ஆனால் அவன் கையை பின்னரித்த அதே க்ஷணம் கழுகு பாய்ந்து அடிக்கிற மாதிரி இரண்டு கைகள் விரித்துச் சீறி மாட்டின் கொம்பின்மீது விழுந்தன. சபக் என்ற சப்தம்தான் கேட்டது. வீசிப் பின்தள்ளப்பட்ட மருதன், மாட்டின் கழுத்தோடு ஒட்டி பிச்சி இரு கொம்புகளையும் சேர்த்துப் பிடித்து மாட்டின் முகத்தை கீழ்நோக்கி அமுக்குவதைப் பார்த்தான். காளை கைகளை உலுப்ப முழு வலுவுடன் அலைத்துப் பார்த்தது. ஆனால் கீழ்நோக்கி அமுக்கும் அந்தப் பிடி வலுவில் கொம்பலைப்பு வேகம் தளர்ந்தது. சில வினாடிகளுக்குத் திணறியது.