நான்கு ஏக்கர் இருக்கும் அளவான தோட்டம் அது. ஆனால் செம்மண் வாகும் நீர்வரத்தும் அற்புதமான விவசாய நிலத்தின் தன்மையைக் கொண்டிருந்தன. தோட்டமெங்கும் ஆங்காங்கே பாத்தி கட்டி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, கேரட் என்று பலதரப்பட்ட வெள்ளாமை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கீழே பள்ளத்தில் தோட்டத்தின் கடைசியில் உரப்பொருட்கள் வைப்பதற்கான சிறிய வைப்பறைக்கு முன் சைக்கிள் நிற்க, பாண்டி சைக்கிளுக்கு வலப்புறமாக ஜீப்பை நிறுத்தினான். ஜீப்பின் பின்பகுதியில், கழுதைகள் சுமந்து வந்த பணம் நிறைந்த சாக்குப்பைகள் தார்ப்பாயின் அடியில் பாதுகாப்பாக இருந்தன.