ஆலப்புழைப் பட்டணத்தில் அதை ஒட்டி ஏற்பட்ட சாவுக்குக் கணக்கு வழக்குக் கிடையாது. ஏனெனில் சாகும் ஆசாமிகள், மனித சமுதாயத்தின் ஜனத்தொகையில் உட்பட்டவர்களல்ல. சாவது பிச்சைக்காரனும் அகதியும்தான். வீதியோரங்களிலிருந்தும், சந்துகளிலிருந்தும் லாரியில் தூக்கிப்போட்டுக்கொண்டு போவதைப் பார்க்கலாம். எப்படிக் கணக்கெடுப்பது! சாத்தியமே இல்லை. அது மட்டுமா, இப்படிச் செத்துத் தொலைகிறவர்கள் யாருக்காவது ஊர் பேர் உண்டா?