A. Muttulingam's Blog, page 2

August 15, 2022

இமயமலை சும்மாதானே இருக்கிறது

இமயமலை சும்மாதானே இருக்கிறது

அ.முத்துலிங்கம்

கனடாவுக்கு அகதிகளாக வந்த எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கிறது. ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும். பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு என் நண்பர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  நாலே நாலு வசனங்களைப் பாடமாக்கிவிட்டார். இயக்குநர், ’காமிராவைப் பார்த்து பேசவேண்டும். நான் அக்சன் என்றதும் ஆரம்பித்து, கட் என்றதும் நிறுத்தவேண்டும்’ என்றார். எப்பவும் வயிற்றுவலி வந்ததுபோல  வளைந்து நிற்பவர் நிமிர்ந்தார். தன் ஆடையை சரி பார்த்தார். ’ அக்சன்.’ நண்பர் காமிராவைப் பார்த்து பேசத் தொடங்கினார். வசனம் முடிந்தது, ஆனால் கட் சொல்லவில்லை. எனவே காமிராவைப் பார்த்து முழுசிக்கொண்டே நின்றார். படம் வெளிவந்தபோது அவர் முழுசிக்கொண்டு நிற்பதுதான் இடம்பெற்றிருந்தது, வசனம் இல்லை. எடிட்டர் சொன்னார், ’காட்சிக்கு அதுதான் மிகவும் பொருத்தமாக அமைந்தது.’

பட்டிமன்றம் ராஜாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். ’சிவாஜி’ படப்பிடிப்பின்போது சில அருமையான காட்சிகள் இப்படித்தான் வெட்டப்பட்டன’ என்றார். விவேக் கை விரலிலே வடையைக் குத்தி வைத்துக்கொண்டு ராஜாவிடம் கேட்பார். ’கெட்டிச் சட்னி இல்லையா, கெட்டிச் சட்டினி.’ அந்த இடத்தில் எல்லோரும் சிரிப்பார்கள். படம் வெளிவந்தபோது அந்தக் காட்சியை  வெட்டிவிட்டர்கள். ஒருபடத்தின் அதிகார ஆளுமை இயக்குநரிடம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில் அது எடிட்டரிடம்தான் இருக்கிறது.

’சிவாஜி படத்தில் நடிப்பதற்கு உங்களை எப்படி தெரிவு செய்தார்கள்? உங்களுக்கு ஏற்கனவே நடிப்பு பயிற்சி இருந்ததா?’ என்று ராஜாவிடம் கேட்டேன்.

ஒரு நாள் ஏ.வி.எம் தியேட்டரிலிருந்து தொலைபேசி. ஐந்து நிமிடத்தில் ரெடியாக இருக்க முடியுமா? என்றார்கள். எதற்கு, ஏன் என்ற கேள்வி எல்லாம் கிடையாது. சொன்ன மாதிரி கார் வந்து என்னை ஏற்றிக்கொண்டு சென்றது. ஒரு வேட்டியை தந்து கட்டச் சொன்னார்கள். ஒரு பழைய பனியனைப் போடச் சொன்னார்கள். நிற்க, நடக்க, இருக்க வைத்து படம் எடுத்தார்கள். ஒரு மரத்தின் கீழே என்னை நிறுத்தி பேசச் சொன்னார்கள். எல்லவற்றையும் பதிவு செய்தார்கள்.ஒருவரும் விவரம் தருவதாக இல்லை. ஏதோ படத்தில் நடிப்பதற்குத்தான் இந்தச் சோதனை எல்லாம் என்று எனக்குத் தெரிந்தது. எப்படியும் தோல்விதான் ரிசல்ட்டாக வரும் என்பதால் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

சில நாட்கள் கழித்து என்னைத் தேர்வு செய்திருப்பதாக ஏ.வி. எம் நிறுவனம் அறிவித்தது. என்ன படம்?  யார் யார் நடிப்பது? எனக்கு என்ன வேடம்? ஒன்றுமே தெரியாது. என்னுடைய ஒல்லி உடம்பில் six pack ஏற்றவேண்டுமா? யார் என்னுடன் கதாநாயகியாக நடிப்பது? நடனம் பழகவேண்டுமா  என்றெல்லாம் மனது அடித்தது. நாற்பது நாள் படப்பிடிப்பு என்பதால் நான் விடுப்பு எடுக்க வேண்டும். வீட்டிலே கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது. பட்டிமன்றம் நல்லாய்த்தானே போகிறது, இது எதற்கு என்ற கேள்வி வேறு.

பின்னர் விவரங்கள் தெரிய வந்தன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார்.  விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி எல்லோரும் நடிக்கும் படம்ள்.  ஸ்ரேயாவுக்கு அப்பாவாக நான், அதாவது ரஜினிக்கு மாமா. கிழிந்த பனியனுடன் மரத்தின் கீழ் நின்று நான் பேசிய வசனத்தை நம்பி எனக்கு இந்த வேடத்தை கொடுத்திருந்தார்கள். மேலும் சில விவரங்கள் வெளியே வந்தன. முதலில் என் இடத்தில் நடிப்பதற்கு லியோனிதான் தெரிவாகியிருந்தார். அவருக்கு வசதிப்படாததல் நான் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். சாலமன் பாப்பையாவும் இதில் நடிக்கிறார், ஆகவே பட்டிமன்றம் தொடர்பான ஒரு கதையாக இருக்குமோ என்றுகூட எனக்குள் ஊகம் ஓடியது.

’நீங்கள் நாற்பது  நாள் லீவு எடுக்க முன்னர் இதையெல்லாம் கேட்டு தெரியவேண்டும் என்று நினைக்கவில்லையா?’

நான் என்ன பெரிய நடிகரா இதையெல்லம் கேட்பதற்கு. ஏ.வி.எம் பெரிய நிறுவனம். அவர்களிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடியாது. உடனே வேறு ஆளைத் தேடத் தொடங்கிவிடுவார்கள். அது தவிர, ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு இன்னொரு தடவை திரும்ப வருமா?

உங்கள் முதல்நாள் அனுபவத்தை சொல்லுங்கள்?

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். கதையை சொல்ல மாட்டார்கள். துண்டு துண்டாக அன்று என்ன தேவையோ அதைமட்டும் சொல்வார்கள். அன்றைய சூட்டிங்குக்காக கீழ்ப்பாக்கத்தில் ஒரு நடுத்தர வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். ரஜினியும், விவேக்கும் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க பொய் வேடமிட்டு வரும் அதிகாரிகள். நான் கதவைத் திறந்து ‘யார் நீங்க? என்ன வேணும்?’ என்று கேட்கவேண்டும். அவ்வளவுதான். எனக்கு ஒரு வேட்டியும், தோய்க்காத  பனியனும் தந்திருந்தார்கள். அதுதான் என்னுடைய மேக்கப். கையை என்ன செய்வது? எங்கே பார்ப்பது? எப்பொழுது பேசுவது? குரலை எவ்வளவு உயர்த்தவேண்டும்? எல்லாமே எனக்கு குழப்பம்தான்.

ஷங்கருக்கு 16 உதவியாளர்கள். எல்லாமே முன்பே திட்டமிட்டபடி கச்சிதமாக நடக்கவேண்டும். முன்கதவை குறிப்பிட்ட நேரத்தில் திறக்க வேண்டியது முக்கியம். ஒரு நொடிகூட பிந்தக்கூடாது. படப்பிடிப்பு சரியாக வரவேண்டுமென்பதால் ஒரு உதவி டைரக்டர் தரையிலே படுத்துக்கிடந்தபடி (காமிராவுக்கு தெரியாமல்) கதவை திறப்பார். நான் திறப்பதுபோல பாவனை செய்ய வேண்டும்.

டைரக்டர் ’அக்சன்’ என்றதும் நான் நடந்து சென்று கதவைத் திறந்து ‘யார் நீங்கள்? என்ன வேணும்?’ என்று கேட்கவேண்டும். காமிரா ஓடிக்கொண்டிருந்தது. ஆயிரம் சனங்களுக்கு முன் நின்று பேசும் பட்டிமன்றப் பேச்சாளருக்கு ஒரு வார்த்தையும் வெளியே வரவில்லை. எட்டுத்தரம் அதே காட்சியை எடுத்தார்கள். நான் ஒரே பிழைய திரும்பத் திரும்ப செய்யவில்லை. ஒவ்வொரு தடவையும் ஒரு புதுவிதமான பிழையை கண்டுபிடித்து செய்தேன். எனக்கு அவமானமாகி விட்டது. அப்பொழுதெல்லாம் டிஜிட்டல் காமிரா வரவில்லை. பிலிம் ரோல் வீணாக ஓடிக்கொண்டிருந்தது. என்னாலே ஷங்கருக்கு பெரும் நட்டம் வந்துவிடும் என்றுபட்டது. அது மாத்திரமல்ல, ரஜினி எத்தனை பெரிய நடிகர். விவேக் சாதாரணமானவரா? நான் எட்டுத்தரம் நடித்தால் அவர்களும் அல்லவா எட்டுத்தரம் நடிக்கவேண்டும். இரண்டு மணி நேரமாக கீழே படுத்துக்கிடந்த உதவி டைரக்டர் நாரியைப் பிடித்த படி எழுந்து நின்றார். நான் ஷங்கரிடம் ’எனக்கு நடிப்பு வராது. என்னை விட்டுவிடுங்கள்’ என்றேன்.

அவர் நிம்மதி அடைவார் என்று நினைத்தேன். மனிதர் அசையவே இல்லை. ‘நீங்கள் எத்தனை படத்தில் நடித்திருக்கிறீர்கள்?’ என்றார். ’இதுதான் முதல் தடவை.’ ’அப்ப எப்படி நடிப்பு வராது என்று சொல்லலாம். எங்களுக்கு நடிப்பு வேண்டாம், நீங்கள் இயற்கையாக இருங்கள். காட்சி சரியாக அமையும்’ என்றார். அதுதான் என் முதல் நாள் அனுபவம். வாழ்நாளுக்கும் மறக்க முடியாது. எப்படியோ பின்னர் சமாளித்து நடித்தேன்.

ரஜினியை நீங்கள் முதன்முதல் சந்தித்த அனுபவம் எப்படி இருந்தது?

அதுவும் ஆச்சரியம் தான். ஒருவருமே அறிமுகம் செய்து வைக்கவில்லை. என்னைப் பார்த்த உடனேயே ’பட்டி மன்றம் சுனாமி’ என்று அழைத்தார். என்னுடைய பட்டி மன்றப் பேச்சுக்களை பலதடவை டிவியில் பார்த்திருப்பதாகச் சொன்னார். அதற்குப் பின்னர் அவருடன் பழகுவது கொஞ்சம் எளிதாயிற்று.

படத்திலே சுஜாதாவின் வசனம் கச்சிதமாக இருக்கும். ஒரு வார்த்தையைக் கூட மாற்ற முடியாது. ஷங்கர் அந்த விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ’பழகலாம் வாங்க’ என்று ரஜினி திடீரென்று எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். எங்கள் வீடு என்றால் உதவி டைரக்டர் கீழே படுத்துக்கிடக்க நான் கதவு திறந்த கீழ்ப்பாக்கம் வீடு அல்ல. அதேபோல ஒன்றை ஸ்டூடியோவில் உருவாக்கிவிட்டார்கள். ரஜினியை நாங்கள் துரத்துவோம். அவர் பக்கத்துவீட்டுக்குப் போய் சாலமன் பாப்பையாவோடும் அவருடைய இரண்டு பெண்களோடும் கூத்தடிப்பார். இதை பார்க்க எங்களுக்கு கோபமாகவும் வயிற்றெரிச்சலாகவும் இருக்கும். அவர்கள் வீட்டுக்குப்போய் திரும்பவும் எங்கள் வீட்டுக்கு வாங்கோ என்போம். ஸ்ரேயா நாங்கள் இரண்டு கோர்ஸ் முடிச்சிருக்கோம் என்று சொல்வார். அப்படியே செட் முழுக்க சிரிக்கும். சுஜாதா ஒருவரால் மட்டுமே அப்படி எழுதமுடியும். அவருடைய முத்திரை அது.

நீங்கள் சுஜாதாவை சந்தித்தீர்களா?

ஒரு முறை செட்டுக்கு வந்தார். நான் அவரிடம் சென்று ’ஹலோ’ என்று சொல்ல, அவரும் சொன்னார். அடுத்த வார்த்தை அவரிடமிருந்து பெயரவே இல்லை. சிவாஜி படத்தின் 175ம் நாள் விழா கலைஞர் தலைமையில் சிறப்பாக நடந்தது. மேடையிலே சுஜாதாவுக்கு பக்கத்தில் நான் உட்கார்ந்திருந்தேன். ஹலோ சொன்னேன். என்னிடம் திரும்பி ஒரு வசனம் பேசவில்லை. எல்லா வசனங்களையும் அடுத்த படத்துக்கு பாதுகாக்கிறார் என நினைத்துக்கொண்டேன்.

சாலமன் பாப்பையா உங்கள் குருவல்லவா? அவருடன் நீங்கள் படத்தில் சண்டை போட்டபோது  எங்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. உங்களுக்கு எப்படி இருந்தது?

அது மோசமான அனுபவம். அவர் என்னை ’ஏ வத்தல்’  என்று அழைப்பார். படத்திலே அவருடைய பெயர் தொண்டைமான். நான் அவரை ‘ஏ தொண்ட’ என அழைக்கவேண்டும் என்று இயக்குநர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். எப்படி அழைப்பது, என் குருவாச்சே! மதிய நேரம் காரவானில் ரஜினியும் ஷங்கரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். கதவைத் தட்டிவிட்டு நான் மெல்ல உள்ளே நுழைந்தேன். ‘நான் யோசித்துப் பார்த்தேன். என்னால் அந்த சீனில் அவரை ’ஏ தொண்ட’ என்று அழைக்க முடியாது. அவர் என் குரு’ என்றேன்.

ஷங்கர் ரஜினியை திரும்பிப் பார்த்தார். பின்னர் ஆச்சரியத்தோடு என்னை நோக்கி ‘இது திரைப்படம். ஒரு கற்பனைக் கதை. உண்மை கிடையாது. உங்களுடைய பெயர் ராமலிங்கம். அவருடைய பெயர் தொண்டைமான். ராமலிங்கம்தான் அவரை அப்படி அழைக்கிறார். நீங்களல்ல.’ இப்படி எனக்கு ஒரு நீண்ட புத்திமதி வழங்கி என்னை நடிக்க வைத்தார்.

சூட்டிங்கின்போது ஷங்கர் கோபப்படுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஏதாவது நடந்ததா?

ஒரேயொரு சம்பவம்தான். வாழ்நாளுக்கும் மறக்க முடியாது. விவேக் எங்களை வற்புறுத்தி விருந்து கொடுப்பதற்காக ரஜினி வீட்டுக்கு அழைத்துச் செல்வார். நான், என் மனைவி மற்றும் மகள் ஸ்ரேயா. எங்களுக்கு மேளதாளத்துடன்  கோலாகலமான பெரிய வரவேற்பு நடக்கும்.  அங்கே மேசை நிறைய உணவு பரப்பியிருக்கும். எல்லாமே ஐந்து நட்சத்திர ஹொட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட விலையுயர்ந்த உனவு வகை. ’சாப்பிடு, சாப்பிடு’ என்று உபசரிப்பார்கள். விவேக் ஆமைக்குஞ்சு பொரித்து வைத்திருக்கிறது என்று ஆசைகாட்டித்தான் எங்களை அழைத்து வந்திருப்பார். நான் எங்கே ஆமைக்குஞ்சு என்று ஆரம்பிப்பேன். வடிவுக்கரசி சோற்றை அள்ளி அள்ளி உமா பத்மநாபனுக்கு (ஏன் மனைவி) ஊட்டுவார். விவேக்கும், மணிவண்ணனும் என் வாயில் இரண்டு பக்கமும் நண்டுக் கால்களை தொங்கவிட என் உருவமே மாறிவிட்டது. விவேக் 24ம் புலிகேசி என்று என்னை வர்ணிப்பார். ரஜினி சோற்றையும் குழம்பையும் பிசைந்து பிசைந்து ஸ்ரேயாவுக்கு ஊட்டுவார்.  

ஸ்ரேயா பற்றி சொல்லவேண்டும். சாதரணமாக முகத்தில் ஓர் உணர்ச்சியும் தெரியாது. படப்பிடிப்பு ஆரம்பமானதும் எழுந்து நடப்பார். யாரோ பின்னுக்கு இருந்து அவரை இழுப்பதுபோல  இருக்கும். முகம் திறந்து மெல்லிய சிரிப்பு வெளியே வரும். அன்று ஸ்ரேயா அவ்வளவு அந்த சீனில் ஒத்துழைக்கவில்லை. நீண்ட நேரம் படப்பிடிப்பு போய்க்கொண்டே இருந்தது.  இயக்குநர் நினைத்ததுபோல காட்சி அமையவில்லை. ஷங்கருக்கு கோபம் வந்துவிட்டது. ஸ்ரேயாவை நோக்கி கத்தத் தொடங்கினார். ’என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க. எத்தனை டேக் போகுது.’ மீதியை எழுத முடியாது. ஸ்ரேயா அழத்தொடங்கினார். படப்பிடிப்பு நின்றுபோனது. அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினார்கள்.  மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது காட்சி எப்படியோ அமைந்துவிட்டது. எல்லோருக்கும் மகிழ்ச்சி.

அப்போதுதான் ரஜினி ஒரு விசயம் சொன்னார். பாவம் சின்னப் பெண், அழுதுவிட்டார். ஆனால் இந்தப் பேச்சு அவருக்கு மட்டுமில்லை. அடிக்கடி டைரக்டர்கள் கடைப்பிடிக்கும் யுக்திதான்.  செட்டிலேயே வயது குறைந்தவர் ஸ்ரேயா. ஆகவேதான் கோபம் அவர் மேலே பாய்ந்தது. உன்மையிலேயே இந்தக் கோபம் செட்டில் நடித்த எல்லோர் மேலேயும்தான். பெரியவர்களைத் திட்ட முடியாது. பாவம் ஸ்ரேயா என்றார்.

மணிவண்ணனைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?

சொற்களை முதலில் எண்ணிவிட்டு பேசத் தொடங்குவார். அருமையான மனிதர். என்னிடம் மனம்விட்டுப் பேசுவார். நான் சைவ உணவுக்காரன் என்பதால் உணவு விசயத்தில் எனக்கு பிரச்சினை வருவதுண்டு. மணிவண்ணன் வீட்டிலிருந்து அவருக்கு தினமும் அருமையான சைவ உணவு வரும். அவர் என்னுடன் பகிர்ந்துகொள்வார். அவரோடு பழகியதையும் அவர் வீட்டு உணவின் சுவையையும் மறக்க முடியாது.

உங்களுடைய சக நடிகர்கள் எல்லோருமே உங்களுக்குப் புதிது. அவர்கள் ஏற்கனவே படங்களில் நடித்தவர்கள். உங்களை நீங்களே அறிமுகப் படுத்தி நடித்தீர்களா?

எங்கே முடிந்தது. அறிமுகம் செய்யும் பழக்கம் எல்லாம் கிடையாது. உங்களுக்கு கொடுத்த வசனத்தை பேசி நடிக்க வேண்டியதுதான். என்னுடைய மனைவியாக நடித்தவர் உமா பத்மநாபன். மகளாக நடித்தது ஸ்ரேயா. அவரவருக்கு கொடுத்த காட்சியில் நடித்துவிட்டு அவர்கள் போய்விடுவார்கள். எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. உதவி டைரக்டர் அடிக்கடி ஞாபக மூட்டுவார். அது உங்கள் குடும்பம், ஒட்டி நில்லுங்கள், பக்கத்து வீட்டுக்காரர்போல தூரத்தூர நில்லாதீர்கள். பெரிய அசௌகரியமாக உணர்ந்தேன்.

இன்ன இடத்தில் இப்படி நடிக்கவேண்டும் என சொல்லித் தருவார்களா? அல்லது உங்களுக்கு வேண்டியமாதிரி செய்யலாமா?

அப்படியெல்லாம் உங்களுக்கு வேண்டிய மாதிரி நடிக்க முடியாது. இன்னமாதிரி நடிக்கவேண்டும் என்று அந்தக் காட்சியை விளங்கப்படுத்துவார்கள். நடித்துக் காட்டமாட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கும்வரை திருப்பித் திருப்பி எடுப்பார்கள்.

படத்திலே ரஜினி குடும்பம் வீட்டுக்கு பழக வந்திருக்கும். நான் பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டு தலையை துடைத்துக்கொண்டே வருவேன். ஆசி வாங்குவதற்காக ரஜினி குடும்பம் என் காலிலே விழ வருவார்கள். நான் பாய்ந்தோடிப்போய் பக்கத்திலிருந்த நாற்காலியில் துள்ளி ஏறிவிடுவேன். அப்படிச் செய்யச் சொல்லி ஒருவரும் சொல்லித்தரவில்லை. அந்த நேரம் தோன்றியதை நானாகச் செய்ததுதான்.  அதை ஒன்றும் வெட்டாமல் ஷங்கர் அப்படியே படத்தில் வைத்திருந்தார். என்னுடைய நடிப்பின் வெற்றிக்கு சான்று என அதை நான் எடுத்துக்கொண்டேன்.

40 நாட்கள் படப்பிடிப்புக் குழுவுடன் அலைந்தீர்கள். வெளிமாநிலம் எல்லாம் போனீர்களா?

டெல்லி , பூனே போன்ற இடங்களுக்கு நானும் போனேன். ரஜினி போகும் இடங்களில் கூட்டம் சேர்ந்துவிடும். வெளிமாநிலத்தில் நிம்மதி இருக்கும் என்று நினைத்தேன். பூனேயில் நம்பமுடியாஅளவுக்கு கூட்டம் சேர்ந்துவிட்டது. அப்பொழுதுதான் புரிந்தது ரஜினியின் புகழ் எங்கே எங்கே எல்லாம் பரவி விட்டது என்று. என்னால் நம்பவே முடியவில்லை.

உங்களுக்கு ரஜினியுடன் தனியாக உட்கார்ந்து பேசும் சந்தர்ப்பம் எப்போதாவது கிடைத்ததா?

ஒரு முறை நாங்கள் இருவரும் காரில் பயணம் செய்தோம். அவர் படாடோபம் இல்லாத எளிய மனிதர். நான் பல நாட்களாக கேட்கவேண்டும் என திட்டமிட்டிருந்த கேள்வியை கேட்டேன். ’நீங்கள் அடிக்கடி இமயமலைக்கு போகிறீர்கள். அங்கே உங்களுக்கு அமைதியும் புத்துணர்ச்சியும் கிடைப்பதாக கூறியிருக்கிறீர்கள். அங்கே நான் போனால் எனக்கும் கிடைக்குமா?’ ’யாருக்கு என்ன கிடைக்கும் என்று எனக்கு எப்படித் தெரியும். நீங்கள்தான் அங்கே போக வேண்டும். நீங்கள்தான் அதை உணர முடியும். நீங்கள் ஒருமுறை வாருங்கள். இமயமலை சும்மாதானே இருக்கிறது’  என்றார்.

இமயமலை சும்மா இருக்கிறது. இந்தக் கொரோனா காலத்தில் நானும் சும்மாதான் இருக்கிறேன். ஆனால் சந்திப்பு என்னவோ நடப்பதாகத் தெரியவில்லை.

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2022 05:12

July 22, 2022

கடைநிலை ஊழியன்

கடைநிலை ஊழியன்

அ.முத்துலிங்கம்

எங்கே கதை தொடங்குகிறதோ அங்கே இருந்து ஆரம்பிப்பது நல்ல பழக்கம். நைரோபியில் வானளாவிய கட்டிடங்களில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கின. எந்த ஒரு பெரிய நிறுவனத்திலும் கடை நிலை ஊழியன் என ஒருவன் இருப்பான். கட்டிடத்துக்கு கட்டிடம், நிறுவனத்துக்கு நிறுவனம், அவன் செயல்பாடு ஒரே மாதிரித்தான். ஒரு கதை இருக்கிறது.

மிகப் பெரிய நிறுவனம் ஒன்றுக்குள் ஒரு புலி ரகஸ்யமாக புகுந்து விடுகிறது. அடுத்தநாள் செயலாளரை காணவில்லை. நிறுவனம் அமைதியாக ஓடியது. அதற்கு அடுத்தநாள் கணக்காளரைக் காணவில்லை. ஒரு சலனமும் இல்லை. மூன்றாவது நாள் ஆக உயர்ந்த பதவி வகிக்கும் மண்டல மேலாளரை காணவில்லை. அப்போதும் ஒரு பேச்சு கிடையாது. மறு நாள் கடை நிலை ஊழியனைக் காணவில்லை. முழு அலுவலகமும் பதறிப்போய் அவனை தேடியது. அப்படிப்பட்ட கடைநிலை ஊழியன்தான் அப்துலாட்டி.

