ஒரு பரிவு இந்தப் பெண்ணிடமும் அவனுக்கு இருந்தது. அவள் யார் என்று அவனுக்குத் தெரியும். பிறருக்குத் தருவதைவிட அதிகம் சம்பளம் அப்பா அவளுக்குத் தருகிறார் என்பதும் தெரியும். அதற்குக் காரணமும் தெரியும். விருந்தினர்களிடம், அவள் காபி பரிமாறி உள்ளே போய்விட்ட பிறகு, ரகசியமாய், அவள் எந்தக் குடும்பத்தைச் சார்ந்தவள் என்றும், வாழ வழியில்லாத கட்டத்தில் அவளுக்கு வேலை தந்து அந்தக் குடும்பத்துக்குப் பண உதவி செய்ததைப் பற்றியும் கூறி அப்பா பெருமைப்படுவதை அவன் கண்டதுண்டு. அவர் முகம் குழந்தைத்தனமாகக் கிளர்ச்சியும் பெருமையும் கொண்டு சிவந்து காணப்படும்.