“உலக வரலாற்றை எடுத்துப்பார்க்கும்போது எனக்கு மேலும் மேலும் தெளிவாகியபடியே வரும் விஷயம் ஒன்றுண்டு. பூமிமீது கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை இயக்குவது இச்சையும், உடலின் சக்தியும். அவையிரண்டும் இணைந்த இயக்கமே நான் கூறும் ஆதார சக்தி, வரலாறு என்பது இந்த இச்சா சக்தியின் கொந்தளிப்பும் பீறிடலும் மட்டுமே. அனைத்து அரசு கருத்துகளும், நிறுவனங்களும், நம்பிக்கைகளும் அதன் விளைவுகள் தான். வன்முறையே அதன் முதல் ஆயுதம். தர்க்கம் அடுத்த ஒரு ஆயுதம். ஒருபக்கம் அறிஞர்களையும் மறுபக்கம் வீரர்களையும் அது உருவாக்கியபடி உள்ளது. ஆனால் எப்போதும் வீரர்களே அதன் பிரியத்துக்குரிய குழந்தைகள்.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)