ஓர் இலக்கியப் படைப்பு மகிழ்விப்பதல்ல. அது சூழலில் உருவாக்குவது ஒர் ஊடுருவலை. அதன் மூலம் ஒரு தொந்தரவை. ஆங்கிலத்தில் இதை Rupture என்று சொல்லலாம். அந்த தொந்தரவு ஓர் அறிவார்ந்த சவாலை வாசகனுக்கு விடுத்து அவனை தூண்டுவதனால் இந்த ஊடுருவலை அவன் விரும்பவும் செய்கிறான். இல்லையேல் அவன் நூல்களை வாங்கவும் மாட்டானே! இலக்கியப் படைப்பு உருவாக்கும் ‘கேளிக்கை’ இத்தகையதே. அவ்வகையில் வெற்றிகரமான வணிகப்படைப்புகளிடமிருந்து இலக்கியப் படைப்பு மிக, மிக மாறுபட்ட ஒன்று.