எனவேதான் நீதிக்கட்சியார், வகுப்புகளுக்குள் சந்தேகமும் கிலேசமும் அதன் பலனாக சஞ்சலமும் ஏற்படாதிருக்கும் நிலை ஏற்பட்டால்தான் அரசியலிலே நாம் பூரண சுதந்திரம் பெற முடியும்; பெற்று அதன் நன்மைகளை அடைய முடியும் என்று கூறி வந்தனர். அதற்காகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சிறந்த நீதியை இம்மாகாணத்தில் வழங்கினார்கள். அதனை வாழ்த்தி வரவேற்று வளர்த்து, அதைப்பற்றி வம்புந்தும்புமாகப்பேசிய தேசியவாதிகளுக்கு ஆணித் தரமான பதிலளித்த அரசியல் சண்முகம், திவான் சண்முகம் ஆனவுடன், அதே நீதியை கொச்சிக்குத் தந்தார். குரோதக்கும்பல் குளறிக் கொட்டின. சர். சண்முகம் சீறினாரில்லை; சிரித்தார் - அவர்களின் எரிச்சலைக் கண்டு.

