இரண்டு, உள்ளத்தின் ஓட்டத்தையும் தத்துவத்தையும் விரித்துரைக்கும் நீள்கூற்றுக்கள். உதாரணமாக, தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் அவை நாடகீயத்தன்னுரைகள் [Dramatic Monologue] போலவே வெளிப்படுகின்றன. அவற்றில் மிக நீண்ட உரையாடல்கள் உண்டு. நீண்ட கடிதங்களும் வருவதுண்டு. இவ்வளவு நீளமாகவும் கோவையாகவும் எவராவது பேசுவார்களா, எல்லா கதைமாந்தரும் இப்படி சுவாரசியமாகவும் அறிவார்ந்தும் தத்துவார்த்தமாகவும் பேசுவார்களா, சாதாரண மனிதர்கள் எவராவது இப்படி நீளமாக கடிதங்கள் எழுதுவார்களா என எண்ணினால் நாம் நாவலை, பேரிலக்கிய அனுபவத்தை இழப்போம்.