முதன்முதலாக லண்டன் அவனுக்களித்த திகைப்பை நினைவுகூர்ந்தான். அது கச்சிதமாகச் செலுத்தப்பட்ட யந்திரம் போலிருந்தது. ஒவ்வொரு மனிதனும் இயந்திரப்பகுதி போலிருந்தான். அதில் அவன் மட்டும் பொருந்தாமலிருப்பதுபோல, இயந்திரத்தின் பிற உறுப்புகள் ஒவ்வொன்றும் அவனை நசுக்க வருவதுபோல தோன்றியது.