறு ஒன்றுமில்லை,விளம்பரம்தான். கல்யாண வீட்டுக்கு வந்த ஒவ்வொருவருக்கும் பை வழங்கப்பட்டது. அவர் வாசகத்தைபார்ப்பார். அந்தப்  பை வேறு ஒருவர் கையுக்குபோகும். அவரும் வாசகத்தை பார்ப்பார். இப்படி இந்தச் செய்தியை பத்தாயிரம் பேராவது படிப்பார்கள்’ என்றார்.  ஒருவாரம் கழித்து அதே வீட்டில் ஒரு தம்பதியரின்அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவும் நடந்தது. அந்த விழாவில் ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ்இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அந்த தம்பதியினரால்  வழங்கப்பட்டது.

அந்த தம்பதியினரின் வீடு, ரொறொன்ரோவிலிருந்து  13,000 கி.மீட்டர் தூரத்தில் ஒரு சின்னக் கிராமத்தில்இருந்தது. இவர்கள் ரொறொன்ரோ  பல்கலைக்கழகத்தைபார்த்ததில்லை. அங்கே இவர்களுடைய சொந்தக்காரர் யாராவது படித்ததும் கிடையாது. இதனால் பெரிய புகழ் ஒன்றும் இவர்களுக்கு கிட்டப்போவதில்லை. இவர்களுக்கும் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கும் என்ன சம்பந்தம்?  ஒன்றுமே இல்லை, தமிழ் என்னும் மொழி தான். அறுபதுவயது தம்பதியினருக்கு  இந்த நன்கொடையால் என்னபிரயோசனம்? பத்து  ஏக்கர் வீட்டுக்காரருக்குஇதுதான் பதில்.

சுந்தர்பிச்சையை தெரியும்

 சுந்தர்பிச்சையை எனக்குத் தெரியும்.

யார் அது?

இது என்ன? கூகிள் நிறுவனத்தின் தலைவர்.

ஓ, அவரா? எப்படித் தெரியும்?

என்  பக்கத்து வீட்டுக்காரரின்மாமனாரும், சுந்தர் பிச்சையின் பெற்றோரும் சிநேகிதர்கள்.

எப்படி?

அவர்கள் பஜனைக்கு ஒன்றாகப் போவார்கள், வருவார்கள்.

அப்படியா?

என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். சுந்தர் பிச்சையின்  சம்பளம் எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு 2 மில்லியன்டொலர்கள்.

அதனால் எனக்கு என்ன?

அவர் நினைத்தால் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு  ஒரு மில்லியன் டொலர் கொடுப்பார். அது அவருக்கு காசேஅல்ல.

அவருக்கு எத்தனையோ வேலை. இன்னும் எவ்வளவு பணம் சேர்க்கவேண்டும்.இதற்கெல்லாம் கொடுப்பாரா?

அப்படிவிட முடியாது. நான் மாமாவுக்கு இப்பவே எழுதுகிறேன்.ஒரு மில்லியன் டொலர் காசோலை வரும். அதற்கு நான் உத்தரவாதம்.

எப்படி வரும்?

கூரியரில்தான். நேராக ரொறொன்ரோ பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பிவிடுவார்.

எப்படி முகவரி கிடைக்கும்?

உலகத்துக்கே தேடுதலை சொல்லிக் கொடுத்தவர். அவருக்கு ஒரு முகவரிதேடுவதா பிரச்சினை?

நண்பர் சொன்னபடியே தன் மாமாவுக்கு எழுதிப்போட்டார். அவருடையமாமாவும் இதோ அதோ என்று சொன்னார். நினைவூட்டல்களும் அனுப்பினார். இ ப்பொழுதெல்லாம்நண்பர் கண்ணில் படுவதே இல்லை. நானோ நம்பிக்கை இழக்கவில்லை. யார் கண்டது? நான் எழுதிக்கொண்டிருக்கும்இந்த நேரம் கலிஃபோர்னியாவிலிருந்து காசோலை கிளம்பியிருக்கும்.

இருபெண்கள்

அவரை அடிக்கடி கூட்டங்களில் சந்தித்தேன். தங்கமலர் என்றுபெயர். எழுபது வயது இருக்கும். தமிழ் இருக்கைக்கு தான் பணம் சேர்க்கப்போவதாகச் சொன்னார்.சரி என்றேன். வாசலைக் கடந்ததும் மற்றவர்கள்போல மறந்துவிடுவார் என நினைத்தேன். ஒரு மாதம்கழித்து தொலைபேசி வந்தது. 5000 டொலர்கள் சேகரித்துவிட்டார். வீடு வீடாகப் போய் கதவுகளைத்தட்டி பணம் சேர்ந்திருந்தார். வெளிநாட்டில் இருப்பவர்களையும் டெலிபோனில் அழைத்து பணம்திரட்டியிருக்கிறார். நன்றி என்று சொன்னேன். அவர் சொன்னார், ‘ஐயா, தொடக்கத்தில் எனக்குநிறைய சிநேகிதிகளும் சில எதிரிகளும் இருந்தார்கள். இப்போ எதிரிகள் அதிகரித்துவிட்டார்கள்‘என்றார். ’நிதி சேகரிப்பவர் எல்லோருக்கும் நடப்பதுதான்’ என்று ஆறுதல் படுத்தினேன்.

இந்த சகோதரிகளின் பெயர்கள் ஆதினி மற்றும் மீனாட்சி.  இவர்களுக்கு சிநேகிதி ஒருவரிடமிருந்து  Bridal Shower ( மனப்பெண் நீராட்டு) நிகழ்வுக்குஅழைப்பு வந்திருந்தது. அழைப்பிதழில் பரிசுகள் வேண்டாம் என்ற வேண்டுகோள். ஆகவே இவர்கள்  வித்தியாசமான ஒன்றைச் செய்தனர். மணமகள் பெயரில்ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கி தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.

இருவாசகர்கள்

பெயர் உதயகுமாரி. நல்ல வாசகர். எழுத்தாளர்களைத் தேடித்தேடிசந்திப்பார். இவரிலும் பார்க்க இவருடைய பிள்ளைகளின் தமிழ் பற்று  நம்பமுடியாததாக  இருக்கும். பிள்ளைகள் தங்கள் பெயர்களை தேன்மொழிஎன்றும் தமிழ்செல்வன் என்றும் தாங்களாகவே மாற்றிக் கொண்டவர்கள். ஒருநாள் உதயகுமாரிஎன்னிடம்,  ’தமிழ் இருக்கை நிதி இந்தமாதம் இலக்கைஅடைந்துவிட்டதா?’ என்று கேட்டார். நான் 8000 டொலர்கள் குறைகிறது என்று சொன்னேன். அவர்உடனே 8000 டொலர்களுக்கு ஒரு காசோலை எழுதி நன்கொடையாக வழங்கினார். அவர் பெரிய செல்வந்தர்அல்ல. ஆனால் ஒரு நிமிடம்கூட தயங்காமல் இந்த தானத்தை செய்தார்.

இதேபோல இன்னொரு ஆர்வமான வாசகர். அவருடைய பெயர் தனசேகரன் மகாலிங்கம். பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரியில் உயர் பதவியில் இருக்கிறார். இவரை தொலைபேசியில்அழைத்து ரொறொன்ரோ தமிழ் இருக்கை பற்றி சொன்னேன். அமைதியாக நான் சொன்னதை கேட்டார்.’என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன்’ என்றார். வாக்கு கொடுக்கவே இல்லை. சில நாட்கள் கழிந்துரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலிருந்து எனக்கு தொலைபேசி வந்தது. தனசேகரன் 1,845 டொலர்கள்  அனுப்பியிருப்பதாகச் சொன்னார்கள். இப்படி எதிர்பாராமல்பணம் வரும்; மிக எதிர்பார்த்த  இடத்திலிருந்துஒன்றுமே பெயராது.

இளம்எழுத்தாளர்

நிதி சேகரிப்பு, வெற்றி தோல்விகள் நிறைந்ததுதான். முன்பின்தெரியாத ஓர் இளம் எழுத்தாளர் தன்னுடைய புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை கேட்டிருந்தார்.முன்னுரை எழுதச் சொல்லி யார் கேட்டாலும் எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். ஏன் என்றால்ஒரு முன்னுரை எழுதும் நேரத்தில் நான் மூன்று கட்டுரை எழுதிவிடுவேன். அத்துடன் ரொறொன்ரோபல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிது சேர்ப்பதில் நான் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவழித்தேன்.ஆகவே சில மணி நேரத்தை திருடித்தான் முன்னுரை எழுதவேண்டும்.  நான் எழுத்தாளரிடம் இப்படிச் சொன்னேன். ‘எப்படியும்நேரம் சம்பாதித்து முன்னுரை எழுதிவிடுகிறேன். நீங்கள் ஓர் உதவி செய்ய முடியுமா?’ ‘சொல்லுங்கள்,ஐயா காத்திருக்கிறேன்.’  ‘ உங்கள் எழுத்திலிருந்துநீங்கள் தமிழ் பற்றாளர் என்பது  தெரிகிறது.ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு உங்கள் உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஆதரவுதிரட்டமுடியுமா? எத்தனை சிறு நன்கொடை என்றாலும் பரவாயில்லை. அதை நேரே பல்கலைக்கழக வங்கிக்கணக்குக்கு அனுப்பிவிடுங்கள்’ என்றேன். மிக்க மகிழ்ச்சியுடன் ’செய்கிறேன், செய்கிறேன்’என்று உறுதியளித்தார்.

வாக்குக் கொடுத்தபடியே எழுத்தாளரின் புத்தகத்தை இருதரம் வாசித்துகுறிப்புகள் எடுத்து முன்னுரை எழுதினேன். நாலு தடவை திருத்தங்கள் செய்தேன். முன்னுரைதிருப்தியாக அமைந்ததும் எழுத்தாளருக்கு அனுப்பிவைத்தேன். அவரும் நன்றாக இருக்கிறதுஎன்று பாராட்டினார். அது மூன்று மாதங்களுக்கு முன்பு. பின்னர் புத்தகம் வெளிவந்துவிட்டதாககேள்விப்பட்டேன். என்னுடைய முன்னுரையினால் ஒரு பிரதிகூட அதிகமாக விற்காது என்பது எனக்குத்தெரியும்; ஒன்றிரண்டு குறைவாகக்கூட விற்றிருக்கலாம். எனக்கு ஒரு பிரதி அனுப்புவார்என எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் பல்கலைக்கழகத்தை அழைத்து இன்னார்பணம் அனுப்பினாரா என்று கேட்பேன். அவர்கள் இல்லை என்பார்கள். அது ஆறுமாதம் முன்னர்.இப்பொழுது கேட்பதை நிறுத்திவிட்டேன்.

இசையமைப்பாளர்இமான்

ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில்எங்களுக்கு உதவியவர்களில் என்னால் என்றும் மறக்க முடியாதவர் இசையமைப்பாளர் இமான்.இவர்தொடர்ந்து ஈழத்து கலைஞர்களை ஊக்குவித்து வருகிறார். முதலில் ’செந்தூரா’ பாடல் கொடுத்துலட்சுமி சிவனேஸ்வரலிங்கத்தை உலகம் வியக்கும் பாடகியாக்கினார். பின்னர் ஸ்ருதி பாலமுரளிக்கு’நம்ம வீட்டு பிள்ளை’  படத்தில் வயலின் வாய்ப்புவழங்கினார்.

ஆனால் நான் சொல்ல வந்த விசயம் வேறு. வெளிநாட்டிலிருந்து இசைக்கலைஞர்களைகனடாவுக்கு வருவிக்கும்போது செலவுகள் எக்கச்சக்கமாக ஏறிவிடுகின்றன. பல நேரங்களில் வருமானத்திலும்பார்க்க செலவு அதிகமாகிவிடுவதால் பெரும் நட்டம் ஏற்படுகிறது. ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்குஅடையாளமாக இருக்கவும், நிதி சேகரிக்கும் வேலையை இலகுவாக்கவும்,  ஒரு கீதம் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டோம். முதலில்பாடல் எழுதுவதற்கு நான் யுகபாரதியை அணுகிணேன். 30 வருடங்களுக்கு முன்னர் ஒரு ரோட்டோரக்கடையில் நாங்கள் இருவரும் சீனிபோடாத தேநீர் அருந்தியிருக்கிறோம். அது ஒன்றுதான் எங்களுக்கானதொடர்பு. உடனேயே பாடல் எழுத ஒப்புக்கொண்டார். கனடிய நண்பர் ஒருவர் இமானை கீதம் அமைக்ககேட்டுக்கொண்டார். பாட்டை சுப்பர் சிங்கர் திவாகர் பாடினார். பாடல் தயாரான பின்னர்அதை வெளியிட இமான் கனடா வரவேண்டும். ஆனால் அதற்கு கொடுப்பதற்கு எங்களிடம் பணமில்லை.இமான் தன் செலவிலே கனடாவுக்கு பயணம் செய்தார். அவர் செலவிலேயே ஹொட்டலில் தங்கி இசையைவெளியிட்டுவிட்டு இந்தியா திரும்பினார். எங்களுக்கு ஒருசதம் செலவு வைக்கவில்லை. என்பொது வாழ்க்கையில் இப்படியான ஒரு நல்ல உள்ளத்தை நான் கண்டதே கிடையாது. அவருடைய தமிழ்பற்று அசரவைத்தது. அவர் நெடுநாள் வாழ்ந்து சேவை செய்ய பிரார்த்திக்கிறேன்.

அறிஞர்போற்றுதும்

எஸ்.ஆர்.வி பள்ளி (திருச்சி) பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான பள்ளிக்கூடம். இவர்கள் வருடாந்தம் பிரம்மாண்டமான விருதுவிழா எடுப்பார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ’அறிஞர் போற்றுதும் 2019’ விழாவுக்குவரும்படி தலைவர் துளசிதாசன் எனக்கு வேண்டுகோள் விடுத்தார். கல்வெட்டியல் அறிஞர் எ.சுப்பராயலு,  சு.வெங்கடேசன் M.P, Dr. P.S. மகாதேவன், உமா மகேஸ்வரிஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். அழைப்பிதழை பார்த்த நான் திகைத்துவிட்டேன். ’கனடா டோரண்டோபல்கலைக்கழக தமிழ் இருக்கை விருது’ என்று எழுதியிருந்தது. விருதுப்பணத்தை பெறுவதற்குநான் போயே ஆகவேண்டும். எத்தனை பேர் வருவார்கள் என்று விசாரித்தேன். 7000 பேர் என்றார்.நான் பேசிய ஆகப்பெரிய கூட்டத்தில் சபையோரின் எண்ணிக்கை 70 தான். வீடியோப் பேச்சை அனுப்பிவைக்கலாமா என்றேன். சரி என்றார்.

விழா சிறப்பாக முடிந்தது. பத்திரிகை செய்திகளை நண்பர் அனுப்பிவைத்தார்.என் சார்பாக எழுத்தாளர் இமையம் விருது பெற்றுக்கொண்டார். ஆனால் பணம் வரவில்லை. இந்தியாவிலிருந்துவெளிநாட்டுக்கு பணம் அனுப்புவதில் இருக்கும் சிரமம் பலருக்கும் தெரியும். பணம் எங்கேஎன்று கேட்க எனக்கு கூச்சமாக இருந்தது. ஒருவாரம் சென்று ரொறொன்ரோ பல்கலைக்கழக அதிகாரிஎன்னை அழைத்து டொலர் 9,233 வந்து  சேர்ந்த நற்செய்தியை  சொன்னார். தலைவர் துளசிதாசனின் நல்ல உள்ளத்தை நெகிழ்வுடன்நினைத்துக்கொண்டேன்.

பத்துவயதுச் சிறுமி

சிறுமியின் பெயர் ஆதினி பார்த்திபன். தன்னுடைய பத்தாவது வயதுபிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிடைத்த அத்தனை பணத்தையும் (ஏறக்குறைய 1000 டொலர்கள்) ரொறொன்ரோபல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு வழங்கத் தீர்மானித்தார். அப்பொழுது ஒரு பெரியவர் சிறுமியிடம்’எதற்காக தமிழ் இருக்கைக்கு கொடுக்கவேண்டும். வேறு ஏதாவது நல்ல தர்மத்துக்கு கொடுக்கலாமே?’என்றார். அந்தச் சிறுமி ’நான் பிறந்து வளர்ந்தது கனடாவில். இங்கேதான் தமிழ் படிக்ககற்றுக்கொள்கிறேன். என்னுடைய மொழிக்கு ஓர் இருக்கை கனடாவில் முதல் இடத்தில் இருக்கும்பல்கலைக்கழகத்தில் அமைவது எத்தனை பெருமை. இதனிலும் சிறப்பான ஒரு நன்கொடை பற்றி என்னால்சிந்திக்கவே முடியாது’ என்று பதில் கூறினார்.

