பிரான்ஸிஸ் சோபாவில் அமர்ந்தான். அவளையே கண் கொட்டாமல் பார்த்தான். அவன் உடம்பு முழுக்க ஜ்வரம் தகித்தது. அவள் அந்தப் பார்வையைக் கவனித்தாள். ஆனால் சற்றும் கூசவில்லை. அவள் சகஜ பாவம் மாறியது. அவள் புன்னகை பெரிதாகியது. “என்ன ரொம்ப குஷியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறதே...” என்றாள். பிறகு சட்டென்று திரும்பி உடம்பை அளவுமீறி ஆட்டியபடி, பக்கவாட்டு அறையை நோக்கி நடந்தாள். ஒரு முறை பிரான்ஸிஸைத் திரும்பிப் பார்த்தபிறகு, அவனுக்கு நிறைய அர்த்தங்களைத் தரும் பார்வை ஒன்றை அளித்தாள்.