பொதுவாசகன் சொல்லும் ‘இழுத்திட்டே போகுது’, ‘வர்ணனை ஜாஸ்தி’ போன்றவை வாசகன் தன்னை படைப்புக்கு ஒப்புக்கொடுக்காமல் படைப்பை தன்னை நோக்கி இழுப்பதன் விளைவான சலிப்பில் இருந்து எழுபவை. ‘முடிவை ஊகிச்சிட்டேன்’ என்று ஒரு நல்ல வாசகன் சொல்லவே மாட்டான், ஊகிக்காத முடிவை அளிக்கும் விளையாட்டு அல்ல புனைவு. அம்முடிவின் வழியாக அந்த ஆசிரியன் காட்ட, உணர்த்த விரும்புவது என்ன என்பதே இலக்கியத்தில் உள்ள கேள்வி.