சந்தைப்படுத்தல்

ஒருநாள் தமிழ் இருக்கைக்கான telemarketing ரொறொன்ரோ பல்கலைக்கழகவளாகத்தில் நடந்தது. 25 பல்கலைக்கழக மாணவ மாணவிகள்  தொலைபேசி முன் அமர்ந்து ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில்முன்னாட்களில்  படித்தவர்களை  அழைத்து தமிழ் இருக்கைக்கு நன்கொடை யாசித்தனர்.எல்லோருமே வேறு வேறு மொழி பேசும் தன்னார்வத் தொண்டர்கள். தமிழ் இருக்கை பற்றி அவர்களுக்குஅறிமுகம் செய்வதற்காக நான் அங்கே சென்றிருந்தேன். அவர்கள் பேசாத ஒரு மொழிக்காக அவர்கள்அப்படி உளமார உழைத்தது என்னை நெகிழவைத்தது. அன்று அவர்கள் 53 பழைய மாணவ மாணவியரிடம்  2,770 டொலர்கள் திரட்டியிருந்தனர். ‘ஒரு மாணவியிடம்ஏன் இந்த தொண்டு வேலையை செய்கிறீர்?’ என்று கேட்டேன். அவர் சொன்னார், ‘2500 வருடங்களாகவாழும் ஒரு மொழிக்கு இருக்கை அமைந்தால் அது பல்கலைக்கழகத்துக்கு பெருமையல்லவா?’  அந்த நொடியில் என் கண்களை அவர்  திறந்துவிட்டார். அதுவரைக்கும் நான் தமிழ் இருக்கைஅமைவதால் தமிழுக்குத்தான் பெருமை என நினைத்திருந்தேன்.

காலைத்தொடுவேன்

தமிழ் இருக்கைக்கு இணையம் வழியாக பணம் அனுப்புபவர்களின் எண்ணிக்கைசிறிது சிறிதாக அதிகரித்தது. ஒரு முறை பணம் அனுப்பியவர்களின் பட்டியலைப் பார்த்தபோதுமுன்பின் தெரியாத ஒருவர் 50 டொலர் அனுப்பியிருந்தார். ஏதோ உந்துதலில் அவரை தொலைபேசியில்அழைத்து பேச்சுக்கொடுத்தேன்.  அவர் தன் அனுபவத்தைசொன்னார். முதல் நாள் அரைமணி நேரம் முயற்சி செய்தும் பணம் போகவில்லை. அடுத்த நாள் வேறொருகடன் அட்டை வழியாக பணத்தை அனுப்ப முயன்றார். அப்பொழுது பணம் போகவில்லை. விரக்தி மேலிடரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை அழைத்து பிரச்சினையை சொன்னார். அவர்கள் வழிகாட்ட இவர் ஒருவாறு50 டொலர் காசை கடனட்டை மூலம் செலுத்திவிட்டார்.

இத்தனைக்கும் எங்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயே நடந்தது. அவருடையபெயர் ஆனந்த் மன்னா என்று  இருந்ததால்  என் சந்தேகத்தை கேட்டேன். ’நீங்கள் தமிழரா?’ அவர்’இல்லை, நான் தெலுங்கு பேசுபவன்’ என்றார். ’நீங்கள் தமிழ் பேசுவீர்களா?’ அவர் தனக்குதமிழ் பேசவோ, எழுதவோ, படிக்கவோ தெரியாது என்றார். ஆச்சரியமாயிருந்தது. ’எதற்காக தமிழ்இருக்கைக்கு இரண்டு நாட்கள் விடாப்பிடியாக முயன்று பணம் கட்டினீர்கள்?’  அவர் சொன்னார், ’தமிழ் மிகப் பழமையானது. இந்தியமொழிகளில் அரிய இலக்கியங்களைக் கொண்டது. தமிழுக்கு ஓர் இருக்கை அமைந்தால் அது இந்தியர்களுக்குபெருமைதானே.’ என்னால் நம்ப முடியவில்லை. உணர்ச்சி பெருகி என் குரல் தழுதழுத்தது. நான்சத்தமாக, ’அன்பரே, உங்களை எங்காவது வழியில் சந்தித்தால்  நான் உங்கள் காலைத் தொடுவேன்’ என்றேன். என் மனைவிக்குஅது கேட்டுவிட்டது. ‘யார்? யார்? எதற்காக காலைத் தொடவேண்டும்?’ என்று பக்கத்தில் வந்துவிட்டார்.அவருக்கு தெரியும் நான் ஒருவர் காலையும் தொட்டது கிடையாது. நான் நடந்ததை சொன்னேன்.முழுக்கதையையும் கேட்டுவிட்டு ‘தொடலாம்’ என்று தீர்ப்பு வழங்கினார்.

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2019 14:16

நேர்காணல் – இந்து

நேர்காணல் – அ.முத்துலிங்கம்

ன் எழுதுகிறீர்கள்?

உலகத்தை மேம்படுத்துவதற்காக என்றெல்லாம் சொல்லப்போவதில்லை.முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள்எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடையடைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதை பார்ப்பதில் கிடைக்கும்மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். அவர் என்ன சொல்கிறார் என்றால் புதிதாக ஒன்றைப்படைக்கும்போது கிடைக்கும் இன்பத்தைத்தான். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில்உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு?

ஒரு பெண், குழந்தை பெற்றால்  அது  சாதாரணவிசயமா? புது உயிரை உண்டாக்கும் மகத்தான காரியமல்லவா? ஒரு சிற்பி  சிலையை வடிப்பதும், ஓவியர் புதிதாக ஒன்றை வரைவதும்,இசையமைப்பாளர்  புதிய இசையை உருவாக்குவதும்இந்த வகைதான். படைக்கும்போது எழுத்தாளருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அதை படிக்கும் வாசகருக்கும்கிடைக்கிறது. மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இதுதவிர, உங்கள் படைப்பினால் உலகத்துக்குஏதாவது நன்மை கிட்டுமானால் அதைவிட பேரானந்தம் வேறு என்ன இருக்கமுடியும்.

ஒருமுறை பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான டி.எஸ்.எலியட்டிடம் இதே கேள்வியை கேட்டிருக்கிறார்கள். அவர் இப்படிச் சொன்னார். ’நான் எழுதுவதால்என்னைப் பார்க்க சில பிரபலர்கள் வந்து போகிறார்கள். அதை படம் பிடித்து பத்திரிகைகள்வெளியிடுகின்றன. ஓர் அனுகூலம், என்னுடைய வீதி நுனியில் இருக்கும் மளிகைக் கடைக்காரன்தயங்காமல் கடன் தருகிறான்.’ இதிலும் பார்க்க சிறந்த காரணம் வேறு என்ன வேண்டும்?

எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

அதிகாலை நேரத்தில்தான் எழுதுகிறேன். காலை 5.30 மணியிலிருந்து 9 மணி மட்டும்எழுதுவேன். காலை உணவுக்கு பின்னர் இரண்டு மணி நேரம் எழுதலாம். ஆனால் ஊக்கம் குறைந்துவிடும்.மதிய உணவுக்கு பின்னர் சோர்வு ஆரம்பித்துவிடும். அந்த நேரத்தில் வாசிப்பேன். வாசிப்பின்வெற்றி கையில் இருக்கும் புத்தகத்தை பொறுத்தது. மோசமான புத்தகம் முதல் இரண்டு நிமிடங்கள்முடிவதற்கு முன்னரே என்னை தூக்கத்துக்கு இட்டுப் போய்விடும்.  என்னுடைய எழுத்தாள நண்பரிடம் இதே கேள்வியை நான்கேட்டிருக்கிறேன். அவரும் காலைதான் எழுதுகிறார். ஆனால் ஒரு நாளில் அவருக்கு இரண்டுகாலைகள். அதிகாலையிலிருந்து மதியம் வரை எழுதுவார். மதிய உணவுக்குப் பின்னர் ஒரு சிறுதூக்கம். எழுந்தவுடன் ஒரு நடைபோய்விட்டு வந்து மீண்டும் எழுதத் தொடங்குகிறார். ஒருநாள், இரண்டு விடியல், இரண்டு எழுத்து. இதையும் முயற்சித்துப் பார்த்திருக்கிறேன்.  நான் வேகமான எழுத்தாளன் இல்லை. நாலு மணி நேரத்தில்சிலவேளைகளில் ஒரு பக்கம்தான் தேறுகிறது.

நீங்கள் எழுதிய ஒரு கதை/கட்டுரை/கவிதை/நாவல் என் எழுத்து வாழ்க்கையைப்பூர்த்தியாக்கியது என எதைச் சொல்வீர்கள்ஏன்?

எழுத்தாளர் திருப்தியாவதே இல்லை. எந்த ஓர் எழுத்தாளரும் நான் எழுதி முடித்துவிட்டேன்.என் எழுத்து வாழ்க்கை பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னது கிடையாது. சொல்லவும் மாட்டார்கள்.ரஸ்ய எழுத்தாளர் டோல்ஸ்டோய் 1300 பக்கங்கள் கொண்ட ’போரும் சமாதானமும்’ நாவலை எழுதினார்.எழுதி முடித்த பின்னர் பின்னுரை ஒன்று எழுதினார். அது திருப்தி தராமல் இன்னொரு பின்னுரைஎழுதினார்.  மூன்றாவதாகவும் தன் நாவலை விளக்கிஒன்று எழுதினார். இறுதிவரை அவருக்கு திருப்தி கிடைத்ததாகத் தெரியவில்லை.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விட்செல் என்ற பேராசிரியருக்கு 17 மொழிகள் தெரியும்.அவர் சொல்வார் மனிதனுடைய சிந்தனையை முழுவதுமாக வெளியே கொண்டுவருவதற்கு மொழியினுடையஆற்றல் போதாது என்று. சிலவேளைகளில் அவர் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுவார். பாதியிலேஒரு வார்த்தை தேவைப்படும். ஆங்கிலத்தில் அந்த வார்த்தை கிடையாது ஆனால் கிரேக்க மொழியில் ஒரு வார்த்தை உண்டு. இன்னொரு இடத்தில் வேறுசொல் தேவையாக இருக்கும். அதற்கு பொருத்தமான வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை ஆனால் ஹிப்ருவில்இருக்கும். மனிதனுடைய சிந்தனையை முழுவதுமாக தருவதற்கு 17 மொழிகள் கூட போதாது. அப்படியிருக்க ஒரு மொழி எப்படி போதுமானதாக இருக்கும். சிந்தனைக்குஓர் அடி பின்னே தள்ளித்தான் எழுத்து இருக்கிறது. அது சமமாகவே முடியாது.

எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?

எப்பொழுதும்தான். நான் பல சிறந்த எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன்.  அவர்கள் ஒரு புத்தகம் கூட எழுதியது கிடையாது. ஆனால்சிந்தனையில் அவர்கள் பல நூல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  அதை எழுத்தில் மாற்றுவதற்கு சோம்பல் இடம் கொடுக்கவில்லை.எழுத்தாளருடைய உண்மையான வெற்றி சோம்பலை தோற்கடிப்பதுதான். 

நான் கம்புயூட்டரில் எழுதும்போது அடிக்கடி நினைப்பது கம்பரைத்தான். 10,200பாடல்களை அவர் இயற்றியிருக்கிறார். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஓலையை  ஒரு கையிலே  பிடித்து மறுகையில் எழுத்தாணியை எடுத்து அத்தனை பாடல்களையும்எழுதினாரே அதற்கு எத்தனை உடல் உழைப்பு தேவைப்பட்டிருக்கும்.  காவியம் படைக்கும்போது பாதியில் சோர்வு ஏற்பட்டிருந்தால்அவருடைய படைப்பு என்னவாகியிருக்கும்.

அதிகமாக எனக்கு சோர்வு நேர்ந்தது நேர்காணல் செய்யும்போதுதான். ஒருவரை முன்னும்பின்னும் துரத்தி தொந்தரவு செய்து நேர்காணலுக்கு தேதி வாங்கியிருப்போம். பல மைல்கள்பயணம் செய்ய வேண்டி வரலாம். இறுதியில் நேர்காணல் முடிந்து எழுதி திருத்தி பத்திரிகைக்குஅனுப்பிவிட்டு காத்திருக்கவேண்டும். நேர்காணல் கொடுத்தவர் வேறு ஆவலாக இருப்பார். பிரசுரிப்பதில்தாமதம் ஏற்படும்போது மிகவும் மனச்சோர்வாக உணர்வேன். அதைக் கடந்து மீண்டும் எழுத வருவதுசிரமம்தான்.

ழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

வருடம் 1999 என்று நினைக்கிறேன். பல மைல்கள்பயணம் செய்து அமெரிக்காவில் சாந்தகுரூஸ் என்ற இடத்தில் திரு சுந்தர ராமசாமியை சந்திக்கப்போயிருந்தேன். முதல் சந்திப்பு. நான் எழுதிய சில சிறுகதைகளை அவர் படித்திருந்தார்.பாராட்டுகள் வந்திருந்தன. ஒன்றிரண்டு எதிர்மறையாகவும் இருந்தன. அப்பொழுது அவர் சொன்னஅறிவுரை இன்றுவரை பயனுள்ளதாகவே இருக்கிறது. ’திறனாய்வாளரை முற்றிலும் ஒதுக்கக்கூடாது.காழ்ப்புணர்வு விமர்சனம் என்றால் முதல் இரண்டு வரிகளிலேயே அதைக் கண்டுபிடித்துவிடலாம்.அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. உங்கள் படைப்புத் திறனை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம்.திறனாய்வாளர் வெளிப்படுத்திய கருத்தில் உண்மை இருந்தால் அதை மதிக்கப் பழகவேண்டும்.நல்ல விமர்சனங்கள் எழுத்தை மேம்படுத்தும்.’  

இலக்கியம் தவிர்த்து – இசைபயணம்சினிமாஒவியம்இத்தியாதி… – வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாதுஏன்?

         கிடைக்கும் ஒவ்வொரு நிமிடஅவகாசத்தில் ஏதாவது எழுதத் தோன்றும். அல்லது வாசிக்கவேண்டும். ஆகவே தொலைக்காட்சி பார்ப்பதோ,இசை கேட்பதோ அபூர்வமாகவே நடக்கிறது. வெங்கட் சாமிநாதன் கர்நாடக இசை குறுந்தகடு ஒன்றுதந்தார். அதை அடிக்கடி கேட்பேன். துக்கமான சமயத்திலும் மகிழ்வான சமயத்திலும் அதே இசைமனதை சமநிலைப்படுத்துகிறது. சமீபத்தில் சினிமாவில் வந்த மெல்லிசைப் பாடல் ஒன்றை என்செல்பேசியில் ஏற்றி 100 தடவை  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.அதை எழுதியவர் கவிஞர் யுகபாரதி. இசையமைத்தவர் டி.இமான். ’கண்ணம்மா கண்ணம்மா’ என்ற பாடல்.யுகபாரதி அவருடைய குட்டி மகள் காவியாவை மனதில் வைத்து எழுதிய பாடல் என்று அறிந்தேன்.ஆகவே அதில் எனக்கு ஈர்ப்பு அதிகம். இப்பொழுதும் அதைக் கேட்டபடியே எழுதுகிறேன்.

இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறேனே எனநீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

         இன்னும் வாசிக்கவேண்டும் எனநினைப்பது சங்க இலக்கியம்தான். எட்டுத்தொகை,  பத்துப் பாட்டு ஆகியவற்றை நான் அவ்வப்போது படித்ததுண்டுஆனால் முறையாகப் பாடம் கேட்டதில்லை. நேற்று ’மலைபடுகடாம்’ நூலை எடுத்துப் பிரித்துப்பார்த்தேன். எந்தப் பக்கத்தை திறந்தாலும் ஒரு புதிய தகவல் அங்கே கிடைக்கும். இது ஆற்றுப்படைநூல். உலக இலக்கியங்களில் தமிழில் மட்டுமே ஆற்றுப்படை இலக்கியம் உள்ளது என்று சொல்வார்கள்.பரிசு பெற்றுத்  திரும்பும் ஒரு புலவன் இன்னொருவரிடம்இப்படி இந்த வழியால் போ உனக்கு அரசன் இன்ன இன்ன பரிசுகள் தருவான் எனச் சொல்வது. அப்படியானபுலவரை அந்தக் காலத்து  GPS, அதாவது புவி நிலை காட்டிஎன்று சொல்லலாம். கோல்ஃப் மைதானங்களைக் கடக்கும்போது எச்சரிக்கை பலகை காணப்படும். அதில்இப்படி எழுதியிருக்கும். ‘கோல்ஃப் பந்துகள் வந்து விழும் அபாயம். எச்சரிக்கை.’ அதுபோலவே மலைபடுகடாமில் புலவர் எச்சரிக்கிறார். ’கவண் கற்கள் வந்து விழும் இடம் . இந்தஇடத்தை எச்சரிக்கையாக கடக்கவேண்டும்.’

படிப்பேனோ என்னவோ ஆசைமட்டும் இருக்கிறது.

இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

     உயர்ந்த இலக்கியம் அதைச் செய்கிறது.தன் முதிய வயதில் டோல்ஸ்டோய் எழுதிய நீண்ட கதை The Death of Ivan Ilyich  அறம் பற்றி பேசுவது.  இவான் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஒருவருக்கும்  தீங்கிழைக்காத சாதாரண வாழ்க்கை அவருடையது. அவர்விபத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் பட்டு தீர்க்க முடியாத நோயாளியாக படுக்கையில்படுத்துவிட்டார். மருத்துவர் அவரிடம் உண்மை பேசுவதில்லை. மனைவி வேண்டா வெறுப்பாக நடந்துகொள்கிறார்.ஒருவரும் அவருக்கு உண்மையாக  இல்லை, ஒரேயொருவேலைக்காரனைத் தவிர. அவர் கடவுளைப்பற்றியும், வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றியும்அறத்தைப்பற்றியும் தன் இறுதி காலத்தில் சிந்திக்கிறார்.  வாசக மனங்களையும் உண்மையை நோக்கி நகர்த்துகிறார்.

