இந்துக்களின் அறநெறிப் பண்பில் சாதியால் ஏற்பட்டுள்ள விளைவு வருந்தத்தக்கதாக உள்ளது. பொதுநல உணர்வையே சாதி கொன்று விட்டது. பொது மக்களுக்கு உதவும் தரும சிந்தனையைச் சாதி அழித்து விட்டது. பொது மக்கள் கருத்து என்பதே உருவாக முடியாமல் சாதி தடையாக உள்ளது. ஒரு இந்துவுக்குப் பொது மக்கள் என்பதே அவரது சாதிதான். அவர் தமது சாதிக்குத் தான் பொறுப்புள்ளவராயிருக்கிறார். அவரது விசுவாசம் அவர் சாதிக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஒழுக்கத்திலும் அறநெறியிலும் சாதி உணர்வு புகுந்து விட்டது.

