பம்பரத்தில் தலையாரி என்று ஒரு ஆட்டம் உண்டு. கொடுமை! புதிதாக ரங்க விலாசத்தில் ஒரு அணா கொடுத்து வாங்கிய என் பம்பரத்தின் புதிய வர்ணத்தைச் சேதப்படுத்திச் சொறி நாய் போல ஆணிக் குத்துகள் ஏற்படுத்தும் ஆட்டம். அவர்களுக்கு எல்லாம் கோஸ் எடுக்கச் சுலபமாக வரும். எனக்கு மட்டை அடிக்கும். அவர்களுடன் சுலபமாக விளையாடாமல் இருந்திருக்க முடியும். ஆட்டத்துக்கு வரவில்லை என்றால் என்னைப் பெண்பிள்ளை என்று சொல்வார்கள். ‘பெண்பிள்ளை’ என்கிற பட்டம் எனக்கு உலகிலேயே அவமானம் மிகுந்ததாக அப்போது தோன்றியது.