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சிலவற்றில்  மேலாண்மை பாடத்தின்போது  இந்தக் கதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.இது மனிதனை சிந்திக்க வைக்கிறது. வாழ்வின் அர்த்தம் பற்றிய தெளிவை உண்டாக்குகிறது.மேம்படுத்துகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2019 14:14

நேர்காணல் – அந்திமழை

கொக்குவில் முதல் கனடா வரையிலான பயணம்:பெற்றது என்ன ? இழந்தது என்ன?

பயணத்தில் பெறும் அனுபவத்திற்கு ஈடு அதுதான். கொக்குவில என்ற சின்னக் கிராமத்தில்பிறந்த நான் பயணங்களின்போது நிறையக் கற்றுக்கொண்டேன். நூறு புத்தகங்கள் படிப்பதும்சரி ஒரு புதியவரை  சந்திப்பதும் ஒன்றுதான்.ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் அவரிடமிருந்து ஏதாவது ஒரு நல்ல குணாதிசயத்தை நான்பெற்றுக்கொள்ள முயல்வேன். உலகத்தின் தலை சிறந்த நாடக  ஆசிரியரை ஒருமுறை சந்தித்தேன். அந்த நாடகத்தின் கதாநாயகன் ஒரு செங்கல்லை வீச,  அது மேடையில் ஒரு குறிப்பிட்ட  இடத்தில் விழவேண்டும். அந்தக் காட்சிக்காக 2000 தடவைஒத்திக்கை பார்த்தார்கள். நான் கேட்டேன் ’கொஞ்சம் தள்ளி விழுந்தால் என்ன? யாருக்குத்தெரியப் போகிறது?’ அவர் சொன்னார் ’எனக்குத் தெரியுமே.’ ஒரு காரியத்தை எடுத்து முடித்தால்அது உன் மனதுக்கு திருப்தியை கொடுக்கவேண்டும். அந்த சம்பவம் எனக்கு மிகப் பெரிய பாடமாகஅமைந்தது. நாடு நாடாக அலைந்தபோது அடுத்துக் கற்றது பண்பு. ‘பண்பெனப்படுவது பாடறிந்துஒழுகுதல்.’

இழந்தது என்றால் என் கிராமத்தை. நான் விளையாடிய பூமியை.நான் படித்த பள்ளிக்கூடத்தை. நான் ஏறி விளையாடிய மரங்களை. என் நண்பர்களை. உறவுகளை.ஓர் இரவு உண்ணாமல் படுத்து தூங்கிவிட்டேன் என்பதற்காக நடு இரவில் என்னை எழுப்பி உணவூட்டியபக்கத்து வீட்டு அன்னம்மா ஆச்சியை.

 2)        ஆயுதப்போராட்டம்முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சூழலில் தற்போது நிலவும்  ஈழ அரசியலையும் இலக்கியத்தையும்கவனிக்கிறீர்களா? அது பற்றிய தங்கள் கருத்து..

 சங்க இலக்கியத்தில் போரும் காதலும்இருந்தது. காதல் இலக்கியம் தமிழில் தொடர்ந்தது. ஆனால் போரிலக்கியம்  கிடையாது. ஈழத்துப் போருக்குப் பின்னர் கிடைத்தஒரே ஆதாயம் நிறைய போர் இலக்கியங்கள் படைக்கப்பட்டதுதான். அவற்றின் தரமும் குறைந்ததாகஇல்லை. உலகத்தரத்தில் பல படைப்புகள் வந்தபடியே உள்ளன. ஈழத்தில் இருந்தும் எழுதுகிறார்கள்,புலம் பெயர்ந்த பின்னரும் எழுதுகிறார்கள். பிரமிப்பாக உள்ளது.

ஈழத்து அரசியல் பற்றி ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.’ஒரு நாடு என்றால் சண்டை. இரு நாடுகள் என்றால் சமாதானம்.’ இதை அரசியல் பெரியவர்கள்50 வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிந்துபோவதுபெரிய விசயமில்லை. சாதாரணமாகிவிட்டது. நான் சுடானில் வேலைசெய்தபோது அது ஒருநாடாக இருந்தது.இன்று இரண்டு நாடுகள். எரித்திரியா என்னும் புது நாடு எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்துதனி நாடாக இயங்குகிறது. சமீபத்தில், 2008 ல் கொசோவோ என்னும் நாடு சேர்பியாவில் இருந்துபிரிந்து தனி நாடாகிவிட்டது. ஒரு தேசம் பிரிந்து போவது ஒன்றும் புதுமையானது அல்ல. சிலபிரச்சினைகளுக்கு தீர்வு பிரிந்து போவதுதான்.

3)        ஹார்வார்ட்தமிழ் இருக்கைப் பணிகளுக்கான நிதி 40 கோடி திரண்டுவிட்டது.  இதற்கு நிதி திரட்டும்ஆட்சிக்குழு உறுப்பினர் என்கிற முறையில் அதற்காக உழைத்த அனுபவங்களைக் கூறுங்களேன்..இன்னும் என்ன பணிகள் பாக்கி இருக்கின்றன? எப்போது அது தொடங்கும்?

பாரி மன்னன் முல்லைக்கு தேர் கொடுத்தான்என்று படித்திருப்பீர்கள். படைவீரன் ஒருவனுக்கு பாரி ஆணையிட்டிருந்தால் அவன் ஒரு மரத்தைகொண்டுவந்து நட்டிருப்பானே. அந்தக் கணம் பாரி சிந்திக்கும் நிலையில் இல்லை. முல்லைக்கொடிஅலைக்கழிவதைப் பார்த்து அவர் மனம் துடிதுடித்தது. உடனே தேரை விட்டு இறங்கி நடந்தான்.

மருத்துவர்கள் ஜானகிராமனும், சம்பந்தமும்உணர்ச்சி வேகத்தில் உந்தப்பட்டு செயல்பட்டனர். 382 வருடங்களாக ஹார்வர்டில் தமிழ் அவமதிக்கப்பட்டதைஅவர்களால் தாங்க முடியவில்லை. எப்படியும் தமிழ் இருக்கை தொடங்கவேண்டும் என்ற உத்வேகத்தில் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கினார்கள்.அவர்கள் பணத்தைக் கொடுத்தபோது நான் அவர்களுடன் அங்கே நின்றேன். அந்த வரலாற்றுக்  கணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.

முதல் 20 மாதங்கள் எங்களுக்கு பெரும் ஏமாற்றம்தான்.நன்கொடைகள் வரவில்லை, ஆனாலும் நாங்கள் முயற்சியை தளர்த்தவில்லை. திடீரென்றுஒரு திருப்பம் ஏற்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளிடம் தொடங்கிய இந்த எழுச்சி உலகம் முழுக்கவியாபித்தது. அமரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா, கொரியா, வியட்நாம்,ஜப்பான், பொட்ஸ்வானா என நிதி வரத் தொடங்கியது. 6 மில்லியன் டொலர்கள் இலக்கை அடைந்துவிட்டாலும் தொடர்ந்து நிதி வந்து குவிகிறது. இனி பேராசிரியரைதேடும் வேலை ஆரம்பமாகும். ஹார்வர்ட் இருக்கும்வரை தமிழ் இருக்கை தொடரும்.

4)        உலகெங்கும்இருந்து 26 நாடுகளைச் சேர்ந்த 9000 பேர் நிதியுதவி அமைத்து ஒரு தமிழ் இருக்கை அமைகிறது.ஓரிரு நிறுவனங்களே முழுத்தொகையும் பிற மொழிகளின் இருக்கை அமைய அளித்துள்ளன. ஆனால் தமிழுக்குமட்டும் இந்த ஊர்கூடித் தேர் இழுக்கும் நிகழ்வின் முக்கியத்துவம் என்ன?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பிறகு மக்களை உலக ரீதியாகஇணைத்தது ஹார்வர்ட் தமிழ் இருக்கைதான் என துணிவுடன் சொல்லமுடியும். சில பள்ளி மாணவமாணவிகள் தங்கள் மதிய உணவுக்காசை,  பிறந்தாளுக்குகிடைத்த பணத்தை அப்படியே தமிழ் இருக்கைக்கு நன்கொடையாகத் தந்தார்கள்.இதை நினைக்கும்போதேநெஞ்சம்  உருகுகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம்அதனுடைய 382 வருட வரலாற்றில் இப்படியான ஓர் எழுச்சியை கண்டது கிடையாது. அதை அவர்களேசொல்கிறார்கள். ஒன்றிரண்டு செல்வந்தர்கள் பெருந்தொகை கொடுத்து இருக்கைகள் அமைப்பதுபெரிய விசயமில்லை. ஆனால் உலகளாவிய முறையில் ஒரு மொழிபேசும் மக்கள் காட்டிய ஆர்வம் பலரையும்திக்குமுக்காட வைத்திருக்கிறது. பெருமை என்னவென்றால் இந்த இருக்கை உலகத் தமிழர்களுக்குச்சொந்தமானது. ஒரு டொலர் நன்கொடை கொடுத்தாலும் ஒரு மில்லியன் நன்கொடை கொடுத்தாலும் உங்கள்பெயர் ஹார்வர்டில் நிரந்தரமாகப் பதிவு செய்யப்படும்.

5)        சிறுகதைகளில்உருவாகும் வடிவ நேர்த்தியை கட்டுரைகளிலும் நீங்கள் கொண்டுவந்துவிடுகிறீர்கள்… புனைவுஎழுதுவது அபுனைவு எழுதுவது இரண்டில் உங்கள் மனதுக்கு மிக நெருக்கமானது எது?

சிறுகதைகளோ கட்டுரைகளோ சுவாரஸ்யம் என்பதுமுக்கியம். ஒரு சிறுகதையை ஆரம்பித்தால் அதன் முடிவுவரை அது வாசகரை இழுத்துபிடித்துவைக்கவேண்டும். அல்லது அந்தச் சிறுகதை தோல்வியடைந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதேதான்கட்டுரைக்கும். ஒருவரும் கட்டுரையை பாதி படித்தால் போதும் என்று எழுதுவதில்லை. முழுவதும்படிக்கவேண்டும் என்றுதான் எழுதுகிறார்கள். ஆகவே அதைச் சுவாரஸ்யம் ஆக்குவது முக்கியம்.கடினமான விசயம் என்றாலும் அதைச் சொல்லும் முறையில் சுவையை கூட்டலாம். இப்படியான சொல்முறையைஆரம்பித்து வைத்தவர் நோர்மன் மெய்லர் என்ற அமெரிக்க எழுத்தாளர். ஒரு முறை அவர் ஓர்உண்மைச் சம்பவத்தை புத்தகமாக எழுதினார்.  அவருக்குஅபுனைவுப் பிரிவில் பரிசு கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் அவருக்கு புனைவுப்பிரிவில் பரிசு வழங்கப்பட்டது. அதிலிருந்துதான் பலரும் கட்டுரையாக இருந்தாலும் அதைசுவையோடு எழுதவேண்டும் என்ற முக்கியத்தை உணர்ந்தார்கள்.  எனக்கு எழுதப் பிடிப்பதுசிறுகதைதான். இதிலே கட்டற்ற கற்பனையை அவிழ்த்துவிடலாம். அந்த இன்பமே தனி.

6)        பதினேழுஆண்டுகளாக அறக்கட்டளை அமைத்து இயல் விருது வழங்கிவருகிறீர்கள்… இவ்விருது பெருமைக்குரியஒன்றாக காலப்போக்கில் மாறியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த விருது வழங்கல்தொடர்பான சுவாரசியமான அனுபவங்கள் இருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள்

17 வருடங்களுக்கு முன்னர் நான் கனடாவுக்குபுலம் பெயர்ந்தபோது ஒரு விசயத்தை கண்டுபிடித்தேன். கனடாவில், தமிழ் படைப்பாளிகளுக்குசில அமைப்புகள் விருதுகள் வழங்கின. அதுபோலவே இந்தியாவிலும், இலங்கையிலும், அமெரிக்காவிலும்,மலேசியாவிலும் அந்தந்த வருடம் வெளியாகும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஆனால் உலகளாவிய ரீதியில் தமிழ் படைப்புகளுக்கு பரிசுகளோ பாராட்டுகளோ கிடையாது என்பதுவருத்தத்துக்குரிய விசயம். நோபல் பரிசு போலவோ, புக்கர் சர்வதேச விருதுபோலவோ உலகத் தமிழ்பரப்பில் அமையும் விருது தேவை என்று உணர்ந்தேன்.  சில வருடங்களுக்கு முன் அல்பேனிய மொழியில் எழுதியஇஸ்மாயில் காதருக்கு புக்கர் சர்வதேச விருது கிடைத்தது. அல்பேனிய மொழி பேசுவோர் உலகத்தில்5 மில்லியன் மக்கள்தான். அப்படியிருந்தும் நல்ல மொழிபெயர்ப்பினால் நூல் உலகக் கவனத்துக்குவந்து விருதும் பெற்றது. அந்த விருது எழுத்தாளருக்கு கிடைத்த விருது அல்ல அல்பேனியமொழிக்கு கிடைத்த விருது. சர்வதேசக் கவனத்தை இது கொண்டுவந்தது. தமிழ் இலக்கியத் தோட்டம்இதைத்தான் செய்கிறது. கனடாவின் பிரபல பத்திரிகையான Toronto Star தமிழ் இலக்கியத் தோட்டவிருதை தமிழின் கில்லர் பரிசு என்று பாராட்டியது. நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரிநாடாளுமன்றத்தில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் செயல்பாட்டை பாராட்டியிருக்கிறார். விருதுக்கானநடுவர் குழு  உலகளாவிய ஐந்து நபர்களைக் கொண்டது.ஒவ்வொரு வருடமும் புது நடுவர் குழு அமைக்கப்படும். உலகத்தில் எங்கேயிருந்து ஒரு நல்லதமிழ் படைப்பு வெளிவந்தாலும் அதை எழுதியவரை தேடிப்பிடித்து கௌரவிக்க தமிழ் இலக்கியத்தோட்டம்பெருமுயற்சி எடுக்கும்.

 7)        சமீபத்தில் கனடா பிரதமர் இந்தியா வந்திருந்தபோது  தமிழர்கள் அவருக்கு சமூகஊடகங்களில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்தனர். கனடா தமிழர்களுக்கு அவர் நண்பராக அறியப்பட்டார்.கனடாவில் வாழும் தமிழர்கள் முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளனரா?

பிரதமர் ஜஸ்டின் ரூடோ கனடிய தமிழர்களுக்குமிகவும் நெருக்கமானவர் என்றே சொல்லலாம். கனடிய நாடாளுமன்றத்தில் 338 அங்கத்தவர்கள்இருக்கிறார்கள். அதில் ஒருவர் தமிழர், பெயர் கரி ஆனந்தசங்கரி.  அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் 11 மாதங்களிலேயேநாடாளுமன்றத்தில் 2016 அக்டோபர் 5ம் தேதி அவர் கொண்டுவந்த தீர்மானம் அனைத்துக் கட்சியினராலும்ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கனடா நாடு இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தைதமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடும். இது எத்தனை பெரிய சாதனை. ஜஸ்டின் ரூடோவின் அரசுஇதைச் சாதித்தது.

கடந்த ஜூலை மாதம் கனடாவில்  தமிழர் தெருவிழா கொண்டாடப்பட்டது. ஒரு லட்சத்துக்கும்அதிகமான தமிழ் மக்கள் பங்குபற்றினார்கள். கனடிய பிரதமர் ரூடோ வேட்டி சால்வையில் வருகைதந்து விழாவை வாழ்த்தினார்.

எனது வீட்டுக்கு மிகச் சமீபமாக , நாங்கள்விட்டு வந்த நிலத்தை ஞாபகப்படுத்தும் முகமமாக  ஒரு வீதிக்கு  ‘வன்னி வீதி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.கனடிய மையநீரோட்டத்தில் தமிழர்கள் இணைந்து பல துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். இதுபெருமைதரும்  விடயம்.

 8)  கனடிய நிலப்பரப்பு புதிதாகஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாகஇருந்திருக்கும். இது தொடர்பாக தங்கள் கேட்ட, பார்த்த, உணர்ந்த அனுபவங்களில் ஓரிரண்டுசொல்ல முடியுமா?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைஎன ஐந்து நிலங்களை தமிழர்கள் கொண்டாடினார்கள். பனிநிலம் மட்டும் பாடப்படவில்லை. அதைப்பற்றிகனடாவில் பாடுகிறார்கள், எழுதுகிறார்கள், கொண்டாடுகிறார்கள்.  இந்த நாடு இயற்கையுடன் இணைந்து எப்படி வாழவேண்டும்என்பதை சொல்லித் தருகிறது. இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது வெளியே பனி கொட்டுகிறது.  இந்த நாட்டுக்கு இயற்கையுடன் நெருங்கிய உறவு உண்டு.மிருகங்கள் பறவைகள்கூட  சம உரிமையுடன் வாழ்வதைப் பார்க்கலாம். ’பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்’தத்துவத்தை நேரே காணலாம். ரோட்டிலே வேகமாகப் போகும்போது 900 எடை மூஸ்மான் வீதியை கடக்கும்.நூற்றுக்கணக்கான கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பொறுமையாக காத்து நிற்கும். கறுப்பு அணில்கள்வீதியிலே விளையாடும்போது வாகனங்கள் சத்தம் செய்யாது கடக்கவேண்டும். அல்லாவிடில் விதிமீறல் குற்றம்.

