அந்த அறையில் இருந்து ஒரு நர்ஸம்மா வந்து “லே இந்நாலே... சாயிப்பு குடுத்தாரு” என்று ஒரு ரொட்டியை எனக்கு கொடுத்துச் சென்றாள். நான் நான்குபக்கமும் பார்த்துவிட்டு அதை வாங்கிக்கொண்டு ஓரமாகச் சென்று சுவர் நோக்கி அமர்ந்து வேகமாக தின்ன ஆரம்பித்தேன். பாதி ரொட்டி முடிந்தபிறகுதான் அதன் ருசியே எனக்கு தெரிய ஆரம்பித்தது. தரையில் உதிர்ந்து கிடந்த துணுக்குகளையும் பொறுக்கி வாயில் போட்டேன். அவற்றில் ஒன்றிரண்டு துணுக்குகள் எறும்புகள் என வாயில் போட்ட பிறகே தெரிந்தது.