ஒரு நாளைக்கு சராசரியாக அவன் ‘ஆமாம், ஐயா’ என்று 20 தடவையாவது சொல்வான். சிலசமயம் யாராவது ஒன்றுமே சொல்லாமல் அவனைக் கடந்துபோனால் அப்போதும் ‘ஆமாம், ஐயா’ என்று சொல்லிவைப்பான், எதற்கும் இருக்கட்டும் என்று. அன்று காலையிலிருந்து 40 தடவை ‘ஆமாம், ஐயா’ சொல்லிவிட்டான். நாலு வருடம் அந்த நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த  ஜேர்மன்காரர் ஓலவ் வால்டன் அன்று ஓய்வுபெறுகிறார். அவருக்கு பிரியாவிடை விருந்து ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது. அப்துலாட்டி பல இடங்களில் ஒரே சமயத்தில் தென்பட்டான். அது வெள்ளிக்கிழமை. புதிய தலைவர் திங்கட்கிழமை பதவியேற்பார் என்று பேசிக்கொண்டார்கள்.

பிரியாவிடை ஏற்பாடுகளைக் கவனித்தவர் ம்வாண்டோ; நிர்வாகப் பிரிவு மேலாளர். அவர் வாய் திறந்தால் புகை வரும் அல்லது பொய் வரும். சுருள்கம்பி போல தலை மயிர். தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்று புதிய கார் வாங்கினார் என்ற கதை உலவுகிறது. உண்மை தெரியாது. நடக்கும்போது அவர் வயிற்றில் தண்ணீர் குலுங்கும் சத்தம் கேட்கும். அவருக்கு கீழே வேலை செய்யும் யாரும் அவரைப் பார்த்து சிரித்தால் பாதி சிரிப்பைத்தான் திருப்பி தருவார். சிரிப்பிலேயே லாபம் சம்பாதித்து விடுவார். அவர்தான் முதல் பேச்சாளர். விடைபெறும் தலைவரை தூக்கி வைத்து புகழ்ந்தார். தலைவருக்கே ஏதோ மாதிரியாகி மேடையிலே நெளிந்தார்.

அடுத்து, தலைவருடைய  அந்தரங்க காரியதரிசி அயன்னாவின் முறை. நூல் வேலைசெய்த அலங்காரமான ஆடை. தறுமாறாக எறிந்ததுபோல அதை அணிந்திருந்தாள். துள்ளலான நடையுடன் மேடைக்குப் போனாள். போனதடவை பழைய தலைவருக்கு பேசிய அதே பேச்சை கம்புயூட்டரிலிருந்து இறக்கி பெயரையும் தேதியையும் மாற்றி பேசியதை  அப்துலாட்டி கண்டுபிடித்து மனதுக்குள் சிரித்தான். அவன் 20 வருடங்களாக அங்கே வேலை செய்கிறான். நாலு தலைவர்களைப் பார்த்துவிட்டான். அவனுக்கு தெரியாத ரகஸ்யம் இல்லை.

இன்னும் சிலர் பேசினார்கள். இறுதியில் அப்துலாட்டி பேச மேடைக்கு வந்தான். அதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. கடைநிலை ஊழியனான அவன் இதற்கு முன்னர் பேசியதே கிடையாது.. கீழே அவர்கள் தோட்டத்தில் கிடைத்த ஜகரண்டா பூக்களில் செய்த பூங்கொத்து மேசையில் வாடிப்போய் கிடந்தது. தலைவர் அதைப் பார்த்தபடி  முகத்தில் சலிப்போடு உட்கார்ந்திருந்தார்.

‘நாலு வருடம் முன்பு புதிய தலைவர் வந்தபோது ’காலையில் 8 மணிக்கு எல்லோரும் வரவேண்டியது முக்கியம். எந்த நேரமும் திரும்பி வீட்டுக்கு போகலாம். ஆனால் வேலை முடியவேண்டும்’ என்று சொன்னார். அப்போதுதான் இந்த அலுவலகத்தின் கதை தொடங்கியது. முன்னெப்போதும்  இல்லாத மாதிரி வெற்றி கண்டு லாபம் ஈட்டியது.  நான் பல தலைவர்களைக் கண்டிருக்கிறேன். அதிக திட்டு வாங்கியது இவரிடம்தான். கண்டிப்பானவர் ஆனால் கனிவானவர். ஊழியர்கள்தான் நிறுவனத்தின் சொந்தக்காரர் என்று கூறி அவர்களுக்கு லாபத்தில் ஒரு பங்கு  வழங்கினார். இவர் எங்களை விட்டுப் போனாலும் இவர் சொன்ன வாசகம் என்னுடனேயே  இருக்கும். ’நல்லதை நீ தேடிப் போகவேண்டும். கெட்டது அதுவாகவே உன்னைத் தேடி வரும்.’

கொழுத்த பன்றி இறைச்சியை நெருப்பிலே வாட்டும் இனிய மணம் எழுந்தது. விருந்துக்காக அனைவரும் காத்திருந்தனர். தலைவருடைய பேச்சு ஒரு கதையுடன் ஆரம்பித்தது. ‘ஒருத்தன்  ஒக்டபஸ் ஒன்றை விலைகொடுத்து வாங்கி வேலைக்கு வைத்துக்கொண்டான். அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்ன வேலை கொடுத்தாலும் எட்டு மடங்கு வேகத்தில் அது செய்து முடித்தது. விசுவாசமானது. திருப்பி பேசுவதில்லை. ஒரு நிமிடம்கூட  உட்கார்ந்திருக்காது. ஒருநாள் எசமானனுக்கு சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற அவசரம். ஒக்டபஸிடம் கடைக்கு போய் சிகரெட்  வாங்கிவரச் சொன்னார். அரை மணியாகியும் ஒக்டபஸ் திரும்பவில்லை. வாசலுக்கு வந்து பார்த்தவர் திடுக்கிட்டுப் போனார். ஒக்டபஸ் இன்னும் புறப்படவில்லை. ‘என்ன செய்கிறாய்?’  ‘சூ போடுகிறேன், ஐயா’ என்றது. சிரிப்பதற்காக இந்தக் கதையை சொல்லவில்லை. உலகத்திலே பூரணமான மனிதன் கிடையாது. சிலரிடம் குணம் இருக்கும்; ஒரு குறையும் இருக்கும். ஒரு குழுவாக நாம் வேலை செய்யும்போது ஒருவர் குறையை இன்னொருவர் நிரப்பிவிடுகிறோம். இதுவே வெற்றியின் ரகசியம்.’

                  *                     *                 *

அப்துலாட்டி 19ம் மாடியில் தன்னுடைய முக்காலியில் உட்கார்ந்திருந்தான். தலைவர் உள்ளே அறையில்  ஏதோ கோப்புகளை இழுப்பதும் வைப்பதுமாக வேலையில் இருந்தார். விருந்து  முடிந்ததும் அவர் வீட்டுக்கு போகாமல் அலுவலகத்துக்கு வந்துவிட்டார். ’நீ வீட்டுக்கு போகலாம். எனக்கு உதவி தேவையில்லை’ என்று தலைவர் இருதடவை கூறினார். அப்துலாட்டி சொன்னான் ’ஐயா, இந்த நாலு வருடத்தில் உங்களுக்கு  முன்னர் நான் வீட்டுக்கு எப்பவாவது போயிருக்கிறேனா? இது உங்கள் கடைசி நாள். நான் என் கடமையை செய்வேன் ‘ என்று கூறிவிட்டான்

சூரியன் கீழே இறங்கினான். சுவரிலே ஒரு சின்ன வட்டமாக ஒளி விழுந்தது. அப்துலாட்டி தகப்பனைப் பற்றி யோசித்தான். இன்று எப்படி அவருடைய நாள் கழிந்ததோ தெரியாது. கதவிலே அவன் திறப்பை செருகும் சத்தம் கேட்டதும் அப்துலாட்டி என்று கத்தத் தொடங்குவார். அவனைக் கண்டவுடன் அவர் முகம் மலர்ந்துவிடும்.  அவன்தான் சூப் பருக்க வேண்டும். அம்மாவின் கடிதத்தை படிக்கச் சொல்லி கேட்பார். அவர் இறந்து பத்து வருடங்கள் என்றாலும் அவன் படிப்பான்; பின்னர் சமைக்க ஆரம்பிப்பான்.

ஒளிவட்டம் மேலே போய்விட்டது. திடீரென்று இடி மின்னலுடன் பயங்கரமான மழை  கொட்டத் தொடங்கியது. ங்கோங் மலை இடி முழக்கத்தை இரட்டிப்பாக்கியது. யன்னல்கள் படவென்று அதிர்ந்தன. அப்துலாட்டி பயந்தது நடந்தது. மின்சாரம் துண்டித்தது. மின்சாரம் போனால் அந்தக் கட்டிடத்தில் டெலிபோனும் வேலை செய்யாது. 19 மாடிகளையும் இறங்கிக் கடக்கவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த போது உள்ளே  படார் என்று பெரும் சப்தம் எழுந்தது. கதவை உதைத்து திறந்து நுழைந்தான். இரும்பு அலமாரி சரிந்து  கிடந்தது. தலைவர் அதன் கீழே அலங்கோலமாகக் காணப்பட்டார். அவருடைய இடது கால் அலமாரியின் கீழே மாட்டுப்பட்டு விட்டது. அவர் ஏதோ மொழியில் அலறினார். அலமாரியை நகர்த்த முடியவில்லை. தலைவருடைய முகம் பயத்தினாலும் வேதனையினாலும் கிலி பிடித்துப்போய் கிடந்தது மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது.

எப்படி நடந்தது என்று ஊகித்தான். நாலு இழுப்பறைகளையும் ஒரே  சமயத்தில் இழுக்கக் கூடாது. ஒவ்வொன்றாக இழுத்து மற்றதை மூடவேண்டும். பாரம் ஒரு பக்கம் கூடியதால்  விழுந்துவிட்டது. நல்ல காலமாக தலைவரிடம் லைட்டர் இருந்ததால்  அந்த வெளிச்சத்தில் கொஞ்சம் ஊகிக்க  முடிந்தது. இரும்பு அலமாரியை இரண்டு கைகளாலும் தன் பலத்தை எல்லாம் திரட்டி தூக்கப் பார்த்தான். முடியவில்லை. தலைவர் வலியில் துடித்துக்கொண்டிருந்தார். அவன்தான் முடிவு எடுக்கவேண்டும்.  ஒவ்வொரு தட்டாக கோப்புகளை உருவி வெளியே எறிந்தான். அலுமாரி பாரம் குறையக் குறைய காலை இழுக்கக்கூடியதாக இருந்தது. விலை உயர்ந்த வெள்ளை  கார்ப்பெட் ரத்தத்தை உறிஞ்சியது. சீக்கிரத்தில் ஏதாவது செய்யவேண்டும். விருந்துக்கு பயன்படுத்திய  மேசை விரிப்புகள் கிடந்தன. அவற்றை கீலம் கீலமாக கிழித்து கட்டுப்போட்டான். ஐஸ்பெட்டியில் ஐஸ் எடுத்து துணியில் சுற்றி காலில் கட்டினான். குடிக்க தண்ணீர் கொடுத்தான். அவர் முகத்தில் கொஞ்சம் ஆசுவாசம் தெரிந்தது. என்ன செய்யலாம் என்று அவருடன்தான் கலந்தாலோசிக்க வேண்டும்.

19 மாடிகள் கீழே போய் உதவி கேட்கலாம் என்றால் தலைவர் மறுத்து ஒரு குழந்தையைப்போல அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்.  அவருடைய தலை தானாக ஆடியது.  கீழே போவது ஒன்றுதான் வழி ஆனால் அவர் சம்மதம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. மழை வலுத்துக்கொண்டே வந்தது. ரத்த ஓட்டம் சற்று நின்று முகம் வெளித்தது.  ’இந்த நிறுவனத்தில் என்னுடைய  கடைசி நாள் என்று நினைத்தேன். ஒருவேளை பூமியில் கடைசி நாளாகுமோ தெரியாது’ என்று சொல்லிவிட்டு சிரித்தார். பின்னர் ’நீ தைரியமாக  இரு’ என்றார். உள்ளுக்கு  அவனுக்கு சிரிப்பு வந்தது.

அப்துலாட்டியின் முகத்தைப் பார்க்க அவருக்கு குற்ற உணர்வாக இருந்தது. அன்று மாத்திரம் அவன் இல்லாமல் போனல் அவர் கதி என்னவாகியிருக்கும். நிச்சயமாக செத்திருப்பார். அவனை வேலையிலிருந்து  நீக்குவதற்குகூட  ஒரு முறை ஆணையிட்டிருந்தார். எத்தனை விசுவாசமானவன்.  கடைநிலை ஊழியன் பேசியதுபோல ஒருவரும் உள்ளத்தில் இருந்து பேசவில்லை. ’நான் உனக்கு நல்லவராக நடக்கவில்லை. உனக்கு என்மீது கோபமே இல்லையா?’ என்றார். ‘உங்களுக்கு கடமை முக்கியம். எனக்கு நன்மை செய்வதாக நினைத்தீர்கள். ஒரு கிக்கியூ கதை ஞாபகம் வருகிறது.’  ‘சொல்,சொல். கதையையாவது கேட்கலாம்.’

‘குளத்தில் ஒருவன் வலைவீசி நூறு மீன்கள் பிடித்தான். அவற்றை தரையில் விட்டவுடன் அவை மகிழ்ச்சியில் துள்ளின. ‘நான் உங்களை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றினேன்’ என்றான். ஆனால் அவை இறந்துவிட்டன. வீணாக்கக் கூடாது என்று அவற்றை சந்தையில் விற்று அந்தப் பணத்துக்கு மேலும் வலைகள் வாங்கினான். அப்படியென்றால்தான் இன்னும் பல மீன்களை அவனால் காப்பாற்ற முடியும்.’ ‘நல்ல கதை, அப்துலாட்டி. இதைத்தான் நான் பல வருடங்களாகச் செய்துகொண்டிருக்கிறேன்.’  

அவர் உடல் மறுபடியும் நடுங்கத் தொடங்கியது. அப்துலாட்டி மேசை விரிப்புகளை உருவி எடுத்து அவர் உடலை மேலும்  சுற்றிக் கட்டினான். கொஞ்சம் சமநிலையானதும் மறுபடியும்  பேசத்தொடங்கினார். ’அது சரி, இத்தனை விவரமாகப் பேசுகிறாயே, நீ என்ன படித்திருக்கிறாய்?’ ’சீனியர் சேர்டிப்பிக்கட் முதல் வகுப்பு.’ ’அப்படியா, உன்னிலும் குறையப் படித்தவர்கள் உள்ளே மேசையில் வேலை செய்கிறார்கள். நீ இன்னும் முக்காலியில் உட்கார்ந்திருக்கிறாயே?’ ”மேசையில் உட்காரும் வேலை தரமாட்டார்கள், ஐயா. நான் கிக்கியூ இனத்தை சேர்ந்தவன்.  முக்காலிதான் எனக்கு ஆக உயர்ந்த இடம். அதை மீறி உயர முடியாது.’ அவன் சொல்லி முடிக்கவும் மின்சாரம் பெரும் சத்தத்துடன் வந்தது.  அப்துலாட்டி அவர் கையை உதறிவிட்டு வெளியே ஒடினான்.

                             *                   *                   *

ஆஸ்பத்திரியில் ஓலவ் கண் விழித்தபோது அதிகாலை ஐந்து மணி இருக்கும். அப்துலாட்டி முன்னே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். ’ஐயா ஒருசின்ன எலும்பு முறிவுதான். ரத்தம் கொடுத்திருக்கு. சிகிச்சை முடிந்து இன்றே உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். நாளை விமானம் பிடிக்கலாம். சூப் இருக்கிறது குடியுங்கள்’ என்றான். ’நீ வீட்டுக்கு போகவில்லையா?’ ’போனேன். போய் குளித்து உடை மாற்றி வந்திருக்கிறேன்.’ ’உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.  உன்னை நிறைய திட்டியிருக்கிறேன்.’  ’ஐயா, எனக்கு அம்மா இல்லை. அப்பா கடும் நோயாளி. படுத்த படுக்கைதான். அவரை நான்தான் பார்க்கிறேன். காலையில் அவரை எழுப்பி சுத்தம் செய்து உடை மாற்றி உணவு கொடுத்து படுக்க வைத்த பின்னர்தான் அலுவலகத்துக்கு வருவேன். அப்போது கொஞ்சம் லேட்டாகிவிடும். பக்கத்து வீட்டு அம்மா அவ்வப்போது ஏதாவது அவருக்கு குடிக்கக் கொடுப்பார். மாலை நான் போய் மறுபடியும் அவரை சுத்தம் செய்து  உடை மாற்ற வேண்டும்.’ ’உன் பிரச்சினையை  சொல்லியிருக்கலாமே?’ ’எல்லோரும் எனக்கு தண்டனை கொடுத்தார்கள். சம்பளத்தை வெட்டினார்கள். ஒருவரும் ஏன் லேட்டாக வருகிறாய் என்று கேட்கவில்லையே.’ 

’உனக்கு மனைவி இல்லையா?’  ’இருக்கிறார். நல்ல பெண். அவரால் அப்பாவை பார்க்க முடியவில்லை. ஒருமுறை தேதி முடிந்த மருந்தை அப்பாவுக்கு கொடுத்துவிட்டார். அப்பா கூசவைக்கும் சொற்களால் அவளை திட்டினார்.  சோப் போடும்போது அப்பாவுக்கு எழுத்துப்பக்கம் அழியக் கூடாது. ஒருநாள் என் மனைவியை வெளியே போ என்று துரத்திவிட்டார். என் மனைவிக்கு  சுப்பர்மார்க்கெட்டில் நல்ல வேலை.  அங்கே நடந்த திருட்டில் ஓர் அயோக்கியன் அவளை மாட்டிவிட்டு தப்பிவிட்டான். அவளை ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.’ ’ இங்கே நீதியே கிடையாதா?’ ‘அவளும் என்னைப்போல கிக்கியூ இனத்தைச் சேர்ந்தவள், ஐயா.’

’நீ முக்காலியை விட்டு உயர முடியாது என்று சொன்னாயே, அது ஏன்?’ ’ஐயா, இங்கே ஸ்வாகிலிகளிடம்தான் ஆட்சியிருக்கிறது. என்ன முயன்றாலும் எனக்கு மேசை கிடைக்காது. ஸ்வாகிலி அரபு எழுத்துக்கள் கொண்டது; வலமிருந்து இடமாக எழுதவேண்டும். கிக்கியூ இடமிருந்து வலமாக எழுதும் மொழி. நான் எழுதும்போது என்னைக் கேலி செய்வார்கள்.’  ’நீ என்னுடன் ஒருநாள் பேசியிருக்கலாமே?’ ‘எப்படி பேசுவது? அணுக விடமாட்டார்களே.  லாபத்தில் உழைப்பாளிகளுக்கு பங்கு இருக்கிறது என்று நீங்கள் இன்று பேசினீர்கள்.  அந்த உழைப்பாளிகளை எப்படி வேலைக்கு தேர்வு செய்கிறார்கள் என்பதை யாரும் ஆராய்வதே இல்லை. ’உண்மைதான்.  நான் மிகப் பெரிய குற்றம் செய்துவிட்டேன்.’ ’உலகம் இரண்டு  விதமாக பிரிந்திருக்கிறது, ஐயா. ஆளுபவர்கள், ஆளப்படுகிறவர்கள். ஆரம்பத்தில் இருந்து அப்படியேதான்  இயங்குகிறது. இதை ஒருவராலும் மாற்ற முடியது.’

      *                 *               *

விமான அறிவிப்பு ஒருமுறை ஒலித்தது. ஓலவ் கம்பை ஊன்றியபடி விமானக் கூடத்துக்குள் நிழையத் தயாரானார். அவருடைய இரண்டு பயணப் பெட்டிகளும் உள்ளே போய்விட்டன. அப்துலாட்டி அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். ஓலவ்வின் சாம்பல் நிறக் கண்கள் தளும்பின. குரல் தழுதழுக்க ’ஒரு கால் உடைந்துதான் உன்னை தெரிய வேண்டும் என்று இருக்கிறது. நீ நல்லவன்.  மீன்களை ஒருபோதும் இனிமேல் காப்பாற்ற மாட்டேன். என்னை மன்னித்துக்கொள்.’  ‘பெரிய வார்த்தை ஐயா. என் கடமையை செய்தேன். என் சேவைக்காக  டானியல் அராப் மொய் 21 பீரங்கிகளை முழங்கப் போவதில்லை.  சேமமாக போய்ச் சேருங்கள்.’ ‘அப்பாவை பார்த்துக்கொள். உன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழமுடியாதா?’ ‘அது எப்படி? நல்ல பெண் அவள். ஆனால் என் அப்பா அவளை துரத்திவிடுவார்.’ ’ உனக்கு ஏதாவது நான் செய்யவேண்டும்.’ அவர் குரல் இரண்டாகப் பிளந்தது. ’ஒன்றுமே வேண்டாம், ஐயா.  உங்கள் அன்பு போதும். என் மகனை ஒரேயொரு முறை பார்த்தால் இந்த வாழ்க்கை எனக்கு நிறைவாகிவிடும்.

’மகனா? யார் மகன்?’

‘உங்களுக்கு தெரியுமே. என் மகன்தான்.’

’நீ சொல்லவில்லையே.’

’அவன் பிறந்தபோது ஒரு நாள் விடுப்பு கேட்டேன். மறுத்துவிட்டார்கள்.’

’அப்படியா?’

’பிறந்து ஆறு மாதம் ஆகிறது.’

’எங்கே இருக்கிறான்?’

’சிறையில்தான், அவன் அம்மாவுடன்.’

திகைத்துப் போனார் ஓலவ். தடியை எறிந்துவிட்டு முழுப்பாரத்தையும் அவன் மேல் சாய்த்து அணைத்தார்.

இரண்டாவது விமான அறிவிப்பு ஒலித்தது.

END

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2022 14:22

கல்வீட்டுக்காரி

கல்வீட்டுக்காரி

அ.முத்துலிங்கம்

தன்னிலும் பார்க்க தன் மனைவி பல மடங்கு சாப்பிடுவார் என்பதை கண்டுபிடிக்க அவருக்கு 20 வருடங்கள் எடுத்தன.  அவர் ஒன்றும் சொந்த மனைவி சாப்பிடுவதற்கு எதிரியல்ல. நல்ல மனுசர்.  எதற்காக அவரிடமிருந்து மனைவி மறைத்தார்? பசிக்கு சாப்பிடுவதும் ஒரு குற்றமா? ’நான் உம்முடைய புருசன்தானே. இதிலே என்ன ஒளிவுமறைவு’ என்றார். ஒரு வருடமா? இரண்டு வருடமா? 20 வருடங்களாக அவரிடமிருந்து மரகதசவுந்தரி ஒளித்திருக்கிறார்.  ஒரு நாளைக்கு மனைவியிடம் காரணத்தை கேட்கவேண்டும் என்று நினைத்தார். அந்த நாள் வரவே இல்லை. அவர் சிலநாட்களிலேயே இறந்துபோனார்.

மரகதசவுந்தரி அன்று சமையல்காரி சமைத்த உணவை இரண்டு பிள்ளைகளுக்கும் கொடுத்தார்.  கணவனுக்கும் மேசையில் பரிமாறினார். பிறகு வழக்கம்போல தனக்கு பசிக்கவில்லை, பின்னர் சாப்பிடுவதாகச் சொன்னார். கணவரும் சரி என்று சொல்லிவிட்டு புறப்பட்டார். மரகதசவுந்தரி வாழையிலையிலோ பிளேட்டிலோ உண்பதில்லை. ஒரு குண்டானில் சோறு, கூட்டு, குழம்பு, பாரைக் கருவாட்டுப் பொரியல் என்று நிறைத்து, மணிக்கட்டுவரைக்கும் கை சோற்றுக்குள் புதைந்துபோக  குழைத்தார்.  அந்த நேரம் பார்த்து ஏதோ காரியமாக சமையலறைக்குள்  கணவர் நுழைந்தார். மரகதசவுந்தரி ஒரு காலை மடித்து, ஒரு காலை நீட்டி தரையிலே குண்டானுக்கு முன் உருட்டிய சாதத்துடன் அமர்ந்திருந்தார். கணவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

அரசரத்தினம் பரம்பரை பணக்காரர். அவருக்கு வன்னியில் நெல் வயல்கள், பளையில் தென்னந் தோப்புகள், நீர்வேலியில் வாழைத் தோட்டங்கள் என பலதும் இருந்தன. வேலைக்காரர்களுக்கும், எடுபிடிகளுக்கும் குறைவில்லை. பணக்காரர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. இவர் நல்லவர்.  பல வருடங்களுக்கு முன்னர் மரகதசவுந்தரியை ஒருநாள் கோயில் கூட்டத்திலே பார்த்தார்.  கும்பலிலே அந்தப் பெண் உட்கார்ந்திருந்தபோது சாதாரணமாகத்தான் தென்பட்டாள். அவள் கண்கள் மயிலிறகில் இருக்கும் கண்கள் போல அகலமாக இருந்தன. எழுந்து நடக்கத் தொடங்கியவுடன் அவளுடைய சின்ன இடை அப்படியும் இப்படியுமாக ஆடியது. அது விநோதமாக இருந்தது. அவளைத்தான் மணமுடிப்பேன் என்று வீட்டில் சொல்லிவிட்டார். மரகதசவுந்தரி வசதியில்லாத குடும்பத்தில் இருந்து வந்தவளாதலால் ஒருவித தடங்கலும் இன்றி திருமணம் சிறப்பாக நடந்தது.