கனடா என்றால் ஆதிகுடிகள் மொழியில் ’கிராமம்’என்று பொருள். ஆதிகுடிகளின் நாட்டை பறித்துக்கொண்டு அவர்களைத் துரத்திவிட்டோம். ஆனால்பெயரை எடுத்துக்கொண்டோம். இன்று ஆதிகுடிகளுக்கு பல நன்மைகள் வழங்கி பிராயச்சித்தம்தேடுகிறது கனடிய அரசு.

9) யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற தமிழரதுதத்துவத்தை நேரடியாக அனுபவப்பட்டு உணர்ந்திருக்கும் எழுத்தாளராக உங்களைக் கருதுகிறோம்…அதுதான் பொதுத்தன்மையாக உங்கள் எழுத்துகளில் பிரதிபலிக்கிறது. அதுவே உங்களைத் தனித்தும்காட்டுகிறது… அதனாலேயே தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் சொத்தாக உங்களைக் கருதுகிறோம். தமிழர் என்ற அடையாளம் இருப்பினும் உலகக் குடிமகனாக தன்னை ஒருவர் உணர்கிற அனுபவத்தைக்கூறுங்கள்?

ஆதியில் தமிழர்கள் பயணம் செய்தார்கள். எகிப்து,சுமேரியா, ரோம், தாய்லாந்து, கம்போடியா என பல இடங்களுக்கும் பயணப்பட்டார்கள். சங்கஇலக்கியத்தில் பொருள்தேடி கணவன் புறப்படும் செயல் அடிக்கடி பாடப்பட்டிருக்கும். பயணப்படும்ஒருவன்தான் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று பாடமுடியும்.  ‘நாடா கொன்றோ; காடா கொன்றோ’ எனப் பாடினார் அவ்வைமூதாட்டி. ஒரு நாட்டின் மேன்மை மலைகளாலோ, காடுகளினாலோ மற்றும் இயற்கை வளங்களாலோ மேன்மைப்படுவதில்லை. அங்கு வாழும் மக்களினாலேயே அது பாராட்டுப்பெறுகிறது.

தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி ஏ.கேசெட்டியார். இவர் பயணப்படாத  நாடே இல்லை என்றுசொல்லலாம். பயணம் ஒருவரின் பார்வையை விரிவாக்குகிறது. இதயத்தை திறக்கிறது. உயர்ந்தவர்தாழ்ந்தவர் இல்லை. அன்புநெறிதான் மனித வாழ்வுக்கு தேவை என்பதை கண்டுபிடித்து எழுதுகிறார்.

அவர் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அமெரிக்க தம்பதிகள் வீட்டுக்கு ஒரு விருந்தாளிவருகிறார். அவரும் தம்பதிகளுடன் மேசையில் அமர்ந்து உணவருந்தியபோது உணவு முடிந்துவிட்டது.கனவனுக்கும் மனைவிக்கும் தந்தி மொழி தெரியும். கணவர் விரல்களினால் ரகசியமாக மேசையில்மெதுவாக தட்டி ’வேறு உணவு இருக்கிறதா?’ என்று கேட்கிறார். மனைவி அதே முறையில் ’முடிந்துவிட்டது’என்று பதில் கூறுகிறார். விருந்தாளிக்கும் தந்தி முறை தெரியும். அவர் மெள்ள மேசையில்தட்டினார். ’போதியது சாப்பிட்டேன். நன்றி’. இப்படி மேலான பண்பு உலகம் எங்கணும் நிறைந்திருக்கிறது. 

10) 1964-லேயே முதல் சிறுகதைத் தொகுதியானஅக்காவை வெளியிட்டுவிட்ட ஒரு எழுத்தாளராகிய நீங்கள், இன்று 2018-ல் தன் முதல் சிறுகதைத்தொகுதியை வெளியிட்டு விட்டு உங்களை அணுகும் எழுத்தாளருக்கு என்ன சொல்வீர்கள்?

புது எழுத்தாளர்கள் முதல் தொகுப்புடன் வந்துமுன்னுரை கேட்பார்கள். மறுத்தால் அடுத்தநாளே முகநூலில் திட்டி எழுதிவிடுவார்கள். அவர்கள்அப்படியொன்றும் புத்திமதி கேட்பதில்லை. அப்படித் தட்டித்தவறி யாராவது கேட்டால் நான்சொல்வதற்கு ஒன்றிருக்கிறது. ‘எங்கள் பழைய இலக்கியங்களை படியுங்கள். சங்க இலக்கியத்தில்இல்லாத ஒன்றை நீங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப் போவதில்லை.  ’அரசனுக்குச் சொந்தமான அச்சம்தரும் யானையை ஆற்றிலேகுளிப்பாட்ட அழைத்துச் செல்லும்போது பறை அடித்து எச்சரிக்கை செய்வீர்களே. பேரழகியானஇந்தப் பெண் தெருவிலே நடக்கிறாள். ஆபத்தானவள். ஏன் பறையடித்து எச்சரிக்கை செய்யவில்லை?’கலித்தொகை.

11) இலக்கியமோ தமிழ்சார்ந்த செயல்பாடுகளோதாயகத்துக்கு வெளியே கனடா தமிழர்கள் தான் இன்று முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மேற்குலகில்தமிழர்களைப் பொருத்தவரை கனடா நாடு இன்று முக்கிய வாழிடமாக உள்ளதன் காரணங்களைக் கூறஇயலுமா?

தமிழர்கள் கனடா நாட்டுக்கு மிக நன்றியுடன்இருக்கிறார்கள். இங்கே தற்சமயம் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.தமிழ் அகதிகளை உலகம் ஒதுக்கியபோது கனடா நாடு கைநீட்டி வரவேற்றது. 1986ம் ஆண்டு 155ஈழத்து அகதிகள் பல நாட்கள் கடலில் கப்பலில் தத்தளித்து நின்றபோது அவர்களை மீட்டெடுத்துகனடா வாழ்வு கொடுத்தது. அந்தக் கப்பலில் சாகக் கிடந்த ஒரு குழந்தை இன்று கனடாவில் புகழ்பெற்றமருத்துவர். இழந்த நாட்டை ஈடுகட்ட இன்னொரு நாடு கிடைத்தது. இழந்த மொழியை கட்டியெழுப்பகனடா அரசு உதவிசெய்கிறது. கனடிய அரசிடம் இருந்து எனக்கு கடிதம் வருகிறது.  ’உங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டியெழுப்பநிதிவசதி செய்யத் தயாராக இருக்கிறோம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.’உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா?

12) சொந்தமாக நாடு இல்லாத மொழி அழிந்துவிடும்என்கிற கருத்தை பலமுறை கூறி இருக்கிறீர்கள். இன்று தமிழர்கள் உலகம் முழுக்க வியாபித்து,இணையம், சமூக ஊடகம் என உலகம் வலைப்பின்னலில் இணைந்திருக்கும் சூழலில்  இந்த கருத்துக்குமறுபரிசீலனை உண்டா?

ஒரே உதாரணத்தைதான்திரும்ப திரும்ப சொல்லவேண்டியிருக்கிறது. ஐஸ்லாண்ட் என்பது சிறிய நாடு. மக்கள் தொகைமூன்று லட்சம். இந்த நாடு ஐஸ்லாண்டிக் மொழியை வளர்க்கிறது. உலகில் எங்கே ஆங்கிலத்தில்ஒரு புத்தகம் வெளிவந்தாலும் அதை உடனேயே ஐஸ்லாண்டிக் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடஅரசு உதவுகிறது. அந்த நாட்டிற்கு ஒரு தேசிய கீதம் இருக்கிறது. கொடி இருக்கிறது. ஐ.நாவில்சம இடம் இருக்கிறது. மைக்ரோசொஃப்ட் , அவர்கள் மொழியை முக்கியமான மொழிப்பட்டியலில் இருந்துநீக்கியபோது   ஐஸ்லாண்ட் நாட்டின் தலைவர் பில்கேட்சுடன்வாதாடி ஐஸ்ட்லாண்டிக்  மொழியை சேர்க்கவைத்தார்.தமிழுக்காக வாதாட யார் இருக்கிறார்கள்? தமிழுக்கு ஒரு நாடு இல்லை. இருந்திருந்தால்ஹார்வார்டில் தமிழ் இருக்கை 100 வருடங்களுக்கு முன்னரே அமைந்திருக்கும். இங்கிலாந்துசேக்ஸ்பியரை பரப்புவதற்கு வருடம்தோறும் லட்சக்கணக்கான பவுண்டுகளை செலவழிக்கிறது. ஐஸ்லாண்ட்என்று ஒரு நாடு இருக்கும்வரை ஐஸ்லாண்டிக் மொழி வாழும். ஒரு நாடு இருந்தால் தமிழ் மொழியின்மதிப்பே தனிதான். அதற்கு உலக மேடையில் உரிய கௌரவம் கிடைக்கும். மேலும் செழித்து வாழும்.புகழ் ஓங்கும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2019 14:12

ஓடுகிற பஸ்

                               ஓடுகிற பஸ்சில் ஏறவேண்டும்

தினக்குரல்பாரதி செவ்வி

தமிழ் இருக்கை அமைக்கவேண்டிய பாரிய பணியை நீங்கள் பொறுப்பேற்றுமுன்னெடுக்கின்றீர்கள். இந்த முயற்சியில் இறங்கவேண்டும் என்ற உணர்வு – எண்ணம் உங்களுக்குஎப்படி – ஏன் ஏற்பட்டது?

நான் மட்டுமல்ல, பெரிய குழுவே பணி புரிகிறது.  18 வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில்தமிழ் இருக்கை அமையும் வாய்ப்பு ஒன்று வந்தது. அப்பொழுது அதற்கு தேவையான நிதி ஒரு மில்லியன்டொலர்கள் மட்டுமே. அதை திரட்டமுடியாமல் அந்த வாய்ப்பு நழுவிப் போனது. அது சோகமான கதை.பின்னர் 2017 ஆரம்பத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க TamilChair Inc எனும் அறக்கட்டளைக்கு அதிசயமாக சம்மதம் கிடைத்தது. இந்த அறக்கட்டளையை  ஆரம்பித்த நிறுவனர்களில் நானும் ஒருவன்.  இருக்கை அமைக்க  தேவை 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றார்கள்.உலகளாவிய ரீதியில் நிதி திரட்டலை தொடங்கினோம். எப்படி இவ்வளவு பணத்தை திரட்டப் போகிறோம்என்ற மலைப்பு ஆரம்பத்தில் இருந்தது. அமெரிக்கா, கனடா, இந்தியா, கொரியா, ஹொங்கொங் ,மலேசியா, பொஸ்ட்வானா (ஆப்பிரிக்கா) போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பணம் வந்து குவியத்தொடங்கியது. இலங்கையில் இருந்துகூட 25,000 டொலர்கள் அனுப்பப்பட்டன  என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள். தேவைப்பட்ட நிதிக்குமேலாக பணம் சேர்ந்தபோது ’இனி போதும், நிறுத்துங்கள்’ என்று அறிக்கை விட வேண்டிநேர்ந்தது.

இந்த ஆர்வத்தையும், தமிழர்களின் எழுச்சியையும் அவதானித்தரொறொன்ரோ பல்கலைக்கழகம், இங்கே வதியும்  தமிழ்மக்களை அணுகியது. கனடாவில் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.  தமிழ் இருக்கை ஒன்றை இங்கே  அமைப்பதற்கு ரொறொன்ரோ பல்கலைக்கழகம்  சம்மதம் வழங்கியது. இதற்கு தேவையான நிதி 3 மில்லியன்டொலர்கள் (இலங்கை ரூ 39 கோடி). ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை அணுகுவதற்கு  நாங்கள் நேரம் பார்த்து காத்திருந்த வேளை அவர்களாகவேஎம்மை தொடர்புகொண்டது ஆச்சரியமான விசயம்.  ஹார்வர்டுக்குநேர்ந்ததுபோல உலகம் முழுக்க இருந்து பணம் வந்து குவியவில்லை. ஆனாலும் தமிழ் மக்களின்ஆர்வம் வியப்பூட்டியது. கனடாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் பணம் வந்தது. இந்தியாவிலிருந்துகூடஒன்றிரண்டு பேர் பணம் அனுப்பினார்கள். முதல் வருடத்தில் நாங்கள் வைத்த இலக்கு ஒரு மில்லியன்டொலர்கள். கெடு முடிவதற்குள் அந்தப் பணத்தை சேர்க்க முடிந்தது. மீதி 2 மில்லியன் டொலர்கள்தான்.அதையும் விரைவில் திரட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உண்டு.

இதிலே சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால் நாங்கள் எத்தனை ஆயிரம்டொலர்கள் சேர்ந்தன என்று தினம் தினம் கணக்குப் பார்த்தோம். பல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம்டெட்டி மாத்திரம் எத்தனை பேர் நன்கொடை கொடுத்தார்கள் என்பதையே உன்னிப்பாகக் கவனித்தார்.’இது ஓர் இனக்குழு ஒன்றுசேர்ந்து உண்டாக்கும் இருக்கை. பணம் ஒரு நாள் இலக்கை எட்டும்,ஆனால் எத்தனை பேர் பங்குபற்றுகிறார்கள் என்பதுதான் எங்களுக்கு முக்கியம்’ என்று விளக்கம்கொடுத்தார்.

தமிழ் இருக்கை தொடர்பாகப் பரவலாகப் பேசப்படுகின்றது. தமிழ்இருக்கை என்றால் என்ன? அதன் மூலமாக எவ்வாறான பலன்களை நாம் எதிர்பார்க்க முடியும் என்பதைதினக்குரல் வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா?

மூன்று மில்லியன் டொலர்களை இருப்புநிதியாக வைத்து உருவாக்கப்படும் ரொறொன்ரோ  தமிழ் இருக்கை, தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைக்கற்றுத்தருவதோடு பல்வேறு முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கும் மையப்புள்ளியாகவும்  அமையும். ஏனைய செம்மொழிகள் அனைத்துலக கல்வி மையங்களில்நிறுவப்பட்டு ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மூலம் பல நன்மைகள் பெற்றுள்ளன. இங்கே அமையும்தமிழ் இருக்கை  தமிழுக்கான அங்கீகாரத்தை அளிப்பதோடுதொடர் பயன்பாட்டிற்கும், முன்னேற்றத்துக்கும் வலுச்சேர்த்து பல கல்வி நிறுவனங்களுக்குஎடுத்துக்காட்டாகத் திகழும். 

ரொறொன்ரோ  பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தின்முன்னாள் தலைவர், ’தமிழ் இருக்கையானது உயர் கல்வி நிறுவனத்தில் தமிழ் கற்பித்தல் மற்றும்ஆராய்ச்சிக்காக மக்களின் ஆதரவுடன் நிறுவப்பட்டு என்றென்றும் நிலைத்திருக்கப்போகும்ஒரு கல்வி அலகாகும். ஒரு மொழி பேசும் குழுவினரால் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும்முதல் இருக்கை என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று. இது  வேறு இருக்கைகளுக்கு முன்மாதிரியாகஅமையும்.  தமிழ் மொழியின் பாரம்பரியத்துக்கும்,தொன்மைக்கும் அதன் மேன்மைக்கும் சாட்சியாக என்றென்றும் நிலைத்து நிற்கும்’ என தமிழ் இருக்கை ஆரம்பக் கூட்டத்தில் கூறிவாழ்த்தினார்.

ரொறொன்ரோவில்  நிறுவப்படும் தமிழ் இருக்கை, இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டிய தமிழ்க் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முதன்மையான இடமாக  அமையும்.  அருகிவரும்தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் ஆவணங்கள் எண்மியமாக்கப்பட்டு இங்கே பாதுகாக்கப்படும்.கனடிய அரசு வழங்கும் நல்கைகளை தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.தமிழ் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் ஒழுங்குசெய்வதுடன் வருகைப் பேராசிரியர்களுக்கும்வழி செய்யலாம். சிறந்த ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கலாம். தமிழ்இருக்கை என்பது நுழைவாயில்தான். தக்க பேராசிரியர் அமைந்தால் முதல்தரமான பல்கலைக்கழகத்தில்ஒரு மொழிக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும், பயன்களையும் நாம் முழுமையாக அடையலாம்.

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்இவ்வாறான தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முதலில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.தமிழக அரசுகூட அதற்கு உதவியிருந்தது. அந்த முயற்சி எந்தளவில் உள்ளது? அது வெற்றியளித்துள்ளதா?

