1968 ஏப்ரல்-மே மாதங்களில் முதல்வர் அண்ணா வாஷிங்டன் வந்திருந்தபோது கொலம்பியா பல்கலைக்கழக இதழியல் மாணவனாக நான் உடன் சென்றிருந்தேன். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969-ல் புதிய முதல்வர் கலைஞரை ‘தி இந்து’ நாளிதழின் இளம் நிருபராகச் சந்தித்தேன். அன்று தொடங்கி, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை நெருங்கும் எங்கள் இடையேயான நட்பு ஒரு அரசியல் பத்திரிகையாளர் - அரசியல் தலைவர் இடையிலான தொழில்ரீதியிலான உறவுக்கு அப்பாற்பட்டது. எல்லாக் காலகட்டங்களிலும் எளிதில் அணுகக் கூடியவராகவும் அவருடைய கருத்துகளோடு உடன்படாவிட்டாலும் - விமர்சித்தாலும் நட்பு பாராட்டக் கூடியவராகவுமே அவர் இருந்திருக்கிறார்.