அவளின் நினைவென்பது பற்றியெரியும் காட்டுத் தீயின் உக்கிரம், சதையும் எலும்புகளும் சமாதானமாகாத களிப்பின் திரட்சி, ஒரு வெய்யில் நாளின் நீண்ட தாகம், அவளென்பது யாதுமான பேருரு, அவளே மோகினி, அவளே காளி, அவளே சாத்தான். நரம்பின் ஒவ்வொரு துளி குருதியிலும் பொங்கிப் பெருகும் சூடு, தொண்டைக்குழியின் தவிப்பு, வியர்வையின் உப்பு, அவளென்பது உடைந்த வால் நட்சத்திரம், ஜீவராசிகளை ரட்சிக்கும் காமத்திப்பூ, அவளென்பது உடலும் சதையுமான ஒரு பெண் மட்டுமல்ல பிரபஞ்சத்தின் ஒரு துண்டு. அவனின் அவலம் ராபியிடமிருந்துதான் துவங்குகிறது. ஏனென்றால் அவன் அவள் மீது ஒருபோதும் சாத்தியப்பட வாய்ப்பில்லாத காதல் கொண்டிருந்தான்.