கிளாத்தியின் குடலிலும் இரைப்பையிலும்தான் காலரா கிருமிகள் இருக்கின்றன என்று சாமர்வெல் சொன்னார். ஆடிமாசத்தில் கட்டுக்கடங்காமல் பெருகும் ஈக்களால் அவை பரவுகின்றன. கிளாத்தியை உண்ணக்கூடாது என்று கிராமம் கிராமமாகச் சொல்ல லண்டன் மிஷன் சர்ச்சுகளுக்கு செய்தி போயிற்று. கிறிஸ்தவர்களுக்கு கிளாத்தி தடைசெய்யப்பட்ட உணவு என்று சர்ச்சில் சொன்னார்கள். ஆனால் கிளாத்தியை உண்ணுவதிலிருந்து எவரையும் தடுக்க முடியவில்லை. அதி தீவிர கிறிஸ்தவர்களைத் தவிர பிறர் ரகசியமாகச் சாப்பிட்டார்கள். கிளாத்தியின் தோலையும் குடலையும் குழிதோண்டி புதையுங்கள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தோம். சாமர்வெல் அதற்காக சர்ச்சுகள் தோறும் சென்று
...more