திருமண நாள் இரவு தம்பதிகளை உட்காரவைத்து உணவு பரிமாறினார்கள். மரகதசவுந்தரிக்கு காதுகளில் பசி ஆணை ஒலித்தபடியே இருக்கும்.  அம்மா அவளை அடிக்கடி திட்டுவார். ’உனக்கு இரண்டு சகோதரங்கள். நீயே எல்லாத்தையும் விழுங்கிவிடுகிறாய். குண்டோதரன் வயிற்றில் புகுந்த வடவைத்தீபோல உன் வயிற்றிலும் பசி அணைக்கமுடியாமல் எரிகிறது.  மணமுடித்தால் உன் கணவன் உன்னை நாலு நாளில் துரத்திவிடுவான்.’ தாயாரின் எச்சரிக்கையை மரகதசவுந்தரி நினைத்துக் கொண்டாள். தம்பதிகளுக்கு இலை படைத்து ஒரே அளவு பதார்த்தங்களை வைத்தார்கள்.  இருவரும் சாப்பிடுவதை உன்னிப்பாகக் கவனித்தபடியே சுற்றத்தார் சுற்றி நின்றனர். கணவர் இலையில் படைத்த அத்தனை உணவையும் தின்று தீர்த்தார். மரகதசவுந்தரி நாலு மடங்கு சாப்பிடக் கூடியவள். ஆனாலும் பசியை அடக்கிக்கொண்டு தன் உயிரை விடுவதுபோல பாதி உணவை இலையில் விட்டாள். சுற்றத்தாருக்கு  மிக்க மகிழ்ச்சி. அம்மா அடிக்கடி சொல்லும் வடவைத்தீயை  அவள் வென்றுவிட்டாள்.  

முதல் இரவுக்கு அவர்களைஅறையின் உள்ளே  தள்ளிப் பூட்டினார்கள். பிரமிப்பூட்டும் பெரிய வீடு.  வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தின் ஒரு கரையில் நின்று பார்த்தால் எதிர் கரையில் மனிதர்கள் சின்னனாகத் தெரிவார்களாம். என்ன அலங்காரமான அறை. ஆனால் பசி அவளை ஒன்றையும் அனுபவிக்க விடவில்லை. கணவர் அவள் இடுப்பை  சுற்றி வளைத்தபோது காதல் மூளவில்லை, அங்கே பசிக்கனல்தான் மூண்டது. இடது கையால் கன்னத்தை அசையாமல் பிடித்து, இடம் தேர்வு செய்து முத்தம் கொடுத்தார் கணவர்.  ஒரு மாதிரி முதல் இரவு கழிந்து கணவர் தூங்கியதும் தட்டிலே மீந்து கிடந்த பலகாரங்களை அள்ளி வாயில் திணித்து பசியை ஓர் அளவுக்கு தணித்துக்கொண்டாள்.

மரகதசவுந்தரிக்கு இரண்டு மகள்கள். ஒருத்திக்கு 16 வயது, பெயர் இளவரசி; குந்தவைக்கு 14 வயது. மகள்களைக் கண்டிப்புடன் வளர்த்தார்.  கணவருடைய மரணப்படுக்கை ஆணைப்படி இளவரசியை அமெரிக்க மிஷன் உடுவில் மகளிர் கல்லூரியில் படிப்பித்து அங்கேயே ஓர் ஆசிரியை ஆக்கவேண்டும் என்பது அவர் லட்சியம்.  தெற்காசியாவிலேயே முதல் இடத்தில் இருக்கும்  வதிவிட வசதி கொண்ட கல்லூரியில் படிப்பதென்பது எத்தனை மதிப்பான காரியம்.

வழுவழுப்பான இரண்டு பெரும் தூண்களுக்கு மத்தியில் அமைந்த விறாந்தையில் தேக்கு மரத்தில் செய்து மெத்தை போட்ட ஒரு சாய்வு நாற்காலி இருந்தது. அதிலே வீற்றிருந்து மரகதசவுந்தரி வீட்டு தோட்டத்தை ரசிப்பார். கேட்டின் இரு பக்கமும் போகன்வில்லா பூத்துக் குலுங்கும். மாமரங்களும், பலா மரங்களும், வேப்ப மரங்களும்  இலுப்பை மரமும் நீண்டு வளர்ந்திருக்கும். இலுப்பை பூ பட்டுப்போல விழுந்து தரையை மறைக்கும். இலுப்பை பூ தாகத்துக்கும் சாப்பிடலாம்; பசிக்கும் சாப்பிடலாம்.  சிறுவயதில் தான் பசிதாங்காமல் இலுப்பைப் பழங்களாகத் தின்றது நினைவுக்கு வந்தது. 100 இலுப்பை கொட்டைகளை சேகரித்து தந்தால் அம்மா ஒருசதம் கொடுப்பார். அதற்கு கடையில் சீனிபிஸ்கட் வாங்கி சாப்பிட்டது எத்தனை மகிழ்ச்சியான நினைவு. சிறிது காலம் வீட்டில் அம்மா காய்ச்சிய இலுப்பெண்ணெய் மணமாகவே இருக்கும்.

எல்லையற்ற அதிகாரம் போல் மகிழ்வளிக்கக்கூடியது இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை.  பாவாடை நாடாவை தளர்த்திவிட்டு, தரையில் உட்கார்ந்து, குண்டான் சட்டிக்குள் கையை நுழைத்து, சோற்றுடன் பாரைக் கருவாட்டை சுட்டோ, பொரித்தோ, பொடிப்பொடியாக்கியோ குழைத்து குழைத்து உண்பதன் இன்பத்துக்கு ஈடு இந்த உலகில் வேறு உள்ளதா என யோசிப்பார். தன் தாயாரை நினைத்து மெலிதாகச் சிரிப்பார்.  

ஒருநாள் காலை பத்து மணியிருக்கும்.  தோட்டக்காரர்கள் தங்கள் தங்கள் வேலைகளில் மூழ்கியிருந்தார்கள். கணக்கப்பிள்ளை குனிந்த தலை நிமிராமல் எழுதிக்கொண்டிருந்தார். மரகதசவுந்தரி அசைந்து வெளியே வந்தார். இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்ததுபோலவே கம்பீரமாகக் காணப்பட்டார்.  இரண்டு பிள்ளைகளின் தாய் என்றாலும், குண்டான் குண்டானாக சாப்பிட்டாலும், அவருடைய இடையின் அளவு ஓர் இஞ்சுகூட அதிகரிக்கவில்லை. கறுப்பு கரை வைத்த வெண்பச்சை பருத்திப் புடவையில் மிகையில்லாத அலங்காரம். 38 வயது என்று சொல்லவே முடியாது. இடுப்பிலே  கையை வைத்து அடியெடுத்தவர் ஒரு காட்சியை கண்டு அப்படியே நின்றார். 100, 200 தேங்காய்கள் குவிந்திருக்க அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அலவாங்கில் குத்தி உரித்தான் வேலைக்காரன். ஒரே கதியில் வேலை நடந்தபோது ஓர் இசை கூடி வருவதுபோல அந்த நேரம் ரம்மியமானது. ஓர் அணில் குடுகுடுவென்று ஓடி வந்து நின்று இரண்டு கால்களையும் தூக்கி இப்படியும் அப்படியும் பார்த்தது. வேலைக்காரன் எதிர்பாராத ஒரு காரியம் செய்தான். கையிலே வைத்திருந்த தேங்காயை தலைக்கு மேல் தூக்கி அப்படியே அணில்மேல் போட்டான். அது சத்தம் காட்டாமல் இறந்துபோனது.

மரகதசவுந்தரி அதிர்ந்துபோய்விட்டார். கோபத்தில் முகம் சிவக்க  கோழிபோலக் கத்தினார். ‘அந்த அணில் உனக்கு என்ன பாவம் செய்தது. உன்னை தின்ன வந்ததா? பயமுறுத்தியதா? அல்லது உன் வேலைக்கு இடைஞ்சலாக இருந்ததா? அது தன் பாட்டுக்கு இந்த உலகத்தின் அழகை கொஞ்சம் கூட்டியது. இது குற்றமா? படு பாவி, உனக்கு இங்கே வேலை இல்லை, போ’ என்று துரத்திவிட்டார்.  அவர் வாழ்க்கையையே மாற்றிப்போட்ட தருணம் அது. அவர் கணவர் சாந்தமானவர். ஒருவரையும் வேலையை விட்டு நீக்கியதில்லை. மரகதசவுந்தரியை கல்வீட்டுக்காரி என்று சனங்கள் அழைக்கத் தொடங்கியது அதன் பின்னர்தான். கண்டிப்பானவர் என்ற செய்தி பரவிவிட்டது. நெல் வயல்காரர்களும், தென்னந் தோப்புக்காரர்களும், வாழைத் தோட்டக்காரர்களும் கேள்வி கேட்காமலே பதில்களுடன் காத்திருந்தனர். கணக்கப்பிள்ளையும் ஓர் அதிசயத்தை கண்டார். சென்ற இரண்டு வருடங்கள் ஈட்டிய லாபத்திலும் பார்க்க கடந்த ஆறுமாதங்களில் அதிகமான லாபம் கிடைத்தது.

கதையின் நடுவுக்கு வந்த பின்னரும் முக்கியமான ஒருத்தரை இன்னும் அறிமுகம் செய்யவில்லை. கல்வீட்டில் இருந்து அரைமைல் தூரத்தில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அந்தக் கிராம மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராமத்துச் சனமும் சாமான்கள் வாங்க வருவார்கள். எந்த நேரமும் சனக் கூட்டத்துக்கு குறைவில்லை. முதலாளி சாமான்களை விற்கும்போது வாடிக்கையாளர்களின் பெயர்களைச் சொல்லி காசை வாங்குவார்.  பெயரைச் சொன்னால் அவருக்கு முகம் தெரியும். இது பெரிய கலை. அவருடைய விலைகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் சனங்களிடையே அவருக்கு மதிப்பு இருந்தது.

இவருக்கு ஒரு மகன் இருந்தான். பெயர் செல்வகுமரன். வயது 19, 20 என்று வைத்துக் கொள்வோம். எஸ்.எஸ்.சி சோதனை இரண்டு தடவை பெயில் என்பதால் தகப்பனுடன் கடையை பார்த்தான். ’நீ சும்மா வந்து கடையில்  என்னோடு நின்றால் போதும். வியாபாரம் என்பது என்ன? வாடிக்கையாளர்களை தெரிந்து வைத்திருப்பதுதானே’ என்பார்.  நீளக் கால்சட்டையும், பச்சை கலரில் கோடுபோட்ட சட்டையும் அணிந்து ஸ்டைலாக காட்சியளிப்பான். சுருள் சுருளான கேசம். வைலர் கைக்கடிகாரம் தெரிவதுபோல கையை சுருட்டியிருப்பான். முடியை கைகளால் அடிக்கடி கலைப்பான். சும்மா இருக்கும்போதே அவனுக்கு சிரிப்பதுபோல முகம். அவன் சிரித்தால் எதிரில் நிற்பவர் மயங்கிவிடுவார். அப்படி ஒரு வசீகரம்.

தகப்பன் பார்த்தார் செல்வகுமரன் நிற்கும் நேரங்களில் எல்லாம் வியாபாரம் கூடியது. அவன் ஆட்கள் பெயர்களை மனனம் செய்வதில்லை. அவன் செய்வதெல்லாம் ஒரு சிரிப்புத்தான், அதில் ஏதோ மாயசக்தி இருந்தது. கல்வீட்டுக்காரர்கள் மட்டும் பலசரக்கு வாங்குவதற்கு வருவது கிடையாது. வாரத்துக்கு என்ன தேவை என்று கல்வீட்டிலிருந்து டெலிபோனில் செய்தி வரும். கடைப்பையன் ஒருவன் சாமான்களை கொண்டுபோய் இறக்கி வைப்பான். மாதமுடிவில் கணக்கப்பிள்ளை பணம் அனுப்புவார்.

அப்படித்தான் ஒருநாள் கடைப்பையன் இல்லாதபடியால் செல்வகுமரன் சாமான்களை சைக்கிளில் ஏற்றி கல்வீட்டுக்கு சென்றபோது வீட்டில் இளவரசி இருந்தாள். சைக்கிள் ஓட்டி வந்த வாலிபனைக் கண்டதும் அவள் இதயம் நின்றது. இத்தனை அழகான ஒருத்தன் இந்தக் கிராமத்தில் இருக்கிறானா? அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள். அவனுடைய கண்கள் முதலில் சிரித்தன. பின் வாய் மெல்லத் திறந்து சிரித்தது.  ஒருவித திட்டமிடாமல் இயல்பாகவே  இவையெல்லாம் நடந்தன. ஒரு முழுநிமிடம் சைக்கிளை விட்டு இறங்காமல் காலை நிலத்தில் ஊன்றியபடி கண்களை  எடுக்கமுடியாமல் நின்றான். இளவரசி ஏதோ பெயர் சொல்லி கத்தியபடியே உள்ளே ஓடினாள்.  இதுவரை காலமும் கடைப்பையன்தான் இந்த வீட்டுக்கு சாமான்கள் விநியோகித்தான். ’இனிமேல் நான்தான்’ என்று செல்வகுமரன் தீர்மானித்தான்.

அன்று முழுக்க இளவரசி பேய் அறைந்தவள் போல நடமாடினாள். தன் அறையில் போய் படுத்துக் கொண்டாள். அவளுக்கு தனிமை தேவையாக இருந்தது. அவன் சைக்கிளில் வந்து சறுக்கியபடி திரும்பியவிதம், கீழே இறங்காமல் சைக்கிள் கைப்பிடியை பிடித்து நிலத்தில் கால் ஊன்றி நின்றது, அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை செய்தது எல்லாம் திருப்பித் திருப்பி படம்போல மனதில் ஓடியது. ஒரு சாதாரண பலசரக்குக்கடை வேலைக்காரன் இத்தனை அழகானவனா? என்ன ஸ்டைலாக தோற்றமளித்தான். அவளால் நம்பமுடியவில்லை.

இரண்டு நாட்கள் ஓடின. மனசு  பதற்றம் ஓயவே இல்லை. தங்கை குந்தவையிடம் கெஞ்சினாள், ’வா, அந்தக் கடை மட்டும் போய் வருவோம். எனக்கு ஒற்றை ரூல் கொப்பி ஒன்று வீட்டுப்பாடம் எழுத அவசரமாக வேணும்.’ ‘ஐயோ, நான்வர மாட்டேன். அம்மா தோலை உரிச்சுப் போடுவா.’ ’சீ போ. உன்னை தங்கச்சி என்று சொல்ல வெட்கமாயிருக்கு.’ ’வேலைக்காரனிடம் சொன்னால் அவன் வாங்கி வருவான்.’ ’அவனுக்குத் தெரியாது. நான்தான் கொப்பியில் ரூல் சரியாய் அடித்திருக்கா என்று பார்த்து வாங்கவேணும்.’ ’அக்கா, அந்தக் கடைக்கு கிட்டவே போக ஏலாது. ஒருநாள் ஒருத்தன்  ‘கல்வீட்டுக்காரியின் மகளும் கல்நெஞ்சுக்காரி’ என்று என் காதுபடவே பேசினான். ’சரி, நீ வராவிட்டால் போ. நான் போறன்.’   ’நுள்ளாதே, நுள்ளாதே வாறன். அம்மாட்ட பிடிபட்டால் நீதான் காப்பாற்ற வேணும்.’ ’சரி சரி வா. என்ன சிரச்சேதம் செய்யப் போறாவா?’

கடையிலே அவன் மட்டும் இருந்தான். அவன் நாலைந்து கொப்பிகளை எடுத்துக் காட்டினான். இவள் ஏதோ புடவை வாங்க வந்ததுபோல ஆற அமர ஒவ்வொன்றாக வெய்யிலில் பிடித்து ஆராய்ந்தாள். கோடுகள் சரியாக ஓடுகின்றனவா எனச் சோதித்தாள். ஒற்றையை இரண்டு விரலாலும் பிடித்து உரசிப் பரிசோதித்தாள்.  அவன் தலையை மட்டும் கிட்ட நீட்டி ‘எந்த ஸ்கூல்? என்றான். பின்னர் ’என்ன படிக்கிறீர்?’ என்றான். அவள் சொன்ன பதில் வார்த்தைகள் அவனை நோக்கிப் போய் பதி வழியிலேயே முடிந்துவிட்டன. ஒரு கொப்பி வாங்கி முடிய பத்து நிமிடம் ஆனது. பின்னர் ஒரு பேனை வேண்டுமென்றாள். அவன் பல பேனைகளை எடுத்து வைத்தான். அவள் கடுதாசியில் தன் பெயரை எழுதிப் பார்த்தாள். பின்னர் தன் வீட்டு டெலிபோன் நம்பரை எழுதிப் பரிசோதித்தாள். பிறகு பேனை சரியில்லை என்று திருப்பிக் கொடுத்துவிட்டு சடாரென்று புறப்பட்டாள். குந்தவைக்கு எரிச்சல். ஒரு எளவு பிடித்த கொப்பிக்கு இவ்வளவு நேரமா?  

செல்வகுமரனிடமிருந்து முதல் தொலைபேசி இரண்டு நாள் கழித்து சிலோன் ரேடியோவில் அவள் ’இசைச் சித்திரம்’ கேட்டுக் கொண்டிருந்தபோது வந்தது. டெலிபோன் எப்பொழுதும் பூட்டியிருப்பதால் இளவரசி  அழைக்க முடியாது, ஆனால் வரும் அழைப்புகளை ஏற்று பேசலாம். அம்மா தோட்டத்தை மேற்பார்வை செய்யப்  போயிருந்தார். இளவரசி ’ஹலோ’ என்றதும் அவனுக்கு தெரிந்துவிட்டது. தன் பெயரைச் சொன்னான். இவள் ’தெரியும்’ என்றாள். ’ரூல் கொப்பி சரியா?’ என்றான். ’ஓம்’ என்றாள். ’வீட்டுப் பாடம் செய்தீர்களா?’ என்றாள். ’ஓம்.’ ‘உங்கள் வகுப்பில் எத்தனை மாணவிகள்?’ ’என்ன என்ன பாடம் எடுக்கிறீர்கள்?’ ’நானும் தபால் மூலம் படிக்கிறேன். என்னிடம் நல்ல வேதியியல் நோட்ஸ் இருக்கு, உங்களுக்கு வேணுமா?’ என்றான். திடீரென்று கோட்டைத் தாண்டினான். ’எனக்கு உங்கள் நினைப்பாகவே இருக்கு.’ அவள் சொன்னாள் ’எனக்கும்தான்.’

அடிக்கடி பேசிக்கொண்டார்கள். அவர்களுக்காகவே சங்கேத வார்த்தைகள் உருவாகின. கடிதங்கள் பறந்தன. ஒருநாள் இரவு உணவு நேரத்தின்போது மரகதசவுந்தரி ஓர் அறிவித்தல்  செய்தார். ’இன்றுதான் கடிதம் வந்தது. இனிமேல் இளவரசி உடுவில் பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பாள்.’ எத்தனை அழுது கூத்தாடியும் இளவரசியின் எதிர்ப்பு பலனளிக்கவில்லை.  உடுவில் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தாலே அது  தனி மதிப்புத்தான்.   பைத்தியம் பிடித்ததுபோல இளவரசி முதல் ஒரு மாதத்தை விடுதியில் கழித்தாள். மாத முடிவில் அம்மா வந்து வீட்டுக்கு அழைத்துப்போனார். சனி, ஞாயிறு தங்கிவிட்டு திங்கள் காலை திரும்பவேண்டும். சனிக்கிழமை போனது. அவன் அழைக்கவில்லை. சரி, ஞாயிறு அழைப்பான் என நினைத்தாள். அது எப்படி முடியும்? அம்மா வீட்டிலே இருந்தார். ஏமாற்றமாகிவிட்டது. அடுத்தநாள் அதிகாலை புறப்பட வேண்டும்.

படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். தூக்கமே வரவில்லை. நடுச் சாமம் எழும்பி யன்னலில் போய் நின்றாள். நீல நிற இருட்டு. தொழுவத்தில் மாடுகள் நின்றன. உற்றுப் பார்த்தபோது ஏதோ அசைந்தது. ஓர் உருவம் கைகாட்டியது. இதயம் படபடவென்று எலும்பை உடைத்து வெளியே வரத் துடித்தது. மெதுவாக இறங்கி பின் கதவு வழியாக வெளியே வந்தாள். செல்வகுமரன் நின்றான். இடது கன்னத்தில் சந்திர ஒளிபட்டு தகதகவென்று அவன் மின்னினான். அழுகை பீறிட்டுவர அப்படியே கட்டி அணைத்தாள். இரவு ஒன்பதிலிருந்து அங்கே காத்து நின்றதாக அவன் சொன்னான்.

இப்படியே சந்திப்பு தொடர்ந்தது. உலகத்துக் காதலர்கள் பெற்றோரிடம் பிடிபடுவதுபோல இவர்களும் ஒருநாள் அகப்பட்டார்கள். செல்வகுமரன் எழுதிய கடிதம்தான் காரணம். முதல்நாள் யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் எம்.ஜி.ஆரின் ’அடிமைப்பெண்’  முதல் காட்சி பார்த்துவிட்டு அதிலே ’ஆயிரம் நிலவே வா’ என்று வரும் பாடலில்  ஒரு வரியை திருடி எழுதியிருந்தான். ’நள்ளிரவு துணையிருக்க, நாமிருவர் தனியிருக்க.’ இந்த வரிதான் பிடிபட்டது. மரகதசவுந்தரி கோபம் வந்தால் கணவர் வைத்திருந்த அலங்காரப் பிரம்பை  வெளியே எடுப்பார். சும்மா ஒரு வெருட்டுத்தான்.  அவர் பிரம்பை உருவி எடுத்ததும் வேலைக்காரர்கள் வெளியே ஓடிவிட்டார்கள். குந்தவை பாய்ந்து வந்து தாயாரை கட்டிப்பிடித்தாள். மூன்று நாட்கள் பேச்சு வார்த்தை இல்லை. இளவரசி சாப்பிட மறுத்தாள். அவள் சொல்லிவிட்டாள் ’எனக்கு கல்யாணம் என ஒன்று நடந்தால் அது செல்வகுமரனுடன்தான்.’ 

செல்வகுமரனும் பெற்றோரும் ஒரு நல்ல நாள் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்த தட்டுடன் பெண் பார்க்க வந்தார்கள். மரகதசவுந்தரி நினைத்ததற்கு மாறாக அவர்கள் நல்ல பண்பாடு உள்ளவர்களாக காணப்பட்டார்கள். மாப்பிள்ளை திடமான உடல்கட்டுடன் மரியாதை தெரிந்தவனாக இருந்தான். இப்படி ஓர் அழகன் இந்த ஊரில் இருக்கிறானா என இளவரசி அதிசயித்ததுபோல தாயாரும் வியந்தார். உடனேயே மனதில் சம்மதம் தோன்றிவிட்டது.  அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம், ஆனால் ஒரு நிபந்தனை. மகள் படிப்பை தொடர்ந்து கணவர் ஆசைப்பட்டதுபோல உடுவில் மகளிர் கல்லூரியில் ஆசிரியையாக அமரவேண்டும். எல்லோருக்கும் அதில் சம்மதம்.

திருமணம் முடிந்த பின்னர் இளவரசி விடுதியில் போய் தங்கினாள். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மரகதசவுந்தரியின் ஏ30 கார் போய் அவளை அழைத்து வரும். இரண்டு நாட்கள் செல்வகுமரன் அவர்களுடன் வந்து தங்குவான். இது தொடர்ந்தது. சிலசமயங்களில் தாயார் கார் அனுப்பாமல், ’படிப்பு முக்கியம்’ என்பார். இளவரசியை ஓர்  அடிமையாகவே மரகதசவுந்தரி நடத்தினார்.

ஒருநாள் குந்தவையிடமிருந்து இளவரசிக்கு கடிதம் வந்தது. குந்தவை கடிதம் எழுதுவதே இல்லையாததால் அதனை அவசரமாகப் பிரித்தாள்.

’எடி அக்கா,

நீ போய் விடுதியில் உட்கார்ந்து கொள். உனக்கு என்ன? நான் இங்கே இடிபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை படிக்கவேண்டாம் என்று சீமாட்டி நிறுத்திவிட்டார். உன்னுடைய பழைய பூப்போட்ட கிமோனாவை எனக்கு தந்து அதை வீட்டு வேலைக்கு போடச் சொல்கிறார். அட்டூழியம் என்றால் தாங்க முடியவில்லை.  இந்த ஊருக்கு அவர்தான் ராணி என்ற நினைப்பு. அவவின் மண்டை முழுக்க பாரைக் கருவாடுதான். நான் துணியிலே பூக்கள் செய்து வீணாகிறேன். என்னுடைய முறைப்பாடுகளைக் கேட்க ஒருவருமில்லை.  அடிக்கடி அப்பாவின் பிரம்பை வெளியே எடுக்கிறார். குத்துச்சண்டை வீரர் தலையை கைகளால் மூடிக்கொண்டு சுற்றிச்சுற்றி ஓடுவதுபோல நான் ஓடுகிறேன்.   நான்தான் இங்கே நிரந்தர வேலைக்காரி.  எத்தனை கிள்ளும் உன்னிடம் வாங்குவன். ரூல் கொப்பி வாங்க உன்னுடன் நூறு தடவையும் நான் வரத் தயார். எனக்கு மீசை முளைத்துவிட்டது. அதைப் பார்ப்பதற்காவது  உடனே வா.’

