இருபத்தெட்டாம் கதை ஒரு செவ்வாய்க்கிழமை காலையில், பெரிய பள்ளன் குளத்தின் பெயரைக் கார்த்திகைக் குளம் என மாற்றவேண்டும் என்ற மனுவை எழுதி எடுத்துக்கொண்டு இளைஞர்கள் வெள்ளாம் முறிப்பிலிருந்த சந்திரசேகரம் விதானையின் வீட்டிற்குச் சென்றார்கள். விதானையின் வீடு பெரிய கல்வீடு. அந்த வீட்டின் ஒரு அறையில்தான் விதானையின் அலுவலகம் இருந்தது. சந்திரசேகரம் விதானை பெரிய பள்ளன் குளம் உட்பட மூன்று கிராமங்களிற்கு விதானையாகயிருந்தான்.