ஆரம்பத்தில் ஹார்வர்டுதமிழ் இருக்கை நிதி சேர்ப்பு சரியாகவே போகவில்லை. அதைப் பற்றிய புரிதல் மக்களுக்குப்போய்ச்சேர சில மாதங்கள் பிடித்தன. அமெரிக்க, கனடா போன்ற நாடுகளிலிருந்து ஒரு சில செல்வந்தர்கள்பணம் சேர்த்தாலே இந்த இருக்கையை இலகுவில்  உண்டாக்கியிருக்கலாம்.அதை நாங்கள் விரும்பவில்லை. பல்கலைக்கழகமும் அப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. உலகமக்களால் இருக்கை உருவாக்கப்பட்டு அது உலக மக்களுக்குச் சொந்தமாக வேண்டும் என்பதே பலரின்கோரிக்கை.  தொலைக்காட்சிகள், பத்திரிகைகள்,வானொலி, முகநூல் என சகல ஊடகங்களிலும் பரப்புரை செய்தோம். தமிழ்நாடு அரசு நன்கொடை வழங்கியதைதொடர்ந்து நிதி சேகரிப்பு வேகம் பிடித்தது. ஆறு மில்லியன் டொலர்களை தாண்டியபோது, ’நிதி இலக்கை அடைந்துவிட்டது, மேலும் பணம்அனுப்பவேண்டாம்’ என உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டிய கட்டாயம் நேர்ந்தது.இப்பொழுது பேராசிரியர் தேர்வு முயற்சியை ஹார்வர்டு பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கிறது.விரைவில் இருக்கை செயல்படத் தொடங்கும்.

கனடாவில் ரொறொன்ரோவில் தமிழர்கள் அதிகமாகவசிக்கும் ஸ்காபரோ பகுதியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இதனை அமைத்துக்கொள்வது அதிகளவுக்குபலனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

ரொறொன்ரோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில்பெரும்பாலானோர் தமிழ் மொழியில் தேர்ச்சிபெற்றவர்கள்.  இங்கே வாரத்துக்கு பல தமிழ் கலாச்சார, கலை நிகழ்ச்சிகள்நிகழ்கின்றன. வாரத்துக்கு ஒரு புத்தக வெளியீடாவது நடக்கிறது. ஒரு பல்கலைக்கழகத்தில்தமிழ் இருக்கை அமைப்பதற்கு இதை விடச் சிறந்த  இடம் ஏது. ஒவ்வொரு சனவரி மாதமும் கனடாவில் தமிழ்மரபு மாதமாக கொண்டாடப்படுகிறது. ரொறொன்ரோ  பல்கலைக்கழகம்கூட2019 வருடம் முதல்முறையாக தமிழ் மரபு மாதத்தை கொண்டாடியது. தமிழின் மேன்மை பற்றி பல்கலைக்கழகத்தலைவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ் இருக்கை அமைய வேண்டும் என்ற ஆர்வம்தமிழ் மக்களுக்கு  இருக்கும் அதே அளவுக்கு பல்கலைக்கழகத்துக்கும் இருக்கிறது. இது ஒரு வரம் என்றே எனக்குப் படுகிறது.

ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கையை அமைப்பதான இந்த முயற்சிக்குபுலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கிறதா?

அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. புலம் பெயர்ந்தவர்களுடைய  ஆதரவு இல்லாமல் நிதி சேகரிப்பது சாத்தியமே இல்லை. திரட்டிய நிதியில் 99 வீதம் புலம்பெயர்ந்ததமிழர்களிடமிருந்து கிடைத்ததுதான். புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் அது கனடாவை மாத்திரம்குறிப்பிடவில்லை. புலம்பெயர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் வசிப்பவர்களையும்சேர்த்துத்தான் பார்க்கவேண்டும். பெரும்பான்மையான கொடைகள் கனடாவில் கிடைத்தவை. இந்தியாவில்இருந்தும் சிலர் பணம் அனுப்பி உதவியிருக்கிறார்கள். அங்கே அனுமதி பெறுவதில் பல சிக்கல்கள்இருந்தாலும்  அதையெல்லாம் தாண்டி பணம் வந்துசேர்ந்திருக்கிறது.

2700 கி.மீட்டர் தொலைவில் அல்பெர்ட்டா மாகாணத்திலிருந்து ஒரு சிறுமி அவருடைய  பிறந்த நாளுக்கு கிடைத்த பணத்தை அப்படியே அனுப்பியிருந்தார்.நெகிழ்வாக உணர்ந்த சமயம் அது. சிறுமிக்கு  நன்றிகூறிவிட்டுஅவருடைய அப்பாவிடம் பேசினேன். அவர் சொன்னார்,’ரஜினியின் பேட்ட சினிமா 2 வாரம் ஓடியதற்காகவிழா எடுக்கிறார்கள். தமிழ் 2500 வருடங்களாக ஓடுகிறது. அதையல்லவா நாங்கள் கொண்டாடவேண்டும்.’முதல் ஒரு வருடத்தில் 600 பேர் பணம் கொடுத்து ஒரு மில்லியன் டொலர் சேர்ந்துவிட்டது.மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் ஒரு நாட்டில் 600 என்பது மிக மிகச் சிறிய விழுக்காடுதான்.

கனடாவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களில் ஒருவர் நாடாளுமன்றஉறுப்பினராகவும், இருவர் ஒன்ராறியோ மாகாண அரசாங்க உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.அதனைவிட தமிழ் மரபுரிமை மாதம் ஒன்றும், இங்கு மத்திய அரசாங்கத்தினால் பிரகடனபடுத்தப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் உங்களுடைய இந்த முயற்சிகளுக்கு எந்தளவு துணை புரியும்?

ஹார்வர்ட்  தமிழ் இருக்கையின் வெற்றிக்குப் பிறகு உலகம் முழுக்கதமிழுக்கான எழுச்சியை காணமுடிகிறது. கொரியாவில் இருக்கும் ஒருவர் எதற்காக ஹார்வர்ட்தமிழ் இருக்கைக்கு பணம் அனுப்புகிறார்? ஆப்பிரிக்காவில் பொஸ்ட்வானா நாட்டில் வசிப்பவர்பலவித சிரமங்களுக்கு மத்தியில்  ஒரு சிறு தொகையைஅனுப்புகிறார். தமிழ் நாட்டில் நாலு வருடம் சிறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் சிறையில்கிடைத்த ஊதியப்பணத்தை ஹார்வர்டுக்கு அனுப்புகிறார். அவருக்கு ஹார்வர்ட் எங்கே இருக்கிறதுஎன்பது தெரியாது. ஹார்வர்ட் என்பதை இரண்டு பிழைகளுடன்தான் அவரால் எழுத முடிந்தது. ஆனால்பணம் அனுப்பினார். எதற்காக? தமிழ் மொழி வாழவேண்டும் என்ற வெறிதான்.

தமிழர் ஒருவர்கனடா நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதும், இரு தமிழர்கள் மாகாண அரசு உறுப்பினர்களாகஇருப்பதும் எங்களுக்கு எவ்வளவு பெருமை தருவது. நாங்கள் நடத்தும் தமிழ் மரபு கொண்டாட்டங்கள்கனடாவில் பிரபலமடைந்திருக்கின்றன. வேற்று மொழிக்காரர்கள் எங்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.எங்களுக்கு தேசிய கீதம் இல்லை, ஆனால் தமிழ் மொழி கீதம் பாடித்தான் நாங்கள் விழாக்களைஆரம்பிக்கிறோம்.  உலகத்திலேயே, ஒரு மொழிக்கானவணக்கப் பாடலைப்  பாடி நிகழ்ச்சியை தொடங்குவதுதமிழர்கள் மட்டும்தான். நாடாளுமன்ற உறுப்பினரும், மாகாண உறுப்பினர்களும் எங்கள் முயற்சிகளுக்குதொடர்ந்து ஆதரவு தருகிறார்கள்.

ரொறொன்ரோ பல்கலைக்கழகம்ஒருநாள் தமிழ் இருக்கைக்காக telemarketing செய்தது. 25 பல்கலைக்கழக மாணவமாணவிகள்  தொலைபேசி முன் அமர்ந்து பழைய மணவமாணவிகளை அழைத்துதமிழ் இருக்கைக்கு நன்கொடை கேட்டனர். எல்லோருமே வேறு வேறு மொழி பேசும் தன்னார்வத் தொண்டர்கள்.கூகிளில் தமிழ் பற்றி படித்ததுதான் அவர்கள் அறிவு.  ஒரு மாணவியிடம் ஏன் இந்த வேலையை செய்கிறார் என்றுகேட்டேன். அவர் சொன்னார், ‘2500 வருடங்களாக வாழும் ஒரு மொழிக்கு இருக்கை அமைந்தால்அது பல்கலைக்கழகத்துக்கு பெருமையல்லவா?’  

கனடாவின் முக்கியமான தமிழர் பிரதிநிதிகளாக மூவர் அரசாங்கத்தில்அங்கம் வகிக்கும் நிலையில் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு அரசாங்கங்களின் மட்டத்திலிருந்துநிதியுதவி ஏதாவது பெறக்கூடிய சாத்தியமுண்டோ?

ஏற்கனவே சொன்னதுபோல  இந்த தமிழ் இருக்கைதமிழர்களுக்கு சொந்தமானது. கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்குசொந்தமானது. தமிழ் மொழிக்கு சொந்தமாக ஒரு நாடு இல்லையென்றாலும் அந்த மொழி ஓர் உலகமொழி.உலகத் தமிழர்களிடமிருந்து நிதி சேர்ப்பதுதான் நோக்கம். ஏற்கனவே சொன்னதுபோல கனடிய அரசு வழங்கும் நல்கைகளை தமிழ் வளர்ச்சிக்கும்,ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.  சிறந்த ஆய்வுமாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கலாம். ஒரு மொழிக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும், பயன்களையும் நாம் முழுமையாகஅடையலாம்.

கனடிய அரசிடம்தமிழ் இருக்கைக்கு பணம்  கேட்கும் திட்டம் தற்சமயம்இல்லை. கணிசமான தொகை சேர்ந்த பின்னர் அரசாங்கத்தை அணுகலாம் என்ற எண்ணம் உண்டு. சமயம்வரும்போது அதற்கான முயற்சிகளை கைக்கொள்வதில் ஒரு தடையும் கிடையாது.  

தமிழ் இருக்கை மிகவும் முக்கியமான முயற்சி என்று நீங்கள்கருதுவதற்கு காரணம் என்ன?

பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம்  தமிழ்மொழியின் தொன்மை அத்துடன் அது இன்னும் வாழ்கிறதுஎன்ற பெருமை. ’ஏற்றுக உலையே, ஆக்குக சோறே, கள்ளும் குறைபட ஓம்புக.’ இந்த வரிகள்2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. இன்றும், ஐந்தாம் வகுப்பு சிறுமியால் இதைப்படித்து புரிந்துகொள்ள முடியும். அதுதான் தமிழின் பெருமை. ஏனைய செம்மொழிகளுக்கு பல்கலைக்கழகங்களில்இடம் உண்டு, ஆனால் தமிழ் மொழியை ஒருவரும் கவனிப்பதில்லை. இது பெரிய அநீதியாகப் படுகிறது.இதைச் சரிசெய்ய வேண்டும். மற்றைய மொழிகளுக்கு நாடு இருக்கிறது. தமிழுக்கு சொந்தமாகஒரு நாடும் இல்லை. ஆகவே எங்களுக்காக ஒரு நாடும் போராடப் போவதில்லை. நாங்கள்தான் செய்யவேண்டும்.

ஆங்கில மொழி இலக்கியம் தோன்றியது 1500 வருடங்களுக்கு முன்னர். ஆனால் அதற்கு1000 வருடங்களுக்கு முன்னரே பெரும் தமிழ் இலக்கியங்கள் தோன்றிவிட்டன. இன்றைக்கும் அறிஞர்கள்வியக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம்  அன்றேபிறந்துவிட்டது. வெளிநாட்டு அறிஞர்கள் தமிழின் பெருமையை உலகுக்கு பரப்பியிருக்கிறார்கள்.G.U.Pope, Robert Caldwell, Constanzo Beschi ( வீரமாமுனிவர்) இவர்கள் எல்லாம் தமிழுக்காகஉழைத்தார்கள். தமிழை வெளியுலகத்துக்கு அறிமுகம் செய்தார்கள். நாம் என்ன செய்தோம்?  ரொறொன்ரோவில் இருக்கை ஒன்றை உண்டாக்குவதன் மூலம் தமிழை உலகமயமாக்கலாம். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலிருந்து இந்த  வாய்ப்பு எங்களைத் தேடி வந்திருக்கிறது. கனடாவின்இரண்டாம் தலைமுறை இப்போது  தலையெடுத்திருக்கிறது.முற்றிலும் கனடியச் சூழலில் வாழும் மூன்றாவது தலைமுறை தமிழை மறந்துவிடும். மிக  முக்கியமான ஒரு சந்தியில் நாங்கள் நிற்கிறோம். இந்தத்தலைமுறை  தாண்டினால் தமிழ் இருக்கை என்பது கனவாகிவிடும்.இதுதான் தருணம். இப்பொழுதே செய்யவேண்டும்.

முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அடுத்து ரொறொன்ரோ பல்கலைக்கழகம்என்பதன் தொடர்ச்சியாக தமிழர்கள் பரந்து வாழும் வேறு நாடுகளிலும் இவ்வாறான முயற்சிகளைமேற்கொள்ளும் எண்ணம் உண்டா?

ஆரம்பத்தில் நிறுவனத்தின் பெயர்  TamilChair Inc. இது அமெரிக்காவில் ஓர் அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. இதில் ஹார்வர்ட்என்ற பெயரே கிடையாது. எங்கள்  இலக்கு ஹார்வர்ட்டில்தமிழ் இருக்கை உண்டாக்குவது மட்டுமல்ல. உலகத்தில் பல பல்கலைக்கழகங்களில் இருக்கைகள்அமைப்பது. அதுதான் நோக்கம். எங்கள் முதல் முயற்சியான ஹார்வர்ட் முழுமையான  பின்னர்  ரொன்றொன்ரோவில் முயற்சி தொடங்கியிருக்கிறது.  இதைத்தொடர்ந்து தென் கரோலினாவில் திருமூலர் தமிழ்இருக்கைக்கான முயற்சி ஆரம்பமாகிவிட்டது. அதுபோல ஹூஸ்டனில் தமிழ் இருக்கைக்காக நிதிசேர்க்கிறார்கள். ஜேர்மனியில்  கோலன் பல்கலைக்கழகத்தில்தமிழ் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல வருடங்களாக நடந்தது. நிதி பற்றாக்குறையினால் சமீபத்தில் அதை மூடுவதற்கு முயற்சி நடந்தது. TamilChair Inc.  தற்காலிகமாக நிதி வழங்கி கல்விமையத்தின் ஆயுளை நீடித்திருக்கிறது.  ஆரம்பத்திலிருந்தேஉலகெங்கும் தமிழ் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு பல்கலைக்கழகங்களில் இருக்கை அமைக்கவேண்டும்என்பதே எமது குறிக்கோள். அது சிறிது சிறிதாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

 ரொறொன்ரோ தமிழ் இருக்கைசம்பந்தமாக வேறு ஏதாவது குறிப்பிட விரும்புகிரீர்களா?

ஒரு கதை ஞாபகம் வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியாவின்சனத்தொகை 40 கோடி, ஆனால் சுதந்திரத்துக்காக உயிரைக்கொடுத்து  போராடியவர்கள் வெறும் மூன்று லட்சம் பேர்தான்.  இப்போது இந்தியாவில் 1.35 பில்லியன் மக்கள் அப்படிபோராடிப்பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்.

கனடாவில் தமிழர்களின் சனத்தொகை 3 லட்சம். உலகத் தமிழர்களின் சனத்தொகை 8 கோடி.ஆனல் முதல் வருடத்தில் தமிழ் இருக்கைக்கு ஒரு மில்லியன் டொலர்  கொடுத்தவர்கள் வெறும் 600  பேர்தான்.  மேலும் 1200 பேர் முன்வந்தால் தமிழ் இருக்கை நாளைக்கேஉதயமாகிவிடும். எட்டுக்கோடி தமிழர்களில் எங்களுக்கு தேவை 1200 பேர்களின் உதவி. அவர்களிடம்மனம் இருக்கவேண்டும். பணமும் இருக்கவேண்டும். தமிழ் இருக்கை உருவான பின்பு அதனால் கிடைக்கும்பயனை அனுபவிக்கப் போவது 8 கோடி மக்கள்.

சிறுவயதில் நான் கற்ற ஒரு விசயம். நிற்கும் பஸ்சில் ஏறக்கூடாது. அது எப்போதுபுறப்படும், எப்போது போய்ச்சேரும் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஓடும் பஸ்சில் ஏறினால்அது நிச்சயம் இலக்கை அடையும். ஹார்வர்டு தொடங்கி வைத்த பஸ் ஓடும்போதே நாங்கள் ஏறிவிட்டோம்.இலக்கு இதோ தெரிகிறது.  

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2019 14:11

ஒரு லட்சம் டொலர் புத்தகம்

                     ஒரு லட்சம் டொலர் புத்தகம்

                          அ.முத்துலிங்கம்

புத்தகத்தின் தலைப்பே ஆச்சரியப்படுத்தியது. The Sadnessof Geography. புகழ்பெற்ற எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாச்சியின் நாவல் ஒன்றில் வரும்  வரியை தலைப்பாக ஆசிரியர் பயன்படுத்தியிருந்தார். புத்தகம் வெளிவந்த சில நாட்களுக்கிடையில் அதன்ஆசிரியரைத் தேடி  தொடர்பு கொண்டேன். ஓர் உணவகத்தில்சந்தித்தோம்.  முதல் ஐந்து நிமிடத்தில் நான்அவரிடம் கேட்ட  கேள்வி ‘ஏன் நீங்கள் புத்தகத்தைதமிழில் எழுதவில்லை?’ அவர் திகைத்து விட்டார். ஒருவரும் அவரிடம் அப்படியான கேள்வியைகேட்டிருக்கமாட்டார்கள். அவர் சொன்னார், ‘நான் இங்கே ஆங்கிலத்தில்தான் படித்தேன். ஆங்கிலத்தில்தான்சிந்தித்தேன். ஆகவே அந்த மொழியில் எழுதினேன்.’ ‘நீங்கள் கனடாவுக்கு வந்தபோது உங்கள்வயது 19. தமிழிலேயே படித்திருந்தபடியால் உங்களுக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது.எப்படி இது சாத்தியமாயிற்று?’ அவர் சொன்னார், ’என்ன செய்வது? 32 வருடங்கள் தமிழ் பேசவும்இல்லை. படிக்கவும் இல்லை. எழுதவும் இல்லை.  மறந்துவிட்டது, அதுதான் ஆங்கிலத்தில் எழுதினேன்.’