இளவரசிக்கு ஒன்றுமே புரியவில்லை. அன்றே தாயாரை வந்து தன்னைக் கூட்டிப்போகும்படி அழைத்தாள். தாயார் வந்தார், ஆனால் கூட்டிப்போகவில்லை. ’என்னுடைய பிரம்புக்கு  வேலை வைக்காதே. உனக்கு ஒரு நிபந்தனை போட்டு உன் திருமணத்தை முடித்துவைத்தேன். அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது உன் கடமை.  உனக்கு என்ன அவசரம், 19 வயதுதானே ஆகிறது. படிப்பை நிறுத்தலாம் என்று கனவிலும் நினைக்காதே.’  ’என்னை இப்படி படி படி என்று வதைக்கிறாய். குந்தவையை படிக்கவேண்டாம் என்று நிறுத்திவிட்டாயே.’ ’அதை விடு. அந்த மூதேவிக்கு படிப்பு ஏறாது.’

அம்மாவின் பிடியிலிருந்து விலக ஒரேயொரு வழிதான் இருந்தது. படிப்பை முடித்துவிட்டு குமரனுடன் எங்கேயாவது தூரதேசத்துக்கு ஓடிவிடுவது. அப்பா சொன்னாராம்; நான் அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டுமாம். பாவம் குந்தவை, அவள் தனித்துவிட்டாள்.குதிரைக்குட்டி போல துள்ளித் துள்ளி திரிவாள். அவள் மகிழ்ச்சியை தேடிப் போவதில்லை. உயிர் வாழ்வதே அவளுக்கு மகிழ்ச்சிதான்.

குந்தவையின் இரண்டாவது கடிதத்தை பதைபதைப்புடன் திறந்தாள்.

’எடி அக்கா,

உனக்கு மூளையே கிடையாது. நிலைமை மோசமாய் போகிறது. சீமாட்டி காலை மாற்றிப் போடுவதுபோல ஆட்களை மாற்றுகிறார். துப்பல் பணிக்கத்தை உடைத்ததற்காக நேற்று வேலைக்காரியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.  அணிலைக் கொன்றதற்காக ஒரு வேலைக்காரனைத் துரத்திய அம்மா இல்லை இது. அவருடைய தோலுக்குள் இன்னொரு அம்மா இருப்பது உனக்குத் தெரியாது. நான் சொல்லச் சொல்ல நீ கேட்பதே இல்லை. உன்ரை ஆசைப் புருசன்  இப்ப இலுப்பைப் பழம் தின்ன வரும் வௌவால்களை இரவில் வலைவைத்து பிடிக்கிறார். அவற்றின் நரி மூஞ்சி  பார்க்கச் சகிக்காது. சமையல்காரி அதை சமைத்து கொடுக்கிறாள். உனக்குத் தெரியும், அது வாயால்தான் கக்கா செய்யும். அதன் இறைச்சி சமைத்தால் மூன்று நாள் வீடு மணக்கும். நீ அங்கே படிச்சுக் கிழி. சீமாட்டியின் ராச்சியம் உச்சத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதுதான் கடைசி. இனியும் நான் செத்த பிணமாகிய உனக்கு கடிதம் எழுதப்போவதில்லை.’

இளவரசிக்கு கைகள் நடுங்கின. அம்மா கார் அனுப்பப் போவதில்லை. விடுதியில் அனுமதி வாங்கிப் புறப்பட முடியாது. இரவு உணவு சமயம் ஒருவரும் அறியாமல் கேட் ஏறிக் குதித்தாள். எந்த பஸ், எங்கே எடுப்பது என ஒன்றுமே தெரியாது. சிநேகிதி சொன்னதுபோல ஆவுரஞ்சிக் கல்லுக்கு பக்கத்தில் நின்றாள். இரண்டு பஸ் பிடித்து வீடு வந்துசேர்ந்தபோது ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் அணைந்துவிட்டன.  தாயார் புயல்போல சீறிக்கொண்டு  பிரம்பை எடுத்தாலும் எடுப்பார். சமையல்காரியின் பின் கதவு வழியாக  மெல்ல சமையல் அறைக்குள் நுழைந்தாள். அம்மா சாப்பிடும் குண்டான் வழித்து துடைத்து கழுவாமல் கிடந்தது. இந்த வயதிலும் ஒரு குண்டான் பசியா? வீடு முழுக்க பிரேதம் அழுகிய மணம். 

தங்கையின் அறைக் கதவு பூட்டாமல் கிடந்தது. எட்டிப் பார்த்து எழுப்புவோமா என்று யோசித்தாள். பின்னர் நேரே போய் அம்மாவின் கதவை தட்டினாள். மறுபடியும் தட்டினாள். ’ஆர்’ என்ற அதட்டல் குரல் வந்தது. பதில் பேசாமல் நின்றாள். ஆவேசமாகக் கதவை திறந்த மரகதசவுந்தரி வாய் பிளக்க அப்படியே நின்றார். குலைந்த ஆடை. கலைந்த கேசம். முகத்திலே கோபம் கொதிக்க ’என்ன இளவு இந்த நேரம்?’ என்றார். இவள் பதில் பேச முன்னர் இன்னொரு காட்சியை கண்டாள். தபால் மூலம் படிப்பவனும், வௌவால் இறைச்சி தின்பவனுமான இவளுடைய புருசன் மெதுவாக வெளியே வந்து குனிந்த தலையுடன்  நின்றான். எந்த நேரமும் வசீகரமாகக் காணப்படும் அவன் வதனம் அத்தனை கோரமாக மாறியிருந்தது. இளவரசியின் தேகம் அனலாக எரிந்தது. தொண்டைக்குள் ஒரேசமயத்தில் பல வார்த்தைகள் உண்டாகி சிக்குப்பட்டன.

’நீ ஒரு தாயா? உன் சொந்த மகளை நடுத்தெருவுக்கு துரத்திவிட்டாயே. நீ பேய். நீ பிசாசு. வஞ்சகி, என் புருசனைப் பறித்த நீ நல்லாயிருப்பாயா? உனக்கு வெட்கமே இல்லையா?’

மரகதசவுந்தரி கோழிக்குரலில் கூவினார்.

’வாயை பொத்தடி. என்னடி வெட்கம். நான் என்ன வீதி வீதியாய் அலைஞ்சு வேசை ஆடினேனா? இது என் சொந்த மருமகன். சொந்த மருமகன்.’

END           

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2022 14:17

யானையின் சம்பளம்

யானையின் சம்பளம்

அ.முத்துலிங்கம்

வேறு வழியில்லை. யானையை கொண்டு வரவேண்டும் என்று சொன்னது லலித் ஜெயவர்த்தனாதான். எப்படி? ‘நான் கொண்டு வருகிறேன். இது கூடச் செய்ய முடியாதா?’ என்றான். எல்லா பிரச்சினைகளுக்கும் அவனிடம் தீர்வு இருந்தது. அநேக சமயங்களில் பிரச்சினையை உண்டாக்குவதும் அவனாகவே இருக்கும்.

லாம்ரெட்டா கம்பனி ஆரம்பித்தபோது இளம்வயது பயிற்சியர் தேவைப்பட்டார்கள். கடைநிலை வேலை; சம்பளம் குறைவு.  200 பேருக்கு மேலே நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.  நேர்முகத் தேர்வு நடந்த அன்று காலை ஜெயவர்த்தனாவின் செயலரிடமிருந்து ஒருவரைப் பரிந்துரைத்து   தொலைபேசி வந்தது.  பெயர் லலித் ஜெயவர்த்தனா என்றான். பார்த்தவுடன் கவரும் தோரணையில் இருந்தான், இவனாகத்தான் இருக்கும். அப்போதெல்லாம் இலங்கையில் ஜெயவர்த்தனா வெகு பிரபலமான பெயர். இரண்டு வருடம் கழித்து இவர் நாட்டுக்கு பிரதமர் ஆவார். மேலும் இரண்டு வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதி ஆவார். இதுவெல்லாம் எப்படி ஊகிக்கமுடியும் . எதற்கும்  இருக்கட்டும் என்று அவனைத் தேர்வு செய்தேன். அதைவிட சிறப்பான மடத்தனம் இருக்க முடியாது.

 அவன் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரி சமமான அளவில் உண்மையையும் பொய்யையும் கலந்து பேசுவதால் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. ஆர்க்கிமெடிஸ் தேற்றம் பற்றி பேசினால் ஏதோ அவன்தான் அதைக் கண்டுபிடித்ததுபோல அத்தனை உறுதியுடன் பேசுவான். அவனுடைய முடிதான் விநோதமாக இருக்கும்.  நடுவிலே உச்சி பிரித்து இரண்டு பக்கமும்  சரிசமமாக காதுக்கு கீழே தொங்கும். வசீகரமான முகம். அவன் துள்ளலுடன் நடக்கும்போது முடி பறந்து பறந்து நெற்றியில் வந்து அடிக்கும்.

தொழில்சாலையை பெரிதாக்கவேண்டும் என்பதால் பக்கத்து காட்டு மரங்களை வெட்டி இடமுண்டாக்க வேண்டும் என்ற கட்டளை இத்தாலியில் இருந்து வந்தது. காட்டை அழிப்பது என்பது பிரம்மாண்டமான வேலை. குறிப்பிட்ட தேதிக்குள் வேலை முடியாது போலவே தோன்றியது. யானையுடன் வருகிறேன் என்று புறப்பட்ட லலித்  உண்மையில் எதிர்பாராத வேகத்தில்   யானையுடன் வந்தான். யானை வந்ததும் நாங்கள் எல்லாம் சிறிய உருவம் எடுத்ததுபோல ஆகிவிட்டோம். தும்பிக்கையின் நடுவிலும் காதுகளின் ஓரத்திலும் யானைக்கு செம்மஞ்சள் பரவிவிட்டது. சேவகம் செய்வதற்கு  தயார் என்பதுபோல  யானை தும்பிக்கையை அசைத்தபடி பாவமாக நின்றது.  பத்து ஆள் வேலையை தனியே செய்தது. மரங்களை வெட்ட வெட்ட தூக்கித்  தூக்கிப் போட்டது. காலக்கெடுவுக்குள் வேலை முடிக்காவிட்டால் பெரிய சங்கடமாகிவிடும். அதை உணர்ந்ததுபோல அது ஓர் அடிமையைப் போலவே வேலை செய்தது. .

 தேநீர் இடைவேளையின் போது யானையிடம் லலித் வந்துவிடுவான். ’நீ ஸ்கூட்டர் பயிற்சியரா அல்லது யானை பயிற்சியரா?’ என்று கேட்டேன். ’சேர் யானைப்பாகன் ஆவது என் கனவு’ என்றான். ’ஒரு நல்ல ஸ்கூட்டர் எஞ்சினியராவதை  விட்டு மோசமான யானைப்பாகன் ஆக விரும்புகிறாயா?’ என்றேன். ’ஸ்கூட்டருக்கு உயிர் கிடையாது. அதை பழக்குவது சுலபம். யானை அப்படியா. உயிருள்ளது. அது சிந்திக்கும். என்னை எசமானாக ஏற்குமோ தெரியாது. யானைக்கு தேநீர் இடைவேளை இல்லையா?’ என்றான். ’நீ அதற்கு தேநீர் கொடுக்கலாமே’ என்றேன். சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். ’சேர் பாவம், வாழைப்பழம் கொடுப்போம்’ என்றான். நானும் சரி என்றேன். உடனேயே போய் ரோட்டுக்கடையில் பெரிய வாழைக்குலை ஒன்றை வாங்கி தோளில் சுமந்து வந்தான். ’வாழைக்குலையா? நான் வாழைப்பழம் என்றல்லவா நினைத்தேன்.’ ’உங்கள் தாராள மனசு எனக்கு தெரியும் சேர். பாருங்கள் எப்படி அது சாப்பிடுகிறது.’ அதன் பின்னர் தினமும் அதற்கு ஒரு குலை வாழைப்பழம் கம்பனி கணக்கில் கொடுக்கப்பட்டது. 

யானைப்பாகன் பெயர் ஊணம்புவே.  பச்சை கோடு போட்ட சாரம் கட்டி, மேலே UCLA என்று எழுதிய பழைய டீசேர்ட் அணிந்து தொப்பியையும் கோணலாக வைத்திருந்தான். யானையின் கண்கள்போல சிறிய கண்கள் ஆனால் தடிப்பான உதடுகள். அகலமான கறுப்பு பெல்ட்டிலே  அங்குசம்  இருக்கும். அதை பாவிக்க வேண்டிய சந்தர்ப்பமே அவனுக்கு அமையவில்லை. சம்பள நாள் அன்று வேலையாட்கள்  நிரையாக  வந்து சம்பளத்தை  பெற்றுக் கொண்டார்கள். காசாளர் கொடுக்க அவர்கள் கையெழுத்து வைத்தார்கள். ஊணம்புவே சம்பளத்தை பெற்றபின்னர்  அப்படியே அசையாமல் நின்றான். ’யானையின் சம்பளம்?’ என்றான். ’அதுதான் கொடுத்தாகிவிட்டதே.’ ’அது என்னுடைய சம்பளம். யானையின் சம்பளம் எங்கே?’ காசாளர் திகைத்துவிட்டான். இதற்கிடையில் லலித் அங்கே எப்படியோ வந்து சேர்ந்து யானையின் சம்பளத்தை கொடு என்று வாதாடினான்.. பெரிய சண்டையாகிவிட்டது.

எல்லோரும் சத்தம் போட்டார்கள். யானை மாத்திரம் அமைதியாக காதுகளை விசிறியபடி கூர்மையாகப் பார்த்துக்கொண்டு நின்றது. காசாளர் குரலை உயர்த்திப் பேசினான். டிராக்டர்  சாரதிக்கு சம்பளம் கொடுக்கிறோம். டிராக்டருக்கும் கொடுக்கிறோமா? லலித்துக்கு கோபம் வந்துவிட்டது. யானையும் டிராக்டரும் ஒன்றா? யானை காடு காடாகத் திரிந்து தின்னும், மூச்சு விடும், நடக்கும், பிளிறும், கோபம் வந்தால் ஆட்களை தூக்கி அடிக்கும். அது உயிர் உள்ளது. அதற்கும் சம்பளம் வேண்டும். ஏமாற்றக்கூடாது. சரி ஏட்டிலே எழுதுவதற்கு யானைக்கு என்ன பேர் என்றேன். கஜபாகு என்றான். கஜபாகுவா? ஓம் சேர் இலங்கை அரசன் ஒருவரின் பெயர். கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் என்ற சிலப்பதிகார வரிகள் நினைவுக்கு வந்தன. லலித் என்ன சம்பளம் போடலாம் என்றேன். சேர் நீங்கள் தாராளமானவர். ஒரு யானையின் வயிற்றில் அடிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் என்றான். அன்று இரவு கயவாகு என்று எழுதி அவனுக்கு கொடுத்த சம்பளக் கணக்கை இத்தாலிக்கு அறிவித்தேன். கயவாகு என்பது யானையின் பெயர் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்.  

மரங்களை யானை தூக்கிக் கொண்டு வெளியே வருவதை மட்டுமே நான் பார்த்தேன். ஒருநாள் காட்டுக்குள்ளே சென்றேன். சின்னச் சின்ன மரங்களையும் செடிகளையும் கொடிகளையும் தாண்டி உள்ளே நுழைந்தபோது காடு என்னைச் சூழ்ந்தது. சூரியன் தெரியவில்லை ,ஆகாயத்தை தொடும் நெடுமரங்கள். நாலுபேர் கைகளை விரித்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத அகலம் கொண்ட  ராட்சத மரத்தின் பெயர் பெருக்கா என்றான் மரம்வெட்டி. அதன் வயது 400இருக்கலாம் என்று சொன்னார்கள். ஓர் அடி பின்னே வைத்து கழுத்தை நிமிர்த்தி ’இதையும் வெட்டுவீர்களா?’ என்றேன். அவர்கள் சிரித்துக்கொண்டு ’நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்கள்.

லலித் ஜெயவர்த்தனாவுடைய  வேலைத் திறனை மறைக்க முடியாது. என்னதான் அவன் பொய் சொன்னாலும், ஏமாற்றினாலும், பயிற்சியர்கள் எல்லோருமே அவனை ஒரு தலைவன் போலவே பார்த்தார்கள். எப்படி உனக்கு ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள்  தெரியும் என்று கேட்டபோது தபால் மூலம் படித்தேன் என்று சொன்னான். அப்பொழுது எல்லாம் இப்போது போல இணைய வசதிகள் கிடையாது. அவனுடைய வசீகரமும் வேலைத்திறனும் யாரையுமே மயக்கிவிடும். கம்பனியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் வேலையில் படிப்படியாக உயர்ந்து ஸ்கூட்டர்களை ஓட்டிச் சோதனை செய்யும் குழுவில் இணைந்துவிட்டான். ’சேர்  பறவை செட்டை அடிப்பதுபோல எஞ்சின் சத்தம் சீராகக் கேட்கவேண்டும்’ என்று என்னிடம் ஒருநாள் சொன்னான். ஸ்கூட்டரில் எதையாவது பூட்டவேண்டுமென்றால் வலது பக்கம் திருப்பவேண்டும். திறப்பதற்கு இடது பக்கம் திருப்பவேண்டும். ஆனால் flywheelஐ  திறக்க மாத்திரம் வலது பக்கம் திருப்பவேண்டும் என்று திரும்பத் திரும்ப சொல்வான்.  அங்கே வேலை செய்த பெரிய மெக்கானிக்குகள் கூட அவன் சொல்வதற்கு மறுவார்த்தை பேசுவதில்லை.

 அவன் யாருக்கும் எதுக்கும் பயப்படமாட்டான்.  யாராவது வாளை உருவிக்கொண்டு வந்தால் அதன் நுனியை பிடித்து இழுத்து வாளைப் பறிக்கக்கூடிய துணிச்சல்காரன். பயிற்சியர் சிலரை இத்தாலிக்கு மேல் பயிற்சிக்காக அடுத்த வருடம் அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டபோது அதை எப்படியோ அறிந்து கொண்டு என்னிடம் வந்தான்.  ’என்னை அனுப்புங்கள் சேர்’ என்றான். ’நீ அற்புதமாக வேலை செய்கிறாய். உனக்கு பயிற்சி தேவையில்லை’ என்றேன். ’பயிற்சி வேண்டாம் சேர்.  நான் இத்தாலியில் நகரும் மாடிப்படிகளை பார்க்கவேண்டும்.’ ’மாடிப்படிகளா? உனக்குப் பைத்தியமா?’ ’இல்லை சேர். பிரமாதமாக நகரும் மாடிப்படிகளை நான் கனவுகளில்தான் பார்க்கிறேன். என் வாழ்நாள் ஆசை, பிளீஸ் சேர்.’ அவன் மன்றாட ஆரம்பித்தான். ’ நீங்கள் ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. சும்மா நிற்கலாம். படிக்கட்டுகள் உங்களை மேலே மேலே தூக்கிச் செல்லும்.’

பொது ரோட்டில் முப்பது மைல் தூரத்தை ஸ்கூட்டர்களை ஓட்டி சோதனை பார்க்க கம்பனி அனுமதி வாங்கியிருந்தது. தினம் ஐந்தாறு சோதனைக்காரர்கள் ஸ்கூட்டர்களை  ரோட்டிலே ஓட்டி சோதனை செய்து  சான்று வழங்குவர்கள். அதன் பின்னரே அவை  விற்பனைக்கு அனுப்பப்படும். லலித் மற்றவர்கள்போல ஸ்கூட்டரை நேராக உட்கார்ந்து ஓட்டுவதில்லை. ஒருபக்கம் சாய்ந்து கால்களை பக்கவாட்டாக வைத்து ஸ்டைலாக, அதி வேகமாக செலுத்துவான். அது ஒரு கண்கொள்ளாக காட்சி. ஏன் இப்படி கண்மண் தெரியாமல் ஓட்டுகிறாய் என்றால் சோதிக்கும்போது அவற்றின் எல்லாத் தன்மைகளையும் ஆராயவேண்டும் என்பான். ஒருநாள் வீதியிலே அவனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. ’ஸ்கூட்டர் போனால் பரவாயில்லை, உனக்கு ஏதாவது காயமா?’ என்று கேட்டேன். ’இல்லை சேர், முழங்கையில் ஒரு சின்னக் கீறல்’ என்று சிரித்துக் கொண்டே அதைக் காட்டினான்.

இரண்டு நாள் கழிந்தது. இவன் ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு வர,  இவனது இடது பக்கத்தில் ஓர் இளம்பெண் கையில் கட்டுப்போட்டு அதை ஒரு துணியிலே கட்டி மாலையாக அணிந்துகொண்டு நொண்டி நொண்டி வந்தாள். அவனையும் அந்தப் பெண்ணையும் பார்த்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் பிடித்தது. என்ன வில்லங்கம் வருகிறதோ என மனம் பதைபதைத்தது. ஆனால் வெளியே காட்டாமல் ’என்ன லலித்?’ என்றேன். ’சேர் உங்கள் அலுவலக அறைக்கு போவோம்’  என்று முன்னே நடக்க, அவள் பின்னே நொண்டிப் போனாள். நான் வெளியே நிற்க, என்னுடைய அலுவலக அறையைத் தட்டிவிட்டு அவன் நுழைய அவளும் தயங்கியபடி பின்னே போனாள். நான் என் இருக்கையில் அமர்ந்தேன். அவள் உட்கார்ந்தபோது கதிரையில் மீதி இடம் நிறைய இருந்தது.

’சரி, விசயத்தை சொல்லு.’ ’அதுதான் சேர். ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே. விபத்துக்கு பின்னர் இந்தப் பெண் நிறைய சிரமப்படுகிறார். காலிலும் அடி. அவருக்கு வேலையும் இல்லை. மருத்துவருக்கும், மருந்துக்கும் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். அதுதான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். ’நீ இந்தப் பெண்ணை இடித்தாயா? சொல்லவே இல்லை. முழங்கையில் ஒரு சின்னக் கீறல் என்று காட்டினாயே?’ ’சொன்னேனே சேர். விபத்து என்றால் எங்கேயோ இடித்தேன் என்றுதானே அர்த்தம். காற்றிலே இடிக்க முடியுமா?’ ’திடீரென்று ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாய். நீதானே இடித்தாய். ஏதாவது குடுத்து அனுப்பு.’ ’சேர் என்ன சேர் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். நான் எப்படி பொறுப்பாக முடியும். நான் பணியிலிருந்தபோதுதானே விபத்து நடந்தது.’ எனக்கு கோபம் வந்தது. ‘நீ ஏதாவது கொடுத்து சமாளித்துவிட்டு வேலைக்கு வா. அல்லாவிட்டால் நீயும் வெளியேறு. ஆனால் ஸ்கூட்டர் சேதத்துக்கு பணத்தை கட்டிவிடு.’

’சேர் இது ஏழைப் பெண் சேர். இந்தக் கிராமத்து  மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். அவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக கேள்விப்பட்டேன். நான் கெஞ்சிக் கேட்டு ஒரு தீர்வுக்காக இவளை அழைத்து வந்திருக்கிறேன். பெரிய தொகை இல்லை. ரூ 20,000 தான் கேட்கிறார்கள்.’ ’இருபதாயிரமா? உனக்குப் பைத்தியமா?’ ’உங்கள் தாராள குணம் எல்லோருக்கும் தெரியும் சேர். பார்த்துச் செய்யுங்கள். தொழில்சாலையை ஒரு நாளைக்கு மூடினால் எவ்வளவு நட்டம் சேர்.’

‘நீ பேசாமல் இரு.’ நான் பெண்ணைப் பார்த்து ’நீ சொல்லம்மா’ என்றேன். அவள் குனிந்தபடி சிங்களத்தில் பேச லலித் அருவருப்பான வார்த்தைகளில் அதை  மொழிபெயர்த்தான். கைகளை நீட்டி அவள் தாடையை என் பக்கம் திருப்பிவிட்டான். அவளுடைய பல் வரிசை ஒழுங்காக பளிச்சென்று இருந்தது. எலும்புகளால் ஆன பெண், நெட்டையாக முன்வளைந்து இருந்தாள். பேசும் போது கண்கள் என்னை பார்க்கவில்லை. ’சரியா? சரியா?’ என்பதுபோல அவனையே பார்த்தன. அவள் வீதியில் தன் பாட்டுக்கு தையல் வேலை செய்வதற்கு நடந்து போனாளாம். இவன் எங்கேயோவிருந்து திடீரென்று வெளிப்பட்டு வந்து இடித்தானாம். நாரியை தொட்டுக் காட்டினாள். அங்கே எலும்புகள் இருந்தன.

