இப்போது சரசு வேலைக்குப் போகிறேன் என்கிறாள் குழந்தைகளுக்கு டப்பாவில் அடைத்துக் கொடுத்துவிட்டு. ஆறு மணிக்கு சூரியன் சரிகிறபோது வந்து சமையல் துவங்கப் போகிறாள். பசித்துத் தவிக்கிற குழந்தைகளை பத்து நிமிஷம் உக்காருங்க, என்று அதட்டி விட்டு அது களைத் தட்டோடு காத்திருக்க வைத்து, அடுப்பிலிருந்து அரைவேக்காடாய் இறக்கிப் பரிமாறப் போகிறாள். சாயந் திரம் பசிச்சா, ஆளுக்கு நாலணா பிஸ்கட் சாப்பிடுங்க என்று முடித்து விடப் போகிறாள். குழந்தைகள் பசிக் கடுப்பில் மோதிக்கொள்ளும். ஒன்றையொன்று பிறாண்டும். ஆத்திர மாய் வளரும். இப்படிக் குழந்தைகளை வளர்ப்பதற்குப் பதில் கொன்று போடலாம்.

