இடையில் துண்டு மட்டும் கட்டிக்கொள்ள வேண்டும் மேலுக்குத் துண்டு அணியக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. தோளில் துண்டு போடக் கூடாது, காலுக்குச் செருப்பு அணியக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. “இசை வகுப்புகள்தான் உண்மையில் எனக்கு அரசியல் வகுப்புகளாக இருந்தன; சாதிகளின் படிநிலையில் மேலே இருந்த சிலர், பெரும்பாலான மக்களைத் தாழ்ந்தவர்களாகவும் தங்களை உயர்ந்தவர் களாகவும் கருதிக்கொண்டு, குரூரமான மகிழ்ச்சியோடு மட்டம் தட்டுவதைப் பார்த்தேன். பெரும்பாலான மக்களை நாம் இழிவாக நடத்துகிறோம் என்ற உணர்வுகூட அவர்களுக்கு இல்லை” என்று கருணாநிதி நினைவுகூர்கிறார்.