ஒரு மாதிரியாக ரூ 15,000 இழப்பீடு கொடுப்பதாக முடிவானது. இனி இத்தாலிக்கு நீண்டகடிதம் எழுதி அதற்கு  கணக்கு காட்டவேண்டும். இந்த லலித் யாருக்காக வேலை செய்கிறான்? கம்பனிக்காகவா அல்லது அந்த எலும்புக்காரிக்கா?

கம்பனி விதிகளில் எங்கேயெங்கே  ஓட்டை இருக்கிறதோ அங்கேயெல்லாம் புகுந்து லலித் புதுவிதமான வில்லங்கங்களைஉண்டாக்குவான். தொழில்சாலை நீட்டிப்பு வேலை முடிந்ததும்  கயவாகுவுக்கும், வாழைக்குலைகளுக்கும் விடை கொடுத்தோம். ஆனால் லலித் சிந்தித்து உண்டாக்கும் புதுவிதமான வில்லங்களுக்கு மாத்திரம் விடை கொடுக்க முடியவில்லை. இரண்டு வருடங்களில் அவன் ஏறக்குறைய ஒரு லீடர் ஆகிவிட்டான். கடைநிலை ஊழியன்தான் ஆனால் அங்கே வேலைசெய்த எஞ்சினியர்கள்கூட அவன் சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. புதுக்கட்டிடத்தை  பிரித் ஓதி துதி செய்து முறையாகக் கொண்டாடவேண்டும் என்பது அவன் கோரிக்கை.  அப்பொழுதுதான் எதிர்காலம் சிறப்பாக  அமையும் என்றான். யாருடைய எதிர்காலம் என்பதை சொல்லவில்லை. பிரித் ஓதுவதென்றால் இருபது பிக்குகள் இரவிரவாக ஓதுவதற்கு ஒழுங்கு செய்யவேண்டும்.  அடுத்தநாள் முழுக்க கொண்டாட்டம் என்பது ஏற்பாடு.  இதை நான் எதிர்பார்க்கவில்லை. எங்கள் நிதித்திட்டத்தில் கொண்டாட்டச் செலவு  இல்லை. அது பற்றி யாருக்கு  என்ன கவலை.

ஒப்புவமையில்லாத பிரகாசமான நீலத்துடன் ஆகாயம் ஒளிவீசிய  ஒரு சனிக்கிழமை காலை அந்த ஆச்சரியம் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு முழுக்க புத்தபிக்குமார் பிரித் ஓதினார்கள். கொண்டாட்டத்தில் பங்குபற்ற நான் தொழிற்சாலைக்குள்  மாலை நுழைந்தபோது வான்கோழிகள் அங்குமிங்கும் களக் களக் என்று சத்தமிட்டபடி ஓடிக்கொண்டிருந்தன. 24 வான்கோழிகள் என்று சொன்னார்கள். ஒருவருக்கும் என்ன விசயம் என்று தெரியவில்லை. லலித் ஜெயவர்த்தனா தையல் போடாத  நீண்ட வெள்ளை  துணியால் உடம்பை சுற்றிக்கொண்டு என்னை வரவேற்க வந்தான். அவன் பேசிய வார்த்தைகள் என்னிடம் வருமுன் வான்கோழிகளின் சத்தம் அவற்றை விழுங்கியது. ’இன்று வான்கோழி விருந்து. எனக்குத் தெரியும் நீங்கள் பெருமகிழ்ச்சியடைவீர்கள் என்று.’ ’24 வான்கோழிகளா?’ ’உங்கள் தாராள மனது எல்லோருக்கும் தெரியும் சேர். 40 வான்கோழிகள் என்றுதான் திட்டமிட்டோம். நான்தான் செலவைக் குறைப்பதற்காக 24 ஆகக் குறைத்துவிட்டேன். இன்னும் சில மணி நேரங்களில் விருந்து தயாராகிவிடும்’ என்றான்.

அன்றும் அதற்கு பின்னர் வந்த ஒரு வாரமும் என்னைக் காணும்போது அங்கே வேலை செய்த எஞ்சினியர்கள், தொழிலாளர்கள், கடைநிலை ஊழியர்கள் எல்லோரும் தலைகுனிந்து வாயை மூடி சிரித்தார்கள். இந்தப் பெரிய தொழிற்சாலையில் எனக்கு விசுவாசமான ஒரு தொழிலாளிகூட இல்லையா என்று மனம் விசனப்பட்டது. மர்மங்கள் கூடினவே ஒழிய குறைவதாகத் தெரியவில்லை. ஒருநாள் இரவு வெகுநேரம் தனியாக அலுவலக அறையில் உட்கார்ந்து இத்தாலிக்கு அனுப்புவதற்கு மாதாந்த அறிக்கையை தயாரித்தேன். தொழிற்சாலை காவற்காரர்கள் மூன்று பேர். தலைமைக் காவல்காரன் எட்டிப் பார்த்து ’சேர் ஒரு விசயம்’ என்று கூறியபடி நுழைந்து சல்யூட் அடித்தான். ’என்ன?’ என்றேன். ’சேர் லலித் ஜெயவர்த்தனாவை நம்பவேண்டாம். அவன் உடம்பில் ஒரு பாகம் பொய், மற்றப் பாகம் ஏமாற்று.’ நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். ’ஸ்கூட்டரில் விபத்து என்பதெல்லாம் பொய். அந்தப் பெண்ணை அவன் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு உல்லாசமாகப் போனபோது வான்கோழி ஒன்று குறுக்கே போனதால் விபத்து நடந்தது. பெண்ணுக்கு சின்னக் காயம். அவன் உங்களிடம்  பெரிய நட்ட ஈடு வாங்கி அவளுக்கு  கொடுத்துவிட்டான். வான்கோழி சொந்தக்காரரைத் திருப்திப்படுத்த அவர் பண்ணையிலிருந்து 24 வான்கோழிகளை இரட்டிப்பு விலைக்கு வாங்கினான். இவன் மிகவும் ஆபத்தானவன்.’ காவல்காரன் சொன்ன மீதி விசயங்கள் எனக்கு கேட்கவில்லை. என் உடம்பில் ரத்தம் சுழல ஆரம்பித்த சத்தம் மட்டும்தான் கேட்டது.

தேர்தலுக்கு வேலை செய்வதற்காக ஒரு வாரம் விடுப்பு எடுத்தான். இவன் ஜே.ஆருக்கு சொந்தக்காரனா அல்லது அதுவும் புளுகாக இருக்குமோ என்பது தெரியாது. சாதாரண ஸ்கூட்டர் பயிற்சியராக வந்த இவன் எப்படி கம்பனி ஆட்சியை பிடித்தான். இவன் என்ன பேசினாலும் அதில் சுவாரஸ்யம் இருக்கும்; கேட்டுக்கொண்டே இருக்கலாம், அதில் மறைந்திருக்கும் வலை தெரியாது.  அடிக்கடி என்னை தாராளமானவர் என்று பாராட்டித் தள்ளுவான்.  உண்மையையும் புளுகையும் சரி சமமாகக் கலந்து பேசுவான். அதேபோல சரிசமமாகப் பிரிந்திருக்கும் அவன் முடியை காற்று அடித்து நெற்றியில் வசீகரமாகப் புரளவைக்கும். அவனை வெறுக்க முடியாது, ஆனாலும் எச்சரிக்கை தேவை.  இப்படி நான் யோசித்திக்கொண்டு இருக்கும்போதே ஆபத்து தன் பயணத்தை தொடங்கிவிட்டது.

வான்கோழித் திருவிழா நடந்து சரியாக மூன்று மாதங்கள் கழிந்து ஒரு நாள் இரண்டு சம்பவங்கள் ஒரே நாளில் நடந்தன. தடித்த உறையில் ஒரு கடிதம் விசேட தபாலில் எனக்கு இத்தாலியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதை உடைக்கும்போதே கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. ஓரளவுக்கு ஊகிக்கக்கூடியதாக இருந்தது. இத்தாலிய ஜனாதிபதி ஜியோவானி லியோன் எனக்கு விருது வழங்கப்போவதாக கடிதம் அனுப்பவில்லை.  என்னுடைய வேலையை திரும்ப எடுத்துவிட்டார்கள். ஆனால் கடிதத்தில் இரண்டு இடங்களில் எனக்கு நன்றி சொல்லியிருந்தது ஏன் என்று புரியவில்லை.

அன்று நடந்த இன்னொரு சம்பவம் ஜே.ஆர். ஜெயவர்த்தனா பிரதமராகப் பதவியேற்றது. எந்த பத்திரிகையை திறந்தாலும் அதுதான் செய்தி. அன்றிலிருந்து என் வீட்டுக்கு எல்லாவகையான செய்தித் தாள்களையும் எடுப்பித்தேன். தமிழ்,  ஆங்கிலம், சிங்களத்தைக்கூட விட்டுவைக்கவில்லை. காலையில் விளம்பரங்களைப் படித்து சிவப்பு மையால் வட்டமிட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வுகளுக்குப் போய் சரியான பதில்கள் அளித்தேன், ஆனால் வேலை கிடைக்கவில்லை.

லலித் வேலையை விட்டுவிட்டு முழுநேரக் கட்சிப் பணியாளராக மாறிவிட்டான். அவனுடைய திருமணப் படம் பேப்பரில் வந்திருந்தது. கையை உடைத்துவிட்டு துணியால் கட்டி மாலையாக அணிந்துவந்த எலும்புப் பெண்தான் மணமகள். தசைகள் வேகமாக நிரம்பி இப்போது எலும்புகள் மறைந்துவிட்டன. ஒருநாள்  ஒரு வருடம்  பூர்த்தியானதை அரசு கொண்டாடும்  வெற்றிப் படம் சிங்களப் பத்திரிகையில் முதல் பக்கத்தி;ல் வெளியானது. இளைஞர் அணி தலைவனான லலித் யானை மேல் அமர்ந்து ஊர்வலம் போக அவனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் சென்றார்கள்.  யானையை உற்றுப் பார்த்தேன் கஜபாகுதான். தும்பிக்கையிலும் காதுகளிலும் செம்மஞ்சள் பரவியிருந்தது. மரங்களைத்  தூக்குவதும் இளைஞர் அணி தலைவரை சுமப்பதும் அதற்கு ஒன்றுதான், ஊர்வலம் முடிந்ததும் யானைக்கு சம்பளம் வாங்கிக் கொடுப்பான். யானைப் பாகனுக்கும், அதன்மேல் சவாரி செய்தவனுக்கும், பக்கத்தில் நடந்தவர்களுக்கும் பெரிய பெரிய ஊதியம் கிடைக்கும்.

ஒருநாள் காலை அன்றைய பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு மனைவி எழுதிவைத்த வேலைக் குறிப்புகளைப் படித்தேன். ஒரு மணிக்கு குழந்தையை போய் காப்பகத்திலிருந்து அழைத்துவரவேண்டும். தினசரியை இன்னும் பார்க்கவில்லை. நேற்று ஒரு நண்பன் தொலைபேசியில் அழைத்து வேலை விசயமாக லலித்தை போய் பார்க்கும்படி சொன்னது நினைவில் வந்தது. மனைவி வேலைக்கு போகும் அவசரத்தில் செய்திப் பத்திரிகை தாள்களை குலைத்து ஒழுங்கில்லாமல்  படித்து அப்படியே போட்டுவிட்டு போயிருந்தார். நான் அவற்றை ஒழுங்காக அடுக்கி மடித்து வைத்து விளம்பரம் தேடவேண்டும். அதற்கு முன் வாசலைக் கூட்டும் வேலை இருந்தது.

முதல்நாள் இரவு அடித்த காற்றில் மாவிலை, பலாவிலை, இலுப்பை இலை எல்லாமே சருகாக மாறிக் குவிந்து கிடந்தன. அவற்றை கூட்டி அள்ளினேன். வீதியை பார்த்தபோது அத்தனை அமைதியாக இருந்தது. எல்லோரும் வேலைக்கோ அல்லது பள்ளிக்கூடத்திற்கோ போய்விட்டார்கள். அந்த வீதி முழுவதுக்கும் நான்தான் அதிபதி. நிமிர்ந்து பார்த்தேன். பதினொரு மணி சூரியன் கனலைக் கொட்டி எரித்தான்.  வீதியில் நின்ற கம்ப விளக்கை அணைக்க மறந்துவிட்டார்கள். அதன் ஒளி சூரியனின்  அட்டகாசத்தில் எங்கே மறைந்தது என்று தெரியவில்லை. முதல் முதலாக தெருவிளக்கு வந்தபோது அந்த தெரு முழுக்க வெளிச்சக் கம்பத்தை சுற்றி  கொண்டாடியது நினைவுக்கு வந்தது.

பத்திரிகையில் அன்று விளம்பரம் இல்லை. மடித்து வைக்கப் போனபோது நாலாம் பக்கத்தில் காணப்பட்ட ஒரு பெட்டிச் செய்தியில், இத்தாலிக்கு இலங்கை அரசு அனுப்பும் வர்த்தகக் குழுவில் லலித்தின் பெயரும் இருந்தது. ஸ்கூட்டர் சோதனையாளன்,  இயந்திர வல்லுநர், யானைப்பாகன், வான்கோழி விருந்துபசாரி ஆகிய பணிகளை திறம்படச் செய்தவனுக்கு  வர்த்தகக் குழுவில் பணியாற்றுவது ஒன்றும் பெரிய சிரமமாக இராது. அவன் நகரும் படிக்கட்டுகளைப்  பார்க்க ஆசைப்பட்டு தன்னை இத்தாலிக்கு அனுப்பும்படி என்னிடம் மன்றாடியதை நினைத்துப் பார்த்தேன். அவன் அப்பொழுது சொன்னது மீண்டும் ஞாபகத்தில் வந்தது. ‘நீங்கள் ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. சும்மா நிற்கலாம். படிக்கட்டுகள் உங்களை மேலே மேலே தூக்கிச் செல்லும்.’

END

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2022 14:12

காலைத் தொடுவேன்

காலைத் தொடுவேன்

(நிதி திரட்டிய அனுபவங்கள்)

அ.முத்துலிங்கம்

ஹார்வர்ட் தொடக்கம்

அமெரிக்காவில் இரண்டு பெருந்தகைகள்,  மருத்துவர் விஜய் ஜானகிராமனும் மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தமும் தமிழ் இருக்கை தொடர்பாக ஆர்வத்தோடு ஹார்வர்டு அதிகாரிகளைச் சந்தித்தபோது நானும் கூட இருந்தேன். ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி நிதி திரட்டலை ஆரம்பித்து வைத்தார்கள். தேவையான இலக்கு 6 மில்லியன் டொலர்கள். அது ஏறக்குறைய இரண்டரை  வருடங்களில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு தொடங்கியது. அவர்கள் இலக்கு 3 மில்லியன் டொலர்கள். 2016ல் தொடங்கிய ஹார்வர்டு  நிதி திரட்டல் தொடர்ந்து ரொறொன்ரோ தமிழ் இருக்கை நிதி திரட்டலாக மாறி  2021 தொடக்கத்தில்  முடிவை எட்டியது. இந்த ஐந்து வருடங்களும் நான் எழுத்து வேலையை தள்ளிவைத்துவிட்டு இரண்டு பல்கலைக்கழகங்களின் தமிழ் இருக்கைகளுக்கும் முழுநேரமாக நிதி சேகரிப்பதில் மும்முரமாகி உழைத்தேன். உலகமெங்கும் பல நூறு பேர்களுடன் தொடர்புகள் கிடைத்தன. சில அனுபவங்கள் நெகிழ வைத்தன; சில அதிர்ச்சி அளித்தன; சில அவமானத்தால் என்னை நிலைகுலையச் செய்தன; சில சிரிப்பு மூட்டின. எல்லாவற்றையும் இங்கே சொல்ல முடியாது. பத்து வருடம் கழிந்தாலும் நினைவில் நிற்கக்கூடிய சில  சம்பவங்களை மாத்திரம் கீழே பகிர்ந்திருக்கிறேன்.

சிறைக்கைதி

தமிழ்நாட்டில் ஒரு சின்னக் கிராமத்தில்  இளைஞன் ஒருவன் ஏதோ குற்றம் செய்து நாலு வருடம் சிறையில் இருந்தான். அவன் வெளியேறியபோது அவனுடைய உழைப்பு கூலியை சிறை அதிகாரிகள் அவனிடம் கொடுத்தார்கள். அவன் செய்த முதல் வேலை அந்தப் பணத்தை அப்படியே ஹார்வர்டுக்கு அனுப்பியதுதான். எப்படியோ, யாரையோ பிடித்து பணத்தை செலுத்திவிட்டான். அவனுக்கு ஹார்வர்ட் எங்கே இருக்கிறது, அந்தப் பெயரை  எப்படி எழுத்துக்கூட்டுவது என்பதெல்லாம் தெரியாது. பிழையான எழுத்துகளுடன் பணம் வந்து சேர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகை அவனிடம் எதற்காக  பணம் அனுப்பினாய் என்று கேட்டது. அவன் ‘ஹார்வர்ட் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழ் வளராது; வெளிநாட்டில் இப்படியான பல்கலைக்கழகத்தில்தான் தமிழ் வளரும். அதுதான் பணம் அனுப்பினேன்’ என்றான். என்னை நெகிழவைத்த முதல் சம்பவம் இது.

50,000 டொலர்

ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டுவதற்காக நான் ஒரு சமயம் பொஸ்டன் சென்றிருந்தேன். அவசரமாக ஒரு டெலிபோன் அழைப்பு கனடாவிலிருந்து வந்தது. முன்பின் தெரியாத ஒருவர் சொன்னார், ’தமிழ் இருக்கை முக்கியமானது. நான் இந்த முயற்சியில் உங்களுடன் பங்காற்றுவேன். உங்கள் குழு  தாமதமாகவும், அவசரமில்லாமலும் செயல்படுகிறது. எனக்கு விஜய் டிவியை தெரியும். சன் டிவியை தெரியும். ஓர் இரவுக்குள் என்னால் 50,000 டொலர்கள் திரட்டமுடியும். உடனே வாருங்கள்.’ 

எனக்கு மகிழ்ச்சி சொல்லமுடியாது. பல தொலைபேசி அழைப்புகள்; பல மின்னஞ்சல்கள். கடைசியில் ஒருநாள் ரொறொன்ரோ உணவகம் ஒன்றில் அவரை சந்திப்பதற்காக  நான் காத்திருந்தேன். முதலில் அவர் வந்தார்.  தொடர்ந்து அதே உயரமான மனைவி; அதே பருமன்.  பின்னால் நாலு குழந்தைகள். பெரும் ஆரவாரமாகவும், கூச்சலாகவும் இருந்தது. 50,000 டொலர் திரட்டி வைப்பதாக சொல்லியிருந்தாலும் அது பற்றிய பேச்சே இல்லை. சந்திப்பு முடிந்ததும் கார் கண்ணாடி துடைப்பான்போல இருவரும் ஒரே நேரத்தில் சாய்ந்து, ஒரே நேரத்தில் எழும்பி, ஒரே நேரத்தில் நடந்தனர். இப்படியே பல வாரங்கள் ஓடின;  ஒன்றுமே பெயரவில்லை.

மதிய உணவுக்கு வழக்கம்போல சந்தித்தோம். அவர் கழுத்திலே தடித்த சங்கிலி. என்னுடன் பேசுவதும், கையிலே கட்டியிருந்த அப்பிள் கடிகாரத்தில் செய்திகள் பார்ப்பதுமாக நேரம் ஓடியது. இது எங்கே போகிறது என்றே எனக்கு தெரியவில்லை.  துணிந்து அவரிடம் கேட்டேன். ’உங்கள் நண்பர்களும், டிவி காரர்களும் பணம் தரும்போது தரட்டும். நீங்கள் ஒரு நன்கொடை கொடுத்து தொடக்கலாமே. எவ்வளவு எழுதலாம் என்று நன்கொடை  பத்திரத்தை வெளியே எடுத்தேன். அவர் மிரண்டுவிட்டார். இதை எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். பெரும் யோசனைக்கு பின்னர் சொன்னார், ‘என்னால் 100 டொலர் கொடுக்கமுடியும். இந்த மாதம் 50 டொலர்; அடுத்த மாதம் 50 டொலர்.’

நான் அன்றைய 7 பேரின் உணவுக்கான தொகை $162 ஐக் கட்டிவிட்டு வெளியேறினேன்.

துப்புரவுத் தொழிலாளி

அவருடைய பெயர் தேசோமயானந்தன். பாரிஸிலிருந்து  எப்படியோ என் நம்பரை தேடிப்பிடித்து அழைத்திருந்தார். ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு எப்படி பணம் அனுப்புவது என்று கேட்டார். நான் சொன்னேன். அவர் வயது 77. நாற்பது  வருடங்களாக துப்புரவுத்தொழில் செய்கிறார்.  திடீரென்று $500 வந்து சேர்ந்தது. ’எதற்காக இத்தனை பெரிய தொகை?” என்றேன். அவர் சொன்னார் ‘ஐயா, என் அம்மா இப்ப இல்லை.  தமிழுக்கு  கொடுப்பது என் அம்மாவுக்கு கொடுப்பது போலத்தானே’ என்றார். பின்னர் விம்மி விம்மி அழத் தொடங்கினார். 

சுந்தர் பிச்சையை தெரியும்

சுந்தர் பிச்சையை எனக்குத் தெரியும்.

யார் அது?

இது என்ன? கூகிள் நிறுவனத்தின் தலைவர்.

ஓ, அவரா? எப்படித் தெரியும்?

என்  பக்கத்து வீட்டுக்காரரின் மாமனாரும், சுந்தர் பிச்சையின் பெற்றோரும் சிநேகிதர்கள்.

எப்படி?

அவர்கள் பஜனைக்கு ஒன்றாகப் போவார்கள், வருவார்கள்.

அப்படியா?

என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். சுந்தர் பிச்சையின்  வருட வருமானம்  எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு 380 மில்லியன் டொலர்கள்.

அதனால் எனக்கு என்ன?

அவர் நினைத்தால் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு  ஒரு மில்லியன் டொலர் கொடுப்பார். அது அவருக்கு காசே அல்ல.

அவருக்கு எத்தனையோ வேலை. இன்னும் எவ்வளவோ பணம் சேர்க்கவேண்டும். இதற்கெல்லாம் கொடுப்பாரா?

அப்படிவிட முடியாது. நான் இப்பவே எழுதுகிறேன். ஒரு மில்லியன் டொலர் காசோலை வரும். அதற்கு நான் உத்தரவாதம்.

எப்படி வரும்?

கூரியரில்தான். நேராக ரொறொன்ரோ பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பிவிடுவார்.

எப்படி முகவரி கிடைக்கும்?

உலகத்துக்கே தேடுதலை சொல்லிக் கொடுத்தவர். அவருக்கு ஒரு முகவரி தேடுவதா பிரச்சினை?

நண்பர் சொன்னபடியே பக்கத்து வீட்டுக்காரரின்  மாமாவுக்கு எழுதிப்போட்டார். அவரும் இதோ, அதோ என்று சொன்னார். நினைவூட்டல்களும் அனுப்பினார். இப்பொழுதெல்லாம் நண்பர் கண்ணில் படுவதே இல்லை. நானோ நம்பிக்கை இழக்கவில்லை. யார் கண்டது? நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரம் கலிஃபோர்னியாவிலிருந்து காசோலை கிளம்பியிருக்கும்.

பிரப மல்லாத கல்லூரி

தொலைபேசியில் ஒருவரை அழைத்தேன். அவர் அழைப்பை துண்டிக்காமல் உடனேயே பேசினார். ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய பெயர் டெலிபோனில் விழுந்தால் ஒருவரும் எடுப்பதில்லை. ’வில்லங்கம் பிடித்தவர் வருகிறார். தமிழ் இருக்கைக்கு நிதி கேட்டு தொல்லைப்படுத்துவார்’ என்ற செய்தி எப்படியோ பரவிவிட்டது. ஈழத்துக் கல்லூரிகளின் பழைய மாணவ மாணவியர் சங்கங்கள் நூற்றுக்கு மேலே கனடாவில் இயங்கின. பிரபலமில்லாத கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர் தகுதிக்கு மீறி அள்ளி அள்ளிக் கொடுத்தனர்.   ஒருநாள் ஓர் அழைப்பு வந்தது. அவரை எனக்கு தெரியாது. நான் சந்தை அழைப்பு என்று நினைத்து டெலிபோனை துண்டித்துவிட்டேன். பத்து நிமிடம் கழித்து டெலிபோனை எடுத்தபோது அவர் இன்னும் எனக்காக காத்து நின்றார். ‘ஐயா, போன வருடம் 1000 டொலர் அனுப்பினேன்.  மேலும் 1000 டொலர் அனுப்பவேணும். எப்படி அனுப்புவது’ என்றார். எனக்கு சங்கடமாய்ப் போய்விட்டது.

