‘பராசக்தி’ படத்தைப் பிராமணர்கள் கடுமையாக எதிர்த்தார்களே தவிர, ‘பராசக்தி’ படத்தில் பிராமணப் பாத்திரங்களோ, அவர்கள் குறித்த விமர்சனமோ எதுவும் இருக்கவில்லை. அந்தப் படத்தை எதிர்த்ததைப் போலவே கருணாநிதியையும் அவர்கள் எதிர்த்தார்கள். அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை ஏற்றுக்கொள்ளும் பிராமணர்கள்கூட பலர் கருணாநிதியை ஏதேதோ காரணங்களைத் தேடி நிராகரிப்பதை நான் கவனித்திருக்கிறேன். “அண்ணாவுக்குப் பிறகு, நாவலர்தான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும்; கருணாநிதி குறுக்கே புகுந்துவிட்டார்” என்று ஒரு சித்திரத்தைப் பிராமணர்கள் தொடர்ந்து நம்பியும், பேசியும், பரப்பியும்வந்தார்கள். மிக மேலோட்டமான மனப்பதிவுகளின் விளைவு இது.