உலகில், மனித வர்க்கத்தினருக்குள்ளிருக்கும் அடிமைத்தன்மை ஒழியவேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழியவேண்டும். அது அழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாம். இதற்கு விதவைகளுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமை ஏற்படுத்துவதே முதல் காரியமாகும். தேசிய சர்வாதிகாரியும், வர்ணாசிரமப் பித்தும், பழைமைப்பற்றும் மிக்குடைய தோழர் காந்தியும் இந்து விதவைகளைப்பற்றி அநேக இடங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் 1925 ஆம் வருடத்தின் ‘‘நவஜீவன்’’ பத்திரிகையைப் படித்தால் உண்மை புலனாகும். அக்கட்டுரையின் சில பாகமாவது: ‘‘பால்ய விதவைகளைக்
...more