பிரபலமான கல்லூரி

மெய்நிகர் கூட்டம் ஒன்றுக்கு அழைத்திருந்தார்கள். தமிழ் இருக்கைக்கு நிதி சேர்த்து தருவதாக ஒப்பந்தம். குறித்த நேரத்துக்கு அழைத்தேன். என்னால் உள்ளே நுழைய முடியவில்லை, ஆனால் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஒரு பெண் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நான் கத்தினேன். அவருக்கு கேட்கவில்லை. என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. வாசலிலே நின்றேன். என்னை அழைத்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

ஈழத்தில் அதிபிரபலமான கல்லூரி ஒன்றின்  பழைய மாணவர் சங்கத்துக்கு தமிழ் இருக்கைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன். இது பணக்காரக் கல்லூரி, 150 வருடங்களாக இயங்குவது. இங்கே படித்தவர்கள் பலர் மருத்துவர்களாகவும், எஞ்சினியர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் கனடாவில் சம்பாதிக்கிறார்கள்.  பதில் இல்லை. மின்னஞ்சலில் மன்றாடினேன். தொலைபேசியில் நினைவூட்டினேன். மின்னஞ்சல்களை தலைவர் செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் பார்ப்பார் என்று சொன்னார்கள். இது என்ன சட்டம்? புதனும், திங்களும் என்ன பாவம் செய்தன?  ஆனாலும் காத்திருப்பதில் பிழையில்லை. நிதி சேர்ப்பதில் முக்கியமான விதி, பொறுமை .

பழைய காலப் புலவர்கள் அரசனின் வாசலில் பரிசுக்கு காத்து நிற்பதுபோல நான் நின்றேன். பல மணி நேரங்கள்; பல நாட்கள். ஒரு புலவர் பலநாள்  நின்று அலுத்து ’வாயிலோயே, வாயிலோயே’ என்று கூவி அழைத்து வெறுத்துப்போய் ’எத்திசை செல்லினும், அத்திசை சோறே’ என்று திரும்பியதுபோல நான் திரும்பப் போவதில்லை. காத்திருக்கிறேன். ஒரு நாள் சூம் வாசல் கதவு திறக்கும்.  பெரிய பள்ளிக்கூடத்து தலைவர் செவ்வாய்க் கிழமை மின்னஞ்சலை திறப்பார். அவர் இருதயமும் திறக்கக்கூடும். வேறு என்ன வேலை எனக்கு?  கதவுகள்  திறக்குமட்டும் பொறுமையாக நிற்பதுதானே!

மகன் பெயர்

முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து சமீபத்தில் கம்புயூட்டரில் ஒரு தகவல் வந்தது. என்னுடைய தொழில்நுட்ப அறிவு மிகவும் குறைச்சலானதால் நான் இப்படி வரும் செய்திகளுக்கு பதில் அனுப்புவது கிடையாது. வந்த தகவல் இதுதான். ’நான் உங்கள் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்.’ இதற்கு என்ன பதில் எழுதுவது? அடுத்த நாள் இப்படி வந்தது.  ’ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு எப்படி பணம் அனுப்புவது?’  நான் சும்மா பதில் எழுதி வைத்தேன். என்ன ஆச்சரியம், அன்று மாலையே  ரொறொன்ரோ பல்கலைக்கழகம் 50 டொலர் வந்ததாக அறிவித்தார்கள்.

ஒருநாள் இந்த மர்மமான மனிதர் தொலைபேசியில் பேசினார்.  இவர் 17 வயதில் ஈழத்திலிருந்து அகதியாக பாரிசுக்கு வந்து 18 வருடமாக அங்கே வாழ்கிறார்.  ஈழத்தில் வாழ்ந்த நாட்களிலும் பார்க்க அதிக நாட்களை பாரிசில் கழித்துவிட்டார். ஆனாலும் அவருக்கு பிரெஞ்சு மொழி கொஞ்சம்தான் தெரியும். ஆங்கிலமும் அப்படியே. நல்ல தமிழில் பேசுகிறார். டாக்சி ஓட்டிச் சம்பாதிக்கிறார். ’உங்களுக்கு பெரிதாக பிரெஞ்ச் மொழி தெரியாது, எப்படி சமாளிக்கிறீர்கள்?’  ’ இதிலே என்ன பிரச்சினை? எங்கே போகிறீர்கள்? காசா கிரெடிட் கார்டா?  என்று கேட்கத் தெரியவேண்டும். தமிழ்தானே என் மொழி. பிழைப்புக்காக இரண்டு பிரெஞ்சு வார்த்தைகளை பாடமாக்கி வைத்திருக்கிறேன்.’

’டாக்சி ஓட்டுவதற்கு உரிமம் பெறுவது கடினம் என்று சொல்கிறார்களே?’ ’உண்மைதான். ஒருவருடமாக 2000 யூரோ கட்டிப் படித்த பின்னர் நடந்த பரீட்சையில்  பெயிலாகிவிட்டேன்.’ ’எப்படி?’ ’டாக்சி ஓட்டுநருக்கு எல்லா ரோட்டுப் பெயரும் தெரிந்திருக்கவேண்டும். அதிலே சின்னப் பிழை விட்டுவிட்டேன்.’ ’அடுத்த தடவை சித்தியடைந்தீர்களா?’ ’இல்லை, வருமான வரி கேள்வியில்  பெயிலாகிவிட்டேன்.’ ’வருமான வரியா? டாக்சி ஓட்டுவதற்கும் வருமான வரிக்கும் என்ன சம்பந்தம்?’ ’டாக்சி ஓட்டினால் என் தொழிலுக்கு நானே முதலாளி. ஒரு முதலாளிக்கு எவ்வளவு வருமானத்துக்கு எத்தனை  வரி என்ற கணக்கு  தெரிந்திருக்க வேண்டும். அடுத்த தடவை வெற்றி பெற்றுவிட்டேன்.’

’கொரோனா நாட்களை  எப்படி சமாளிக்கிறீர்கள்?’ ’மிகவும் மோசம், வாடிக்கையாளர்கள் பாதியாக குறைந்துவிட்டார்கள். ஆனால் செலவு அதிகம். சிரமம்தான்.’ ’உங்கள் மனைவி வேலை செய்கிறாரா?’ ’அதிலே ஒரு பிரச்சினை. என் மகனுக்கு அபூர்வமான  வியாதி. அவனுக்கு உணவை விழுங்கத் தெரியாது. நானும் மனைவியும் மாறி மாறி அவனை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று தினமும் பயிற்சியளிக்கவேணும்.’

’ஓ, அப்படியா? மன்னியுங்கள். கொரோனா சமயம் உங்களுக்கு  வருமானம் இல்லை. செலவும் அதிகம்.  மகனுடன் மருத்துவ மனையில் நேரம் செலவழிக்கவேணும். இந்த சமயத்தில் நீங்கள் தமிழ் இருக்கைக்கு நிதி கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?’  ’அது முக்கியம் ஐயா. தமிழ் இருக்கை அமைவது பெரிய விசயம்.  மொழிக்காகத்தானே நான் நாட்டைவிட்டு துரத்தப்பட்டேன். எங்கள் மொழிக்கு கிடைக்கும் கௌரவம் எனக்கு கிடைத்தது மாதிரித்தான். கொடையாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கவேணும்.’

தொலைபேசியை வைத்தபின்னர் யோசித்தேன். இந்த அருமையான மனிதருடைய மகன் பெயரை கேட்க மறந்துவிட்டேன். உடனேயே குறுஞ்செய்தி அனுப்பி அவருடைய மகன் பெயர் என்னவென்று கேட்டேன். அது நேற்று.  அதிகாலை ஐந்து மணிக்கே கணினியை திறந்து வைத்து அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறேன். சிலவேளை நாளை வரலாம்.

 பத்து ஏக்கர் செல்வந்தர்

பொது வாழ்க்கையில் நிதி சேகரிப்பவர்களுக்கு பல அவமானங்கள் நேர்ந்திருக்கின்றன. ஒரு நகரத்து மக்கள் பொது நீச்சல் குளம் கட்ட தீர்மானித்தார்கள். வீடு வீடாகப் போய் அதற்காக பணம் சேர்த்தார்கள். ஒரு வீட்டில் போய் கதவைத்தட்டி பொது நீச்சல் குளம் கட்ட உதவி தேவை என்று யாசித்தபோது வீட்டுக்காரர் உள்ளே சென்று ஒரு வாளி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். இது மிகையல்ல, அடிக்கடி நடப்பதுதான்.

கனடாவின் அதிசெல்வந்தர்களில் ஒருவரிடம்  அவரை  சந்திப்பதற்கு நேரம் வாங்கிவிட்டேன். இவர் சிறுவயதில் அகதியாக பெற்றோருடன்  கனடாவுக்கு வந்தவர்.  அந்த வயதில் அவருக்கு தமிழ் அன்றி வேறு ஒரு மொழியும் தெரியாது. அவரை வகுப்பில் சேர்த்தபோது ஆங்கிலம் தெரியாததால் அவராகவே ஆசிரியரிடம் வேண்டி ஒரு வகுப்பு கீழே இறங்கி படிப்பை தொடங்கியவர்.  ஆரம்ப தடங்கலைத் தாண்டி இங்கேயே படித்து முன்னேறி சொந்தமாக கம்பனி தொடங்கி மிகப் பெரிய செல்வந்தராக குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்துவிட்டார்.

அவருடைய வீடு பத்து ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்தது. கேட்டுக்கு வெளியே நின்று செல்பேசியில் அழைக்க அவர் அங்கிருந்தபடியே கேட்டைத் திறந்துவிட்டார். வாசலிலே உள்ள காலநிலை வேறு, வீட்டின்  எல்லையில் உள்ள கால நிலை வேறு. அத்தனை பெரிய வீடு. நாலு பிள்ளைகள். ஒவ்வொருவரும் வீட்டிலே ஒவ்வொரு திசையில் இருந்தபடியால் ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கிடையில் உரையாடல்கள் நடந்தன. அவருடைய மனைவி விருந்துக்கு புறப்பட்டவர்போல நீண்ட ஆடையணிந்திருந்தார். தேநீர் கொண்டுவந்தபோது பறவை சிறகடிப்பதுபோல அவருடைய ஆடை மடிந்து மடிந்து விலகியது.

தேநீரை அருந்தியபடியே நான் விசயத்தை சொன்னேன். அவர் அமைதியாக கேட்டார். இடைக்கிடை செல்பெசி அழைப்பு வந்தபோது அதை எடுக்காமல் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டபின்னர் ஒரேயொரு கேள்வி கேட்டார். ’என்னுடைய பிள்ளைகளுக்கு தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. அவர்கள் ஆங்கிலமும், பிரெஞ்சும் படிக்கிறார்கள். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதால் எனக்கோ என் பிள்ளைகளுக்கோ என்ன பிரயோசனம்?’ எனக்கு வாய் அடைத்துவிட்டது. ’உங்களுடைய அம்மா உங்களை குழந்தையாக மடியில் கிடத்தி என்ன மொழியில் பேசினார்?’ என்று கேட்டேன். அவர் தமிழ் என்றார். நான் வேறு ஒன்றுமே பேசவில்லை. விடைபெற்றுக்கொண்டு வெளியேறினேன்.

தாம்பூலப் பை

எனக்கு சாக்குத் துணியில் செய்த  தாம்பூலப் பை ஒன்று கும்பகோணத்திலுள்ள  சின்னக் கிராமம் ஒன்றிலிருந்து வந்தது. பிரித்துப் பார்த்த நான் ஆச்சரியப்பட்டேன். அதில் இப்படி அச்சடித்திருந்தது. ’தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு. Tamil Chair Inc. University of Toronto, Canada.

ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கும், தாம்பூலப் பையுக்கும் என்ன சம்பந்தம்? அதை அனுப்பியவரையே அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் ‘வேறு ஒன்றுமில்லை, விளம்பரம்தான். கல்யாண வீட்டுக்கு வந்த ஒவ்வொருவருக்கும் பை வழங்கப்பட்டது. அவர் வாசகத்தை பார்ப்பார். அந்தப்  பை வேறு ஒருவர் கையுக்கு போகும். அவரும் வாசகத்தை பார்ப்பார். இப்படி  இந்தச் செய்தியை பத்தாயிரம் பேராவது படிப்பார்கள்’ என்றார்.  அத்துடன் அந்த அன்பர் நிற்கவில்லை. ஒருவாரம் கழித்து மிகப் பெரிய தொகை ஒன்றை  தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக அனுப்பினார்.   

அன்பரின் வீடு ரொறொன்ரோவிலிருந்து  13,000 கி.மீட்டர் தூரத்தில் ஒரு சின்னக் கிராமத்தில் இருந்தது. இவர்கள் ரொறொன்ரோ  பல்கலைக்கழகத்தை பார்த்ததில்லை. அங்கே இவருடைய சொந்தக்காரர்  யாராவது படித்ததும் கிடையாது. இந்த நன்கொடையால்  பெரிய புகழ் ஒன்றும் இவருக்கு கிடைக்கப்  போவதில்லை. இவருக்கும் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கும் என்ன தொடர்பு?  ஒன்றுமே இல்லை, தமிழ் என்னும் மொழி தான்.  இந்த நன்கொடையால் அவருக்கு என்ன பிரயோசனம்? பத்து  ஏக்கர் வீட்டுக்காரருக்கு இதுதான் பதில் என்று தோன்றியது.

இளம் எழுத்தாளர்

நிதி சேகரிப்பு, வெற்றி தோல்விகள் நிறைந்தது. முன்பின் தெரியாத ஓர் இளம் எழுத்தாளர் தன்னுடைய புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை கேட்டிருந்தார். முன்னுரை எழுதச் சொல்லி யார் கேட்டாலும் எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். ஏன் என்றால் ஒரு முன்னுரை எழுதும் நேரத்தில் நான் மூன்று கட்டுரைகள் எழுதிவிடுவேன். அத்துடன் ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிது சேர்ப்பதில் நான் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவழித்தேன். ஆகவே சில மணி நேரத்தை திருடித்தான் முன்னுரை எழுதவேண்டும்.  நான் இளம் எழுத்தாளரிடம் இப்படிச் சொன்னேன். ‘எப்படியும் நேரம் சம்பாதித்து முன்னுரை எழுதிவிடுகிறேன். நீங்கள் ஓர் உதவி செய்ய முடியுமா?’ ‘சொல்லுங்கள், ஐயா காத்திருக்கிறேன்.’  ‘ உங்கள் எழுத்திலிருந்து நீங்கள் தமிழ் பற்றாளர் என்பது  தெரிகிறது. ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு உங்கள் உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஆதரவு திரட்டமுடியுமா? எத்தனை சிறு நன்கொடை என்றாலும் பரவாயில்லை. அதை நேரே பல்கலைக்கழக வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிடுங்கள்’ என்றேன். மிக்க மகிழ்ச்சியுடன் ’செய்கிறேன், செய்கிறேன்’ என்று உறுதியளித்தார்.

வாக்குக் கொடுத்தபடியே எழுத்தாளரின் புத்தகத்தை இருதரம் வாசித்து குறிப்புகள் எடுத்து முன்னுரை எழுதினேன். நாலு தடவை திருத்தங்கள் செய்தேன். முன்னுரை திருப்தியாக அமைந்ததும் எழுத்தாளருக்கு அனுப்பிவைத்தேன். அவரும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அது மூன்று மாதங்களுக்கு முன்பு. பின்னர் புத்தகம் வெளிவந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். என்னுடைய முன்னுரையினால் ஒரு பிரதிகூட அதிகமாக விற்காது என்பது எனக்குத் தெரியும்; ஒன்றிரண்டு குறைவாகக்கூட விற்றிருக்கலாம். எனக்கு ஒரு பிரதி அனுப்புவார் என எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் பல்கலைக்கழகத்தை அழைத்து இன்னார் பணம் அனுப்பினாரா என்று கேட்பேன். அவர்கள் இல்லை என்பார்கள். அது ஆறுமாதம் முன்னர். இப்பொழுது கேட்பதை நிறுத்திவிட்டேன்.

சந்தைப்படுத்தல்

ஒருநாள் தமிழ் இருக்கைக்கான telemarketing ரொறொன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. 25 பல்கலைக்கழக மாணவ மாணவிகள்  தொலைபேசி முன் அமர்ந்து ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே  படித்த பழைய மாணவ மாணவியரை அழைத்து தமிழ் இருக்கைக்கு நன்கொடை யாசித்தனர். பணியில் அமர்ந்த எல்லோருமே வெவ்வேறு மொழி பேசும் தன்னார்வத் தொண்டர்கள். தமிழ் இருக்கை பற்றி அவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக நான் அங்கே சென்றிருந்தேன். அவர்கள் பேசாத ஒரு மொழிக்காக அவர்கள் அப்படி உளமார உழைத்தது என்னை நெகிழவைத்தது. அன்று அவர்கள் 53 பழைய மாணவ மாணவியரிடம்  உரையாடி ஏறக்குறைய 3000  டொலர்கள் திரட்டியிருந்தனர். ‘ஒரு யப்பானிய மாணவியிடம் ஏன் இந்த தொண்டு வேலையை செய்கிறீர்?’ என்று கேட்டேன். அவர் சொன்னார், ‘2500 வருடங்களாக வாழும் ஒரு மொழிக்கு இருக்கை அமைந்தால் அது பல்கலைக்கழகத்துக்கு பெருமையல்லவா?’  அந்த நொடியில் என் கண்களை அவர்  திறந்துவிட்டார். அதுவரைக்கும் நான் தமிழ் இருக்கை அமைவதால் தமிழுக்குத்தான் பெருமை என நினைத்திருந்தேன்.

காலைத் தொடுவேன்

தமிழ் இருக்கைக்கு இணையம் வழியாக பணம் அனுப்புபவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்தது. ஒரு முறை பணம் அனுப்பியவர்களின் பட்டியலைப் பார்வையிட்டபோது முன்பின் தெரியாத ஒருவர் 50 டொலர் அனுப்பியிருந்தார். ஏதோ உந்துதலில் அவரை தொலைபேசியில் அழைத்து பேச்சுக்கொடுத்தபோது  அவர் தன் அனுபவத்தை சொன்னார். தொழில்நுட்பக் கோளாறினால் பலதடவை முயற்சி செய்தும் பணம் அனுப்ப முடியவில்லை. இறுதியில் விரக்தி மேலிட ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை நேரிலே அழைத்து பிரச்சினையை சொன்னார். அவர்கள் வழிகாட்ட,  இவர் ஒருவாறு 50 டொலர் காசை கடனட்டை மூலம் செலுத்திவிட்டார்.

இத்தனைக்கும் எங்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயே நடந்தது. அவருடைய பெயர் ஆனந்த் மன்னா என்று  இருந்ததால்  என் சந்தேகத்தை கேட்டேன். ’நீங்கள் தமிழரா?’ அவர் ’இல்லை, நான் தெலுங்கு மொழி பேசுபவன்’ என்றார். ’நீங்கள் தமிழ் பேசுவீர்களா?’ அவர் தனக்கு தமிழ் பேசவோ, எழுதவோ, படிக்கவோ தெரியாது என்றார். ஆச்சரியமாயிருந்தது. ’எதற்காக தமிழ் இருக்கைக்கு இரண்டு நாட்கள் விடாப்பிடியாக முயன்று பணம் கட்டினீர்கள்?’  அவர் சொன்னார், ’தமிழ் மிகப் பழமையானது. இந்திய மொழிகளில் அரிய இலக்கியங்களைக் கொண்டது. தமிழுக்கு ஓர் இருக்கை அமைந்தால் அது எங்கள் எல்லோருக்கும் பெருமைதானே.’ என்னால் நம்ப முடியவில்லை. உணர்ச்சி பெருகி என் குரல் தழுதழுத்தது. நான், ’அன்பரே, உங்களை எங்காவது வழியில் சந்தித்தால்  நான் உங்கள் காலைத் தொடுவேன்’ என்றேன். அவர் பதில் பேசாது அமைதியாக டெலிபோனை வைத்தார்.  

வோல்வோ கார்

கனடாவில் மிகவும்  பிரபலமான வீடு விற்பனை முகவர் ஒருவரை  அணுகினேன். மாதம் தோறும் அவர் பல மில்லியன்கள் பெறுமதியான வீடுகளை விற்றுக்கொடுப்பார்; அல்லது வாங்கிக் கொடுப்பார். ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை என்று சொன்னவுடன் அவர் ஆரம்பித்தார். ’என்னுடைய மகனுக்கு மேற்படிப்புக்கு இடம் கிடைத்திருக்கிறது. அதற்கு 10,000 டொலர் தேவைப்படுகிறது. வன்னியில் என் அம்மாவுக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் அனுப்பவேண்டும். நேற்று எங்கள் ஊர் கோயில் கும்பாபிசேகத்தை  முன்னின்று நடத்தியதில் எனக்கு பெரும் செலவு’ என்றார்.  போன மாதம் வாங்கிய வொல்வோ C 90 கார் பற்றி அவர் மூச்சு விடவே இல்லை.

நான் கற்றுக்கொண்டது இதுதான். ஒருவருடைய நிதி நிலைமை பற்றி தெரிய வேண்டுமானால் அவரிடம் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை யாசிக்கவேண்டும்.

விசுவாசமான வாசகர்

எனக்கு ஒரு விசுவாசமான வாசகர் இருந்தார். மாதத்தில் ஒரு முறையாவது அழைப்பார். என்னுடைய தீவிரமான வாசகர். நான் எழுதிய எல்லா புத்தகங்களையும் படித்திருக்கிறார். பேசும்போது என்னுடைய சிறுகதையிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து அப்படியே போகிறபோக்கில் வீசிவிடுவார். அவர் எப்ப அழைத்தாலும் உரையாடல் ஒரு மணி நேரம் நீளும். கடைசியில் நான்தான் ஏதாவது  சொல்லி உரையாடலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அடுத்த தடவை அழைக்கும்போது ஏதாவது புது விசயத்தை எடுத்து வருவார். ஒருமுறை பேசியதை மீண்டும் பேசுவதே கிடையாது. இத்தனைக்கும் அவருடைய முகத்தை நான் பார்த்ததில்லை.

ஒருநாள் ஓர் அதிசயம் நடந்தது. நான் ஒரு பல்கடை அங்காடியில் நின்றபோது ஒருவர் வந்து கைகொடுத்து என்னை தெரிந்தது போலப் பேசினார். பார்த்தால் அவர்தான் அந்த வாசகர்.  தோளிலே மாட்டியிருந்த பையை எடுத்து காட்டினார். அதற்குள்ளே நான் எழுதியக கதைகள் பல ஒளிநகல்களாக  காட்சியளித்தன. ’இதை ஏன் இப்படி காவித் திரிகிறீர்கள்’ எனக் கேட்டேன். அவர் அப்போது சொன்ன பதில்தான் என் வாழ்நாளில் நான் என்றுமே மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. ’எப்பவாவது உங்களைச் சந்திக்கலாம் என்று இவற்றை சுமந்து திரிவேன்’ என்றார். ’ஒவ்வொரு நாளுமா?’ ’ஆமாம்,  எங்கே புறப்பட்டாலும் பையை எடுத்துத்தான் செல்வேன்.’

அந்த சந்திப்புக்கு  பின்னரும் அவருடைய அழைப்பு தொடர்ந்தது. நீண்ட நேர உரையாடலுக்குப்   பின்னர் நான் பேச்சை ஒரு முடிவுக்கு கொண்டு வருவேன். அவர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தார். மணித்தியாலத்துக்கு இவ்வளவு என்ற சம்பளத்தில் ரொட்டியை பிளாஸ்டிக் உறையில் அடைக்கும் வேலை. நாளுக்கு ஒன்பது, பத்து  மணித்தியாலம் வேலை செய்வார். வாரத்துக்கு ஆறு நாட்கள். சிலவேளை ஏழாவது நாளும் வேலை செய்வதுண்டு. அன்று மணித்தியாலத்துக்கு அதிகமான தொகை கிடைக்கும்.

ஒருநாள் இவர் என்னை வழக்கம்போல அழைத்தபோது நான் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைய இருப்பதைப் பற்றி சொன்னேன். ’உங்களால் முடிந்ததை, 25 டொலரோ அல்லது 50 டொலரோ நன்கொடை வழங்கினால் பெரிய உதவியாயிருக்கும். உங்கள் பெயர் கொடையாளர்களின் பட்டியலில் நிரந்தரமாக பதிவாகிவிடும்’ என்று கூறினேன். ’ஐயா, லைன் ஒன்று வருகுது’ என்றுவிட்டு அவசரமாக டெலிபோனை துண்டித்தார். இது நடந்து ஒரு வருடம் ஆகிறது. அதன் பின்னர் அவர் என்னை அழைக்கவே இல்லை.

அவசர  டொக்ரர்

டொக்ரர் முத்துலிங்கத்துடன் பேசமுடியுமா?

அப்படி ஒருவரும் இல்லையே.

கலாநிதி முத்துலிங்கம்?

அவரும் இல்லை.

முனைவர் முத்துலிங்கம்

இல்லையே.

இந்த நம்பரில் அவர் இருக்கிறார் என்று சொன்னார்கள். நான் அவருடன்தான் பேசவேண்டும். அவர் ஒரு பேராசிரியராகக் கூட இருக்கலாம். அவசரமான விசயம்.

