Kalpatta Narayanan > Quotes > Quote > Premanand liked it

Kalpatta Narayanan
“அம்மா இறந்தபோது நிம்மதியாயிற்று
இனி நான் ராப்பட்டினி கிடக்கலாம்
எவரும் தொந்தரவுசெய்யப்போவதில்லை.

இனி நான் காய்ந்து பறக்கும்வரை தலைதுவட்டவேண்டியதில்லை
எவரும் கைவிட்டு அளைந்து பார்க்கப்போவதில்லை.

இனி நான் கிணற்றுச்சுவரில் அமர்ந்து
தூங்கி வழிந்து புத்தகம் வாசிக்கலாம்
பாய்ந்து வரும் ஓர் கூக்குரல்
என்னை பதறச்செய்யப்போவதில்லை.

இனி நான் அந்திவேளையில் வெளியே செல்ல டார்ச் லைட் எடுக்கவேண்டியதில்லை.
விஷம் தீண்டி
மயிர்க்கால்களில் குருதி கசிய இறந்த அண்டைவீட்டுப் பையனை எண்ணி எழுந்தமர்ந்து பதறிய மனம்
இன்று இல்லை.

இனி நான்
சென்ற இடத்தில் படுத்துறங்கலாம்
நான் வந்தடைந்தால் மட்டும் அணையும் விளக்கு உள்ள ஒரு வீடு
நேற்று அணைந்தது

தன் தவறுதான்
நான் அடையும் அனைத்துக்கும் காரணம்
என்ற கர்ப்பகாலகட்டத்து நினைப்பில் இருந்து
அம்மா இன்று விடுதலைபெற்றாள்.
இதோ இறுதியாக
அவள் என்னை பெற்று முடித்தாள்.

பூமியில்
உடல் வலியால் அன்றி
துயரத்தால் இனி எவரும் அழப்போவதில்லை.”
Kalpatta Narayanan, தொடுதிரை [Thoduthirai]

No comments have been added yet.