அதுதான் படைப்பாக்கத்தின் அடிப்படை இயல்பு. இப்படிச் சொல்லலாம். ஒரு புல் விதை எதிர்ப்பே இல்லை என்றால் உலகை புல்லால் மூடிவிடும் வல்லமை கொண்டது. அதற்குள் அந்த இச்சையை இயற்கை பொறித்து வைத்துள்ளது. ஆனால் அதன் இச்சையை அதைப் போன்ற பல்லாயிரம் இச்சைகள் தடுக்கின்றன. விளைவாக பூமி மீது ஒவ்வொரு உயிரும், பிற அனைத்தையும் எதிர்த்து மீறி தன் இடத்தை அடைகிறது. கருத்துக்களின் கதையும் இதுவே. ஒவ்வொரு கருத்தும் உலகை வெல்லத் துடிக்கிறது. பிற கருத்துக்களின் மீது மோதி உருவாகும் முரணியக்கம் மூலம் அது உலகை ஆக்கும் பல நூறு, பல கோடி இழைகளில் ஒன்றாக ஆகிறது.