அவனுக்குள் எப்போதும் நாயர்கள் மீது ஒரு கனிவு உண்டு. இன்றுவரை ஒரு நாயரை ‘அடே!’ என்று கூப்பிட அவனால் முடிந்ததில்லை. அவன் மதிப்பீட்டில் மரியாதைக்குரிய அம்சங்கள் உடைய எந்த நாயரையும் அவன் பார்த்ததில்லை. இந்த மனப் பலவீனம் ஏன் தனக்குள் இருக்கிறது என்று பிரான்ஸிஸ் நினைத்ததுண்டு. அவன் மூதாதையரைத் தெருவில் வெட்டிச் சாய்த்த சாதி அது. காலம் விரையும் வேகத்துடன் விரைய மனித மனங்களால் முடியவில்லை போலும். பாட்டன் யானை மீது அமர்ந்ததன் தழும்பு தன் உடம்பிலும் இருப்பதாகக் கூறித் திரியும் நாயர்கள் கூட இறந்த காலத்தில் வாழ்பவர்கள்தாம்.