நூலை எழுதிய ஆசிரியருடைய பெயர் லோகதாசன் தர்மதுரை. வசதிக்காகஇனிமேல் அவரை தாசன் என்றே அழைப்போம். அவர் எழுதிய புத்தகத்தின் பெயரை சிலர் ’நிலவியலின்துயரம்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனக்கு என்னவோ  ’நிலங்களின் துயரம்’ பொருத்தமானது  போலத் தோன்றுகிறது. இது நாவல் இல்லை; சுயசரிதையும்இல்லை. ஒருவரின் வாழ்க்கை குறிப்புகள் என்று வைத்துக்கொள்ளலாம். யுத்தகாலத்தில் ஓர்இளைஞன் யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டு பல நாடுகளில் அலைந்து, அல்லலுற்று இறுதியாக16 மாதங்களுக்கு பின்னர் கனடா போய்ச் சேரும் கதை. இதில் கற்பனை கிடையாது. உண்மையாகநடந்த சம்பவங்களின் தொகுப்பு. ஒரு யுத்த காலகட்டத்தை அப்படியே பதிவு செய்திருப்பதால்இதை ஒரு காலத்தின் வரலாறாகவும் பார்க்கலாம்.

இலங்கையில் போர் நடந்தபோதும், அது முடிந்த பின்னரும் பலர்ஆங்கிலத்திலும், தமிழிலும் போர் இலக்கியங்கள் படைத்தனர். சிலதை போராளிகளே எழுதினார்கள்.சில நூல்கள் புலம்பெயர்ந்தவர்களால் எழுதப்பட்டன. ஆசிரியர் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியைநினைவுக் குறிப்புகளாக பதிந்துள்ளார். இவருடைய  பதின்ம  வயதில்நடந்த சம்பவத்துடன் கதை தொடங்குகிறது.  அவருடையபடிப்பு, போரினால் ஏற்பட்ட இன்னல்கள்,  வெளிநாட்டுப்பயணங்களில் சந்தித்த அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள்  என கதை விரிந்து கனடா போய் சேர்வதுடன் முடிவுக்குவருகிறது.  கனடாவில்   தாசன்  32 வருடங்கள் வாழ்ந்தாலும் அவரால் பழைய  வாழ்க்கையை மறக்கமுடியவில்லை. ராணுவம் சித்திரவதைசெய்கிறது, சிறையில் அவதிப்படுகிறார், கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். இப்படி கொடூரமானகனவுகள் தினம் அவரை துன்புறுத்தின. இறுதியில் பழைய ஞாபகங்களை எழுதுவதன் மூலம் இந்தஇம்சையை கடக்கலாம் என முடிவு செய்கிறார். ஏதோ  உந்துதலில்  ஒரு வருடம் முழுவதும் வேலையை துறந்து வீட்டிலே உட்கார்ந்துநூலை எழுதி முடிக்கிறார். இவர் நாள் குறிப்பு எழுதுகிறவர் அல்ல. அபாரமான ஞாபக சக்திஉள்ளவர்  என்பதால் அவரால் ஒவ்வொரு சிறு தகவலையும்மீட்க முடிகிறது. ஒரு சம்பவத்தை குறைத்தோ, கூட்டியோ, மறைத்தோ சொல்லவில்லை. வாசகர்களால்ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணம் உள்ளதை உள்ளபடியே எழுதியதுதான் என்று நினைக்கிறேன்.

இந்த நூலைப் படித்தபோது எனக்குத் தோன்றியதை ஆசிரியரிடம் கேட்டேன்.’ஆங்கிலம் தெரியாமல் தனி ஆளாகப் படித்து,  நாள்கூலியாகவேலை பார்த்து அதில் கிடைக்கும் ஊதியத்தில் பாதியை வீட்டுக்கு அனுப்பி, பரீட்சையில்வெற்றி பெற்று,  வேலையில் படிப்படியாக உயர்ந்து,இன்று 32 வருடங்கள் கடந்து Fortune 500 கம்பனி ஒன்றில் உயர் பதவி வகிப்பது  எத்தனை பெருமைக்குரிய விசயம். உங்களுடைய கனடா வாழ்க்கை அனுபவத்தை எழுதினால் பலர் பயன்பெற வாய்ப்புண்டு.இந்த நூலும் முழுமை பெறும். எழுதுவீர்களா?’ புன்னகை செய்தார். அதன் பொருள் என்ன? எழுதுவார்என்றுதான் நினைக்கிறேன்.

இந்நூலில் பல பகுதிகள் திகைப்பூட்டுவனவாகவும், இப்படியும்நடக்குமா என்ற கேள்வியை எழுப்புவனவாகவும், நெஞ்சை துணுக்குற வைப்பனவாகவும் இருக்கின்றன.முழுநூலை இங்கே சொல்லப்போவதில்லை. ஒன்றிரண்டு இடங்களை சுவாரஸ்யம் கருதி சொல்லலாம் எனநினைக்கிறேன்.

ஆரம்பமே திகிலுடன்தான் இருந்தது. அப்பொழுது தாசன் பதின்மவயதுச் சிறுவன்.  அதிகாலை பெரும் கூக்குரல்கேட்டு சட்டென்று விழித்து  திடீரென்று திசைதெரியாமல் ஒரு பக்கமாக ஓடுகிறான். ராணுவம் ஊரை சுற்றி வளைத்துவிட்டது. ஒரே கூச்சலும்குழப்பமுமாக இருக்கிறது. வயலில்  அவன் உயரத்துக்குமேல் வளர்ந்து நிற்கும் நெற்கதிருக்குள்  ஓடிஒளிந்து கொள்கிறான். ராணுவத்தினரின் பூட்ஸ் சத்தங்களும் ஆட்களை துரத்திப் பிடிக்கும்கூச்சலும், அதிகார கட்டளைகளும் கேட்கின்றன. ஒரு ஹெலிகொப்டர் இவனை நோக்கி மிகப் பதிவாகபறந்து வருகிறது. சேற்றுக்குள் போய் புதைந்து கொள்கிறான். இன்னொரு தடவை வட்டமடித்துவந்து ஹெலிகொப்டர் அவனை தேடிவிட்டு போகிறது. மாலையாகிறது. அன்று முழுக்க ஒன்றுமே உண்ணவில்லை,குடிக்கவும் இல்லை. இருட்டியதும் ராணுவம் போனபின்னர் வீட்டுக்கு திரும்புகிறான்,

ஒன்றிரண்டு சம்பவங்களை கடந்து போகவே முடியவில்லை. சிறுவனாயிருக்கும்போதேதாசனை பள்ளிக்கூட விடுதியில் பெற்றோர் சேர்த்துவிடுகிறார்கள். ஒரு முறை விடுமுறையைவீட்டிலே கழிப்பதற்காக தாசன் தனியாக விடுதியிலிருந்து  புறப்படுகிறான்.  இவன் ஏறிய ரயில் வண்டியில் எதிர்பாராத விதமாக சிங்களராணுவக்காரர்கள்  உட்கார்ந்திருந்தார்கள். இவன்ஒதுங்கிப் போய் ஒரு மூலையில் அமர்ந்தான். ஒருத்தன் வந்து இவனை எதேச்சையாகத் இடிப்பதுபோலதொட்டான். இவன் உடல் சுருங்கி மறுபக்கம் திரும்பியது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் அதை அவமானமாக எடுத்துக்கொண்டான். ராணுவக்காரன் தன் கைகளை இவனுடைய கால் சட்டைக்குள் நுழைத்தான்.அத்தனை ராணுவத்தினர் முன்னிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டான். வெட்கம்,கோபம், துயரம் ஆகிய உணர்ச்சிகள்  மேலிட வீட்டுக்குஓடியவன்  இந்த சம்பவம் பற்றி ஒருவருக்கும் மூச்சுவிடவில்லை. முதன்முதலாக இந்தப் புத்தகத்தில் தான் அது பற்றி எழுதப்பட்டிருக்கிறது.  வீட்டுக்குப்போனபின்னர்  ஓர் எண்ணம் முளைவிட்டது. எப்படியும்நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

தாசனுடையதகப்பன் நகைக்கடை உரிமையாளர். மிகப் பெரிய செல்வந்தர். கிராமத்திலே அவருக்குத்தான்முதல் மரியாதை. எந்தக் கடைக்குப் போய் என்ன பொருள் வாங்கினாலும் விலை கேட்கமாட்டார்.கடைக்காரன் சொல்லும் விலைக்கு காசுத் தாள்களை நீட்டுவார். மீதிப்பணத்தை வாங்கமாட்டார்;வாங்கினால் அது கௌரவக் குறைச்சல் என்று நினைப்பவர்.  ஒருநாள் சிறுவன் தாசன் தரையில் படுத்திருக்கிறான்.விடிந்துவிட்டது, யாரோ தரையை குனிந்து கூட்டும் சத்தம் கேட்டு  விழிக்கிறான். ஓர் இளம் பெண் அவனை எழுப்பாமல் அவன்படுத்திருந்த இடத்தை சுற்றி விளக்குமாற்றால் கூட்டியபடி நகர்கிறாள்.  தாயாரிடம் ஓடிப்போய் யார் இது என்று சிறுவன் கேட்கிறான்.தாயார் ‘நேற்று இரவு உன் அப்பா கூட்டி வந்தார்’ என்கிறார். சிறுவனுடைய இரண்டாவது அம்மாஇப்படித்தான் அவனுக்கு அறிமுகமாகிறார். ’ஏன் எனக்கு இன்னொரு அம்மா. ஒரு அம்மா  போதுமே’என்று சிறுவன் குழம்பிவிடுகிறான்.

இப்படிஅதிர்ச்சி தரும் சம்பவங்கள் பல.  தாசனின் அப்பாவுடையநகைக்கடையில் வியாபாரம் நின்றுவிட்டது. போர் நடக்கும்போது யார் நகை வாங்க வருவார்கள்?வருமானம் இல்லை, கையில் காசு இல்லாததால் வீட்டில் எந்நேரமும் சண்டை. தாசனின் அப்பாகாலை மாலை என்ற வித்தியாசம் இல்லாமல்   குடிக்கஆரம்பித்தார். ஒருநாள் அவர் வீட்டுக்கு வராததால் தாசன் அவரை தேடிப் போனான்.  பெரியம்மா  முறையான ஒருவர் வீட்டில்  அவனுடைய அப்பா குடிவெறியில் தரையில் கிடந்தார். அவரைதூக்கி வர முயன்றபோது கையை வீசி பலமாக முகத்தில் அடித்தார். தாசன் நிலைதடுமாறி நிலத்திலேவிழுந்துவிட்டான். கிராமத்துப் பெரிய மனிதர் கிடந்த நிலையை பார்த்து தாசனுக்கு அவமானமாகப்போனது. பக்கத்தில் கிருமி நாசினி போத்தல் இருந்ததால் அதை எடுத்து அப்படியே குடித்துவிட்டான்.மயங்கி கீழே விழும்போது அவன் சிந்தனை ‘அப்பாவுக்கு நல்ல பாடம் படிப்பித்துவிட்டேன்’என்பதாகவே இருந்தது. உடனேயே ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனதால்  ஒருவாறு தாசன்  உயிர் பிழைத்தான்.  இதன் பின்னர் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில்பெரிய பிளவு ஏற்பட்டது.

தகப்பனைப் பற்றிய உருக்கமான சம்பவம் ஒன்றையும் தாசன் பதிவுசெய்கிறார். தாசனுடைய அண்ணன் லண்டனிலிருந்து இந்தியா போயிருக்கும் செய்தி அவருடைய அப்பாவுக்குகிடைக்கிறது. மகனை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்று தகப்பன் விருப்பப்படுகிறார்.தாசன் அப்போது கனடாவில் இருக்கிறார். போர் மும்முரமாக நடந்த சமயம் என்றாலும் தகப்பன்இந்தியா போகவேண்டும் என அடம் பிடிக்கிறார். வேறு வழியில்லாமல் ஒரு போராளிக்குழுவின்படகில் ஏறி இந்தியா போகிறார். அவருடைய கெட்ட காலம் இலங்கை கடல்படை  படகை சுட்டு வீழ்த்துகிறது. தகப்பன் படு காயத்தோடுமன்னார் தீவு  கடற்கரையில் அனாதரவாகக் கிடந்தபோதுஅந்த வழியால் போன  பாதிரியார் ஒருவர் அவரை காப்பாற்றுகிறார்.

பயணத்தை மேலே தொடர்ந்து மகனைப் பார்க்கவேண்டும் என்று பிடிவாதமாகநிற்கிறார் தகப்பன். இவருடைய கடைசி மகன் இவரை மறுபடியும் போராளிக் கப்பல் ஒன்றில் ஏற்றிஅழைத்துக்கொண்டு ராமேஸ்வரம் போய்ச் சேருகிறார். அங்கே  உடல் நிலை மேலும்  மோசமாகி தகப்பன் இறந்துவிடுகிறார். சிறுவன் உதவியில்லாமல்அந்நிய நாட்டில் தவித்துப்போகிறான். அவனிடம் பிணத்தை புதைக்கக்கூட காசு இல்லை.  ஒரு காலத்தில் சாவகச்சேரியில் மிகப் பிரபலமான நகைக்கடையின் முதலாளியாக அறியப்பட்டவர்  ராமேஸ்வரத்தில் அடையாளம் இல்லாத கிடங்கில் அனாதையாகஅடக்கம் செய்யப்பட்டார்.

இங்கிலாந்திலிருந்து தாசன் புறப்பட்டு கனடாவின் மொன்ரியல்நகரத்தை அடைந்த  சம்பவ வர்ணனை திகில் நிறைந்தது.இப்படியும் நடக்குமா என்று ஒவ்வொரு வரி படிக்கும்போதும் சந்தேகம் தோன்றிக்கொண்டே இருந்தது.பிரான்ஸ் நாட்டில் ஒரு கை மட்டுமே உள்ள தமிழர் ஒருவர் தாசனுக்கு கள்ள பாஸ்போர்ட் செய்துகொடுத்தார். களவாடிய பிரெஞ்சுக் கடவுச்சீட்டு ஒன்றில் பழைய படத்தை நீக்கிவிட்டு தாசனுடையபடத்தை  கச்சிதமாகப் பொருத்தியிருந்தார்.  வித்தியாசம் ஒருவருமே கண்டுபிடிக்க முடியாது. அந்தபாஸ்போர்ட்டின் முடிவு தேதிக்கு இன்னும் 3 மாதம் மட்டுமே இருந்ததால் அது முடிவதற்கிடையில்எப்படியும் கனடா போய்ச் சேர்ந்துவிடவேண்டும். ஒரு அசட்டு துணிச்சலில் தாசன்  மொன்ரியல் விமானச் சீட்டை  வாங்கிவிட்டார்.  அவருடைய நண்பர் தாசனை ஹீத்ரோ விமான நிலையத்தில்இறக்கிவிட்டு திரும்பி பாராமல் போய்விட்டார். எல்லா பயணிகளும் போன பின்னர் கடைசி நேரத்தில்டிக்கட் கவுண்டருக்கு போய் டிக்கட்டை நீட்டினார்.  குடிவரவு அதிகாரிகள் அதிக நேரம் தன்னை விசாரிக்கமாட்டார்கள்என்று தாசன் கணக்குப் போட்டிருந்தார்.  டிக்கட்பெண் அவர்  பெயரைக் கேட்டார். ’அந்தோனி பிரங்கோய்’என்று சொன்னபோது தாசனுக்கே சிரிப்பு வந்தது. அவளுடைய  கேள்விகளுக்கு பாதி ஆங்கிலத்திலும் பாதி பிரெஞ்சிலும்பதில் கூறினார். பெண்ணுக்கு சந்தேகம் வலுத்தது. இவரிடம் பிரான்ஸ் தேசத்து கடவுச்சீட்டுஇருந்ததால் முழுக்க முழுக்க பிரெஞ்ச் பேசும் அதிகாரி வந்து இவரை குறுக்கு விசாரணை செய்யஆரம்பித்தார். முகத்தை கோபமாகவும், எரிச்சலாகவும், மன்றாட்டமாகவும் மாற்றி மாற்றி வைத்துஉடைந்த பிரெஞ்சு மொழியில் தாசன் பதில் கூறினார். அதிகாரிக்கு திருப்தியில்லை. பிரெஞ்சுதூதரகத்தை அழைத்து  கடவுச்சீட்டு நம்பரை கொடுத்துஅது உண்மையான பாஸ்போர்ட்டா என்று விசாரித்தார். தாசனுக்கு நடுக்கம் பிடித்தது. ஏனென்றால்அது திருடிய பாஸ்போர்ட். திருட்டுக் கொடுத்தவன் முறைப்பாடு செய்திருப்பான். ஆகவே அவர்நேரே சிறைக்கு போவதற்கு தயாரானார்.  ஆனால் திருட்டுக்கொடுத்தவன் என்ன காரணமோ முறைப்பாடு செய்யாததால் தாசன் தப்பினார்.

