ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதே போன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம் போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிறது.