பட்டத்து யானைக்குப் படாம் போர்த்தின மாதிரி பல வர்ண பட்டு, ஜரிகை, ஜிகினா இவைகளால் ஆன சிங்காரப் பொன்னாடை திமிலுக்கு முன்னிருந்து புட்டாணி வரைக்கும் முதுகோடு படிந்து இருபுறமும் மணிக் குஞ்சலங்களுடன் தொங்க, ஒரே புஷ்பாலங்காரமாக ஜல் ஜல் என்று சலங்கை மாலையும், கொம்பு, கால் சதங்கைகளும் அசைவுக்கு அசை விட்டு விட்டு ஒலிக்க, நாட்டியக்காரி மேடைக்கு வருகிற மாதிரி நிமிர்ந்து நிமிராமலும் முகம் லேசாகத் தணித்துக் கண்கள் கீழ் நோக்கி இரு பக்கமும் பார்க்க, கம்பீர நடை போட்டு அமரிக்கையாக வந்தது காரி.