எல்லா தடங்கல்களும் நீங்கிய நிலையில் விமானம் புறப்படத் தயாராகநின்ற வாசலுக்கு ஓட்டமாக ஓடிச்சென்று  போர்டிங்அட்டையை நீட்டினார். அங்கேயும் ஒரு பெண் நின்றாள்.  நிதானமாக ’உங்கள் பெயர் என்ன?’ என்று ஆரம்பித்தாள்.இதற்கிடையில் விமானத்துக்குப் போகும் கதவை மூடிவிட்டார்கள். ’பூட்டவேண்டாம், நான் இந்தவிமானத்தை பிடிக்கவேண்டும்’ என்று தாசன் கத்தியும் பிரயோசனமில்லை. பதறியபடி நின்றதால்அவர் மூளை வேலை செய்வதை நிறுத்திவிட்டது.  பெண் அசரவில்லை. மிக அமைதியாக  ’நீங்கள் எதற்காக போகிறீர்கள்?’ ’வேறு எதற்கு? நான்ஒரு சுற்றுலாப் பயணி.’   ’மிக நல்லது. சுற்றுலா முடிந்த பின்னர் நீங்கள் திரும்புவதற்கான விமான டிக்கட்டை காட்டுங்கள்.’ தாசனிடம் திரும்புவதற்கான விமான டிக்கட் கிடையாது. பையில் இருந்த பணத்தைஎல்லாம் கொடுத்து லண்டன் திரும்புவதற்கான டிக்கட் ஒன்றை அங்கேயே வாங்கினார்.   பெண் தன்  அதிகாரத்தை பாவித்து பூட்டிய கதவை திறந்தார். அரைமணிநேரம் தாமதமாக தாசன் விமானத்துக்குள் நுழைந்தபோது  பயணிகளின் கண்கள் அவரை எரிப்பதுபோல பார்த்தன. இடப்பக்கமோ வலப் பக்கமோ பார்க்காமல் நெஞ்சு படபடக்க நேரே போய் தன் ஆசனத்தில் அமர்ந்தார். விமானம் பறந்த முழுநேரமும் நெஞ்சு படபடப்புஅடங்கவே இல்லை.

மொன்ரியலில்  விமானம்இறங்கியதும் பயணிகள் அவசரமாக வெளியேறினர். தாசன் பொறுமை காத்து கடைசி ஆளாக இறங்கி மெதுவாகநடந்தார். குடிவரவு அதிகாரியை நடுக்கத்துடன்   அணுகி மனனம் செய்து வந்ததை சொன்னார். ‘நான் சிறீலங்காவைவிட்டு வெளியேறிய தமிழன். கனடாவில் தஞ்சம் கோருகிறேன்.’ அதிகாரி வியப்புறவில்லை. ஒருநிமிடம் கழித்து எழுந்து நின்று  தாசனை அழைத்துப்போய்ஒரு சின்ன அறையில் உட்கார வைத்தார். ஒரு மேசை. இரண்டு நாற்காலிகள்; யன்னல்கூட இல்லை.சிறைதான் என்று தாசன் நினைத்தார். சிறிது நேரம் கழித்து ஓர் அலுவலர் உள்ளே நுழைந்தார்.அவர் கையிலிருந்த தட்டத்தில் பலவிதமான உணவு வகைகளும், குளிர் பானமும் இருந்தன. உணவுத்தட்டை மேசையில் வைத்து ‘ ஐயா, கனடாவுக்கு நல்வரவு’ என்றார். தாசனுக்கு அந்த வார்த்தைகள் உண்மையானவை என்பதை உணர பல நிமிடங்கள் தேவைப்பட்டன.

வாழ்க்கை நினைவு நூல்கள் பல வந்திருக்கின்றன. இந்த நூல் அப்படிஎன்ன சிறப்பு பெற்றது? ரொறொன்ரோ பல்கலைக்கழக நூலகம் இதை ஆக விலைப்பட்ட நூல் (BestSeller) என்று அறிவித்திருக்கிறது.  ஈழத்துப்போர் பின்னணியில் பல நூல்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கட்டுரைகளாகவும்,  நாவல்களாகவும்,சுயசரிதைகளாகவும் வெளியாகியுள்ளன. முன்னைநாள் போராளிகள், போரை நேரில் அனுபவித்தவர்கள்,வெளிநாட்டில் இருந்து போரை அவதானித்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என எல்லோருமே எழுதியிருக்கிறார்கள்.  இந்த நூலின் சிறப்பு இது ஒரு சாதாரண பதின்ம வயதுப்பையனின்  குரலில் உண்மைக் கதையாகச் சொல்லப்பட்டிருப்பதுதான்.இதில் வெளிப்பட்ட உண்மை ஒளியில்  ஒரு நம்பகத்தன்மைகிடைக்கிறது. நூல் முழுக்க விறுவிறுப்புடன் நகர்கிறது. அலங்கார வார்த்தைகள் இல்லை.செயற்கையான விவரிப்புகளோ, பூச்சுக்களோ கிடையாது. மொழிநடை வித்தை கிடையாது; உத்திகள்இல்லை. எளிமைதான் இதன் பலம். அடுத்து என்ன என்று மனம் துடிக்க சம்பவங்கள் தானாகவே நகர்கின்றன. இந்த நூல் ஒரு வரலாற்றை  சொல்வதுடன் ஓர் இளைஞன் கொடியதில் இருந்து நல்லதைநோக்கி ஒடும் கதையை பதிவு செய்கிறது.

ரொறொன்ரோவில் அரசு அனுமதித்த ஆகக் குறைந்த கூலி ஒருவருக்குமணித்தியாலத்துக்கு 14 டொலர். ஒருவர் ஆறுமாதம் ஓய்வெடுத்து  ஒரு புத்தகத்தை எழுதிமுடித்தால் அந்தப் புத்தகத்தின்பெறுமதி ஏறக்குறைய 17,000 டொலர்களாக இருக்கும்.  இந்தக் கணக்கின்படி தாசன் ஒருவருட காலம் ஓய்வெடுத்து  புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறார். இவர்Fortune 500 கம்பனி ஒன்றில் உயர் பதவி வகித்தவர். இவருடைய ஒரு வருட உழைப்பு 100,000 டொலர்கள் என்று  பார்த்தால் இந்தப் புத்தகத்தின் உண்மையான பெறுமதி  ஒரு லட்சம் டொலர்கள். கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.ஆனால் வாசித்து முடிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு! அதற்கு விலையே இல்லை.

END

.  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2019 14:09

ஐயாவின் கணக்குப் புத்தகம்

ஐயாவின் கணக்குப்புத்தகம்

அ.முத்துலிங்கம்

ஐயா ஒரு நாள்என்னை ஒட்டு மாங்கன்று வாங்க அழைத்துப் போனார். என்னுடைய வாழ்நாளில் ஐயா அழைத்து அவருடன் நான் மட்டும் போனது அதுவே முதல் தடவை;கடைசியும். வீட்டில் ஏழு பேர் ஐயாவுடன் போகக்கூடிய தகுதி பெற்றிருந்தும் ஐயா என்னையேதேர்வு செய்திருந்தார். அது அளவில்லாத பெருமையாக இருந்தது. அவர் மனம் மாறுவதற்கிடையில்உடை மாற்றி புறப்பட்டேன். ஒட்டுமாங்கன்று வாங்க முடியாது, நாங்கள்தான் உண்டாக்கவேண்டும்.சாதரண மாங்கன்று ஒன்றை வாங்கி நல்ல பழம்தரும் மரக் கிளையுடன் ஒட்ட வைத்து தினம்  தண்ணீர் ஊற்றவேண்டும். அந்த வேலைதான் எனக்கு தரப்பட்டது.என் சகோதரர்களின் பொறாமையை தக்க வைப்பதற்காக நான் என் ஏமாற்றத்தை வெளியே காட்டவில்லை.

தினமும் அதிகாலைசிறாப்பர் வீட்டுக்குப் போய் நான் மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவேன். சிறாப்பர் என்பதுஅவருடைய பெயர் அல்ல. அப்பொழுதெல்லாம் வங்கிகளில் காசாளர்களை சிறாப்பர் (shroff) என்றேஅழைத்தார்கள். இவர் தன் வீட்டிலும் ஒரு வங்கி நடத்தினார். ஐயா இவரிடம் காசு கடன் வாங்குவார்.அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து வட்டி வாங்கிப் போவார். அவருடைய கன்னச் சதைகள்தண்ணீர் நிரப்பியதுபோல ஊதிக்கிடக்கும். சிரித்தால் கண் இமைகள் தானாகவே மூடிவிடும்.ஒரு தாரா நடப்பதுபோல போல கால்களை அகட்டி வைத்து நடப்பது வேடிக்கையாக இருக்கும். நானும்சிறுவயதில் அப்படித்தான் நடப்பேனாம். எனக்கும் ஒருகாலத்தில் வீட்டிலே பட்டப் பெயர்சிறாப்பர். பின்னர் அது வழக்கழிந்துவிட்டது.

ஐயாவிடம் முதிரைமரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும்நல்ல மணம் வீசும்.  பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்;கிட்டப்போய் தொடமுடியாது. அதற்குள் நான் விரும்பிய இரண்டு பொருட்கள் இருந்தன. ஒன்றுஎங்கள் சாதகக் கட்டுகள். சாத்திரியார் வரும்போது அவை வெளியே எடுக்கப்படும். இரவிரவாகவீட்டிலே சாதகம் பார்ப்பார்கள். இரண்டாவது, ஒரு தடித்த அட்டை போட்ட தொக்கையான கணக்குப்புத்தகம். குத்து விளக்கை கொளுத்திவைத்து அந்த வெளிச்சத்தில் ஐயா, வயலட் பென்சிலை நாக்கில்தொட்டு தொட்டு கணக்கு எழுத்துவார். பின்னர் கணக்குப் புத்தகம் மரப்பெட்டிக்குள் வைத்துபாதுகாக்கப்படும்.

ஐயாவுக்கு நிரந்தரவருமானம் கிடையாது. அவராக ஒரு வேலைக்குச் சென்றதில்லை. புகையிலை வியாபாரம்தான். சிப்பம்சிப்பமாக கட்டி ரயிலில் கொழும்புக்கும், கண்டிக்கும், மாத்தளைக்கும், கேகாலைக்கும்அனுப்புவார். பின்னர் மூன்று மாதத்துக்கு ஒரு முறை புறப்பட்டு இந்த ஊர்களுக்கெல்லாம்சென்று பணத்தை அறவிட்டு வருவார். அநேகமாக பாதி பணம்தான் கிடைக்கும். அம்மா ஏதும் தேவைக்குகாசு கேட்டால் மீதி கடன் அறவிட்ட பின்னர் தருவதாகச் சொல்வார். அப்படி ஏதும் வந்ததாகத்தெரியவில்லை. தினம் பெட்டகத்தை திறந்து கணக்குகள் எழுதிவிட்டு மறுபடியும் பூட்டிவைப்பார்.

ஐயாவுக்கு புத்தகங்கள்எதிரி. வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதிகமாக உபயோகம் கண்டதும் அந்தப்புத்தகம்தான். வீட்டிலே பல்லி யாராவது உடம்பிலே விழுந்து கொண்டேயிருக்கும். ஐயா உடனேபஞ்சாங்கத்தை புரட்டி பலன் பார்ப்பார். நாலு நாள் கழித்து அது எப்படி பலித்தது என்றுநாலு பேருக்குச் சொல்வார். பஞ்சாங்கத்தை தவிர வீட்டிலே பாடப்புத்தகங்களும் இருந்தன.மூத்த அண்ணர் ஒருவர்தான் புதிதாக புதிய மணத்துடன் புத்தகத்தை அனுபவிப்பார். அதன் பின்னர்அது வரிசையாக ஒவ்வொரு வருடமும் கைமாறி கீழே வரும். என் முறை அணுகும்போது, முன் அட்டைபின் அட்டை எல்லாம் கிழிந்துபோய் பரிதாபமான நிலையில் தொட்டால் ஒட்டிப் பிடிக்கும் தன்மையுடன்இருக்கும். எனக்குப் பின்னர் இன்னும் இரண்டு பேருக்கு அது போகவேண்டும்.

நாவல்களையும்,வாரப்பத்திரிகைகளையும் இரவல் வாங்கி ஐயாவுக்குத் தெரியாமல் படிப்பேன். அம்மா என் பக்கம்என்றபடியால் விசயம் ஒருமாதிரி போய்க்கொண்டிருந்தது. ஒரே எதிரி தம்பிதான். ஐயாபோல அவனும்புத்தகங்களுக்கு எதிரி. என்னை எப்பொழுதாவது நாவலுடன் பார்த்தால் ஐயாவுக்கு மூட்டிவிடுவான்.அப்படியிருந்தும் பாடப் புத்தகத்துக்குள் ஒளித்து வைத்து திகம்பரசாமியார் முழு நாவலையும்படித்துவிட்டேன்.

பஞ்சாங்கத்தில்  பலன் பார்ப்பதோடு மட்டும் ஐயாவுக்கு பல்லியுடனானசம்பந்தம் முடிவுக்கு வரவில்லை. ஐயாவின் வாழ்வில் பல்லி பெரும் பங்கு வகித்திருக்கிறது.அவருக்கு இரண்டுதாரம். நாங்கள் ஏழு பேர் இரண்டாம் தாரத்துக்கு பிறந்தவர்கள். முதல்தாரத்துக்கு இரண்டு பிள்ளைகள். முதல் தார மனைவி இறந்தவுடன் பிள்ளைகளைப் பார்க்க ஐயாவுக்குஆள்தேவை. நல்லூரில் இருந்து ஒரு பெண்ணின் சாதகத்தை தரகர் அவசரமாகக் கொண்டு வந்தார்.சொந்தக்காரர்கள் நெருக்கினார்கள். ஐயாவால் முடிவெடுக்க முடியவில்லை. கோயில் சுவரில்ஏறிக்குந்திவிட்டார். ஏதாவது ஒரு சைகை கிடைத்தால்தான் இறங்குவதாக சங்கல்பம். காலையில்ஏறியவர் மதியம் ஆகியும் இறங்கவில்லை. பின்னேரமும் மறைந்து  வானத்திலிருந்து இருட்டு மட்டும் இறங்கியது. ஐயாவுக்குபசியில்  கண் மங்கியது. அப்போது ஒரு பல்லி சத்தம்போட்டது. அதுக்கும் பசி. ஐயா எதிர்பார்த்த சம்மதம் கிடைத்து பொத்தென்று குதித்தார்.திருமணம் முடிந்து நாங்களும் பிறந்தோம்.

அம்மா எப்படி15 வயதில் இரண்டாம் தாரமாக இரண்டு பிள்ளைகளுடைய ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டார் என்பதுஇன்றைக்கும் புதிர்தான். அந்தக் காலத்தில் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்? பெரியவர்கள் சொன்னதைக் கேட்கவேண்டியதுதானே.  மணமுடித்து வரும்போது அவருக்கு நீண்ட கூந்தல் இருந்ததுஎன்று சொல்வார்கள். தூங்கும்போது ஒரு தலையணையில் அவர் தலையும் இன்னொரு தலையணையில் அவர்கூந்தலும் கிடக்குமாம். ஒருநாள் நான் அம்மாவிடம் நேரில் கேட்டுவிட்டேன்.  அம்மா ஏன் நீங்கள் சிரிப்பதில்லை. அவர் சிரித்தார்;அது முழுச் சிரிப்பு இல்லை. இரண்டாம் பரிசு பெற்ற ஒருவரின் சிரிப்பு.

ஐயாவுக்கும் எங்களுக்குமிடையே  நிறையத் தூரம் இருந்தது. அவர் என்னைத் தூக்கியதுநினைவில் இல்லை. தலையை தடவியது கிடையாது. நான் பெரிய குளப்படிக்காரன் என்று அவர் நினைத்திருக்கக்கூடும்.சின்ன வயதில் வீட்டில் உள்ள பொருள்களை உடைத்துவிடுவேன். ஒருமுறை அம்மாவுடைய வெண்கலக்குடத்தை போட்டு நெளித்துவிட்டேன். இன்னொரு தடவை ஐயா அருமையாகப் பாதுகாத்த சுவிஸ் மணிக்கூட்டைஉடைத்தேன். ஆனால் ஐயாவால் மன்னிக்க முடியாத ஒரு குற்றத்தை நான் செய்தேன். எங்களிடம்மிகப் பழமையான கருங்காலி மரத்தில் செய்த கட்டில் ஒன்று இருந்தது. நாலு பக்கமும் நுளம்புவலை போடுவதற்கு வசதியாக மரத்தூண்கள் இருக்கும். ஒருநாள் இந்த மரத்தூணை எவ்வளவு தூரத்துக்குவளைக்கலாம் என்று பரீட்சித்துப் பார்த்தபோது அது படாரென்று பெரிய சத்தத்துடன் முறிந்தது.ஐயாவின் கண்களில் முதலில் கோபமும் பின்னர் சோகமும் தெரிந்தது. அது பரம்பரையாக வந்தகட்டில். அவருடைய மனதில் அது எத்தனை பெரிய துயரத்தை உண்டாக்கியிருக்கும். நான் ஓடுவதற்குதயாராகவே இருந்தேன். ஆனால் அவர் என்னை தண்டிக்கவே இல்லை. அதன் பின்னர் ஐயா வெளியே புறப்படும்போதுவீட்டில் அத்தனை பேர் இருந்தாலும் என்னை மட்டும் தனியே அழைத்து இப்படி சொல்வார். ‘சுவர்,தூண்கள், கூரை பத்திரம். நான் திரும்பும்வரை பார்த்துக்கொள். உடைத்துவிடாதே.’

