பசி பூராவும் தீருமுன் மறுபடியும் பட்டினி கிடக்கவேண்டிய அவசியம் வந்துவிடும். என் முதுகும் தோள்பட்டைகளும் தான் எனக்கு அதிகச் சிரமங்களைத் தந்தன. இருமி இருமி என் வயிற்றுக் கிள்ளலைச் சமாளித்துக் கொள்வேன். முன்னால் சாய்ந்து நடந்தாலும் வயிற்றுக் கிள்ளல் மரத்துவிடும். ஆனால் முதுகையும் தோள்களையும் வலிக்காமல் செய்வது எப்படி என்றுதான் தெரியவில்லை. என் நிலை மாறாமல் இருப்பதற்குத்தான் காரணங்கள் என்ன? மற்றவர்களைப் போல வாழ்வதற்கு எனக்கு உரிமை கிடையாதா என்ன? புஸ்தக வியாபாரி பாஸ்காவுக்கும், கப்பல் ஏஜெண்டு ஹென்னெஷினுக்கும் இருந்த உரிமை எனக்குக் கிடையாதா? என் தோளில் வலுவில்லையா? என் கைகள் உழைக்க மறுத்தனவா?
...more

