அரபிக்கடலில் கப்பல்களை வேட்டையாடி பொன்னையும் பொருளையும் கவர்ந்துகொண்ட போதில்லாத நிறைவு, துறக்க நினைக்கையில் வருவதுதான் ஆச்சர்யம். எதுவுமில்லாத மனிதனுக்கு இத்தனை ஆறுதலான வாழ்வு கிடைக்குமென்றால் உலகின் வெற்றிகளைத் தேடி ஓடுகிற மனிதர்கள் எதைக் கண்டடைகிறார்கள்? துயரையும் பழிகளையும் பாவங்களையும் பொறாமைகளையும் சாபங்களையும் தவிர்த்து வெற்றிகள் தருவது ஒரு தற்காலிக களிப்பை மட்டுந்தான். அக்கணம், அச்சிறிய கணம் எளிய களிப்புகளில் திளைக்கும் மனிதர்கள் அப்படியான கணங்களை மீண்டும் மீண்டும் உருவாக்க விழைகிறார்கள்.