ஒரு தடவை எனக்கு ஒரு ரூபாகிடைத்தது. வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் எனக்கு கொடுத்தது. அந்தக் காலத்தில் அதுமிகப் பெரிய காசு.  நான் அதுவரை சில்லறைக் காசுகளைத்தான் பார்த்திருக்கிறேன். எனக்கு தாளாக ஒரு ரூபாகிடைத்திருந்தது.  மூளையில் கனவு தொடங்கிவிட்டது.ஆங்கிலப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து ஒவ்வொருநாளும் தொட்டுப்பார்ப்பேன்.  இந்தச் செய்தி ஐயாவின் காதுகளுக்குஎப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டது. ஏதோ அவசரத்துக்கு அவர் என்னிடம் ஒரு ரூபா கடன் கேட்டார்.ஒரு பக்கம் பெருமையாக இருந்தது. திரும்பக் கிடைக்குமா என்ற அச்சமும் என்னை திக்குமுக்காடவைத்தது. என் முழுச் செல்வத்தையும் கேட்கிறார். எப்படி மறுக்கமுடியும்? அந்த புதுத்தாளைஒருமுறை ஆசைதீர தடவிப்பார்த்துவிட்டு கொடுத்தேன். கொடுத்த கணமே பெரும் சோகம் என்னைக்கவ்வியது. ஒரு வாரம் கழித்து ஐயாவிடம் கடனைக் கேட்டேன். அடுத்த வாரம் என்றார். பொறுத்திருந்துஅடுத்த வாரமும் கேட்டேன். ’இப்ப அவசர வேலையாக இருக்கிறேன். பிறகு கேள்’ என்றார். இப்படிதினம் நான் கேட்பதும் ஒவ்வொருவிதமான பதில் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒரு கடிதம் எழுதிப்பார்த்தேன், அதற்கும் பதில் இல்லை. ஆறு மாதம் ஓடிவிட்டது. அவர் ஒருநாள் மரக்கட்டிலில்ஓய்வாக உட்கார்ந்திருந்தபோது மடக்கினேன். ‘என்னுடைய காசு’ என்றேன். ’என்ன காசு?’ என்றார்.எனக்கு தலை சுழன்றது. வீடு சுழன்றது. என்ன விளையாடுகிறாரா? அவருக்கு மறந்துவிட்டது. என் முகத்தை திருப்பி ஐயாவுடன் நான் பலநாள்பேசவில்லை. நான் கோபத்தில் அவருடன் பேசவில்லை என்பது ஐயாவுக்கே தெரியாது.

கொழும்பு, கண்டி போன்ற வெளியூர்களுக்குஐயா போகும்போது வீடு பெரும் தடல்புடலாக இருக்கும். அம்மா சுழன்று சுழன்று வேலை செய்வார்.ஐயாவுக்கு வேண்டிய பலகாரங்களைச் சுட்டு பெட்டிகளில் அடைப்பார். சூட்கேசை இரண்டுநாள்முன்னரே அடுக்கினாலும் ஐயா மறுபடியும் அடுக்குவார். ஐயா திரும்பும்வரைக்கும் அம்மாபதற்றமாகவே இருப்பார். ஒருமுறை ஐயா போய் பல நாட்களாக கடிதம் இல்லை. திடீரென்று ஒருநாள்தந்தி வந்தது. அம்மா குழறி அழத்தொடங்கினார். தந்தியின் வாசகம் இதுதான். ‘நான் அநுராதபுரம்ரயில் ஸ்டேசனில் சேமமாக இருக்கிறேன்.’ அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொழும்பிலிருந்துபுறப்பட்ட ரயில் பாதி வழியில் கவிழ்ந்து பலர் உயிரிழந்து விட்டனர். இந்தச் செய்தி எங்களுக்குதெரியாது.  ஐயா சிறு காயத்துடன் தப்பி காட்டுவழியில் நடந்து அநுராதபுரம் ஸ்டேசனில் நின்று தந்தி கொடுத்திருக்கிறார். ஐயா வீட்டுக்குவந்த பின்னரும் அம்மாவின் அழுகை ஒருவாரமாக ஓயவில்லை.

அபூர்வமாக ஐயா சந்தோசமாகஇருந்திருக்கிறார். பெரிதாக குடிக்கும் பழக்கம் இல்லை. கள்ளுக்கொட்டில் போனதே கிடையாது.வீதியிலே ஆடி ஆடி நடந்தது கிடையாது. எப்பொழுதாவது அவருடைய வெளியூர் வியாபார சிநேகிதர்கள்வந்தால் டவுனுக்கு போய் பிராண்டி வாங்கிவந்து நண்பரும் அவருமாக மரக்கட்டிலில் உட்கார்ந்துகுடிப்பார்கள். மகிழ்ச்சி அப்படியே துள்ளும். தொடையிலே தாளம்போட்டு பாட்டுப் பாடுவார்.எங்களை கைகாட்டி அருகில் வரும்படி கூப்பிடுவார். நாங்கள் போகமாட்டோம். இவர் வேறு யாரோஎன்று எங்களுக்குத் தோன்றும்.

ஒருவர் வாழ்ந்த மிக நீண்டவாழ்க்கையில் இப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டுமே நினைவில் வருகின்றன. சிதறியிருக்கும்புள்ளிகளை  தொடுத்து ஒட்டகம் உண்டாக்குவதுபோலஇந்தச் சம்பவங்களின் கூட்டுத் தொகைதான் என் ஐயாவின் வாழ்க்கை. எங்கள் வீட்டில் நிறையபலாமரங்கள் இருந்தன. அவற்றைக்  கயிறு கட்டிஇறக்கி ஊர்க்காரருடன் பங்குபோடுவோம். என்னுடைய இரண்டாவது அண்ணர் கொடுக்கு கட்டிக்கொண்டுமரம் ஏறினார். ஒரு பக்கம் கத்தியையும், மறுபக்கம் கயிற்றின் நுனியையும் செருகியிருந்தார். இதுவே அவருக்கு முதல் தடவை. உச்சக் கொம்பில்பெரிய பழம் தொங்கியது. கயிற்றினால் காம்பைக் கட்டினார். ஒரு கிளையின் மேலால் கயிற்றை கீழே விட்டார். ஐயா கயிற்றை இழுத்துப் பிடிக்கஅண்ணர் காம்பை வெட்டினார். பலாப்பழம் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது. கயிற்றுக்கட்டுக்கு மேலே வெட்டாமல் அண்ணர் கீழே வெட்டிவிட்டார். அண்ணரின் கால்கள் நடுங்கின.அவருக்கு கீழே நூறு அடி காற்று. அப்பொழுது ஐயா சொன்னது மறக்க முடியாதது. ‘சரி, மகனே.கத்தியையும் கயிறையும் ஞாபகமாக மேலே எடுத்துப்போனாய். மூளையை மட்டும் கீழே விட்டுவிட்டாய்.சரி, களைத்துப் போயிருப்பாய். மெதுவாக இறங்கு.’ அருமையான பழம் சிதறிப் போனதில் ஐயாவுக்குபெரும் கோபம்.

ஒருமுறை என்னிலும் அந்தக்கோபம் திரும்பியது. எனக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசை. ஆனால் வீட்டில் இருந்த ஐயாவின்சைக்கிளை பார்க்கலாமே ஒழிய  தொடமுடியாது. ஐயாவைபார்க்க ஒருத்தர் தொலை தூரத்திலிருந்து அடிக்கடி வருவார். அவர் தன் சைக்கிளை யானை கட்டுவதுபோலபெரிய சங்கிலியால் கட்டி ஒரு மரத்துடன் இணைத்துவிடுவார். ஒருநாள் அவர் வந்தபோது ஐயாஇல்லை. வழக்கம்போல சைக்கிளை கட்டாமல் சாய்த்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்தார். அந்தத்தருணம் கடவுளால் அருளப்பட்டது. அதை தவறவிட்டால் வாழ்நாள் முழுவதும் துக்கிப்பேன். நான்சைக்கிளை மெதுவாக உருட்டி வெளியே கொண்டுவந்து ஏறி ஓட்டினேன். எங்கள் கிராமத்தில் எங்கேசுற்றினாலும் 3, 4 தெருக்கள்தான். நான் பல சாகசங்கள் செய்தபடி தெருக்களில் ஓட்டினேன்.இருந்தும், எழும்பியும், குனிந்தும், குனியாமலும், கையை விட்டும், விடாமலும், நின்றும்,நில்லாமலும், மிதித்தபடியும், மிதிக்காமலும் வேகமாக ஓட்டினேன். தூரத்தில் ஐயா வருவதுபுழுதியில் தெரிந்தது. சைக்கிளை திருப்பினேன்; அது திரும்பவில்லை. பிரேக் பிடித்தேன், அது பிடிக்கவில்லை. என் சைக்கிள் ஐயாவின் சைக்கிளோடு மோதி, ஐயா மல்லாக்காக விழுந்தார்.நான் குருவிபோல சட்டென்று எழும்பி மறைந்துவிட்டேன்.

அன்று நான் வீட்டுக்கு திரும்பவில்லை.மாலையாகும் வரைக்கும் வீதிகளில் சுற்றினேன். பசி தாங்க முடியாமல் மெதுவாக வீட்டுக்குள்எட்டிப் பார்த்தேன். ஐயா காத்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் கால் செருப்பைக்கழற்றி என்னை அடிக்க வந்தார். நான் வீட்டைச் சுற்றி மூன்று தரம் ஓடினேன். பின் நாளில்இந்தச் சம்பவதை விவரிக்கும்போது நான் இப்படி எழுதினேன். ’சப்பாத்தை தூக்கிக்கொண்டுராசகுமாரன் சிண்டரெல்லாவை துரத்தியதுபோல அப்பா என்னை துரத்தினார். எவ்வளவு துரத்தினாலும்ஐயாவின் செருப்பு என் முதுகை சந்திக்கவே இல்லை.’

ஐயாவுக்கு வயதானபோது அவரால்வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை. நிறுத்தலாம் என நினைத்தார், அனால் பொருட்களைக் கடனாகவாங்கியவர்களின் பட்டியல் மிக நீண்டதாக இருந்தது. எத்தனை முயன்றும் பணத்தை மீட்க முடியவில்லை.கடன்காரர்கள் நெருக்கத் தொடங்கினார்கள்.  ஐயாவுக்குவேறு வழியில்லை. மூன்று தலைமுறை கண்டு வந்த  பெரிய காணி ஒன்றை விற்று  கடனை அடைத்தார். அப்பொழுது நான் கணக்காளர் பரீட்சைக்குபடித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒருவாறு விசயம் புரிந்தது. 30 வருடமாக ஐயா செய்த வியாபாரம்நட்டத்தில்தான் ஓடியது. அவர் வியாபாரம்  செய்திருக்கவேண்டியஅவசியமே இல்லை. ஆரம்பத்திலேயே காணியை விற்றிருந்தால் அந்தக் காசிலேயே எங்கள் காலத்தைஒட்டியிருக்கலாம். இதை நான் ஐயாவிற்கு சொல்லவே இல்லை. அவர் மனது கஷ்டப்பட்டிருக்கும்.வீட்டிலே ஓர் ஆண்மகன் எப்படி சும்மா இருப்பது? வியாபாரம் செய்வதுபோல ஒரு பாவனை இருக்கவேண்டும்.அப்பொழுதுதானே மரியாதை. 

ஐயாவுக்கு ஓர்அண்ணர் இருந்தார். பெரிய ஐயா என்று அழைப்போம். அவர் என்ன செய்தார் என்பது தெரியாது.  எந்த நேரமும் அவருக்கு ஒரு தேவை இருக்கும். மிகஉயரமாக, மேல் சட்டை அணியாமல் முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிப்பார். கைகளைத் தொட்டால்மரப்பட்டை போல இருக்கும்.  ஏதாவது உதவி கேட்டுவருவார். ஒரு நாள் இரவு சூள் பிடித்துக்கொண்டு இலைகளை மிதித்தபடி அவசரமாக வந்தார்.அப்பொழுதுதான் முதன் முதலாக சூள் என்னவென்று பார்த்தேன். தென்னம் பாளையை கீறி பற்றவைத்ததீப்பந்தம் அது.  ஐயாவுடன் ஏதோ சத்தமாக பேசிவிட்டுயோசனையுடன் திரும்பினார். தீப்பந்தத்தில் அவர் நிழல் பின்னால் விழுந்தது. அது ஏதோ சோகச்செய்தி சொன்னதுபோல பட்டது.

அடுத்தநாள்அதிகாலை பெரும் ஆரவாரம் கேட்டு எழுந்தேன். எல்லோரும் அலறியடித்துக்கொண்டு ஓட நானும்ஓடினேன். தண்டவாளத்தை தாண்டியதும் ஒரு பெரிய மரத்தின் உச்சியில் பெரிய ஐயா தூக்கில்தொங்கினார். அவருக்கு வயது எழுபதுக்கு மேலே. எப்படி அத்தனை உயரம் ஏறினார், எதற்காகதற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. ஒருத்தருக்கும்  கேடு நினைக்காத மனிதப் பிறவி அவர். ஐயாவின் கண்களில்நீர் வழிந்ததை முதல்முறை பார்த்தேன். இரண்டாவது தடவை அம்மா இறந்தபோது கண்ணீர் விட்டார்.பெரிய ஐயாவுக்கு ஏதோ துயரம் இருந்தது. ஐயா அதைத் தீர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.மிக உயரத்தில் ஒற்றைக் கயிற்றில் அவர் உடல் ஆடியது மறக்கமுடியாத காட்சியாக நிற்கிறது.

ஒட்டுமாங்கன்றுஎப்பொழுது காய்க்கும் என்று ஐயா பார்த்துக்கொண்டே இருந்தார். அது காய்க்க முன்னரே ஓர்இரவு தனிமையில் இறந்துபோனார். நாங்கள் எல்லோரும் கொக்குவிலில் கூடினோம். ஐயாவை அவருடையமரக்கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். ஒரு காலத்தில் தண்டவாளத்தை ஒரு கையால் தூக்கியவர்,ஊரில் பிரபலமான சண்டியனை ஒற்றை விரலால் நெஞ்சில்தொட்டு நிறுத்தியவர். அவர் உடலை பார்த்துதிடுக்கிட்டேன். சதைகள் உருகி வெறும் எலும்புக்கூடுதான் எஞ்சியிருந்தது. 31ம் நாள்காரியங்கள்  முடிந்த பின்னர் ஐயாவின் பெட்டகத்தைதிறந்து ஆராய்ந்தபோது சாதகக் கட்டுகளை காணவில்லை. வேறு பொருட்களும் மறைந்துவிட்டன.ஆக மிஞ்சியது கணக்குப் புத்தகம்தான். நான் அதை எடுத்துக்கொண்டேன்.

அப்பொழுது சாட்டர்ட்கணக்காளர் பரீட்சையில் சித்தியடைந்து நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆகவே ஐயாவின்கணக்குப் புத்தகத்தை ஆராயவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது. கணக்காளர் படிப்பில்ஒற்றை பக்க கணக்கு, இரட்டைப் பக்க கணக்கு என இரண்டு வகை இருந்தது. இரண்டுக்கும் இடைப்பட்டகணக்குத்தான் ஐயாவுடையது. அவராக உண்டாக்கியது. புத்தகத்தில் சிட்டை கணக்குகள், ரசீதுகள்,காசு வரவுகள், செலவுகள், கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் என சகலதும் இருந்தன. ஆனால் என்னுடையகணக்காளர் மூளையில் ஒன்றும் ஏறவில்லை. ஒருவருடைய பெயரை எழுதி வெட்டியிருப்பார். அவர்கடனை தந்துவிட்டாரா அல்லது இறந்துவிட்டாரா?

ஒவ்வொரு மாதமுடிவிலும்கோடு இழுத்து புதிய மாதம் தொடங்கியது. எப்படி இந்தப் புத்தகம் அவருக்கு உதவியது என்பதுபுரியவே இல்லை. திடீரென்று ஒரு பக்கத்தில் வரவேண்டிய கணக்குகள் இருந்தன. அதிலே 10– 15 பேர்கள். அந்தக் கடன்கள் வந்தனவா என்றும் தெரியவில்லை. அடுத்த பக்கத்தில் கொடுக்கவேண்டியவர்கள்கணக்கு. பெயர்களை வரிசையாக  படித்துக்கொண்டேவந்தேன். பல பெயர்கள் எனக்கு தெரிந்த பெயர்கள்தான். ஒரு பெயரில் கண் நின்றது. சிறாப்பர்– ரூ 1.00. அதன் பின்னர் என்னால் ஒன்றுமே படிக்க முடியாமல் போனது. புத்தகத்தை மூடினேன்.

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2019 14:07

A. Muttulingam's Blog

A. Muttulingam
A. Muttulingam isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow A. Muttulingam's blog with rss.