மீண்டும் கிளம்பும்போது பேராசிரியர் சொன்னார். “ஒருமாசம் கழிஞ்சு ஒருநாளு அடுக்களையிலே போயி காப்பி கொண்டுவரச் சொன்னாரு. நானும் அவரு சொன்னதனால போனேன். அவரு ரொம்ப ஆசாரமான ஆளாக்கும். நாஞ்சிநாட்டு பிள்ளமாரு இண்ணைக்குள்ளது மாதிரி இல்ல அப்ப. அவ வீட்டு ஆச்சி அதுக்கும் மேலே. அது எனக்கும் தெரியும். ஆனா நான் சொன்ன சொல்ல அப்டியே செய்யுறவன். ஆச்சி கோவமா முன்வாசலுக்கு வந்து ‘என்ன சொல்லி அனுப்பினியோ? நாடாப்பய அடுக்களையிலே கேறுதானே’ன்னு கேட்டா. அவரு நிதானமா ‘அவனுக்கு இல்லாத எடம்னு ஒண்ணு எனக்க கிட்ட இல்ல’ன்னு சொன்னாரு. ஆச்சி அப்டியே நின்னா. என்னன்னு புரிஞ்சுதோ என்னை ஒரு பார்வை பாத்தா. சட்டுண்ணு உள்ள போயிட்டா.
...more