Kindle Notes & Highlights
ஞாயிற்றுக்கிழமைகளில்தான் குமாரசாமி மீன் எடுப்பார். ஒரு ஞாயிற்றில் மீன்; ஒரு ஞாயிற்றில் கோழி; பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் புலால். இது ஒன்றும் அவர் விரதமல்ல. அது அவருடைய வருமானம் விதித்திருந்த கட்டளை. வருமானம், நாக்கையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது.
வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மதாச்சாரியர்களால் எழுதப்பட்டதை அசைப் போடாமல் விழுங்கி, செரிக்க முடியாமலும் வெளியேற்ற முடியாமலும் அவதிப்படுகிற மதவாதிகளின் மனங்களைப் போல உலகம் இருண்டு கிடக்கிறது என நினைத்துக்கொண்டார் ஆத்மானந்தா.
“நரசிம்மன் உனக்கும் சோமுவுக்கும் தெய்வம் ஒன்றுதானே? உம்மைப் படைத்த தெய்வம்தானே அவனையும் படைத்தது. ஜாதி, மத, இன வித்தியாசங்கள் கடவுள் சம்மதம் என்றால், ஒரு சாதி ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும்தானே குழந்தை பிறக்க வேண்டும். மனிதர் மனிதருடன் சேர்ந்தால் பிள்ளை பிறந்துவிடுகிறதே? அப்படியிருக்க, எவரும் எவருடனும் சேரலாம் என்றுதானே ஆகிறது?
இந்தக் காலை நேர தலையிடிக்கென்றே முந்தின இரவில் சேமித்து வைத்திருந்த விஸ்கி. ‘ஊனுக்கு ஊன்’ என்பது அன்று கண்ணப்ப நாயனார், காளத்தி நாதரைச் சாட்சியாக வைத்துக் கண்டுபிடித்திருந்த மருத்துவ மரபு.

