முழு வேகத்துடன் கொம்பை அலைத்து பிச்சியை அட்டத்தில் குத்தப் பார்த்தது. ஆனால் பிச்சியின் அமுக்கி அழுத்திய பிடி கொம்பை எதிர்திசைக்குத் தள்ளிக்கொண்டிருந்தது. அவனும் காளையின் தலை எப்படித் தாறுமாறாகத் திரும்பினாலும் கொம்புகள் முகத்திலோ கழுத்திலோ தட்டிவிடாதபடி முழங் கால்களை மடித்து தன் தலையை அதன் கழுத்தோடு சாய்த்துக் கொண்டான். காளையின் தலை கீழ்நோக்கி அழுத்தப்படவே காளை உத்தியை மாற்றி ஒரு எகிறு எகிறி நான்கு கால்களையும் உயரே தூக்கி தவ்வியது. பிச்சியும் அதோடு உயரே போனான்.