பிராமணர்கள் பலவகைகளில் குற்றமிழைத்தவர்களாக இருக்கலாம்; குற்றமிழைத்தவர்கள்தான் என நான் துணிந்து கூறவும் செய்வேன். ஆனால், சாதிமுறையைப் பிராமணர்கள், பிராமணரல்லாதார் மீது திணித்தார்கள் என்பது உண்மையல்ல; அதற்குரிய துணிவோ, ஆற்றலோ அவர்களுக்குக் கிடையாது. சாதிமுறை பரவுவதற்குப் பிராமணர்கள் தங்கள் நயமான தத்துவங்களின் மூலம் துணை புரிந்திருக்கலாம். ஆனால் தங்கள் வரையறைகளுக்கு அப்பால் தங்களுடைய திட்டத்தை உந்தித் தள்ளி நிச்சயமாக அவர்கள் புகுத்தியிருக்க முடியாது. தங்களுக்குத் தகுந்தாற் போலவும், தாங்கள் நினைப்பது போலவும், சமூகத்தை மாற்றியமைப்பது என்பது இயலாத காரியம்.