அப்படியா? என்ன விசயம் என்று சொல்ல முடியுமா?

அது ஒன்றும் ரகஸ்யமில்லை. ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கவேண்டும் என்று என்னுடைய husband சொன்னார். டொக்ரர் இதற்கான ஏற்பாடு செய்வார் என்றார். அதுதான் அவரை தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.

நான் உசாரானேன்.

நீங்கள் எவ்வளவு நன்கொடை கொடுக்க திட்டம் போட்டிருக்கிறீர்கள்?

என்னுடைய husband 50,000 டொலர் என்று சொன்னார்.

நான் நிலத்திலே விழுந்து புரளத் தயாரானேன்.

எனக்கு எல்லா விவரங்களும் தெரியும். நானே அவற்றை தருகிறேன்.

அது கூடாது. என் husband டின் கட்டளை டொக்ரர் முத்துலிங்கத்துடன் பேசவேண்டும் என்பதுதான்.

பட்டத்தில் என்ன இருக்கிறது? நானே இந்த நன்கொடையை ஏற்று முறையாகப் பதிவு செய்வேன். பல்கலைக் கழத்திலிருந்து உடனேயே உங்கள் கைக்கு ரசீது வந்து சேரும்.

அது ஏலாது. டொக்ரர் பட்டம் உள்ளவரிடம் பேசவேண்டும் என்பதுதான் கடுமையான கட்டளை.

’இது என்ன கட்டளை? ‘காரைக்கால் அம்மையார் வியக்கும் வண்ணம் நாலு கட்டளைக் கலித்துறை பாடல்களை இடது கையால் எழுதினாலும் எழுதலாம். இந்த அம்மையாரை தகர்க்க முடியாது போலிருக்கிறதே.’

டொக்ரர் பட்டம் எடுப்பது சாமான்ய காரியம் இல்லை. இனி ஒருவர் படித்து எடுப்பதும் முடியாது. அம்மையே, டொக்ரர் பட்டத்துக்கு எவ்வளவு கழிக்க வேண்டுமோ அதைக் கழித்துக்கொண்டு மீதியை தாருங்கள். உடனேயே ரசீது அனுப்ப ஏற்பாடு செய்வேன்.

நோ நோ, அப்படி எல்லாம் செய்யமுடியாது.

ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று நினைக்கிறேன்.

இது என்ன? விடாப்பிடியாக இருக்கிறீர்கள். நீங்கள் யார்?

சும்மா முத்துலிங்கம்.

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2022 14:09

இல்லை என்பதே பதில்

இல்லை என்பதே பதில்

அ.முத்துலிங்கம்

தொடக்கம்

பெர்சி ஸ்பென்சர்  என்பவர் 5ம் வகுப்பு மட்டுமே படித்த ஓர் அமெரிக்கர். இவர் பின்னர் தானாகவே கற்றுக்கொண்டு  விஞ்ஞானி ஆனார். 1945ல் ஒரு குளிர்கால பகல் நேரத்தில் கதிர் அலை பற்றிய பரிசோதனை முடிவில் அவர் சட்டைப் பையில் இருந்த சொக்கலெட் உருகிவிட்டது. அது ஏன் நடந்தது என்று வியப்பு மேலிட  தொடர்ந்து ஆராய்ச்சி செய்து நுண்ணலை அடுப்பை கண்டுபிடித்தார். இன்று உலகம் முழுக்க பாவனையில் இருக்கும் அடுப்புக்கு மூல காரணமாக இருந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.

இப்படியான ஒரு தற்செயல் நிகழ்வு 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி நடந்தது. விஜய் ஜானகிராமன் அமெரிக்காவில் 40 வருடமாக பணியாற்றிவரும்  பிரபல இருதய நிபுணர். தமிழ் மேல் அதீத பற்றுக் கொண்டவர். இவர் வைதேகி ஹெர்பர்ட் என்பவரை சந்தித்தார். வைதேகி தமிழில் புலமை வாய்ந்தவர். சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டையும் முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை தனியொருவராகச் செய்து வரலாறு படைத்தவர். ஜானகிராமன் அவரைச் சந்தித்தபோது ’தமிழுக்கு நான் ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்யலாம்?’ என்றார். வைதேகி அம்மையார் ‘ ஹார்வர்ட் பல்கலைக் கழகம் உலகத் தரவரிசையில் முதலாவது இடத்தில் இருக்கிறது. தமிழ் இன்றும் வாழும் ஆதி மொழி; செம்மொழி. மேன்மையான இலக்கியங்கள் கொண்டது. இந்த மொழிக்கு, 380 வருட பாரம்பரியம் கொண்ட ஹார்வர்டில் இருக்கை கிடையாது. இது மிகப்பெரிய அநீதி. உலகத்தில் மூத்த மொழி ஒன்றுக்கு மூத்த பல்கலைக்கழகத்தில் இடம் தருவதுதானே முறை’ என்றார்.

முதல் பொறி

இதுவே முதல் பொறி. மீன் துள்ளி விழும்போது வானத்தை பார்க்கும் என்பார்கள். சிறிய துள்ளல் பெரிய தரிசனம். ஜானகிராமன் மனதில் வியாபித்திருந்தது தமிழ் வானம்தான்.  உலகத் தமிழர்கள் மனது வைத்தால் முடியாத காரியமா என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.  அமெரிக்காவில் வாழும்  சுந்தரேசன் சம்பந்தமும்  புகழ்பெற்ற மருத்துவர். தமிழில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இருவருமாக சென்று ஹார்வர்ட் அதிகாரிகளைச் சந்தித்து தங்கள் விருப்பத்தை சொன்னார்கள். ஹார்வர்ட் பெரும் ஆர்வம் காட்டவில்லை. விடாப்பிடியான  தொலைபேசி உரையாடல்களுக்கு  பின்னர்  ஹார்வர்ட் ஆறு மில்லியன் டொலர் வைப்பு நிதி கட்டவேண்டும் என்ற  நிபந்தனையை விதித்தது.  ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் செலுத்தி ஹார்வர்ட் நிதி திரட்டலை தொடங்கத் தீர்மானித்தார்கள். அடுத்து வந்த  ஹார்வர்ட் சந்திப்பில் அவர்களுடன் நானும் நின்றேன்.  அவர்கள் சார்பில் காசோலையை வழங்கி  நிதி  திரட்டலை ஆரம்பித்து வைக்கும் பெருமையை எனக்கு கொடுத்தார்கள்.  தொடர்ந்து அமெரிக்காவில்  தமிழ் இருக்கை அமைப்பு  அறக்கட்டளையாக பதிவுசெய்யப்பட்டது. இதன் நோக்கம் உலகத்து பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்குவது.  முதல் படியாக  ஹார்வர்ட், அதைத் தொடர்ந்து ரொறொன்ரோ மற்றும் முக்கிய  தமிழ் இருக்கைகள் என்று முடிவுசெய்யப்பட்டது.

ஹார்வர்ட் விழா

ஹார்வர்ட் தமிழ் இருக்கை ஆரம்ப விழா அமெரிக்காவில் நடக்கவில்லை.  6 டிசம்பர் 2015 அன்று, கனடா, மார்க்கம் நகரில் நடந்தது. பனிசூழ்ந்த  இரவுக் கூட்டத்தில் மக்கள் குழுமியிருந்தது உற்சாகம் அளித்தது. இரண்டு மருத்துவர்களும் பேசினார்கள். அப்போது அவர்கள் ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு முடிந்தபின்னர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப் போவதாக  உறுதியளித்தார்கள். மக்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றார்கள்.

ஹார்வர்ட்டின் வெற்றி

ஆரம்பத்தில் நினைத்ததுபோல ஹார்வர்ட் நிதி சேகரிப்பு இலகுவாக அமையவில்லை. பணம் கொடுத்தவர்களிலும் பார்க்க கேள்வி கேட்டவர்களே அதிகம். எதிர்பாராத தடைகள் வந்தன. மருத்துவர் ஜானகிராமன் ‘தடைகள் என்பவை மாறுவேடத்தில் வரும் வாய்ப்புகள்’ என்று நம்புகிறவர்.  மருத்துவர் சம்பந்தமோ நிதி சேகரிக்கும் கூட்டங்களில் இப்படிப் பேசினார். ‘நான் அமெரிக்காவுக்கு வந்தபோது என்னுடைய சொத்து என் சட்டைப் பையில் இருந்த 8 டொலர்தான். நான் இந்த உலகத்தை விட்டு நீங்கும்போது என் சொத்து அதிலும் குறைவாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். ஈத்துவக்கும் இன்பத்துக்கு ஈடில்லை.’ சிறிது சிறிதாக செய்தி உலகம் முழுக்க பரவி ஆதரவு பெருகியது. தமிழக அரசு $1.5 மில்லியன் நன்கொடை வழங்கியது. தமிழ்நாட்டில் சிறையில் இருந்து வெளியே வந்த ஒருத்தர் சிறையில் கிடைத்த பணம் முழுவதையும் ஹார்வர்டுக்கு தானம் செய்தபோது பத்திரிகைகள் எழுதின.  ஒரு கட்டத்தில் உலகெங்கும் இருந்து பணம் வந்து குவிய, பொது அறிவித்தல் மூலம் ’பணம் அனுப்பவேண்டாம்’ என்று கேட்டு நிறுத்தவேண்டி  நேர்ந்தது.

ரொறொன்ரோ தமிழ் இருக்கை தொடக்கம்

’தோசைக் கல்லை ஆறப்போடக் கூடாது’ என்று மருத்துவர் சம்பந்தத்தின் மனைவி விஜயா அடிக்கடி சொல்வார்.   5 மார்ச் 2018ல் ஹார்வர்ட் நிதி சேகரிப்பு முடிவுக்கு வந்தது. சூட்டோடு சூடாக, ரொறொன்ரோ தமிழ் இருக்கை முயற்சி   10 மே 2018 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதை உற்சாகத்தோடு வேகமாக முன்னெடுத்தவர் சிவன் இளங்கோ. ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு தேவையான வைப்பு நிதி 3 மில்லியன் டொலர்கள். தமிழர்களின் வாரிவழங்கும் நற்குணத்தில் நம்பிக்கை வைத்து, தமிழ் இருக்கை அமைப்பும், கனடிய தமிழர் பேரவையும் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துடன் கையொப்பமிட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. ஹார்வர்டில் மேலதிகமாகச் சேர்ந்த பணத்தில் $197,000 ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு வழங்கப்பட்டது. அத்துடன் தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்கள் தங்கள் பங்காக $479,000 அளித்தது ரொறொன்ரோ தமிழ் இருக்கை தொடக்கத்திற்கு  பெரும் உதவியாக அமைந்தது.  ரொறொன்ரோவில்  நிதி சேகரிப்பு   இலகுவாக அமையவில்லை. பத்திரிகைகள், ஒன்றுகூடல்கள் , ரேடியோ, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு செய்தியை எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. கோவிட் நோய் பரவல் நிதி சேகரிப்புக்கு பெரும் தடையாக இருந்தது. அப்படியிருந்தும் உலக மக்களின் அமோகமான ஆதரவால் மூன்று மில்லியன் டொலர்கள் சரியாக மூன்று வருடங்களில் வெற்றிகரமாக திரட்டப்பட்டது.

ஏன் கனடா?

வெளி நாடுகளில் தமிழை வளர்ப்பதற்கு கனடாவை விட ஒரு சிறந்த நாடு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களுக்கும், தமிழுக்கும் மிக அணுக்கமான நாடு. தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக கனடிய நாடாளுமன்றம் 2006ல் அறிவித்திருந்தது. ரொறொன்ரோ பல்கலைக் கழகம் இதை முன்னெடுத்து வருடா வருடம் கொண்டாடி வருகிறது. ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் விரைவில் தமிழ் இருக்கைக்கான பேராசிரியர் நியமிக்கப்படுவார்.  ஆண்டு தோறும் தமிழ் ஆராய்ச்சியில் உலகளாவிய விதத்தில் சிறந்தவருக்கு ரொறொன்ரோ பல்கலைக்கழகம் விருதும், பணமுடிச்சும்  வழங்கி கௌரவிக்கும். விருதாளர் பேருரையாற்றி விருதை ஏற்றுக்கொள்வார். அதற்கான தனி வைப்பு நிதி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. கனடா, ஒன்ராறியோ மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மே 18ம் நாள் தமிழின அழிப்பு அறிவியல் வாரமாக பேணுவதற்கான சட்டம் ஒருமனதாக நிறைவேறியிருக்கிறது. மூன்று  லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழும் கனடா நாட்டில் தமிழை வளர்ப்பதற்கான சூழல் மெச்சும்படியாக உள்ளது.

இருக்கை என்ன செய்யும்?

ரொறொன்ரோ தமிழ் இருக்கை, தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைக் கற்றுத்தருவதோடு பல்வேறு முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கும்.  தமிழுக்கான அங்கீகாரத்தை அளிப்பதோடு தொடர் பயன்பாட்டிற்கும், முன்னேற்றத்துக்கும் வலுச்சேர்த்து பல கல்வி நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படும். ஒரு மொழி பேசும் குழுவினரால் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் முதல் இருக்கை என்பதால் வேறு இருக்கைகளுக்கு முன்மாதிரியாக இது அமையும்.  தமிழ் மொழியின் தொன்மைக்கும் அதன் மேன்மைக்கும் சாட்சியாக  என்றென்றும் நிலைத்து நிற்கும். கனடிய அரசின் நல்கைகள், புலமைப்பரிசில்கள் , உதவித்தொகை ஆகியவற்றுக்கு வழிகோலும். பல்நாட்டு தமிழ் அறிஞர் மாநாடுகளை சாத்தியமாக்கும்.

என்ன பிரயோசனம்?

நிதி சேகரிக்கும்போது என்னிடம் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி ’தமிழ் இருக்கையால் எனக்கு என்ன பிரயோசனம்?’ என்பதுதான். ஈழத்திலிருந்து, ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாமல் அகதியாக புலம்பெயர்ந்து மிக நல்ல நிலைக்கு உயர்ந்து வாழ்பவர்கள் இப்படி கேட்பார்கள். ’உங்கள் பிள்ளைகள் இசை கற்கிறார்கள். கராத்தே கற்கிறார்கள். நீச்சல் கற்கிறார்கள். நடனம் கற்கிறார்கள். உங்களை மடியில் கிடத்தி உங்கள் தாயார் பேசியது தமிழ்  மொழி.  இந்த நாட்டுக்கு நீங்கள் கொண்டுவந்த சொத்து தமிழ்அல்லவா? இரண்டாயிரம் வருடங்களாக  தலைமுறை  தலைமுறையாக  தொடர்ந்து வந்த மொழிச்சங்கிலி உங்களுடன் அறுந்து போகிறது. உங்கள் அம்மா பேசிய மொழியை அவர் ஞாபகமாக  பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமையல்லவா?’ என்பேன். நான் சொன்னது காற்றிலே கரைந்து எனக்கு மன உளைச்சல் ஏற்படும். அந்த நேரங்களில் எனக்கு ஊக்கம் அளித்தது சாமின் நுஸ்ரத் என்ற உலகப் புகழ் சமையல் அரசி சொன்னதுதான். ‘நான் தினமும் தோல்வியை சந்திக்கிறேன்.’  

ரொறொன்ரோ நிதி திரட்டல் அனுபவங்கள்

நிதி திரட்டலின்போது கிடைத்த அனுபவங்களை மறக்க முடியாது.  ’ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல் என மறுத்தலும்’ என்ற வரிகள் அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். இல்லாதபோது சிலர் தருவேன் என்றனர். இருக்கும்போதும் மாட்டேன் என்றனர் சிலர்.  மொன்ரியலில் இருந்து ஒருவர் 30 கேள்விகள் கேட்டார். இருபது தடவை பணம் அனுப்புவதாகச் சொன்னார். பணம் வரவேயில்லை. சில வாரங்களில் பணம் எக்கச்சக்கமாக சேரும்; சில வேளைகளில் ஒன்றுமே பெயராது. மனம் சலித்துப் போகும். நற்றிணை யுகன் சொன்னது நினைவுக்கு வரும். ‘தண்ணீரில் போட்ட உப்பு அப்படியே கிடக்கும். திடீரென்று கரைந்து போகும். வெற்றி அப்படித்தான். எதிர்பாராத நேரத்தில் வந்து ஆச்சரியப்படுத்தும்.’

நியூசீலாந்திலிருந்து  வான்கூவர் வரைக்கும் மக்கள் நன்கொடைகள் அனுப்பினர். இங்கிலாந்துப் பெண்மணி ‘தமிழுக்கு  நாடு இல்லாவிட்டால் என்ன?  எல்லா நாடும் எமக்குச் சொந்தமானதுதான்’ என்று கணியன் பூங்குன்றனையும் தாண்டிப் பேசினார்.’ ஆஸ்திரேலியத் தமிழர் ’தமிழ் இருக்கை என்றால் என்ன? அது ஒரு சின்ன தமிழ் நாடுதானே!’ சிங்கப்பூர்க்காரர் சொன்னதை மறக்க முடியாது. ’இத்தனை பெரிய தொகையா?’ என்றேன். அவர் ‘இன்று சொர்க்கத்தில் விடுமுறை’ என்றார்.  

நிதி நல்கியவர்கள்

ரொறொன்ரோ தமிழ் இருக்கை மூன்று மில்லியன் டொலர்  இலக்கை மூன்று வருடத்தில்  26 ஏப்ரல் 2021 அன்று எட்டியது. அதாவது கெடுவுக்கு 26 மாதங்களுக்கு முன்னரே இலக்கை அடைந்துவிட்டது. 4,143 உலக மக்களும், தமிழ் அமைப்புகளும், இலக்கிய வாசகர்களும், ஈழத்து பள்ளிக்கூடங்களிலிருந்து நிதி சேர்த்து அனுப்பிய மாணவர்களும்  இந்த வெற்றிக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். தமிழக அரசு வழங்கிய 173,317 டொலர்களும், தி.மு.க வழங்கிய 16,513 டொலர்களும்,   தந்தை செல்வநாயகம் அறக்கட்டளை  வழங்கிய 250,000 டொலர்களும், பெயர் சொல்ல விரும்பாத தமிழ் அன்பர் ஒருவர் வழங்கிய 500,000 டொலர்களும்   தமிழ் இருக்கைக்கு தேவையான மூன்று  மில்லியன் டொலர் இலக்கை  துரிதமாக அடைய உதவின.

படிப்பினைகள்

தமிழ் பற்றாளர்களும், ஆர்வலர்களும், கொடையாளர்களும் உலகம் முழுக்க நிரம்பியிருக்கின்றனர். இவர்களைக் கண்டு பிடிப்பதில்தான் வெற்றி தங்கியிருக்கிறது. பத்திலே ஒருத்தர் நன்கொடை வழங்கினார். பத்துப்பேர் வழங்க வேண்டுமென்றால் நூறு பேரை அணுகவேண்டும். கலைஞர்கள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனங்கள்,  தமிழ் அமைப்புகள், கிராம நலன்புரி சங்கங்கள், முதியோர் அமைப்புகள், பள்ளிக்கூட பழைய மாணவ மாணவியர் அமைப்புகள் ஒத்துழைத்ததனால் கிடைத்தது இந்த வெற்றி. அந்தந்த சங்கங்கள் நிதி திரட்டலை தகுந்த தலைவரிடம் ஒப்புவித்ததுதான்  வெற்றியின் முதல் படி.  ’இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.’ இதுவே மந்திரம்.

பாராட்டுகள்

வைதேகி அம்மையாரை எவ்வளவு பாராட்டினாலும் கொஞ்சம் எஞ்சும். அவர் ஆரம்பித்து வைத்த பொறி ’மரம்படு சிறு தீப்போல’  பரவி இன்று ஹார்வர்ட், ரொறொன்ரோ, நியூயோர்க், ஹூஸ்டன், லண்டன், பேர்க்லி, ஜேர்மனி என உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. இன்று உக்கிரெய்ன் மொழிக்கு ஓர் இருக்கை வேண்டுமென்றால் உக்கிரெய்ன் நாடு  ஏற்பாடு செய்யும். ஐஸ்லாண்டிக் மொழிக்கு ஐஸ்லாண்ட் அரசாங்கம் உதவி செய்யும். தமிழுக்கு நாடு இல்லை. ஆகவே நாம்தான் செய்யவேண்டும். உலகத் தமிழர்கள்  ஒன்றிணைந்து தமிழுக்கான இருக்கை ஒன்றை ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் நிறுவியது இதுவே முதல் தடவை.  ’ஓர் இனக்குழு இணைந்து செயல் பட்டால் அவர்களால் முடியாதது எதுவுமே இல்லை’ என்று கனடா நாடாளுமன்றத்தில் தமிழ் இருக்கை வெற்றியை பாராட்டிப் பேசிய  மார்சி இயென் என்ற உறுப்பினர் கூறினார். இது முடிவல்ல, ஆரம்பம்தான்.  தமிழின் மேன்மையை முன்னெடுக்கும் கேள்விகளை உலகத் தமிழர்கள் தொடர்ந்து எழுப்பவேண்டும். அவர்கள் ஒன்றிணைந்தால் கிடைக்கும் ஆற்றல்  பல நாடுகளின் பலத்துக்கு  சமமானது. என்னுடைய மேசையில் இந்த வாசகம் இருக்கிறது. If you don’t ask, the answer will always be ‘No.’ ’நீ கேள்; கேட்காவிட்டால் உனக்கு  கிடைக்கும் பதில் எப்பொழுதும்  ’இல்லை’ என்பதாகவே இருக்கும்.  

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2022 14:05

May 26, 2022

தமிழ்

தமிழ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2022 08:50

December 29, 2019

ஆட்டுப்பால் புட்டு

ஆட்டுப்பால்புட்டு

                   அ முத்துலிங்கம்

இதுவெல்லாம்நடந்ததுசிலோனில்தான்,ஸ்ரீலங்காஎன்றுபெயர்மாற்றம்செய்யமுன்னர்.அப்பொழுதெல்லாம்’தபால்தந்திசேவை’என்றுதான்சொன்னார்கள்.அலுவலகம்,அஞ்சல்துறை,திணைக்களம்போன்றபெரியவார்த்தைகள்கண்டுபிடிக்கப்படவில்லை.தினம்யாழ்தேவிகொழும்பிலிருந்துசரியாககாலை5.45க்குபுறப்பட்டுகாங்கேசன்துறைக்குஓடியது;பின்னர்அதேநாள்திரும்பியது.தபால்,தந்திசேவையில்அதிகாரியாகவேலைசெய்தசிவப்பிரகாசம்இரண்டுமாதத்திற்குஒருமுறைவெள்ளிக்கிழமைஅதிகாலையாழ்தேவியைபிடித்துபுறப்பட்டுமதியஉணவுக்குயாழ்ப்பாணம்போய்விடுவார்.பின்னர்ஞாயிறுமதியம்அங்கேயிருந்துகிளம்பிஇரவுகொழும்புதிரும்புவார்.திங்கள்காலைவழக்கம்போலகந்தோருக்குஅதிகாரம்செய்யக்கிளம்புவார்.

யாழ்ப்பாணத்தில்அவருடையமனைவிநாற்சார்வீட்டையும்,பெரியவளவையும்பரிபாலித்துக்கொண்டிருந்தார்.அவர்களுடையஒரேமகள்மணமுடித்துசிங்கப்பூர்போய்விட்டாள்.வீட்டிலேஅவர்கள்வளர்த்தஒருமாடு,இரண்டுஆடுகள்,மூன்றுநாய்கள்,20 கோழிகளும்,வளர்க்காதஎலிகள்,சிலந்திகள்,கரப்பான்பூச்சிகளும்அவர்களைஓயவிடாமல்வேலைகொடுத்தன.  சிவப்பிரகாசம் அடிக்கடி வருவது மனைவியை பார்ப்பதற்கு மட்டுமல்ல, வீடு வளவுகளை பராமரிக்கவும்தான். அப்படித்தான் அவர் மனைவிகூட நினைத்தார். ஆனால் இன்னொரு ரகஸ்யக் காரணமும் இருந்தது.

யாழ்ப்பாணத்திலேதேங்காய்புட்டுபிரபலம்.தேங்காய்ப்பால்புட்டுஇன்னும்பிரபலம்.மாட்டுப்பால்புட்டையும்சிலர்விரும்பிஉண்பதுண்டு.ஆனால்சிவப்பிரகாசம்சாப்பிடுவதுஎன்றால்அதுஆட்டுப்பால்புட்டுத்தான்.  தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்டு, அரிசிமாவையும், உளுத்தம்மாவையும் சரிசமமான விகிதத்தில் கலந்து குழைத்து முதலில் புட்டு அவிக்கவேண்டும். அதை இறக்கியவுடன் சூடாக்கியஆட்டுப்பாலில்கிளறிசர்க்கரைஇரண்டுகரண்டிசேர்த்துசுடச்சுடசாப்பிட்டால்அதன்ருசியேதனிஎன்பதுசிவப்பிரகாசத்தின்அபிப்பிராயம்.மனைவிக்குஒத்துவராதகருத்துஅது.ஆட்டுப்பாலில்கொழுப்புகுறைவுஆனால்புரதச்சத்துஅதிகம்.  அது காந்தியின் உணவு என்று வாதம் செய்வார் சிவப்பிரகாசம். யாழ்தேவியில் இறங்கி வீட்டுக்கு வந்துசேரும் நேரம் அவர் மனைவி ஆட்டுப்பால் புட்டை சுடச்சுட தயாராக வைத்திருக்கத் தவறுவதே இல்லை.

