ஆகவேதான் வாசகன் மேலும் மேலும் வலிமையான படைப்புகளை தேடிச்செல்கிறான். தன் தளத்தை விட தாழ்ந்த படைப்பு அவனுக்கு எந்த இன்பத்தையும் அளிப்பதில்லை. அவன் அடையும் படைப்பு என்பது அவனது உலகுக்கும் அப்படைப்பின் உலகுக்கும் இடையேயான ஒரு பொதுவான தளம் மட்டுமே. எந்த வாசகனும் ஒரு படைப்பை முழுமையாக அடைய முடியாது. இந்த எதிர்கொள்ளலுக்கு வாசகன் எடுக்கும் முறையை ‘வாசிப்புத் தந்திரம்’ என்று இன்று சொல்கிறார்கள். ஆக இவ்வாசிப்பு தந்திரத்துடன் ஒரு படைப்பு மோதியே ஆக வேண்டும். இது ‘எழுத்து X வாசிப்பு’ என்ற போரின் ஒரு தளம்.