அந்த வகுப்புகள் வழியாக அவர் மனம் கடந்து செல்வதை உணர முடிந்தது. “எல்லாம் சொல்லுவாரு. எலக்கணம், காப்பியம், சாஸ்திரம். கூடவே அவருக்க அனுபவங்கள சொல்லிக்குடுப்பாரு. கருணை இல்லாம கவிதை புரியாதுடான்னு சொல்லுவாரு. சொல்லிச்சொல்லி மனச நெறைய வைச்சிருவாரு...” சட்டென்று குரல் கிரீச்சிட்டு வழுக்கியது. “இருக்கதெல்லாம், அடைஞ்சதெல்லாம் என் தெய்வம் போட்ட பிச்சையல்லோ... வாங்குறதுக்கெல்லாம் என்னமாம் திருப்பிக் குடுக்கோம். குருவுக்கு என்ன குடுக்கோம்? வேறெ என்ன, இந்தா இங்க நெஞ்சுக்குள்ள கோயில கெட்டி வச்சிருக்கோமே. அதுதான். எங்க இருந்தாலும் இப்ப இந்த வார்த்தைய மகராஜன் கேக்காமயா இருப்பாரு? இந்த ஏழை சங்கு உருகி அவரை
...more