ஒருமுறைஅவர்வீட்டுமாடுகன்றுஈன்றுவிட்டது.’நீங்கள்வந்தநேரம்’என்றுமனைவி.அவரைப்புகழ்ந்தார்.மனைவிகள்கணவரைப்பாராட்டுவதுஅபூர்வமானது.சிவப்பிரகாசத்துக்குமகிழ்ச்சிதாளவில்லை.அவசரஅவசரமாககன்றைச்சுற்றிவந்தஇளங்கொடியைஉமலிலேபோட்டுக்கட்டினார்.உடனுக்குடன்அதைஆலமரத்தின்உச்சியில்தொங்கவிடவேண்டும்.அந்தஊரில்இப்படியானவேலைகளைச்செய்வதற்குஒருவன்இருந்தான்.வேலிஅடைப்பது,விறகுதறிப்பதுபோன்றவேலைகள்.அழகானவாலிபன்.அவனுடையதாய்தமிழாசிரியை.படிப்புஓடாதபடியால்அதைநிறுத்திவிட்டுஇப்படியானவேலைகளைஊருக்குள்செய்தான்.பெயர்நன்னன்.

’ஆலமரத்தின் உச்சியில் கட்டவேண்டும். அப்பதான் மாடு நிறையப் பால் கறக்கும். வேறு ஒருவருடைய உமலும் அதற்குமேல் இருக்காமல் பார்த்துக்கொள்’ என்றார். அவன் ’தெரியும் ஐயா. இந்த ஊர் முழுக்க பால் கறப்பது என்னால்தான்’ என்றுசொல்லியவாறுபோய்கட்டிவிட்டுவந்தான்.அடிக்கடி  வீட்டுக்கு வந்து அவர் கொடுக்கும் வேலைகளை செய்தான். குணசாலி. குடிப்பது கிடையாது. சீட்டு விளையாடுவது இல்லை. ஒருவித கெட்ட பழக்கமும் அவனிடம் இருப்பதாகச் சொல்ல முடியாது. வேலை முடிந்ததும் காசை வாங்கிக்கொண்டு போவான். எண்ணிக்கூட பார்ப்பதில்லை.

ஒருநாள்சிவப்பிரகாசம்கேட்டார்’உனக்குஇந்தப்பெயர்யார்வைத்தது?’அவன்சொன்னான்,‘அம்மாதான்.அதுபழையமன்னனின்பெயர்.’’அவன்கொடூரமானவன்அல்லவா?’என்றார்.  அவன் சொன்னான் ’எந்த மன்னன்தான் கொடூரம் இல்லாதவன் என்று அம்மா சொல்வார்.’ பெயர்தான் நன்னன் என்று இருந்ததே ஒழிய அவனுடையது சாதுவான முகம். எப்பொழுதும் ஏவலை எதிர்பார்க்கும் கண்கள். நாளை என ஒன்றிருக்கே என்ற யோசனை அவனுக்கு கிடையாது. கொஞ்ச நேரம் தீவிரமாக சிந்திப்பதுபோல முகத்தை கோணலாகப் பிடித்தபடி நின்றான். பின்னர் அவர் ஆச்சரியப்படும் விதமாக ஒன்றைச் சொன்னான். ‘அரசன் என்றால் அவனுக்கு ஒரு கொடி இருக்கவேண்டும். இந்த ஊர் ஆலமரத்தை பார்த்தால் அது தெரியும். எனக்கு எத்தனை இளங்கொடிகள் தொங்குகின்றன என்று.’

ஒவ்வொருமுறையும்சிவப்பிரகாசம்வரும்போதுநன்னனுக்குஏதாவது  வேலையிருக்கும். அந்த தடவை அவர் வந்தபோது ’நன்னன் மணமுடித்துவிட்டான்’ என்று மனைவி சொன்னார். அன்று பின்னேரமே அவன் மனைவியை அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்க வந்தான். பெண் அழகில் அவனுக்கு கொஞ்சமும் குறைந்தவள் இல்லை. கண்களைப் பார்த்தபோது துணுக்கென்று இருந்தது. இமைக்க முடியாத பாம்பின் கண்கள் போல அவை நீளமாக இருந்தன. அதில் கொஞ்சம் தந்திரமும் தெரிந்தது. அவருடைய முதல் நினைப்பு ’இவன் அப்பாவியாக இருக்கிறானே. இவளை எப்படி சமாளிக்கப் போகிறான்’ என்பதுதான். பின்னர் யோசித்தபோது இவள்தான் சரியென்று பட்டது. அப்பாவியானவனை இவள் எப்படியும் முன்னேற்றிவிடுவாள். வெற்றிலையில் காசு வைத்து மணமக்களிடம் கொடுத்து சிவப்பிரகாசம் வாழ்த்தி அனுப்பினார். அவள் முன்னே போக இவன் பின்னால் குனிந்தபடி இடது பக்கமோ வலது பக்கமோ பார்க்காமல் அவள் காலடியை மட்டுமே பார்த்து நடந்தான். மணமுடிக்க முன்னர் அவன் எப்படி நடந்தான் என்பது அவனுக்கே மறந்துவிட்டது. அவள் கொஞ்சம் உதட்டைக் குவித்தால் அவன் கிணற்றுக்குள் குதித்துவிடுவான் என்று சிவப்பிரகாசம் எண்ணினார்.

அடுத்தநாள்காலைஅவர்முட்டைக்கோப்பியைரசித்துகுடித்துக்கொண்டிருந்தபோதுநன்னன்தனியாகவந்தான்.அவனைப்பார்க்கவேறுயாரோபோலஇருந்தது.அவன்அணிந்திருந்தடெர்லின்சட்டை  பொக்கற்றுக்குள் திரீரோஸஸ் சிகரெட் பக்கட் இருந்தது. தலையை ஒட்ட வாரி மேவி இழுத்திருந்தான். சுருட்டிய தினகரன் பேப்பர் கையிலே கிடந்தது. ’என்ன நன்னா? பேப்பர் எல்லாம் படிக்கிறாய் போல இருக்கு?’ என்றார். ’ஐயா, எல்லாம் பத்துமாவின் வேலை. கையிலே பேப்பர் இருந்தால் ஆட்கள் மதிப்பார்களாம்.’ ’சிகரெட்டும் பிடிப்பாயா?’ ’அதுதான் ஸ்டைல் என்று பத்துமா சொல்கிறா. அவவுடன் வெளியே போகும்போது நான் சிகரெட் பிடித்தே ஆகவேண்டும். பழகிக்கொண்டு வருகிறேன்’ என்றான்.

’இப்ப என்ன வேலை செய்கிறாய்?’ ’அதுதான் பிரச்சினை, ஐயா. என்னை வீட்டுவேலைகள்செய்யவேண்டாமாம்.இப்பநான்சைக்கிள்கடையில்தான்வேலைபழகுகிறேன்.அதுமதிப்பானவேலைஆனால்சம்பளம்குறைவு.போதியவரும்படிஇல்லாவிட்டாலும்  பரவாயில்லை என்று பத்து சொல்கிறா,’ .அவர் வீட்டு பலாமரத்தில் ஒரே சமயத்தில் பழுத்து தொங்கிய. மூன்று பழங்களை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. சிவப்பிரகாசம் நன்னனிடம் பலாப்பழத்தை இறக்கித்தரச் சொன்னார். அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு ’ஐயா, பத்துவுக்குதெரிந்தால்என்னைகொன்றுபோடுவா.நான்வாறேன்’என்றுபுறப்பட்டான்.சிவப்பிரகாசம்’நீஒருபழத்தைஎடுத்துக்கொள்.இரண்டைஎங்களுக்குதா’என்றுஆசைகாட்டினார்.அவன்அதைக்கேட்தாகவேகாட்டிக்கொள்ளவில்லை.

வழக்கமாகஞாயிறுஅன்றுகொழும்புக்குபயணமாகும்சிவப்பிரகாசம்திங்கள்மதியம்யாழ்தேவியில்திரும்புவதாகதிட்டமிட்டிருந்தார்.ஞாயிறுஇரவுஅவருடையஇரண்டுஆடுகளில்ஒன்றையாரோதிருடிவிட்டார்கள்.இரவுஆடுகத்தியதுஎன்றவிவரத்தைமனைவிகாலையில்சொல்லிஎன்னபிரயோசனம்.மூன்றுநாய்கள்இருந்தன,ஆனால்அவைஒன்றுமேகுரைக்கவில்லை.சிவப்பிரகாசம்பயணத்தைதள்ளிவைத்தார்.ஆடுகட்டியகயிறுஅவிழ்க்கப்படாமல்வெட்டப்பட்டிருந்ததால்ஆட்டையாரோகளவாடியிருப்பதுஉறுதியானது.அந்தக்கிராமத்தில்இப்படியானதிருட்டுநடப்பதில்லை.எனவேமுழுக்கிராமமும்ஆட்டைதேடியது.

ஊர்பெரியவர்,’ஆட்டைதிருடியவன்இந்தக்கிராமத்தில்விற்கமாட்டான்.அடுத்தகிராமத்திலும்விற்கமாட்டான்.இன்றுசந்தைகூடும்நாள்.ஆட்டைஅங்கேதான்விற்பான்’என்றுகூறினார்.சிவப்பிரகாசம்ஊர்பெரியவரைஅழைத்துக்கொண்டுசந்தைக்குசென்றுதேடினார்.அவர்சொன்னதுசரிதான்.அங்கேஅவருடையஆடுஏற்கனவேகைமாறப்பட்டுகசாப்புக்கடைக்குசெல்வதற்குஆயத்தமாகநின்றது.அவர்ஆட்டைக்கண்டஅதேசமயம்அதுவும்அவரைப்பார்த்தது.அதன்பழுப்புகண்கள்அவரைஅடையாளம்கண்டுவிட்டதுபோலஈரமாகமாறின.ஊர்பெரியவர்பொலீசுக்குஅறிவிக்கும்காரியத்தைசெய்தார்.

வீடுதிரும்பியபோதுமூன்றுநாய்களும்ஓடிவந்துஅவர்மேல்பாய்ந்துபுரண்டன.அவற்றின்வால்மட்டும்ஆடாமல்முழுஉடம்பும்ஆனந்தத்தில்துள்ளியதைப்பார்க்கஅவருக்குஆத்திரமாகவந்தது.திருடனைவிட்டுவிட்டுஅவர்மேல்பாய்வதற்காநாய்களைவளர்த்தார்.அவர்விட்டினுள்புகுந்துஒருவன்ஆடுதிருடியதையோசிக்கயோசிக்கஅவர்மனம்சினம்கொண்டது.அந்தஆடுவேறுகுட்டித்தாய்ச்சியாகஇருந்தது.இரண்டுஆடும்மாறிமாறிகுட்டிபோட்டுஅவருடைய்ஆட்டுப்பால்புட்டுக்குதடங்கல்வராமல்பார்த்துக்கொண்டிருந்தன.ஒருகுட்டித்தாய்ச்சிஆட்டைவெட்டிஇறைச்சியாக்குவதற்குஎத்தனைகல்மனசுவேண்டும்.

சென்றவருடத்துஇலைகள்வளவைநிறைத்துக்கிடந்தன.நன்னன்உதவிக்குவரப்போவதில்லை.மனைவிகூட்டிச்சருகுகளைக்குவித்துவிடசிவப்பிரகாசம்அள்ளிகுப்பைகிடங்கில்கொண்டுபோய்கொட்டினார்.இரண்டுதரம்கொட்டிவிட்டுமூன்றாவதுதரம்வந்தபோதுகாற்றுசுழன்றடித்தது.குப்பைசிதறமுன்னர்அள்ளிவிடலாம்என்றுஓடினார்.காற்றுவென்றுவிட்டது.அந்தநேரம்வெளியேபெரும்ஆரவாரம்கேட்டது.படலையைத்திறந்துவீட்டுக்குள்ளேசனம்வந்தது.பின்னர்ஆடுவந்தது.பின்னால்  பொலீஸ்காரர் வந்தார். அவரைத் தொடர்ந்து கைகளைப் பின்புறம் கட்டிய நிலையில் நன்னனை பிடித்து இழுத்தபடி ஒருத்தன் வந்தான். ’ஐயா, என்னை விட்டுவிடுங்கள். பத்துமா சொல்லித்தான் செய்தனான்’ என்று அவன் கெஞ்சினான். அவன் ஏதோ சிங்களம் பேசியதுபோல சிவப்பிரகாசம் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார். அப்பாவியான ஒருத்தனை சிலமாதத்திற்குள் இப்படி ஒருத்தி மாற்றிவிட்டாளே என்று நினைத்தார். ’ஆடுதான் கிடைத்துவிட்டதே. அவன் பாவம், விட்டு விடுங்கள்’ என்று அவர் வேண்டினார். பொலீஸ்காரர் மறுத்துவிட்டார். ’‘இது பொலீஸ் கேஸ் ஆகிவிட்டது. கோர்ட்டுக்கு போனால் நூறு ரூபா அபராதம் விதிப்பார்கள். அல்லது இரண்டு கிழமை சிறைத் தண்டனை கிடைக்கும்.. அதை அனுபவித்தால்தான் திருடனுக்கு புத்திவரும். நாளைக்கே கோர்ட்டுக்கு ஆட்டை கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு பொலீஸ்காரர் நன்னனை இழுத்துப் போனார்.

அன்றிலிருந்துதான்சிவப்பிரகாசத்துக்குநினைத்துப்பார்த்திராதசிக்கல்ஒன்றுமுளைத்தது.வெள்ளிஅதிகாலையாழ்தேவியைபிடித்துவந்துஇரண்டுநாள்தங்கிவிட்டு  கொழும்பு திரும்புகிறவர் அப்படியெல்லாம் செய்ய முடியவில்லை. ’வழக்கு இத்தனையாம் தேதி. உடனே வரவும்’ என்று மனைவி தந்தி கொடுப்பார். சிவப்பிரகாசம் அவசரமாகப் புறப்பட்டு யாழ்தேவியில் வருவார். கோர்ட்டுக்கு மாட்டு வண்டிலில் ஆட்டை ஏற்றிக்கொண்டு போவார்.. வழக்கை தள்ளி வைப்பார்கள். அவர் கொழும்புக்கு திரும்புவார். மறுபடியும் தந்தி வரும். கோர்ட்டுக்கு வருவார். வழக்கை ஒத்திவைப்பார்கள். பலதடவை இப்படி அலையவேண்டி நேர்ந்தது. .

ஒருமுறைகோர்ட்டுக்குஆட்டையும்அதனுடையஇரண்டுகுட்டிகளையும்வண்டிலில்ஏற்றிப்போனார்.வழக்கறிஞர்குட்டிகளையும்கொண்டுவரச்சொல்லிகட்டளையிட்டிருந்ததால்அப்படிச்செய்தார்.கோர்ட்டிலேபத்துமாவின்கையில்ஒருகுழந்தையிருந்தது.எட்டாம்வகுப்புநன்னனும்,பத்தாம்வகுப்புபத்துமாவும்ஒருகுழந்தையைஉண்டாக்கிவிட்டார்கள்.அதற்குபட்டப்படிப்புஒன்றும்தேவையில்லை.வழக்கைமறுபடியும்தள்ளிவைத்ததுசிவப்பிரகாசத்துக்குஆத்திரத்தைகொடுத்தது.பத்துமாமரத்திலேசாய்ந்தபடிகுழந்தையுடன்நின்றாள்.கோர்ட்டுக்குஅவசரமாகப்போனவர்கள்அவளைத்தாண்டும்போதுவேகத்தைபாதியாகக்குறைத்தார்கள்.அவள்முகம்சந்திரவெளிச்சத்தில்பார்ப்பதுபோலவெளிறிப்போய்காணப்பட்டது.அவர்களைப்பார்க்கபரிதாபமாகஇருந்தது.நன்னனிடம்’சாப்பிட்டாயா?’என்றுகேட்டார்.அவன்இல்லைஎன்றான்.பாலைவனத்துஒட்டகம்போலஅவள்தலையைஅலட்சியமாகமறுபக்கம்திருப்பினாள்.

சாப்பாட்டுக்கடையில்நன்னன்கைக்குட்டையைஎடுத்துவாங்குமேலேவிரிக்கஅவள்உட்கார்ந்தாள்.இப்பொழுதுதான்அந்தப்பெண்ணைசிவப்பிரகாசம்நேருக்குநேர்பார்த்தார்.அவள்உடம்புஅசையாமல்இருக்கஅவள்தலைமட்டும்ஒருநடனக்காரியுடையதுபோலஇரண்டுபக்கமும்அசைந்தது.அவள்ஓயாமல்பேசினாள்.வாய்க்குள்உணவுஇருக்கும்போதும்,அதைவிழுங்கியபின்னரும்,அடுத்தவாய்உணவுவாய்க்குள்போகமுன்னரும்அவள்வாயிலிருந்துவார்த்தைகள்ஒன்றுடன்ஒன்றுஒட்டியபடிநிறுத்தாமல்வெளிவந்தன.எல்லாமேகணவனுக்கானகட்டளைகள்தான்.அவன்உணவைஅள்ளிவாயில்திணித்தபடியேதலையைமட்டும்ஆட்டினான்.’பஸ்ஸுக்குகாசுஇருக்கிறதா?’என்றுகேட்டார்.அவன்இல்லைஎன்றான்.அதையும்தந்துஅவர்களைஅனுப்பிவைத்தார்.அவர்படும்அவதியிலும்பார்க்கஅந்தஇளம்தம்பதிகள்அனுபவிக்கும்துன்பத்தைபார்க்கஅவரால்முடியவில்லை.

அன்றுகோர்ட்டுகலையும்வரைகாத்திருந்தார்.அரசுவழக்கறிஞர்காரைநோக்கிச்சென்றபோதுகுறுக்கேபோய்விழுந்தார்.’நான்ஓர்அரசாங்கஉத்தியோகத்தன்.ஆட்டைத்திருட்டுக்கொடுத்ததால்கடந்த18 மாதங்களாககொழும்பிலிருந்துவழக்குக்குவருகிறேன்.ஆட்டையும்குட்டிகளையும்வழக்குநாட்களில்கொண்டுவரவேண்டும்என்பதுஉத்தரவு.ஆட்டின்விலைஅறுபதுரூபா.ஆனல்நான்செலவழித்தது600 ரூபாவுக்குமேலே.ஆட்டைதிருடியவன்தான்தண்டனைஅனுபவிக்கவேண்டும்.ஆனால்திருட்டுகொடுத்தவன்திருடனிலும்பார்க்ககூடியதண்டனைஅனுபவிப்பதுஎந்தவிதத்தில்நியாயம்.அடுத்ததடவையாவதுவழக்கைமுடித்துவையுங்கள்,ஐயா.’.வழக்கறிஞர்ஒன்றுமேபேசவில்லை.அவரைவிலத்திக்கொண்டுபோய்காரிலேஏறினார்..

வழக்குதேதிக்குஇரண்டுநாள்முன்னதாகவேசிவப்பிரகாசம்  கிளம்பி யாழ்ப்பாணம் வந்து விட்டார். வீட்டு வளவு வேலைகளை முடித்துவிட்டு இரவு  ஓய்வெடுத்தபோது மனைவி சொன்னார். ’இப்பவெல்லாம் மாடு முன்னைப்போல கறப்பதில்லை. பால் குறைந்துவிட்டது.’. சிவப்பிரகாசம் ஒரே வெறுப்பில் இருந்தார். ’இந்த வழக்கு என்னை அலைக்கழித்துவிட்டது. . எவ்வளவு நாட்கள் வீணாக ஓடின. எத்தனை காசு நட்டம். அல்லாவிட்டால் இன்னொரு மாடு வாங்கி விட்டிருப்பேனே’ என்றார். அடுத்தநாள் காலை . மாஜிஸ்ட்ரேட் வழக்குக்கு ஒரு நிமிடம் மட்டுமே எடுத்து போதிய சாட்சியங்கள் இல்லாதபடியால் வழக்கை தள்ளுபடி செய்வதாகச் சொன்னார். இதை 20 மாதங்களுக்கு முன்னரேயே செய்திருக்கலாம். இத்தனை அலைச்சலும் தொல்லையும் பணமும் மிச்சமாகியிருக்கும்.

தீர்ப்பானபின்னர்நன்னனில்பெரியமாற்றம்தெரிந்தது.சிவப்பிரகாசம்நம்பமுடியாமல்தலையைபின்னுக்கு  இழுத்து மறுபடியும் பார்த்தார். அவன் கண்களில் வெளிச்சம் நடனமாடியது. அரும்பு மீசை. திரிரோஸஸ் சிகரெட் சட்டைபொக்கற்றுக்குள்தெரிந்தது.கையிலேதினகரன்பேப்பரைச்சுருட்டிவைத்தபடிசிரித்துக்கொண்டேகோர்ட்டுக்குவெளியேவந்தான்.பத்துமாஎங்கிருந்தோவந்துஅவன்கையைடெர்லின்சட்டைமுடிந்தஇடத்தில்பிடித்துஇழுத்தாள்.சிவப்பிரகாசத்துக்குஅவர்களைப்பார்க்கசந்தோசமாகவிருந்தது.விடுதலையுணர்வுஎல்லோருக்கும்பொதுதானே.

பத்துமாஒருகுழந்தையைதூக்கஓடுவதுபோலகுனிந்தபடிஅவரைநோக்கிஓடிவந்தாள்.காலிலேவிழுந்துநன்றிசொல்லப்போகிறாள்எனஅவர்நினைத்தார்.அவள்குனிந்துமண்ணைவாரிஎடுத்துவீசி’நாசமாய்ப்போக’என்றுதிட்டினாள்.’உன்ஆடுநாசமாய்ப்போக.உன்மாடுநாசமாய்ப்போக.உன்குடிவிளங்காது.இல்லாதவன்என்னசெய்வான்?இருக்கிறவனிடத்திலேதானேஎடுக்கவேணும்.இதையும்பெரியவழக்குஎன்றுகொழும்பிலேஇருந்துவந்துநடத்தினாயே.ஆலமரத்துஇளங்கொடியைஎப்பவோஅறுத்துக்கீழேவீசியாச்சுது.அதுபோலநீயும்அறுந்துபோவாய்.உன்அழிவுகாலம்இன்றுதான்ஆரம்பம்.நீபுழுத்துச்சாவாய்’என்றுவைதுவிட்டுநடந்தாள்.திடீரென்றுஒருவசவுவிடுபட்டுவிட்டதைநினைத்துதிரும்பிவந்தவள்.அவர்புழுதியிலேகுளித்துநின்றதைப்பார்த்துமனதைமாற்றி  ஒன்றுமே பேசாமல் சென்றாள்.

சிவப்பிரகாசம்திகைத்துப்போய்நின்றார்.அவர்மேசையில்விரல்களால்சுழற்றும்3 டெலிபோன்கள்இருக்கும்.நாலுபேர்வாசலில்எந்தநேரமும்அவர்கையொப்பத்துக்காககாத்திருப்பார்கள்.மந்திரிஅவருக்குகைகொடுத்திருக்கிறார்.இருபதுவயதைதொடாதஇந்தப்பெண்ணின்வாயிலிருந்துவந்தவசவுகளைஒவ்வொன்றாக  எண்ணிப் பார்த்தார். வண்டில்காரன் ஆட்டையும்குட்டிகளையும்வண்டிலிலேஏற்றிதயாராகவிருந்தான்.அவன்நடந்ததைபார்த்தாகக்காட்டவில்லை.அடுத்தநாள்ஊரிலேகதைபரவும்.இரண்டுநாளில்கொழும்புக்கும்போய்விடும்.தலைப்புழுதியைகைவிரல்களினால்தட்டியபடிஆட்டைப்பார்த்தார்.அதுதன்பழுப்புக்கண்களால்அவரையேஉற்றுநோக்கியது.முழுக்கதையையும்அறிந்தஅந்தஜீவன்ஒன்றுதான்அவருடையஒரேசாட்சி.வண்டிலில்ஏறிஉட்கார்ந்தபோதுஅவர்மனைவிஆட்டுப்பால்புட்டுடன்காத்திருப்பதாகச்சொன்னதுநினைவுக்குவந்தது.

END

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2019 18:43

December 27, 2019

பவா செல்லத்துரை சொன்ன கதை

பவா செல்லத்துரையைதமிழ் பேசும் உலகில் அறியாதவர் சிலரே.சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்,நடிகர்என பன்முகம் கொண்டவர். இதைத்தவிர இந்த நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லி அவர். ரொறொன்ரோபல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதிசேர் நிகழ்வில் பங்குபெற விரைவில் கனடா வர இருக்கிறார்.மாதிரிக்கு ஒரு கதை கீழே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2019 17:30

rrrrrrr

rrrrrrr

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2019 17:03

A. Muttulingam's Blog

A. Muttulingam
A. Muttulingam isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow A. Muttulingam's blog with rss.