1870களில் க்ரஹாம் பெல் செவி கேளாதவர்களுக்கு வாய்ப்பேச்சு எனும் கல்வித்திட்டத்தை தீவிரமாகப் பிரசாரம் செய்யலானார். அவருடைய பல கண்டுபிடிப்புகளால் அவருக்குப் புகழும் அங்கீகாரமும் பணமும் கிடைத்திருந்ததால் இந்தக் கல்வித்திட்டத்தை அவரால் பிரசாரம் செய்ய முடிந்தது. நாடெங்கும் அவர் பயணம் செய்து, பேசாவிட்டால் செவிப்புலன் இல்லாதவர்கள் சமூகத்தில் முழுப்பங்கு வகிக்க முடியாது என்று பல இடங்களில் பேசினார். அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் இவர்கள் செவியில் அவர் ஆற்றிய உரைகள் விழுந்தன. தன் குழந்தை பேச வேண்டும் என்று ஏங்கிய பெற்றோர்கள் காதிலும் விழுந்தது.