அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன் படுவதைக் கொண்டோ அல்லது மற்ற ஏதோவொரு திருப்தியையோ அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது அவன் அறிந்தது உண்மையாகவுமிருக்கலாம் - அல்லது அங்கிருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டிருந்தாலுமிருக்கலாம் - அல்லது வேஷமாத்திரத்தால் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலு மிருக்கலாம்.

