அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? அதை திறந்த நிலை உறக்கமென்று கொண்டால் அவர்கள் கனவுகளை சேமிக்கிறார்களா? பிணி குணமான மனிதர்களுக்கு பிணியுற்ற நாட்கள் குறித்த நினைவுகள் மிஞ்சியிருக்குமா? எத்தனை இரவுகளை, எத்தனை பகல்களை தான் என்ற எண்ணமின்றி வாழ்ந்திருக்கிறோம் என ஒரு மனிதன் தெரிந்து கொண்டுவிட்டால் அவன் ஒருபோதும் உலக இச்சைகளின் மீது பற்றுக் கொள்ளாதவனாக வாழத்துவங்கி விடலாம். அப்படிப் பார்த்தால் இங்கு பிணியோடு வந்து குணமாகிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் முழுமையான கருணையால் மறுபிறப்பெடுத்தவனாகவே செல்கிறான்.