அரசியல்ரீதியான மறுசீரமைப்பைப் பொறுத்தவரை 1993-ல் ஐரோப்பா செய்ததை, 1947-லேயே செய்துவிட்டது இந்தியா. பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், அபிலாஷைகள் கொண்ட தேசிய இனங்களை ஒருங்கிணைத்து, மாநிலங்களின் ஒன்றியமாக சுதந்திர இந்தியா உருவாகிப் பல ஆண்டுகள் கழித்துதான், ஒன்றுபட்ட சந்தையை உருவாக்க ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் உருவானது. ஐரோப்பிய ஒன்றியம் உருவாகிக் கால் நூற்றாண்டுக்குப் பிறகு அதில் ஏற்பட்டிருக்கும் விரிசல்கள், அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவும் ஏற்றத்தாழ்வை நமக்குக் காட்டுகின்றன.