எங்கெல்லாம் ஒரு கூட்டம் தம் சொந்த நலன்களைக் காத்துக் கொண்டுள்ளதோ அங்கெல்லாம் இந்தச் சமூக விரோத, வெறுப்பு மனப்பான்மை காணப்படும். இந்தச் சமூக விரோத மனநிலையே அந்தக் கூட்டத்தார், மற்ற கூட்டத்தாரோடு முழுமையாகக் கலந்து உறவாடுவதைத் தடுக்கிறது. இதன்மூலம் அந்தக் கூட்டத்தார் தான் பெற்றுள்ள ‘சொந்த நலன்களைக்’ காத்துக் கொள்ள முடிகிறது. இதுவே அதன் முதன்மையான நோக்கமுமாகும். நாடுகள் எவ்வாறு தம் தன்னலம் கருதித் தனித்திருக்க முற்படுகின்றனவோ அவ்வாறே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதிப் பிறரோடு உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன.

