ஒரு சிறு 'அமிருதாஞ்சன்' டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று. ''அது என்ன மாமா?'' எனக் கேட்டேன். “அதுவா, மோக்ஷலோகத்திற்குக் கொண்டுபோகும் ஜீவாம்ருதம்” என்றார் மாமா. எனக்கு விஷயம் விளங்கிவிட்டது. “அட, பாவிகளா! எலுமிச்சங்காய் அளவா? நீங்கள் நாசமா...” “எல்லாம் உனக்குப் பயந்துதான் இந்தச் சிறிய அளவு. இல்லாவிட்டால்...” என்று சாமியார் முதுகில் ஒரு அடி கொடுத்துக்கொண்டே மாமா வெறிப் பிடித்தவர் மாதிரி சிரித்தார். மாமாவின் மாற்றத்திற்கு இம்மருந்துதான் காரணம் என்று நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது.

